![](https://vasagasalai.com/wp-content/uploads/2019/02/pic-696x390.jpg)
இரவு 2:45,
ஒரு டீ கடையில் நண்பர்களோடு நின்று கொண்டிருந்தேன். நண்பர்களில் சிலர் மீடியாக்காரர்கள், சிலர் IT வாசிகள் படம் பார்த்துவிட்ட பின் பெரிதாய் பேச மாட்டோம். பெரும்பாலும் இரவு காட்சிகள் என்பதால் வீடடைந்தால் போதும் என்ற நிலையே இருக்கும்.
ஆனால் இந்த படம் கொஞ்சம் மாறுபட்டு இருக்கிறது… நிறைய பேசவேண்டியவை இருப்பதாய் தோன்ற இந்த தேநீர் பிரவேசம். எல்லோரும் பேசிக்கொண்டிருக்க மனது ஏனோ படத்தின் ஒரு காட்சியை மட்டும் ஓட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது. அதில் இருந்ததே இந்த கட்டுரையை துவங்குகிறேன்.
பேரன்பு !
விஜயலக்ஷ்மி (அஞ்சலி) ஏன் அந்த வீட்டின் மூலையில் உட்கார்ந்து ஒரு தலையணையை வச்சு தன் மூச்சடைக்க முயற்சி பண்றாங்க?
தன் பிள்ளையை கொல்ல ஒருத்தி முயற்சிக்கும் போது, அவளை விரட்டி அடிக்கற அப்பாவை பார்த்து கொலை செய்ய முயற்சி பண்ற பெண் ஏன் இப்படி சொல்லணும்?
”நன்றி சார்.. என்ன காப்பாத்திட்டீங்க”
கொஞ்சமா அங்கங்க நாம மனுஷங்க மேல இரக்கப்பட்டிருக்கோம், நம்மால நாம காதலிக்கிறவங்கள, நம்ம பெத்தவங்கள, நம் பிள்ளைகளை புரிஞ்சிக்க முடியும் அப்படினு நம்பிகிட்டு இருந்த சில பேரோட மனச அமைதியாக்கி ஓரமா கொஞ்சம் யோசிக்க வச்சுருக்கிறார் ராம். put yourself in others shoes அப்படி பண்ணாத்தான் உன்னால மனுஷங்கள புரிஞ்சிக்க முடியும்னு சொல்றது எல்லாமே பொய். நமக்கு மனுஷங்களை புரியாது, புரிஞ்சிக்க கொஞ்சம் அன்போடு சேர்த்து அமைதியும் வேணும்.
பேரன்புவில் மம்மூட்டியை பார்க்கையில் எத்தனையோ வருஷத்துக்கு முன்னாடி ‘அமரா’ படத்துல பார்த்த மம்மூட்டி நினைவுக்கு வந்தார். சார் இனி இப்படியே இருங்க சார்… எதார்த்தமா அமுதவனா இருக்கும் மம்மூட்டி எங்களுக்கு அவ்வளவு இஷ்டம் சார்.
பேரன்பு மூலமா ராம் நம்ம எல்லோரையும் கொஞ்சம் தட்டி பார்த்திருக்காரு. பாப்பாவுக்காக அப்பா அமுதவன் எடுக்கற சில முடிவுகளை என்னாலயோ உங்களாலயோ நம்ம பிள்ளைகளுக்காக செய்ய முடியுமா? அப்படினு கேட்டா எவ்வளவு நேரம் யோசிச்சாலும் முடியும் அப்படினு சொல்லிட முடியாது.
படம் முழுக்க பூட்டிவைக்க பட்ட இயற்கையும், மனசுமா இருக்கு மனித மனம் திறந்தால் கிடைக்க கூடிய பேரன்பு தான் படம்.
”பத்து வருஷத்துல 100 நாள் தான் நீ என்னோட இருந்திருக்க’ இதை சொல்லி விட்டுட்டு போற மனைவியை வெறுத்து, திட்டி, நீ ஒழுக்கம் கெட்டவ இப்படியெல்லாம் பேசி அந்த பெண்ணோட மனசு உடம்பு எல்லாத்தையும் காயப்படுத்தி படம் எடுத்து அதை குடும்ப படமா சித்தரிச்சிருக்கோம். முதல் முறை அந்த பெண்ணை வசைபாடாமல் படத்தை துவங்கி இருக்கோம்”. இதுக்காக நன்றி ராம்.
அமுதவன் எல்லாத்தையும் விட்டு ஒதுங்கி எங்கயோ தூரமா போய்டணும் அப்டினு கெளம்பி போறப்போ ‘பாப்பாவுக்காக’ அப்படிங்கிற வார்த்தையோடு தான் புறப்படறாரு. உண்மையில் அவருக்கு தான் அந்த தனிமை ரொம்ப தேவையா இருக்கு.
ஓடிட்டு இருக்கும் ஆத்துக்கு பக்கத்துல தனியா ஒரு வீடு, பனி, இந்த காட்சிகளை தேனி ஈஸ்வரின் கேமரா அவ்வளவு அழகா பதிஞ்சுருக்கு.
