![தோழர் சங்கரய்யா பிறந்தநாள்](https://vasagasalai.com/wp-content/uploads/2019/07/IMG-20190715-WA0021-780x405.jpg)
“மதுரை தமுஎகச மாநாட்டுக்கு என்.எஸ் தோழர் வரேன்னு சொல்லிட்டாரு. கூட உன்ன துணைக்கு வரச்சொன்னாரு வரமுடியுமா?”
தோழர் தமிழ்ச்செல்வன் கைப்பேசியில் கேட்டதும் பதட்டம் கலந்த மகிழ்ச்சி ஒன்று குப்பெனப் பற்றிக்கொண்டது. ‘தலைவனே சொல்லிடாரு, அதுக்கு மேலே வேறென்ன’, “கண்டிப்பா வரேன் தோழர்”.
ரயில் பயணத்திற்கான ஏற்பாடுகள் கட்சி மாநிலக்குழு அலுவலகத் தோழர்கள் கவனித்துக்கொள்ள பல்வேறு ஆலோசனைகளையும் கருத்துகளையும் அக்கறையோடு சொல்ல ஆரம்பித்து விட்டனர் தோழர்கள்.
“பல வருடங்களுக்குப் பிறகு தோழர் இப்பதான் ரயில்ல போறாரு. கவனமா பாத்துக்கங்க. அவரே நடப்பாரு இருந்தாலும் கைய பிடிச்சுக்கணும். பாத்ரூம் மட்டும் அடிக்கடி போவாரு, கவனிச்சுக்குங்க.”
அந்த நாள் வந்தது. பிப்ரவரி 26ஆம் தேதி பகல் ஒன்றரை மணிக்கு கட்சி மாநிலக்குழு அலுவலகத்துக்குள் நுழைந்தேன். சம்பத், ராஜசேகர், ராஜன் என தோழர்கள் எல்லாம், “உங்களைதான் தோழர் கேட்டுக்கொண்டே இருந்தார். உள்ளே போய் பாருங்க” என்றனர்.
இளகிய உடல், குதித்து விளையாடும் கண்கள், பல் போனாலும் சொல் போகாத கணீர் குரல். ‘வாப்பா” கையை பிடித்துக்கொண்டார். “உன்ன நம்பிதான் வரேன்…” சொல்லிவிட்டு பேசிக்கொண்டே இருந்தார். அவர் பேசியது எதுவும் காதில் விழவில்லை. பொறுப்பு அதிகமாகிவிட்டது போல உணர்ந்தேன்.
“அஞ்சு மணிக்கு துணி எடுத்திட்டு வந்திரு. நம்ம ட்ரெயின் எத்தன மணிக்கு? கோச் நம்பர் என்ன? சீட் நம்பர் என்ன? ராஜசேகர் கிட்ட கேட்டு டிக்கட்ட வாங்கிக்கோ.” “சரிங்க தோழர்.”
ஓடுற ட்ரெயின்ல கடைசியா ஏறி பயணம் போற நம்மள எட்டர மணி ட்ரெயினுக்கு அஞ்சு மணிக்கே ஆபீசு வரச்சொல்லி ஏழு மணிக்கே ரயில்வே ஸ்டேசனுக்கு போக திட்டம் போட்டா… நமக்கு எப்படி இருக்கும்..
ஒரே வார்த்தையில் எல்லாத்துக்கும் ‘சரி தோழர்’ என்றே சொன்னேன். ராஜசேகர் கூப்பிட்டு ட்ரெயின் டிக்கட்ட கொடுத்துட்டு, “எதுவாக இருந்தாலும் உடனே தகவல் சொல்லுங்க. மதுர கட்சி ஆபீசுல சொல்லி திரும்பி வர ட்ரெயினுக்கு ஈக்கியூ கொடுக்க சொல்லுங்க” என்றார்.
தோழர் சொன்ன நேரத்திற்கு ஆபீஸ் போனேன். ஏழு மணிக்கு இரவு உணவை சாப்பிட சொன்னார். பசியும் எடுக்கல. சாப்பிடவும் தோணல. இருந்தும் சாப்பிட்டேன். ஏதோ ஒரு உணர்வு ஆட்கொண்டது. என்னவென்று தெரியவில்லை. தோழரும் சாப்பிட்டுவிட்டுக் கூப்பிட்டார். இரண்டு பை வைத்திருந்தார். ஒன்று பெரியது. வாங்கி பல ஆண்டுகளாகி இருக்கும் போல. ஒரு வாரத்திற்கு துணி எடுத்துக்கொள்வதற்கு ஏற்றார்போல் பை இருந்தும் உள்ளே ஒருசில ஆடைகள் மட்டுமே. இடது பக்கத்தில் கண் மருந்து. வலது பக்கத்தில் கோல்கேட் பேஸ்ட். சின்னபை லேப்டாப் பேக் போன்று மெலிசாக இருந்தது. உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. இரண்டையும் எடுத்துக்கொண்டேன்.
தோழர் நடக்கத் தொடங்கினார். கருணா வாகனத்தில் உட்கார்ந்திருக்க நடந்து வந்து, வாகனத்தில் ஏறினார். பின்னால் உட்கார்ந்துகொண்டேன். சுமார் பத்து நிமிடத்தில் எழும்பூர் ரயில் நிலையத்தில்.
எப்போதும் போல பரபரப்பாகவே இருந்தது ரயில் நிலையம்.
எண்ணிலடங்கா முறை வந்து சென்ற தலைவன், ‘ரயில் பாதி ஜெயில் பாதி’ என வாழ்ந்த வாழ்க்கை. ஏறுனா ரயில், இறங்கினா ஜெயில் என்கிற வரலாறு.
சில வருடங்களாக ரயில் நிலையத்தை எட்டிப்பார்க்கவில்லை. ரயிலும் ரயில் நிலையமும் கோபம் கொண்டுவிட்டதா? அல்லது பார்த்ததைக்கண்டு உற்சாகம் அடைந்துவிட்டதா? விளையாட்டு காண்பித்துவிட்டது.
