இணைய இதழ் 125சிறுகதைகள்

‘வித்-இன் த பிரேம்’ – அ.ஜீனா கிறிஸ்டி

சிறுகதைகள் | வாசகசாலை

1

அன்று அவனது கல்லூரி நண்பன் வீட்டுப் புதுமனை புகுவிழா. ஒரு கூட்டுக் கிளிகள் பல மரங்களுக்குப் பறந்த பின்னரும்‌ வலையின் துணையால், அவ்வப்போது அலைகளின் அணுக்கத்தால் அருகருகே ஒருங்கமைவதுண்டு. நண்பன் புலனத்தில் ஒரு பட அழைப்பைவிட, அதனை ஏற்றுக்கொண்டு புறப்படத் தயாராயினர் அவனும் அவளும். 

அவனது தனிப்பட்ட உறவுகளாகிய நண்பர்கள் விழாக்களில் கலந்துகொள்வது அவளுக்கு வழக்கம் இல்லைதான் என்றாலும் குறுகிய சில காலமாக அவ்வப்போது உள்ளூரில் நடந்தேறும் விழாக்களில் இருவருமாக இணைந்தே கலந்துகொள்கின்றனர் அவனும் அவளுமாக.

முன்பெல்லாம் அவரவர் தாம் தமக்குச் சார்புடைய விழாக்களில் மரியாதை நிமித்தமாகத் தனித்தனியே சென்றாயினும் அழைப்பைத் தவறவிடாமல் வருகையைப் பதிவுசெய்துவிடுவர். காலமும் சூழலும் அதற்கான வாய்ப்பைத்தான் தந்திருந்தது. 

இப்போது அவனும் அவளுமாகச் செல்வதன் முகாந்தரம், வேலை காரணம் வெவ்வேறு ஊர்களில் வசிப்பவர்கள் சந்தித்துக்கொள்ளும் பண்டிகைகள்/வாரயிறுதியின் இரண்டே நாள்களிலும் அவனை அனுப்பி விட்டுவிட்டு சில மணிநேரங்களை இழக்க, தனிமையில் கடத்த விரும்பாததால்தான். விழா தரும் மகிழ்வைவிட, அதை நோக்கிய பயணமும் பாதையும் தரும் இன்பமே அலாதி! 

இருசக்கர வாகனத்தில், ‘அமர்ந்துகொண்டு பயணிப்பதைவிட  அமர்த்திக்கொண்டு பயணிப்பதில்’தான் அவளுக்குப் பெருவிருப்பம். அவன் பின்னால் மட்டுமே அவள் அமர்ந்துகொண்டு செல்வாள். மற்றெல்லா நேரங்களிலும் அவளது இரும்பு தேருக்கு அவள் மட்டுமே சாரதி. தனது இயந்திரக் குதிரையோடு இறக்கைகளை விரித்து, காற்றைக் கிழித்துக்கொண்டு எதிர்நீச்சல் போட்டபடி சுதந்திர வானில் பறப்பவள்.

மகிழுந்து தராத மகிழ்வைத் தருகிறது இந்த இருசக்கர வாகனப் பயணம். ‘இல் நுழைக் கதிரின் துகள்’ அளவிற்கு, காற்றோடு சேர்த்து முகத்தில் சொரியப்படும் தூசு போல அள்ளி எரிகிறது அளவில்லா பேரின்பத்தை; வாய்க்குள் நுழைந்து பற்களிடையே நறநறப்போடு…

பேசிக்கொண்டே சென்றாலும் இப்பயணத்தில் கருத்துப் பரிமாற்றம் பெயரளவிலும்‌ காற்றுப் பரிமாற்றமே பேரளவிலும் இருக்கும். ஏனெனில் காற்று பேச்சைத் தன் இஷ்டத் திசைகளிலெல்லாம் கடத்திக்கொண்டு போயிருக்கும். வெற்றொலிதான் செவிகளைச் சேர்ந்திருக்கும். இருந்தாலும் சொல்ல வந்தது புரிய வேண்டியவருக்குப் புரிந்துவிடும். 

கருத்தைவிட இருப்பை அதிகமாகப் பரஸ்பரம் இருவரும் தமக்குள் நிரப்பிக்கொள்வர் ஒவ்வொரு பயணத்திலும். இதுவே தேவையான பெரும் பகிர்தலாகவும் இருந்தது. கூகுள் மேப்பின் உதவியுடன் ஒரு மணி நேரத்திற்கும் சற்று குறைவான‌ காலத்திற்குள் நண்பன் வீட்டைக் கண்டடைந்து விழாவிற்குள் நுழைந்தனர். 

