
பிக் பாஸ் நிகழ்சியின் கம்ஃபர்டபிள் ஏரியாவான உறவுச்சிக்கல்களையே பிரதான கன்டெண்டாக மாற்றி உருட்டிக் கொண்டிருக்கிறார் பிக் பாஸ். வேறு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பில்லாதவாறு அனைவரும் ஏதோ ஒரு உறவில் சிக்கி சின்னாபின்னமாகிக் கிடக்கிறார்கள். ஆனால், எத்தனை நாளைக்கு இது தேறும் எனத் தெரியவில்லை. இத்தனையையும் தாண்டி நேற்றைய எபிசோடில் கண்டிப்பாக நாம் பேச வேண்டிய ஒருவராக சேரன் இருக்கிறார்.
முதலில் இருந்தே சேரன் எடுக்கும் நிலைப்பாடுகள் கொஞ்சம் சென்ஸிபிளாக இருப்பதைப் பார்த்திருப்போம். வீட்டின் சிக்கல்களும் தீர வேண்டும், நம் மரியாதைக்கும் பங்கம் வந்து விடக் கூடாது என யோசிப்பார். எதில் தலையிட வேண்டும், எப்போது தலையிட வேண்டும், எதை கண்டுகொள்ளக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பார். அதேநேரத்தில் இளைஞர்களின் இந்த உறவுச்சிக்கல்களைக் கண்டு அவர் முகம் சுழிக்கவில்லை. அவர்கள் மீது எந்தப் புகாருமே அவருக்கு இல்லை. பொறுமையாக ஒவ்வொருவரையும் தனியே அழைத்துப் பேசுகிறார். ஒரு பக்குவப்பட்ட தந்தையின் அணுகுமுறை அவருடையது. லாஸ்லியாவுக்கும் அவருக்குமான உறவு உணர்வுப்பூர்வமானது என வைத்துக் கொண்டால் கூட, ஷெரினுடனும், அபியுடனும் கூட சேரன் வயது வித்தியாசம் தாண்டிய நட்புடன் தான் பழகுகிறார். ஆச்சரியப்படும் விதமாக கவின் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் அவருக்கு இல்லை.
சரவணன் இந்த விஷயத்தில் தான் பின்னால் போகிறார். ஆண்களுடன் நட்பாக பழகும் அவரால் பெண்களுடன் இயல்பாகப் பேசக் கூட முடிவதில்லை. ஏதோவொரு கனம் மண்டையில் ஏறிக் கொண்டு இயல்பாக பெண்களை உதாசீனம் செய்யச் சொல்கிறது. இவர்களின் இந்த நட்பு போராட்டத்தைப் பற்றியெல்லாம் சரவணன் என்ன நினைக்கிறார் எனத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் ஒளிபரப்புவதில்லை. ப்ச்.