“நான்காம் நடை மேடையிலிருந்து புறப்படவேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் இன்று ஐந்தாம் நடைமேடையிலிருந்து புறப்படுகிறது” என்ற அறிவிப்பைக் கேட்டு சற்று அதிர்ச்சி ஏற்பட்டது. என்ன செய்வது. கிட்டத்தட்ட 300 மீட்டர் தூரம் நடை. சில நிமிடங்களிலே கேட்க ஆரம்பித்து விட்டார் தோழர். “எவ்வளவு தூரம்பா நடக்கணும்.” எக்ஸ்லேட்டர் படிக்கட்டு அருகில் நெருங்கி விட்டோம். சறுக்கு மரம்போல் செங்குத்தாக ஒன்றிலிருந்து ஒன்று நழுவிய வண்ணம் படிக்கட்டுகள் ஓடிக்கொண்டிருந்தன. “தோழர் முதல் படிக்கட்டுல கால வச்சுட்டீங்கன்னா போதும்.” தயங்கித்தயங்கி லேசாக எகிறி குதித்தாற்போல் படிக்கட்டில் கால்வைத்தார். தடுமாறியதுபோல் இருந்ததால் இடுப்பில் கைவைத்து அணைத்தாற்போல் நின்றுகொண்டேன். 3 பைகள் என் கையிலும் கழுத்திலும் சுற்றியிருக்க எப்போது மேலே செல்வோம் என நினைக்கும் போதே வந்துவிட்டது மேல் படிக்கட்டு. இங்கும் குதித்தற்போல் வெளியே வந்தார். சில அடிகள் நடந்த உடன் இறங்கும் இடம்.
‘ஏறுவதைவிட இறங்குவது சிரமம்தானே‘ ஆனால், மிக சாதாரணமாக இறங்கினார் தோழர். மீண்டும் நீண்ட நடை. இப்போது மெதுவாக அழுத்தமாக நடந்து வந்தார்.
‘நம்ம கோச் வந்துவிட்டதா?’ கேட்டுக்கொண்டே நடந்தார். அது இரண்டாம் வகுப்பு குளிர்சாதன வசதிகொண்ட ரயில் பெட்டி. கதவை இழுத்து திறந்து உள்ளே நுழைந்து உட்கார்ந்துவிட்டோம். மிகுந்த சிரமப்பட்டுவிட்டார் தோழர். ரயில் நின்றுகொண்டிருந்தது. நினைவுகள் ஓடின.
அப்போது குரோம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். ‘தோழர்’ என்ற வார்த்தை அறிமுகமாகியிருந்த நேரம். எல்லொரையும் வயது வித்தியாசம் பார்க்காமல் தோழர் என அழைப்பதில் ஒரு கிளர்ச்சி. அப்போது குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்தே வருவார் தோழர். பள்ளியைவிட்டு வீட்டுக்கு செல்லும்போது எதிர்படும் அவரை “வணக்கம் தோழர்” என உற்சாகமாக குரல் எழுப்புவதும், அதற்கு அவர் வணக்கம் சொல்லி விசாரிப்பதும் உற்சாகமாக-கொண்டாட்டமாக இருக்கும்.
அவங்க வீட்டுக்கு முதலில் சென்றபோது, வீட்டின் நடுநாயகமாக நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். “தாத்தா, ஷியாம் இல்லயா?” (அவரது இளைய மகன் நரசிம்மனை ஷியாம் என கூப்பிடுவது வழக்கம்) “தம்பியா?” என அவர் கேட்டு அடுத்து பதில் சொல்லுவார். அப்போதெல்லாம் இவர் எனக்கு வெறும் தாத்தாதான் அவரது மகன்கள் சந்திரசேகர், நரசிம்மன் ஆகியோர்தான் கட்சித் தலைவர்கள்.
எங்கள் பள்ளியில் நடைபெற்ற மாணவர் போராட்டத்திற்கான முதல் கூட்டம் தோழர் வீட்டில்தான் நடந்தது. நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகளை அழைத்துக்கொண்டு அவரது வீட்டுவாசலில் கூட்டம் நடத்தினோம். பீமாராவ் தோழரும், ஷியாம் தோழரும் வழிநடத்திய போராட்டங்கள் அவை. அடுத்த சில மாதங்களில் தொடர்ந்து வீட்டுக்குச் செல்ல, தாத்தா இப்போது தோழரானார். அடுத்து கட்சி ஆதரவாளர் கூட்டமும் தோழர் வீட்டிலேயே நடந்தது. கூட்டத்தில் ஆர். கிருஷ்ணமூர்த்தி பேசிய பேச்சும், சந்திரசேகர் தோழரின் அரவணைப்பும், நீங்காத நினைவுகள். அப்போதுதான் தோழர் குறித்து ஏராளமான விசயங்களை கதை கதையாய் கேட்க ஆரம்பித்தேன்.
மொபைல்போன் அடிக்க ஆரம்பித்தது. போனில் தமிழ்செல்வன் தோழர் அழைத்திருந்தார். “எங்கே இருக்கீங்க” என்று கேட்டார், “ட்ரெயின்ல உக்காந்திட்டோம் தோழர்” என்றேன். உடனே தோழர் கேட்டார் “யார் போன்ல?” “தமிழ்செல்வன்…”
“குடு போன… என்னப்பா, மாநாடு வேல எப்படி போயிட்டிருக்கு? காலைல வந்திடுவேன். மனைவி எப்படி இருக்காங்க?” எப்போதும் போல விசாரிப்புகள், போனை என்னிடம் திருப்பிக் கொடுத்தார். இப்போ தமிழ்ச்செல்வன் மெதுவாக போனில் பேசினார். “நான் நாளைக்கு மத்தியானம் தான் மதுரைக்கு வருவேன்”. தனது துணைவியாருக்கு உடல் நிலை சரியில்லை என்பதை சாதாரணமாக சொல்ல முயன்றது அவரது குரல். ‘அப்படியா’ என அழுத்தமாக என்னிடமிருந்து குரல் வந்திருக்கும் போல. போனை வைத்தவுடன் தோழர் கேட்டார் ‘என்னாச்சு?’. “இல்ல தமிழ் தோழர் மனைவிக்கு உடம்பு சரியில்லையாம்.” ‘அப்படியா?’ உடனே தோழர் பேச ஆரம்பித்தார். “அவுங்க ரெண்டு பேரும் தனியாத்தான இருக்காங்க, பசங்க கூட இல்லையே. அவரு அவுங்க மனைவியை பார்த்துக்கிறது தான் முக்கியம். திருப்பி போன் பன்னா? சொல்லு அத,” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே. நிருபன் உள்ளிட்ட மாணவர் சங்கத் தோழர்கள் நால்வர், ரயிலில் ஏறி தோழருக்கு வணக்கம் சொல்லி தங்களிடம் இருந்த புத்தகங்களை எடுத்து கையெழுத்துப் போடச் சொன்னார்கள். அவர்கள் நால்வரும், என்ன படிக்கிறார்கள். எங்கு படிக்கிறார்கள். திரும்பி எப்படி போவீர்கள் என விசாரித்தார். வந்த மாணவர் ஒருவரின் பெயர் சங்கரய்யா என சொன்ன போது, அவரது முகத்தில் என்ன ரியாக்சன் ஏற்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. மாணவர் கிளம்பும் போது “பார்த்துப் போங்க எல்லொரும் நல்லா படிங்க அதான் முக்கியம்” என்று தோழர் சொன்னார். அதுவரை எதிர் சீட்டில் இறுக்கமாக உட்கார்ந்திருந்த கணவர்- மனைவி தோழர் முகத்தை இப்போது வேறு விதமாக பார்க்கத் தொடங்கினர்.