2

சந்தனப் பொட்டைச் சாத்திக்கொண்டு, அதிகாலையில் காய்ச்சப்பட்ட ஆறிய பாலை அரை டம்ளர் குடித்துக்கொண்டே வீட்டை மேலோட்டமாகப் பார்வையிட்டபடி, போரின் மத்தியில் பல போராட்டங்களைக் கடந்து உலக நாடுகளை ஒரு சுற்று சுற்றி அரபு நாட்டிலிருந்து இல்ல விழாவிற்கு இந்தியா வந்திருந்த நண்பனோடு சில நிமிடங்கள் அளவளாவியபின், அவனது குடும்பத்தாருடன் சிறு மறு அறிமுகமும் செய்துகொண்டனர். 

இது நண்பனது எத்தனையாவது புதுமனை என்றெல்லாம்‌ தெரியாது அவளுக்கு. கல்லூரிக் கால நட்பு; பல்லாண்டு இடைவெளிக்குப் பின் நண்பன்; தற்போது குடும்பத்தார் வசிக்கும் அண்டை மாநிலத்தில் கிரகப்பிரவேசம் நடத்தியபோது கலந்துகொள்ள இயலாததால், உள்ளூரிலாவது சந்தித்து நட்பைப் புதுப்பித்துக்கொள்ளும் விருப்பம் அவனுக்கு.

கடந்துபோன இருபது ஆண்டுகளை இரண்டொரு நொடிகளுக்குள் கண்முன் கொணர்ந்து இரண்டே நிமிடங்களில் அசைபோட்டபின் எழுந்து போகின்றனர்‌ காலைச் சிற்றுண்டி உட்கொள்ள இருவரும், நண்பன் பரபரப்பாக இருந்ததால், உறவினர் வழிகாட்டுதலுடன். 

இறுதியாகச் சாப்பிடச் சென்றதால் நெருக்கடியின்றிப் பேசிக்கொண்டே இலையை முடித்துவிட்டு கைகளைக் கழுவிக்கொண்டு, விடுபட்ட வீட்டின் முதல் தளத்தை இப்போது பார்வையிட்டனர். பொருள்கள் குவிந்து களேபரம் ஆகும்முன், சுவர்களால் சூழ்ந்த வீடு, ஆளில்லா தேவாலயம் போல் அமைதியில் நிறைந்திருந்தது. 

விடைபெறும் விதமாகச் சில படங்களை நண்பனின் குடும்பத்தாருடன் சேர்ந்து, திறன்பேசியின் நினைவில் பதிந்துகொள்ள, நண்பனின் தாயாரே புகைப்படக் கலைஞராகிக் கலக்கினார். எடுக்கப்பட்ட படங்கள் உடனடியாக அவர்களது நண்பர்கள் குழுவிலும் பகிரப்பட்டு சில ஈமோஜிகளை ஒப்புதல் பரிசாகப் பெற்றன. 

3

அரைமணி நேரத்திற்கெல்லாம் வந்த வேலை முடிந்து போக, கிளம்பிவிட்டனர் இயந்திரக் குதிரையில். வரும்போது பாதி வியந்து இப்போது மீதி பிரமிக்க, வழியில் புதிதுபுதிதாகக் கட்டப்பட்டிருந்த மேம்பாலங்களும் வட்டச் சந்திப்புகளும் சாலையின் அமைவிட மாற்றங்களும் மதுரைக்குள் ஓர் அரபு நாட்டையே கண்முன் காட்சிப்படுத்தின. 

அவர்கள் வழக்கமாகச் சென்று வந்துகொண்டிருந்த அதே வழி, சொந்தப்பணி நிமித்தம் மாற்றுப் பாதையில் பயணப்பட்டதால் சில வருடங்களில் பிரமிக்கத்தக்க மாற்றம் அடைந்திருந்தது.

கூட்டமே இல்லாத ஞாயிற்றுக்கிழமை முற்பகல், வாகன நெரிசல் இல்லாத சாலை, இளஞ்சூடான தென்றல், மண்டையைப் பிளக்காத வெயில் எனப் பயணம் ரம்மியமாகச் சென்றுகொண்டிருக்க… கட்டுமான ரசனைகளைத் தாண்டி அவன் மனதிற்குள் அசைபோட்டுக்கொண்டு இருந்ததைத் திருவாய் மலரலானான்… 

4

“கல்லூரியில் முதலிடம் பெற்ற அவனும் புதுமனை நண்பனும் ஆக இருவரும் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு மும்பையிலுள்ள ஒரே கம்பெனியில் ஒரு வருட இன்டென்ஷிப்பில் ஊக்க ஊதியத்துடன் கூடிய பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாகவும், பயிற்சி நிறைவு பெற்றதும் அதே நிறுவனத்தில் இருவரும் பணியைத் தொடர இருந்ததாகவும், இன்றும் அதே நிறுவனத்தின் அரபுநாட்டுக் கிளையில்தான் நண்பன் பணியாற்றி வருவதாகவும் தொடர்ந்தவன்…

