இணைய இதழ் 122கவிதைகள்

வளவ.துரையன் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

நிம்மதி 

வாசனை ஒன்றினால்
கவர்ந்திழுக்கப்பட்டு
வர வேண்டிய
பட்டாம்பூச்சி
வண்ணத்தின் வரவேற்பால்
உள்ளே வந்துவிட்டது.

தொலைக்காட்சியைப் போய்
முகர்ந்து பார்த்து
ஆட்டங்கள் பிடிக்காததால்
அது விலகுகிறது.

காதலர்களின் இறுக்கம் போல்
கலந்து பிணைந்திருக்கும்
சுவர்களின் மூலையில்
சுற்றிவந்து சோர்வடைகிறது.

உயர உயரப் பறந்து
திருவிழாவில் பெற்றோரைத்
தொலைத்த சிறுவனாய்த்
திகைக்கிறது.

எப்படியோ சுழலும்
மின்விசிறிதன்னில்
சிக்கிக் கொள்ளாமல்
சன்னல் வழியாய்த்
தப்பித்துச் சென்ற பின்தான்
எனக்கு நிம்மதி.

*

கொழுந்துதான் அழகு

அதோ தெரிகிறது என்
இளமைக்காலம்
பல நாள்களாய்த் தேடி வருகிறேன்

சற்று முன் திடீரென
நினைவுக்கு வந்தது
இன்று நான் வீசிய வலையில்
நன்றாகச் சிக்கிக் கொண்டது.

குழந்தைகள் விரும்பித் திரிகின்ற
குச்சி மிட்டாய் போல சுவைக்கிறேன்

ரசூலும் நானும் ஒன்றாய்
நோன்புக் கஞ்சி குடித்ததும்
அண்டனி வீட்டில்
அனைவரும் அமர்ந்து
கிறிஸ்துமஸ் கேக் ஊட்டிக் கொண்டதும்
கண்களில் கனவுப் படமாய்த் தெரிகின்றன.

முளைவிடும்
கொழுந்துகள் அழகுதான்
அதுவே வளர்ந்து முதிர்ந்து
அழகை இழந்து பழுத்து இப்பொழுது
அசிங்கமாகி விட்டன.

*

valavaduraiyan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button