மீண்டும் மொபைல் அடிக்கத் தொடங்கியது. சு. வெங்கடேசன் பேசினார். அடுத்து தமுஎகச மாவட்டச் செயலாளர் சாந்தாராம் பேசினார். தொடர்ந்து மதுரை தோழர்கள் என ஒவ்வொருவராக “தோழர் ரயில் ஏறிட்டாரா? கிளம்பிட்டாரா? பிரச்சனை ஒன்னும் இல்லைல, பார்த்து கூட்டிட்டு வாங்க, காலைல மதுரையில சந்திப்போம்” எனச் சொன்னார்கள்.
![தோழர் சங்கரய்யா](https://vasagasalai.com/wp-content/uploads/2019/07/sankaraiya_2_12190.jpg)
ஒரு கம்பளி பெட்சீட், 2 வெள்ளை பெட்சீட், ஒரு தலையணை என ரயில் பெட்டியில் கொடுத்தனர். எதை எப்படி பயன்படுத்துவது என தெரியவில்லை. கம்பளியை விரித்துவிட்டு அதன் மேல ஒரு வெள்ள பெட்சீட்ட போட்டு, தோழர் படுக்கத் தயார் படுத்தினேன். இப்ப பெரிய பேக்க எடுக்கச் சொன்னார். திறந்தால், ஒரு கம்பளி சொட்டரும், கொரங்கு குல்லாவும் இருந்தது. கம்பளி சொட்டரை போட்டுக்கொண்டார். குல்லாவை அணிந்து கொண்டார். அந்தக் கோலம் இன்னும் கூடுதல் அழகை அவருக்கு தந்ததும், படுத்துக் கொள்ள ஆரம்பித்தார்.
“சரிப்பா, பாத்ரூம் போயிட்டு வந்துடுவோம்.” அது ஏசி பெட்டி, ஸ்கீரினை இழுத்து ஏசி பெட்டியின் கதவை இழுத்து திறந்து பாத்ரூம் உள்ள போய், மீண்டும் இருக்கையில் வந்து படுப்பதற்குள் களைப்படைந்து விட்டார் போல, “எப்பா, நம்ம திரும்பி வரும் போது ட்ரெயின்ல வரலாமா என மதுரைக்கு போன பிறகு யோசிப்போம். சரியா?” என்றார். “சரி தோழர்.” படுத்துக் கொண்டார்.
சரவணன் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. “அண்ணே நீங்க நயிட்ல தூங்கிடாதீங்க, அவரு உங்கள எழுப்ப கஷ்டப்பட்டு, தானே பாத்ரூம் போக முயற்சிப்பாரு, பாத்துக்கோங்க” எதிர் திசையில் இருக்கையின் கீழும் மேலும் உள்ள பயணிகள் நடுவயதை தாண்டிய இருவரும் பெட்சீட்டுக்குள் மொபைல் போனை வைத்து பார்த்துக் கொண்டிருந்தனர். மொபைல் வெளிச்சம் பெட் சீட்டை தாண்டி வெளியே வந்து கொண்டிருந்தது. தோழர், இடது பக்கமாக படுத்துக் கொண்டார். மேலிருந்து தோழரை பார்த்துக் கொண்டே இருந்தேன். தூங்குவது போல தெரியவில்லை. உடலில் அசௌகரியம் தெரிந்தது. சுமார் 1 மணிக்கு குரல் கொடுத்தார். “அப்பா, பாத்ரூம் போலாம்.”
ரயிலின் ஓட்டத்தில் தள்ளாடி, தள்ளாடி பாத்ரூம் செல்ல வேண்டியதாயிற்று. அயர்ச்சியடைந்துவிட்டார் தோழர். படுத்துக் கொண்டார். அதிகாலை 3.45 க்கு மெதுவாக குரல் கொடுத்தார். என் தூக்கத்தை கெடுக்கக் கூடாது என நினைத்திருப்பார். நான் உடனே “பாத்ரூம் போலாம் தோழர்” என்றேன்.
மதுரை ரயில் நிலையத்தில் ரயில் நிற்பதற்குள் மாணவர் சங்கத் தோழர்கள் உள்ளே நுழைந்தனர். அன்பொழுக தோழரைப் பார்த்தனர், அழைத்தனர். ரயிலை விட்டு மெதுவாக இறங்கினார். வெண்கொடி ஏந்தி மாணவர் சங்கத் தோழர்களின் எழுச்சிமிக்க முழக்கங்கள் தோழர் முகத்தில் உற்சாகம் பூத்துக் குலுங்கியது. கட்சியின் மாவட்டச் செயலாளர் விஜயராஜன் தோழரும், எஸ்.எப்.ஐ செல்வராஜ் மற்றும் தமுஎகச சாந்தாராம் தோழரும் புடை சூழ ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தார். பொது மக்கள் பலர் தோழர் குறித்து விசாரிக்கத் தொடங்கினர். சுதந்திரப் போராட்ட வீரரா? 96 வயசா? கூட்டத்துக்கு வந்திருக்காரா? சென்னையிலிருந்தா? இந்த வயசுலயா? இப்படியான கேள்விகள். தோழர்களின் பதில்கள். “கட்சி வாகனம் வந்திருக்கா,” விஜயராஜனிடம் கேட்டார் தோழர். “ஆமாம் தோழர்” என்றார். ‘எங்க தங்குறோம்?’ ‘பிரேம் நிவாஸ் தோழர்,’ “எங்க இருக்கு?’ “சரி மதுரையில கட்சி எப்படி இருக்கு, எவ்வளவு மெம்பர்சிப்பு? கட்சியில இளைஞர்கள் வந்திருங்காங்களா?” இப்படியான கேள்விகள் தோழரிடம் இருந்து வந்தன. பொறுப்பானவர்கள் பொறுமையாக பதில் சொன்னார்கள்.