சூழல் மாற்றம், எதிர்பாராத விதமாகப் பயிற்சிக்கான இடத்தில் உண்டான ஒவ்வாமை, அதனால் ஏற்பட்ட உடல்நலக்குறை போன்றவை வாலிபப் பிராயத்தில் வாய்ப்புகளைக் கைநழுவச் செய்து எதிர்பார்ப்புகளைப் புரட்டிப் போட்டுத் தடம் மாற்றி, முன்னேற்றத்தில் தேக்கத்தையும் உடலில் சிறு தாக்கத்தையும் ஏற்படுத்தி எனது வாழ்க்கைப் புத்தகத்தின் சில ஆண்டுகளுக்கான பக்கங்களைக் கசக்கிவிட்டது என்றவாறு…!

ஆனாலும் விதியின் போக்கைக் குறை கூறுவதற்கு ஒன்றுமில்லை. “விதியின் எல்லாச் செய்கைகளையும் மோசமான சதி என்றெல்லாம் சொல்லிவிட முடியாது!”. சில நேரங்களில் அது இறைவனின் ‘திருவிளையாடலாக மதிப்பேற்றம்’ பெறுவதுண்டு; பெற்றேவிட்டது என் வாழ்வில். கசங்கிய என் வாழ்க்கைப் பக்கத்தை அர்த்தமுள்ளதாக்கிய கசங்கல்களிடையே ‘உருத்தோற்றம்’ கொண்ட அற்புதமான  ‘நவீன ஓவியம்’தான் நீ ! 

எனக்கு இத்தகைய பின்னடைவும் நலக்குறைவும் மந்தநிலையும் மருத்துவச் சிகிச்சைகளும் அறுவைகளும் முடக்கமும் ஏற்படாது இருந்திருந்தால், உன்னைச் சந்திக்கும் சந்தர்ப்பம் சாத்தியப்பட்டிருக்காதே! 

“Within the Frame” – ‘நீ ‘ இருந்திருக்கமாட்டாயே!? என் வாழ்க்கைப் படச்சட்டத்திற்குள் நீயும் வந்திருக்கமாட்டாய், புதுவாழ்வும் எனக்குக் கிடைத்திருக்காது என் படத்தை அழகாக்கிய அதிமுக்கிய உறவு நீ; உயிரோவியம் நீ” என்று நெகிழ்ந்தான்…

வீழ்வதெல்லாம் வீழ்ச்சி அல்ல; சறுக்கல் எல்லாம் விதியின் சூழ்ச்சியும் அல்ல. கைகொடுக்கக் காதலிக்க, தூக்கிவிடத் தோள்கொடுக்கத் துணை இல்லாமல் இருப்பது மட்டுமே தேக்கம். அந்த வகையில் நான் பாக்கியசாலி.

“என் வலிகளையெல்லாம் வரங்களாகவே எண்ணி மகிழ்கிறேன் உன் வரவால், பாதிப்புகளையெல்லாம் பரிசுகளாகவே ஏற்றுப் பூரிக்கிறேன்” என்று நிறுத்தினான் வாகனத்தை.

5

இன்று எடுத்துக்கொண்ட புகைப்படத்திலும்கூட‌ அவனும் அவளும் ஒருமனதாக இணைபிரியாது இணைந்து புன்னகைப்பதன் பின்புலம் இதுதான். 

எங்கெங்கோ பிறந்து, வாழ்ந்து, வளர்ந்து, படித்து, ஏதோ ஒரு புள்ளியில் விதியின் செய்கையால் சந்தித்துக்கொண்டு, சங்கடங்களைச் சாதகங்களாக்கி, சாமார்த்தியமாகச் சகித்துக்கொண்டு, சோதனைகளையும் சாதனைகளாக்கி, சந்தோஷமாகப் பயணிக்கிறது வாகனம் புதுப்பாதையில்.

வாழ்க்கை ஓட்டத்தின் கால மாற்றத்தில் ஒவ்வொன்றாகப் புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்பட… கண்கள் மாயத்தோற்றமோ என உள்வாங்கத் தயங்கிக்கொண்டிருக்கும் வேளையில், அங்கே இருந்த முந்தைய பூர்வீகக் காட்சிகள் என்றும் மனக்கண்களால் மறக்க, மறுக்க இயலாதவை; மீண்டும் மீண்டும் அசைபோட்டு மகிழத்தக்கவை.

நமது அன்பிற்கு உரியவர்களின் அரிதாய்க் கிடைத்த பழைய புகைப்படம் போல…

*

zeenachristy@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button