இடையில், “பாத்ரூம் தண்ணி எனக்கு சேரவே மாட்றது..என்னை குக்கிங் டீம்க்கு மாத்தி விடுறயா?” என சாக்ஷியிடம் கேட்டார் மோகன் வைத்யா. “குக்கிங் டீம்ல சரவணன் அண்ணா இருக்காரு. உங்களுக்கும் அவருக்கும் ஆகாது. பாத்ரம் துலக்கும் டீம்க்கு போறீங்களா?” என சாக்ஷி கேட்டதும் ஓக்கே என மண்டையை ஆட்டியது மோகன். “அப்போ அந்த தண்ணி மட்டும் சேந்துக்குமா?” என சாக்ஷி கிடுக்குப்பிடி போட ஏதேதோ சொல்லி சமாளித்தது. இதே மோகன் தான் சென்ற முறை, “எனக்கு இடுப்பு வலிக்குது முதுகு வலிக்குது என்னைய இனிமே பாத்ரம் துலக்குற டீம்ல போடாதீங்க” என நாடகம் போட்டது. பின் இதைப் பற்றி மோகனிடம் சேரன் கேட்ட போது, “நீங்க தனியாவே எல்லா வேலையும் பாக்குறீங்க எனக்கு கஷ்டமா இருக்கு. எனக்கு பதிலா வேற யார்னா வந்தா நல்லாருக்குமேனு சொன்னேன்,” என அப்படியே ப்ளேட்டை மாற்றினார். எல்லா வேலையையும் சேரனே செய்கிறாராம். அப்படியும் அந்தத் தண்ணீர் இவருக்கு சேரவில்லையாம். பாத்ரம் கழுவும் தண்ணீர் சேர்ந்து கொள்ளுமாம். இதெல்லாம் என்ன புத்தி என நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
‘உள்ளதும் போச்சுடா‘ என உட்கார்ந்திருக்கிறார் கவின். லாஸ்லியாவும் பேசுவதில்லை. சாக்ஷியும் பேசுவதில்லை. புலம்பிக் கொண்டிருந்த கவினுக்கு ரேஷ்மா செம்மையான அறிவுரை ஒன்றைச் சொன்னார். ” இதுக்குத் தான் எல்லாத்துலயும் போய் வாய் வைக்காதனு சொல்றது. யாராச்சும் ஒருத்தரை தேர்ந்தெடு. அவுங்களுக்காக காத்திரு” என. ஆனால் இதெல்லாம் ராம்களுக்குத் தான் செட்டாகுமே தவிர. கவின்களுக்கு செட்டாகாது. கவின்கள் பெண்கள் சூழ வாழ விரும்புபவர்கள். நான்கு பெண்களிடம் ஒரே நேரத்தில் பழகுவதால் எத்தனை பிரச்சனை வரும் தெரியுமா? அந்தப் பிரச்சனைகள் இல்லாமல் கவின்களால் வாழவே முடியாது. சாக்ஷியின் மீது மிகச்சிறிய அளவில் பொசசிவ் வரத் தொடங்கிய பின்னர் தான் ‘அய்யோ இது டேஞ்சராச்சே…’ என அவரிடமிருந்து மெதுவாகி விலகி லாஸ்லியாவில் நிலை கொள்கிறார் கவின். அந்தப் பொசசிவை காதலென நினைத்துக் கொண்ட சாக்ஷி கவினின் மாற்றத்தால் ஏமாற்றமடைகிறார். இந்தச் சிக்கலில் சம்பந்தமில்லாமல் சிக்கிக் கொள்கிறார் லாஸ்லியா.
சரி. ஏனித்தனை சிக்கல்கள்? இந்தப் பெண்களுக்கு என்ன தான் வேண்டும்? ஏன் சாக்லேட்டுக்கெல்லாம் அடித்துக் கொள்கிறார்கள்? எனத் தோன்றும். அவர்கள் அடித்துக் கொள்வது சாலேட்டுக்காக அல்ல அப்பாவி கவின்களே. அங்கீகாரத்திற்காக. நட்போ காதலோ அல்லது வேறெந்த உறவிலும் ஒரு பெண் எதிர்பார்ப்பது ஒரு குறைந்தபட்ச அங்கீகாரத்தை மட்டுமே. உங்களுடன் உறவில் இருக்கும் ஒரு பெண் பொதுவெளியில், உங்கள் நண்பர்களிடத்தில், ‘இவள் என் தோழி/ என் காதலி” எனச் சொல்லி அவளுடனான உறவை நீங்கள் அங்கீகரிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறாள். அன்று முகேன் அபிராமிக்கு செய்தாரில்லையா அப்படி. அதனால் தான் மற்ற பெண்களை விட அபி மட்டும் முகேனுக்கு நெருக்கமாக இருக்கிறார். இப்படி ஒரு பெண்ணுடன் மட்டும் அந்த நெருக்கம் இருந்து விடக் கூடாது என்று கவின் ‘நாலு பேரும் முக்கியம்‘ எனக் கம்பு சுத்தி இப்போது ஒன்றுமில்லாமல் உட்கார்ந்திருக்கிறார்.