பிரேம் நிவாஸ் 3 வது தளத்தில் 301 வது அறையில் தோழர் நுழைந்தார். “எப்பா, பஸ்ட்டு நான் பல் தேச்சுறேன்.” அவரது பெரிய பையின் சைடு ஜிப்பை திறந்து பேஸ்ட்டை எடுத்துக் கொடுத்தேன். பாத்ரூம் உள்ளே சென்றார். நானும் உள்ளே சென்றேன். “ஒன்னும் பிரச்சனை இல்ல. நான் பாத்துக்கிறேன்” என்றார் தோழர். “அப்ப கதவு பூட்டாதீங்க கதவு தெறந்தே இருக்கட்டும்”னு சொன்னேன். ‘சரி’ன்னு சொன்னார் தோழர். சாந்தாராம் தோழர் பணத்த கொடுத்து காப்பி வாங்கி வரச் சொன்னார். மதுரை கட்சித் தோழர்கள் அறையை சூழ்ந்து உட்கார்ந்திருக்க, தோழர் அவருடன் பேச ஆரம்பித்தார். ஒவ்வொருத்தர் பேரக் கேட்டு ஊரைக் கேட்டு பதில் தெரிந்தவுடன், அந்த ஊரின் வரலாறு குறித்து பேச ஆரம்பித்தார். அப்போது மேலப்பொன்னகரம் சிபிஎம் பகுதிச் செயலாளர் ஸ்டாலினுடன் பேசத் தொடங்கினார். நலம் விசாரித்தார். காபி வந்து விட்டது. தோழர்கள், பேசி விட்டுச் செல்ல தொடங்கினர். இப்போது தோழர் சொன்னார். “நாம சென்னைக்கு டிரெய்னல போகவேணா கார்ல போயிருலாம். அதான் சரியா இருக்கும், 28ந்தேதி காலை 9 மணிக்கு நாம சென்னைக்கு போற மாதிரி வாகனத்துக்கு ஏற்பாடு பண்ண சொல்லிரு” என்றார்.
சில விநாடிகள் கழித்து மீண்டும் பேசினார். “இந்த ஸ்டாலின் இருக்கான்ல அவன் பெரியப்பா பேரு ஏ.பி.பழனிச்சாமி, என்னோட மதுரைல கட்சி வேலை செஞ்சவரு. அவங்க அப்பா பேரு ஏ. பி வைகுண்டம்” என ஸ்டாலின் குடும்பத்தின் வரலாற்றைப் பேசினார். “ரொம்ப சந்தோஷமாக இருக்கு, என் காலத்துத் தோழன் வீட்டு பசங்க கட்சியில வேலை செய்யுறது.” காபி எடுத்துக் கொடுத்தேன். சூடு ஆறிடுச்சா? காய்ச்சல் வந்தவரை தொட்டுப் பார்க்கும் மருத்துவரைப் போல காபி டம்ளரை தொட்டுப் பார்த்து விட்டு குடித்தார். தோழர் சாப்பிட என்ன வேணும். வீட்டு சாப்பாடு சொல்லவா? யாருக்கும் தொந்தரவு கொடுக்க வேணா? நாம ஓட்டலயே சாப்பிடுவோம். இது தோழரின் பதில். ஆனால், ஸ்டாலினோ, வீட்டு சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்து விட்டார். சில மணி நேரத்தில் உணவை எடுத்துக் கொண்டு வந்தனர். அவர் இட்லி, மெதுவடை, பாசிப்பயறு சாம்பார் ரசித்து ருசித்து சாப்பிட்டார். எப்பா, சாப்பாடு சூப்பரா இருக்கு. சிரித்துக் கொண்டே சொன்னார். நேரம் ஓடியது. உறவினர்களா? தோழர்களா? தோழர்களே உறவினர்களாக இருக்க, உறவினர்களே, தோழர்களாக இருக்க, ஒவ்வொருவராக வந்தனர். அவர்கள் நலம் விசாரிப்பதற்குள் இவர் அவர்களின் வரலாற்றையே சொல்லி அவர்களை அசர வைத்தார்.
சங்கரய்யாவை சுரண்டினால் சுரண்டிய இடத்திலிருந்தெல்லாம் வரலாறு கொட்டும்போல.
அப்போது, சு.வெங்கடேசன் உள்ளே வந்தார். அன்போடு தோழர் அவர் கையைப் பிடித்துக் கொண்டார். மாநாடு குறித்து ஏற்பாடுகள் எப்போது தான் பேச வேண்டும். எத்தனை மணிக்கு வர வேண்டும் என ஒவ்வொன்றாய் கேட்டுக் கொண்டார். இப்போது சு.வெ தனக்கு ஆர்.எஸ்.எஸ் பாஜகவை சேர்ந்தவர்கள் கொடுத்த மிரட்டல்கள் குறித்தும், அதுபற்றி தோழர் டி.கே.ரங்கராஜன் அவர்களுடன் சென்னையில் டி.ஜி.பியை சந்தித்து மனுக் கொடுத்தது பற்றியும் சொன்னவுடன் தோழர் அதிர்ச்சியடைந்தார். “அப்படியா எனக்குத் தெரியலையே. அந்த மனுவோட காப்பி வைச்சிருக்கியா?,” சு.வெ வை பார்த்துக் கேட்டார். பையில் இருந்து எடுத்துக் கொடுத்தார். நிதானமாக படித்தார். ஓ. அப்பனா இந்த விசயத்ததான் முதல்ல பேசப் போறோம். சு.வெ கிளம்பியவுடன் என்னப்பா இது இந்த விசயத்த கேள்விப் பட்ட ஒடன எனக்கு என்ன தோனுதுன்னா, வெங்கடேசனுக்கு வந்திருக்கிற பாதிப்ப பத்திதான முதல்ல பேசுனும்னு நினைக்கிறேன். அவனுக்கு பாதுகாப்பு குடுக்க சொல்லனும். அது ரொம்ப முக்கியம். இப்படியாய் தான் தயாரித்து வைத்திருந்த உரையில் ஏற்படப் போகும், ஏற்படுத்தப் போகும் மாற்றத்தை என்னிடம் சொல்லியவாறே மனதளவில் தயாராகிக் கொண்டிருந்தார் தோழர்.
