இணைய இதழ் 125கவிதைகள்

மா.அண்ணாமலை கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

பெயரைச் சேமித்தல்

நீ எனக்கு மூத்தவள்
பாசத்திலும் கூட
இதுநாள் வரை
உன் பெயரைச்
சுருக்கமாகவே அழைத்திருக்கிறேன்
சண்டையிடும் போது
அடைபெயரில்
அழ வைத்து
அடி வாங்கியிருக்கிறேன்
அலைபேசி எண்ணை
சுருக்கப் பெயரில்தான் சேமித்திருக்கிறேன்
ஏதோ நினைவில்
அக்கா என்று
அவ்வெண்ணை மாற்றிச்
சேமித்த கணத்தில்
இனம் புரியாத துள்ளல்
ஒன்று உண்டாகி
கையில் பொம்மையுடன்
உன் பின்னால் வரும்
இளையவனானேன்…

*

குழப்பம்

உன்னை இறுக்கி அணைக்கையில்
குழப்பமேற்படுகிறது
மேகத்தை
மல்லிகையெனச் சூடி இருப்பதாலா?
நெஞ்சத்தில் பொதிந்திருப்பதாலா?
கார் கூந்தலுக்கோ
கச்சைகளுக்கோ
அக்கவலையில்லை
என் இச்சைகளுக்குண்டு!

*

சிதறும் சீஸ்

கப்பர்ஸ் மலையுச்சிப் போட்டியின்
பந்து நான்
உருட்டிவிட்டது யாரென
எனக்குத் தெரியாது
என்னைப் பிடிக்க நானே
இறங்கி ஓடுகிறேன்
முதலில் இடறியது
என் இடது கால்
அது சற்று வலு குறைந்தது
அடுத்தென் வலது கால்
இடறியதில்
புல்சரிவின் மீது விழுந்து
உருண்டோடியதில்
உடல் பாகங்கள் சிதறின
இப்போதெனக்கு பந்து முக்கியமில்லை என்றாகிவிட்டது
தள்ளியது யாரென
மலை உச்சியைப் பார்க்கிறேன்
கணக்கிறந்த வெளியே நீள்கிறது
என் இடப்பக்கம் ஒரு கூட்டம்
உருண்டோட உற்சாகத்தோடு ஏறுகிறது
ஏதோ சொல்ல எத்தனித்தவன்
உடல் பாகங்களைத் தேடிக் கண்டறிந்ததே வெற்றியென
எண்ணி வீடடைகிறேன்
”வாழ்க்கை எப்படி இருக்கிறது நண்பா?” எனக் கேட்டவனிடம்,
”நன்றாக உருண்டோடிக்
கொண்டிருக்கிறது நண்பா!” என்கிறேன்.

*

கையிலேந்துதல்

சோம்பலாக ஏறி
வருகிறது வெய்யில்
ரயிலின் ஜன்னல் வழி விழுந்த
அதன் கீற்றுகளை
தன் ஷூவில் வாங்கி
பின் தரையிலிடுகிறான்
அச்சிறுவன்
ஏமாற்றமடைந்த வெய்யில்
மீண்டும் அவன் காலைத் தேடி ஏறுகிறது
மீண்டும் இறக்கி விடுகிறான்
சிறுவனுக்குத் துணையாக ரயிலும்
வெய்யிலுக்குப் போக்கு காட்டுகிறது
கோபித்துக்கொண்ட வெய்யில்
ரயிலின் மேல் தன் கோபக்கனலைப்
பாய்ச்சுகிறது
பரிதாபப்பட்ட சிறுவன்
இறங்கு வெய்யிலை வாஞ்சையோடு
கையில் ஏந்துகிறான்
வெம்மை தணிந்து
தண்மையாகிறது அதுவும்
ரயிலில் பயணித்த மனதும்.

*

maa.annamalai1986@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button