கருப்பு வட்டங்களோடு வெள்ளை புடவையோடு அஞ்சலியை பார்க்கையில் அவ்வளவு சந்தோசம் ராம் நடிகரா அஞ்சலியையும் திருப்பி கொடுத்திருக்கார். ஜன்னலுக்கு பின்னாடி நின்னுகிட்டு அழற மனைவியை, வேற ஒருத்தரோட குடும்பம் நடத்துற மனைவியை எப்படி தேத்தறதுனு தெரியாம தவிக்கிற கணவனும், ‘உங்களுக்கு எந்த குறையும் இல்லாத அழகான குழந்தை இருக்கப்போ என்னை ஏமாத்தி இருக்கீங்கனா உங்களுக்கு எவ்ளோ பெரிய பிரச்சனை இருக்கும்?’ அப்டினு சொல்லிட்டு நகரும் எடத்துல மனுஷங்களோட மனசு எப்படிலாம் வேலை செய்யுதுனு யோசிக்க தோணுது.
படத்தை பத்தி பேசறப்போ படத்துல வர ஒரு கதாபாத்திரத்தை கூட விட்டுட்டு எழுத முடியல, மூச்சிரைக்க ஓடி வந்து பாப்பாவை கோவிலுக்கு கூட்டிட்டு போங்க குணமாயிடும் அப்டினு சொல்ற பையன் தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி வீடு வாங்கி கொடுக்கும் மீரா அப்டினு வர்க்கநிலை கீழ இருக்க மனுஷங்க மனசு தான் எவ்வளவு பெருசுனு இங்கயும் பதிவு செஞ்சிருக்கார் ராம். .
மீரா அவ்வளவு அழகு சார்..! உள்ளேயும் வெளியேயும். !
வலியை எப்படி மூடி மறைக்கிறது? ரத்தமும் சதையுமான எல்லா வலியையும் புன்னகையா மாத்தமுடியும் அப்படி ஒரு நம்பிக்கைய படத்தை தாண்டி நெஜத்துலயும் கொடுத்துட்டு போய்ட்டாங்க மீரா. படத்துல அஞ்சலி அமீருக்காக மீரா அப்படிங்கிற இந்த பெயரை தேர்ந்தெடுத்தது எதேச்சையாக நடந்த விஷயமா தெரியல.
எல்லோரும் தன் பாப்பாவை ஒதுக்கறாங்க அப்படினு வருந்தி ஓடிட்டே இருக்கற அமுதவன் மீராவை ஒதுக்கர காட்சிகள், நமக்கு பழக்கமில்லாத நமக்கு புதுசா இருக்கற மனிதர்களோட அன்பு நமக்கு அன்பா தெரியறதில்ல அப்படிங்கிற கருத்தை தெளிவா பதிவு பண்ணுது
பாப்பா! பாப்பாவை வச்சு தான் ராம் தன்னோட பேச்சை துவங்கி இருக்காரு. இப்படி நம்மை விட இயல்பில் மாறுபட்ட, வேற விதத்துல அழகா இருக்கற குழந்தைகளை எங்கயாவது பாத்து கொஞ்சம் கரிசனமும், புன்னகையும் தெளிச்சுட்டு போற நாம, நல்லா இருக்கற மனிதர்களையே அவங்க உருவத்தை வச்சு கேலி பேசற நாம, கதவை மூடிவிட்டபின்தான் சுயசுகங்களுக்கான வேலைகளை செய்யணும் அப்படினு தெரியாத பாப்பாவோட உணர்வுகளை புரிஞ்சிக்கறது கஷ்டம் தான். முயற்சிப்போம். இப்படி தான் இடைவேளை விட்டு மீண்டும் படம் பாக்க ஆரம்பிக்கிறப்போ தோணும்.
தனக்கு மாதவிடாய் வர துவங்கி இருக்கு அப்படினு தெரியாம மிரண்டு போய் ஓரமா இருக்க பாப்பாவை வாரி அணைச்சுக்கற அமுதவனும், இனி அவளுக்கு தானே பேட் மாத்தி விடலாம்னு போற இடத்துலயும் – நம்ம சமூகத்துல குழந்தையோ முதியவர்களோ தானாவே குளிக்கவோ, சாப்பிடவோ தன் வேலைகளை தானே செய்யவோ முடியாத நிலையில இருக்கப்போ பாலின வேறுபாடு இல்லாம அம்மாக்கள், அக்காக்கள், இல்ல வீட்டில் இருக்க பெண்கள் தான் அவங்கள பாத்துக்கணும் இல்ல கொஞ்சம் காசு இருந்தா ஆயா வச்சுக்கலாம் அப்படிங்கிற மனநிலையில் அமிழ்ந்து போன நமக்கு ஒரு அப்பாவா அமுதவன் தன்னோட பாப்பாவுக்கு செய்யற விஷயங்கள் பெருசா தெரியரது அதிசயம் ஒண்ணும் இல்ல ஆனா…
’சாகப்போற நிலமையில இருக்க ஆண்களுக்காக பெண்கள் பாலியல் தொழில் செய்ய போவோம் ஆனா ஆண்கள் யாரும் அப்படி போறதில்ல’ அப்படினு படத்துல வர எடத்துல நிறைய பேருக்கு அது இயல்புனு தோணுச்சு அப்டினா ‘இது நாம எல்லோரும் சந்தோஷமா வாழற சமூகம் இல்ல தானே ?’
பேரன்பு உங்களை கனத்த இதயத்தோடும் சில சமயத்தில் ஈரமான கண்களோடும் வெளியே அனுப்பும்னு சொல்றத விட பேரன்பு உங்களை எப்டியாச்சும் வாழ்ந்துரலாம் அப்படிங்கிற நம்பிக்கையோட வெளிய அனுப்பும்னு சொல்றது அழகா இருக்கும்.