அடுத்து இப்போது சிகப்புத் துண்டு அணிந்து சிகப்பு பையுடன் உள்ளே வந்தார் ஒருவர். அவரைப் பார்த்தவுடன் தோழர் உற்சாகமடைந்தார். வந்தவரோ, தோழரின் கையைப் பிடித்துக் கொண்டார். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கண்ணீர் சிந்தினார். தோழரின் கையை கன்னத்தைத் தடவி உற்சாகமடைந்தார். யார் இவர் என நான் யோசிக்கும் போதே தோழர் சொன்னார். இவர் பெயர் ஏ.பி.பழனி. இப்போது பழனி தோழர் பேச ஆரம்பித்து விட்டார். 92 வயதாம் அவருக்கு தோழரைப் பார்த்து கட்சிக்கு வந்தாராம். அன்று மதுரை வீதியில் செங்கொடி இயக்கத்தின் வீரம் கொண்ட வளர்ச்சியை, சாதனை சரித்திரத்தை சாமான்யத் தோழனாய், தொண்டனாய் இருந்து பார்த்ததை விவரித்துக் கொண்டே இருந்தார். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் அவர் உருவாக்கிய “புதுயுக திரேக பயிற்சி சாலை” குறித்து பேசினார். இன்றும் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறதாம். இளைய தலைமுறையினரை சாராயம், பீடிபோன்ற போதை வஸ்துக்கள் பின்னால் செல்ல விடாமல் உடல் ஆரோக்கியம் காப்பதில் தனது பணியினை பெருமையோடு குறிப்பிட்டார். தனது 90 ஆவது பிறந்த நாளில் மதுரை கட்சி நடத்திய பாராட்டுக் கூட்டத்தின் புகைப்பட ஆல்பத்தை தோழரிடம் காண்பித்தார். தோழரின் உடல் நலத்தை பார்த்துக் கொள்ள இவர் சொல்ல, தோழரோ வயசாயிடுச்சு ரொம்ப பேச வேனாம். உடம்ப பார்த்துகோங்க, உங்க பயிற்சி சாலையை சிறப்பா நடத்துங்க என வாழ்த்துக் கூறி அனுப்பி வைத்தார்.
மதிய சாப்பாட்டை ப்ரீத்தி வீட்டிலிருந்து ஸ்டாலின் எடுத்து வந்தார். கொஞ்சம் காய்கறிகளும் கொஞ்சம் சாதம் என மிகவும் ரசித்து சாப்பிட்டார்.
“எப்பா, இப்ப நம்ம என்ன செய்யனும்னா. நம்ம எதுக்கு வந்திருக்குமோ அதுல தெளிவா இருக்கனும், நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்குறேன். நீ பாரதிட்ட காலைல பேசுனுய்யா?” “பேசிட்டேன் தோழர்”. “ரைட்”.
மாலை 3 மணிக்கெல்லாம் கூட்டத்திற்கு தயாராகி விட்டார். பெரிய பையிலிருந்து சட்டையும், வேட்டியும் எடுத்துக் கொடுக்கச் சொன்னார். வேட்டியை கட்டி இடுப்புக்கு கச்சிதமாக பச்சை நிற பெல்ட்டை இறுக்கமாக அணிந்தார். இப்போது தான் அந்த சின்னப் பையிலிருந்து ஒரு காகிதத் துண்டு எடுத்தார். நிதானமாக அதைப்பார்த்தார். ஓ, இது தான் அவர் கூட்டத்திற்கு பேசுவதற்கான குறிப்போ. திருப்பிப் திருப்பிப் பார்த்துப் படித்துக் கொண்டிருந்தார்.
“தமிழ்ச்செல்வன் வந்துட்டாரா?” தோழர் கேட்டார். “காலைல போன் பன்னேன். லைன் கெடைக்கல தோழர்.” “அவங்க ஒய்ப்புக்கு உடம்பு சரியில்லன்னு சொன்னரு என்னாச்சு?”
சு.வெக்கு போன் செய்தேன். எத்தனை மணிக்கு தோழர் பேசனும். எப்படி அழைத்து வரனும்? ஒவ்வொன்றுக்கும் சு.வெ. பதில் சொன்னார். தமிழ் தோழர் எங்க இருக்காரு? தோழர் கேட்டாரு? சு.வெ. சொன்னார். நீ யார்கிட்டயும் சொல்லாத.. தமிழ் கூட்டத்திற்கு வர மாட்டாரு, அவுங்க மனைவிக்கு உடம்பு சரியில்லாததுனால, கூட இருக்க வேண்டியதாச்சு.
7.30 மணிக்கு தோழர் பேசுவது அதற்கேற்றாற்போல் வாகனத்தை தங்குமிடத்திற்கு அனுப்புவது தோழர்கள் திட்டமிட்டனர்.
அறையிலிருந்து வெளியேவந்து நடக்க ஆரம்பித்தார். நடக்கிறாரா அல்லது தான் பேசப்போகும் பேச்சை அசைபோட்டு ஒழுங்குபடுத்துகிறாரா தெரியவில்லை. அறையினுள் அமர்ந்துகொண்டு மூன்றுக்கும் மேற்பட்ட முறை தான் பேச வேண்டிய குறிப்புத் தாளை பார்த்துக் கொண்டார்.
