
வேலி
பராமரிக்கவோ
தண்ணீர் ஊற்றவோ
வேலி போடவோ
யாருமில்லை என்று
தெரிந்துதான்
முட்களால் வேலி
அமைத்துவிட்டு
பூக்கிறது
கள்ளிச்செடி.
*
பெயர்
தொலையாமல்
ஆவணங்களில்
ஒட்டிக்கொண்டு
வருகிறது
ஓடிப்போன அப்பனின்
பெயர்.
*
ஒப்பனை
உதிர்ந்து போன
இலைகள்
சருகாக மாறுவதை
வேடிக்கை பார்த்துக்கொண்டே
பூக்களால் ஒப்பனை
செய்கிறது
இலையுதிர் காலத்தைக்
கடந்து வந்த மரம்.
*
விளையாட்டு
கோடி மலர்கள்
அவன் வருகைக்காக
காத்திருக்கின்றன
என்று தெரிந்தும்
பனித்துளியை
காதலோடு உருக வைத்து
விளையாடிக் கொண்டிருக்கிறான்
சூரியன்.
*
வாழ்த்து
”நல்லா இரு”
என்று விடைபெற்ற
நொடிகள்
ஆசீர்வாதமா..?
ஜென்ம சாபமா..?
*



