![](https://vasagasalai.com/wp-content/uploads/2019/03/47249149_806726276326114_3295199570639716352_n-780x405.jpg)
8-உபகரணங்கள்.
நிலமே அனைத்து தொழில்களையும் உருவாக்கியது. ஒரு நிலத்தை வளமாக வைத்துக்கொள்ளவும், வளமான மண்ணை போரின் மூலம் வெற்றி கொண்டு நுகரவுமே உலகில் அதிகாரம் தோன்றியது.
அந்த அதிகாரம் பின்னாட்களில் தொழிலின் அடிப்படையில் இந்தியாவில் வருணாசிரமத்தை கட்டி எழுப்பியது.
இந்தப் பிழை நிகழ்ந்தது இந்தியாவில் ஆரியர்களின் வருகைக்குப்பின்தான்.இந்த உண்மையை அண்ணல் அம்பேத்கர் தன் கூர்மையான ஆய்வின் மூலம் நிறுவுகிறார். அம்பேத்கரை மிகச்சரியாக உள்வாங்கிக்கொண்டவர்கள் தொழிலால் சாதி வயப்பட்டு நிற்பதை அருவறுப்பாக பார்க்க மாட்டார்கள்.
ஒரு வேளை இன்றைக்கு இருப்பது போல மிகக்கொடிய சாதித்துவேஷம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்குமேயானால் நம் தமிழ்ச்சமூகம் பல்லாயிரம் ஆண்டுகாலம் தனது மரபு அறிவை தூக்கிச்சுமந்து இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்க வாய்ப்பில்லை.
வருணாசிரமம் தந்த சாதிய அழுத்தம், இந்தியாவிற்கு இராபர்ட் கிளைவ் வருகை, அதன் மூலம் நகர்மயமாதலினால் விளைந்த நுகர்வு வெறி இந்த மூன்று புள்ளிகளையும் ஒரே நேர்க்கோட்டில் பொருத்திப்பார்த்தால் தற்சார்புக்கிராமங்கள் சிதைந்து அழிந்துபோன இரகசியம் தெரியும்.(புரியும்?)
விளைவு, தற்சார்பு தொழில்கள் அனைத்தும் நிறுவனமயப்படுத்தப்பட்டு பொதுத்தளத்திற்கு சென்றுவிட்டது. பண்ணை வேலை துவங்கியவுடன் நீங்கள் ஆசையாசையாய் மண்வெட்டி வாங்கி வருவீர்கள் அது கொஞ்சநாளில் உடைந்து விழும்.
காரணம் அதில் ‘பணம்’ என்கிற பேய் ஒளிந்திருக்கும். தொழில் நேர்த்தியும், அறமும் அறவே அற்றுப்போயிருக்கும். நிறுவனங்களின் நோக்கம் நீங்கள் மீண்டும் மீண்டும் நுகர வேண்டும் என்பதுதான்.
தோட்ட மேலாண்மைக்காக நீங்கள் கடை கடையாக, வீதி வீதியாக அலைந்து, நாக்கில் நுரை தள்ள, முகம்வாடி நிற்கும்போது, தான் செய்கிற தொழிலை மிக நேர்த்தியாகவும், அறத்தோடும் செய்கிற கொல்லர், தச்சர், அகம்பட்டர், மண்குயவர், பிணம் புதைப்பவர், பறையிசைப்பவர், பூத்தொடுப்பவர், பாய், கூடை முடைபவர் அனைவரும் ஒரு நிமிடம் மின்னல் வெட்டாய் உங்கள் கண்முன்னே வந்து செல்வார்கள். இவர்களைப் போற்றிப் பாதுகாக்காமல் நாம் இங்கே ஒன்றையும் கழட்ட முடியாதென்று முடிவெடுத்து அவர்களைத் தேடத் துவங்குவீர்கள்.
இந்த நகர்மய நுகர்வு வெறியின் காலத்திலும் தான் சுமந்து வந்த மரபு அறிவை அடுத்த தலைமுறைக்கு கடத்தவும் முடியாமல், கைவிடவும் முடியாமல் உங்களுக்காக கடைவிரித்து காத்திருப்பார். நீங்கள் அவர்களை அனுகும்போது உங்களுக்குத்தேவையான கடப்பாறை, மண்வெட்டி, அறுவாள், பண்ணையறுவாள், மண்பாண்டங்கள், சிரட்டைக்கரண்டி கூடை, கொட்டான், முரம், பாய் போன்றவைகளை உங்கள் விருப்பம் போல செய்து தருவார்கள்.
இத்தனை அன்புள்ளம் கொண்டவர்களையா நாம் இத்தனை நாள் கவனிக்காமல் கடந்து போனோம் என்று நீங்கள் குற்றவுணர்ச்சியில் குமைந்தீர்களென்றால் உங்கள் நெஞ்சில் ஈரம் இன்னும் மிச்சமிருக்கிறது என்று அர்த்தம். அதை விடுத்து அவர்கள் வெள்ளந்தி மனதைக்கருத்தில் கொண்டு சொற்ப பணத்திற்காக நீங்கள் பேரம் பேசத்துவங்குவீர்களென்றால், ‘வாய்ப்பு இல்ல ராஜா! வாய்ப்பே இல்லை!’
பாதை விரியும்…
முந்தைய பகுதிகள்