தாய்மொழி கல்வியின் முக்கியம் குறித்து பேசப்போவதாக சொன்ன தோழரிடம் அன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளிவந்த தலையங்கக் கட்டுரையின் விபரத்தை சொன்னேன். தலையாட்டிக் கொண்டு ஆம் என்றார். மாலை 7 மணி. கிளம்பலாமா தோழர் சால்வை எடுத்துப் போர்த்துக் கொண்டார். கட்சி வாகனத்தில் பொதுக் கூட்ட மேடையை நெருங்கியவுடன் தோழர்களின் வரவேற்பு முழக்கங்கள் கூடி நின்று உற்சாகமாக வரவேற்றனர். கம்பீரமாக மேடை ஏறி கூட்டத்தைப் பார்த்து கைகூப்பி வணங்கினார். தோழரின் வருகையை பேச கூப்பிடுவதற்கான அழைப்பை ரசித்து நிதானமாக அழுத்தமான மொழியில் பேசி அழைத்தார் மதுக்கூர் இராமலிங்கம். தோழர் என். எஸ். பேச ஆரம்பித்துவிட்டார். காற்றில் வெப்பம் கலக்கத் தொடங்கியது. ‘சோடா பாட்டில் வீசுவேன்’ என்று சொன்ன ஜீயர் முதல் கருத்துரிமைக்கு எதிராக இயங்கும் பாஜகவினர்வரை அனைவரையும் ஒரு பிடி பிடித்தார். தமிழுக்காக கம்யூனிஸ்ட்கள் ஆற்றிய பங்கினைக் குறித்து வரலாற்றிலிருந்து வார்த்தைகளை உருவி வீசினார். பேச்சினிடையில் அம்பேத்கார் சொன்னது போல் சாதி ஒழிக! ரத்தக்கலப்பு நடக்கக் காதல் திருமணம் செய்யுங்கள்! என அறைகூவல் விடுத்தார் இளைஞர்களுக்கு.
ஆம் இவரைத் தவிர வேறு யாருக்கு காதலின் அருமை தெரியும். தனது வாழ்க்கை துணை நவமணியை காதலித்து சாதி மதம் கடந்து திருமணம் செய்துகொண்டவரில்லையா! ஒருமுறை கேட்டேவிட்டேன், தோழர் உங்களை எப்படி காதலித்தார், எங்க சந்திப்பிங்க? சிரித்துக் கொண்டே தனது காதல் கதையை சொல்வதுபோல் அரசியல் வாழ்வின் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றைச் சொல்வார் நவமணி அம்மா. இவரிடம் கதைகேட்டுத்தான் நான் தோழரை நேசிக்க, ரசிக்கத் தொடங்கினேன். கட்சி வாகனத்திலிருந்து இறங்கும்போதே “நவமணி” என அழுத்தமாக அழகாக ரசனையாக உச்சரித்தவாரே விட்டுக்குள் நுழைவாராம். பார்த்தநாள் முதல் இருவரையும் அருகருகே சேர்ந்தே நான் பார்த்திருந்தேன். தோழர் தனியாக உட்கார வேண்டிய சூழல் கடந்த ஆண்டு உருவானது. எப்படி எதிர்கொள்ளும் தோழரின் மனம். தனது காதல் மனைவி தனது அரசியல் வாழ்வின் பெருந்துணை மீளா உறக்கத்தில் படுத்திருந்தார். நெருங்கி வந்து குனிந்து பார்த்தார் தோழர். உடல் குலுங்கியது, கண்களில் கண்ணீர் கசிந்தது, எப்படியோ. உதிரத்தில் கலந்த காதலின் பிரிவை அடுத்த சில நிமிடங்களில் செறித்துக்கொள்ள தொடங்கிவிட்டார் போலும்…
இப்போதும் கூட்டத்தில் பேசிக்கொண்டே இருந்தார். நேரத்தைப் பார்த்தேன், திட்டமிட்ட நேரத்தைவிட கூடுதலாக பேசினார். பேசமாட்டாரா என்ன? தன்னை வளர்த்தெடுத்த மண் விடுதலைப் போரில் வீறுகொண்டு எழுந்த தளம், சுபாஷ் சந்திரபோசை அழைத்து வந்து கூட்டம் நடத்தியதற்காக அமெரிக்கன் கல்லூரியிலிருந்து அவரை நீக்கினார்கள். அப்பேற்பட்ட மதுரையல்லவா? பேசினார், கூட்டம் ஆர்ப்பரித்தது.
மேடையையொட்டி இறங்க முடியவில்லை. தோழருக்கு மரியாதை செலுத்த கூடியது கூட்டம். மிக லாவகமாக தோழரை வாகனத்தில் உட்கார வைத்தனர். இப்போது தொடங்கியது கைகுலுக்கலும் சால்வை அணிவித்தலும். கூடி நின்ற செங்கொடிப் புதல்வர்களின் உற்சாக முழக்கங்களை அப்படியே உள்வாங்கி நகர்ந்தது தோழரின் வாகனம்.
இரவு உணவு தோழர் ஒருவரின் வீட்டில். அன்பான உபசரிப்பில் அளவாக உண்டார். தோழருடன் புகைப்படம் எடுக்க பலர் வந்தனர். ஒவ்வொருவரையும் விசாரித்தார். பொதும்பு கிளைத் தோழர்களா என உணர்ச்சிவசப்பட்டார். உற்சாகமாக கைகுலுக்கினார். ஒவ்வொரு தோழர்களின் தாத்தாவின் பெயர்களைச் சொல்லி விசாரித்தார். பெருமையாக பேசினார். இவங்க தாத்தாக்களாம் என்னோட கட்சியில வேலை செய்தார்கள். இப்போ பேரன்கள் செங்கொடி இயக்கத்தின் வரலாறு அறுபடாமல் தொடர்கிறது என்று சொல்லிப் பூரிப்படைந்தார். பொதும்பு கிளைத் தோழர்களோடு போட்டோ எடுக்கச் சொன்னார்.
அறைக்கு திரும்பினார். இப்போது நாங்கள் இருவர் மட்டுமே. தோழர் பேசத் தொடங்கினார். “30 நிமிசத்துக்கு மேலே பேசினேன் பாத்தியா, எல்லா பாய்ண்ட்டும் பேசின்டேப்பா, ஒன்னு தா பாக்கி, அதை பேசினா நேரமாகும், அதா பேசல..”
