
நிறங்கள்
வண்ணங்கள் மறைந்தாடும்
வல்லமை கொண்டவை
காலம் உதிர்த்துச் சென்ற
நினைவுகளை மீள் செய்து
குழைத்து தீட்டும்
தூரிகை தேவதைகள் அவை
நிறங்களுக்கு ருசியும் பசியும்
வெறியும் கூட உண்டு
இரையின்றி இடம்பெயரும்
வலசைப் பறவை;
வெளிச்சம் விழும் சிறுகோடு;
நிழலில்லா பாலை வெடிப்பு;
கருநாகத்தின் வீரிய மூச்சு;
இலை கொட்டித் தீர்ந்த
மரத்தின் நிர்வாணம்;
நடுநிசி பிரசவித்த
நிசப்தத்தின் நெடி;
மரணம் சுமந்த மூங்கிலில்
வழியும் பிணவாச பச்சை;
இவற்றை வழித்தெடுத்து
என் வாதைகளை
சித்திரமாக்கி வைக்கிறேன்.
அதில் மஞ்சள் ஒளியோடிருக்கும்
முகத்தின் சிரிப்பில் தெரியும்
கோரைப்பற்களின் கூர்மையில்
கொஞ்சம்
குருதி ஒட்டிய சிவப்பும் இருப்பது.
*
கனவு
காற்றுவெளியில்
சருகு போல் ஒரு பயணம்
கனவுகள் கால்களாகின
கனவின் அடர்த்தியில்
உடல் எடை உதிர்ந்து போனது
பாதக் கொலுசுகளை
பறவைகள் கொத்துகின்றன
மேலிருந்து பூமி நோக்கி
விழும் துளிகளில்
மீன்கள் துள்ளுகின்றன
தூறலின் கால்களை
அந்தரத்தில் தேடினேன்
பாழும் நினைவுக் கொடிகள்தான்
வந்து சிக்கின
என் கனவுக்கு இரண்டு சிறகுகளும்
ஒரு பெரிய நாக்கும் உண்டு
கண்களை மட்டும்
நான் கடன் தந்திருக்கிறேன்
அந்தக் கண்களில் ஓரத்தில் தெரிவது
என் துயரத்தின் மெல்லிய சாயல்
பகலின் பகட்டு முடிந்து
இரவின் சதங்கை ஒலித்ததும்
சிறகுகள் பறக்க அசைந்த நொடி
நாவில் சுழற்றி விழுங்கி விடுகிறது.
*