‘நாம் இருவரும் பேசிக் கொள்வது அவளுக்குத் தெரிய வேண்டாம்.’, ‘அவள் இருக்கும் போது என்னுடன் பேசாதே!’, ‘நாம் இருவரும் நண்பர்கள் எனப் பொதுவெளியில் சொல்ல வேண்டாம்.’ என நேரடியாகவோ மறைமுகமாகவோ அறிவுறுத்தப்படுவதை ஒரு பெண் விரும்புவதேயில்லை. அதை அந்த உறவுக்கான அவமானமாகக் கருதுவாள். இது தான் சிக்கல். உண்மையில் ஒரு ஆணால் எப்படி எல்லாப் பெண்களிடமும் ஒரே மாதிரிப் பழக முடியும்? ஒன்று போல நடத்த முடியும்? கவின்கள் யாராவது இருந்தால் விளக்கவும்.
அபி–முகேன் நட்பும் கூட கடைசி வரை நட்பாகவே நீடிக்காது என நினைக்கிறேன். இப்போதே நீயா நானா டாஸ்க்கில், “நாம் வெறும் நண்பர்கள் தான். அதைத் தாண்டி புனிதமெல்லாம் இல்லை,” என முகேன் சொன்னதற்காக அபி முகத்தைத் தூக்கி வைத்துள்ளார். முகேன் ஒரு அப்பாவி. அவருக்கு மறைமுகமாக உணர்த்தப்படும் எதுவுமே புரியாது. அபிக்கு முகேன் மீது இருக்கும் நட்பையும் தாண்டிய உறவு ஒருவேளை காதலானால், அதை அபியே சொல்லும் வரை முகேன் உணரப் போவதில்லை. அப்படி அபி சொல்லும் போது, ‘ அய்யோ நான் அப்டிலாம் நெனைக்கவேயில்லை‘ என பதறியடித்து விலகி விடுவார். இதெல்லாம் அதிகபட்சம் இன்னும் 15 நாட்களுக்குள் நடக்கும் என எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் அந்த வீட்டில் அவர்களுக்கு வேறு வேலை இல்லை அல்லவா?
இதில் சாண்டியும் ஒரு கவனிக்கப்பட கேரக்டர். அவர் விளையாடுவது மிக மிகப் பாதுகாப்பான விளையாட்டு. எந்தப் பிரச்சனையிலும் தலையிடுவது கிடையாது. சாண்டி வெறும் பார்வையாளர் மட்டுமே. ஆனால், அவரது நிலைப்பாட்டை அழகாகப் பகடிகள் மூலம் கடத்துகிறார். அதனால் தான் மீராவையும், மதுமிதாவையும் இயல்பாக அவர்கள் குணங்களை வைத்தே கலாய்த்து அதற்கு அவர்களையே சிரிக்க வைக்கவும் முடிகிறது. சாண்டி தான் வீட்டின் மிக ஆபத்தான போட்டியாளர். பிக் பாஸாக எதாவது திட்டம் போட்டு சாண்டியை உணர்ச்சிவசப்பட வைத்தால் தான் அந்த எல்லைக் கோட்டை விட்டு அவர் வெளியே வருவார்.
கவின், கவினின் செய்கைகளால் மனமுடைந்து அழத் தொடங்கியிருக்கும் லாஸ்லியா, கவின் மீது உச்சகட்ட கோபத்தில் இருக்கும் சாக்ஷி, இவர்களின் நலம் விரும்பிகள், தனி ட்ராக்கில் செல்லும் முகேன்–அபி என வீட்டில் முக்கால்வாசிப் பேர் இதில் பிசியாக உள்ளனர். இதில் வேறு பிரச்சனைகளுக்கு எங்கே போவது. மதுமிதாவோ, சரவணனோ உணர்ச்சிவசப்பட்டு வார்த்தையை விட்டால் தான் உண்டு. காத்திருப்போம்.