தோழரின் முகம் பிரகாசிக்குது, வந்த கடமையை முடித்துவிட்ட திருப்தி. படுக்கத் தொடங்கினார். ஆழ்ந்த உறக்கம். விடியற்காலை 5.45 மணிக்குத்தான் எழுந்தார்.
“எப்பா நல்ல தூக்கம், நடுவுல எழுந்திருக்கவேயில்லை” என்றார் தோழர்.
அறைக்கு வந்த ஆங்கில இந்து நாளிதழை தோழரிடம் படிக்க கொடுத்தேன், “பார்த்தியா நேத்து நா பேசின எல்லா பாய்ண்ட்டும் கவர் பண்ணிருக்காங்க, அதிலும் வெங்கடேசனுக்கு பாதுகாப்பு கொடுக்கனும் சொன்னதும் வந்திருக்கு, நல்ல ரிப்போர்ட்டிங்ப்பா,”
எழுந்து நடந்தார், கைகால்களை அசைத்து பயிற்சியும் செய்தார். நாளிதழ்கள் அனைத்தையும் புரட்டிப் பார்த்தார்.
எத்தன மணிக்கு கிளம்புறோம்? 9 மணிக்கு தோழர்…
தமுஎகச கட்சி மாவட்டத் தலைவர்கள் அழைத்து வந்து வாகனத்தில் உட்காரவைத்தனர். தனது இடதுகையிலிருந்த வாட்ச்சைப் பார்த்தார் மணி 9. வாகனம் புறப்பட்டது, மதுரை சரவணன் வண்டி ஓட்டினார்.
இங்குதாப்பா சமண படுக்கைகள் இருக்கு, காரில் இருந்தபடியே காண்பித்தார், சமணம் பவுத்த மதங்கள் அழிக்கப்பட்ட வரலாறு குறித்து பேச ஆரம்பித்தார். இங்கு தோன்றிய பவுத்தம், எப்படி அழிக்கப்பட்டது. அகநிலைப் பார்வையற்ற ஆய்வு தேவை என்றார்.
கட்சியின் மாநிலச் செயலாளராக தோழர் இருந்த காலம். சின்னமலை பஸ்டாண்ட் அருகில் நடந்து வந்திருந்தேன். ஜனா தோழர், “எங்க போய்ட்ட, சின்னய்யா தோழர் தேடுறாரு.” நேர கட்சி ஆபிஸ் போனேன், சின்னய்யா தோழர் பேசினார், எங்க போன தோழர் போன் பண்ணாரு, தீக்கதிர் பத்திரிகையில நீ அறிக்கை குடுத்தியாமே, ஏதோ ஒரு ஸ்கூல்ல பசங்ககிட்ட நாலு பக்கமும் மஞ்சளு தடவி மன்னிப்பு கடிதம் கேட்பதாகவும், அதை கண்டிச்சு மாணவர் சங்கம் போராடப்போவதாகவும் அறிக்கை விட்டையாமே. மத உணர்வுகளை எச்சரிக்கையா கையாளானு சொல்லச்சொன்னாரு தோழர்.
போன் ஒலித்தது, சு.வெ. பேசினாரு, கிளம்பிட்டீங்களா, இடையில ரெஸ்ட் எடுக்க திருச்சி எஸ்ஆர்வி ஸ்கூல்ல தங்கிக்கிறாரா தோழர்ட்ட கேளு என்றார். வேணாம்ப்பா விழுப்புரம் கட்சி ஆபிஸ்ல போய்ட்டு ரெஸ்ட் எடுத்துக்கலாம், இது தோழரின் பதில்.
இப்போ போனில் தமிழ்ச்செல்வன், “கிளம்பி போய்ட்டிருக்கோம் தோழர்.” “யாருப்பா போன்ல,” தமிழ் தோழர், போனை வாங்கி, “என்னப்பா உன் மனைவி எப்படியிருக்காங்க, பத்ரமா பாத்துக்கோ நிகழ்ச்சிக்கு வரலேனு வருத்தப்படாத, நீ அவுங்க கூட இருக்கிறதுதா இப்ப முக்கியம், நான் விசாரிச்சேனு சொல்லு. தீக்கதிர்ல உங்கட்டுரை நல்லா இருந்தது”.
வண்டி ஓடிக்கொண்டிருந்தது. நூறு கிலோமீட்டர் வேகத்தில். விழுப்புரத்தில் தோழர் ரெஸ்ட் எடுக்கப்போகிற தகவலை ஆனந்தன் தோழருக்கு போன் மூலம் சொல்ல, உற்சாகமடைந்தார் ஆனந்தன். விழுப்புரம் பை-பாஸ் சாலையிலிருந்து தோழரை அழைத்துச் செல்ல வாகனம் வந்திருந்தது. அந்த வாகனம் வழிகாட்ட விழுப்புரம் கட்சி ஆபிஸை நோக்கி செல்ல ஆரம்பித்தார். தோழர் சொன்னார், நான் தான் விழுப்புரம் கட்சி ஆபிஸை திறந்து வைச்சேன், நல்ல கூட்டம் அன்னைக்கு, அப்புறமா ஒரு ஆலொசனை சொன்னே, மேலே ஒரு ரூம் கட்டச் சொல்லி, இப்ப கட்டிட்டாங்களா போய் பார்க்கணும்.
சொல்லிக் கொண்டிருக்கும்போதே வாகனம் நின்றது, முன்னாடி வந்த வாகனத்திலிருந்து இறங்கிய ராமமூர்த்தி அருகில் வந்து கட்சி ஆபிஸ் படிக்கட்ட ஏற கஷ்டமா இருக்கும், என் வீட்ல கீழே ரெஸ்ட் எடுக்கறீங்களானு கேட்டார்.
“வேண்டாம் ராமமூர்த்தி படிக்கட் ஏறுவேன், கட்சி ஆபீசுக்கே போறேன்.”
சில அடிகளில் விழுப்புரம் கட்சி ஆபிஸ், உருவாக்கிய கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தார், கைப்பிடித்து மேலே அழைத்துச் சென்ற தோழர்கள் தங்கும் அறைக்குச் சென்றார். சூரிய ஒளி அறையெங்கும் வியாபித்திருந்தது. உடை மாற்றி உட்கார்ந்தார். தயிர் சாதம் கேட்டார். அவர் சாப்பிடுவதற்கேற்றாற் போல், பக்குவமாக எடுத்து வந்து கொடுத்தார் ராமமூர்த்தி.
அங்கிருந்த முத்துகுமரனிடம் கேள்வி கேட்கத் தொடங்கினார் தோழர். விழுப்புரம் மாவட்டக் கட்சி, வெகுஜன அமைப்புகள், தீக்கதிர் குறித்த கேள்விகள் . பதில்கள் துல்லியமாக இருந்தால் உடனே அடுத்தக் கேள்வி, அலுவலக செயலாளர் வீரமணியும், கிருஷ்ணராஜூம் உரையாடினர்.
பாண்டி வீரபத்ரன் எப்டியிருக்கிறார். அவரது வாரிசுகள் கட்சியில் இருக்கிறார்களா? டி.பி.கோவிந்தன் குடும்பத்தினர் எப்படியிருக்கிறாங்க? யாரு தோழர் இவங்க கேள்வி கேட்க பாண்டிச்சேரியில கட்சியை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகிக்கச்சவங்க, இவங்க வாரிசுகளாம் இப்ப கட்சியில இருக்காங்க.
சுதா பாண்டிக்கு வராங்களா, தோழர் கேட்க, சில கூட்டங்களுக்கு வந்து செல்வதாக பதில் சொன்னாங்க, தோழர் சொன்னார், 1942இல் வேலூரில் ஜெயிலிலிருந்து தோழர், மாயாண்டி பாரதி, வா.சுப்பையா, விருத்தகிரி ஆகிய நால்வரும், நேரா விழுப்புரத்திற்கு வந்தாங்களா, சுப்பையாவ விழுப்புரத்தில தங்க வச்சிட்டு தோழரும், மாயாண்டிபாரதியும் மதுரைக்கு போனாங்களாம். தோழர்கள் சூழ்ந்துகொண்டு வரலாற்றைக் கேட்டுக் கொண்டிருந்தனர். சரிப்பா… கிளம்பலாம்.
படியிலிருந்து இறங்கும்போது பாஷா ஜான் குடும்பத்தினரோடு கட்சியில தொடர்பு இருக்கா, விழுப்புரம் தோழர்கள் பதில் சொல்லிக்கொண்டிருக்க, பாஷா ஜானா என நான் சொல்ல
பெரிய தலைவருப்பா அவரு கல்வராயன் மலைப் பகுதியில பழங்குடி மக்கள அமைப்பாக திரட்டியவர், பழங்குடி மக்களுடைய அன்புத் தலைவர். உற்சாகமாக சத்தமாக சொன்னார் கீழே இறங்கி வந்தவுடன் தான் திறந்து வைத்த கல்வெட்டைப் பார்த்தார். கல்வெட்டு அதன் வயதை தோழருக்கு சொன்னது. வாகனத்தில் அமர்ந்து கொண்டார். சென்னை நோக்கி ஓடியது கார். இப்போது ஓட்டுநர் சரவணன் தனது பர்ஸிலிருந்து ஒரு போட்டோ எடுத்துக் காண்பித்தார். அது இருபது வருடங்களுக்கு முன்பாக தோழருடன் எடுத்துக் கொண்ட படம். காண்பித்த உடன் உற்சாகமாகிவிட்டார். நல்லா ஞாபகமிருக்கு பழங்காநத்தம் பக்கத்துல நான் பேசின பொதுக்கூட்டம். அந்தக் கூட்டத்தின் நினைவுகளை சரவணன் பேசிக்கொண்டே வந்தார்.
தாம்பரம் நெருங்கிவிட்டது. “தம்பிக்கு சொல்லிடுப்பா இன்னும் கொஞ்சநேரத்தில வீட்டுக்கு வந்திடுவேனு சொல்லிடுப்பா,” “சொல்லிட்டேன் தோழர்.” வீடு பராமரிப்பு பணியில் இருந்தது. அடுத்த சில வாரங்களில் தோழரின் பேரனுக்கு திருமணம். இறங்கி எப்போதும் உட்காரும் இடத்தில் உட்கார்ந்து கொண்டார். கைகுலுக்கி அன்பையும் நன்றியையும் பரிமாறினார். எந்த இடத்தில் முதலில் சந்தித்தோமோ அதே இடத்தில் தோழர் உட்கார்ந்திருக்க, வாகனத்தில் கிளம்பினோம்.
மனம் லேசாகியது. தமிழ்ச்செல்வன் போனில் அழைத்தார். தோழர் வீட்ல இறக்கிட்டீங்களா, குட், உங்க மிஷன் கம்ப்ளிட்டாயிடுச்சுப்பா என்று சந்தோஷமாக பேசினார்.
நாட்டின் மகத்தான தலைவரின் உதவியாளனாக, சக பயணியாக, தோழமையுடன் உடன் பயணிக்க வாய்ப்பாக அமைந்த இந்த ஒரு நாள் என் வாழ்நாள் முழுதும் இனிமையையும், மனக்கிளர்ச்சியையும், இன்னும் வேகமாக ஓடுவதற்கான உற்சாகத்தையும் தந்துகொண்டே இருக்கும். என்ன மாதிரியான ஓர் நாள்! துணைக்கு நான் வரவேண்டும் என அவரே அழைத்த பெருமையை நினைத்து நிமிர்ந்து நடந்தேன்.
இன்று ஜூலை 15 ம் தேதி 98 வயதைத் தொடுகிறார் தோழர். இந்த வயதில் பல நூறு கிலோ மீட்டர் பயணம் செய்து மக்களின் உரிமைக்காக பண்பாட்டை பாதுகாக்க, பெற்றெடுத்த சுதந்திரத்தை வளர்த்தெடுக்க இன்று இந்தியாவில் எத்தனை தலைவர்கள் இருக்கிறார்கள்?
இந்திய தேசத்திற்கு வழிகாட்டுவது கம்யூனிஸ்ட்டுகள். தோழர் தான் கலங்கரைவிளக்கம்…
தோழர் செல்வா எழுதிய ‘எங்கள இங்கிருந்து அப்புறப்படுத்தாதீங்க’ நூலிலிருந்து…