லாரியில் நகருகிறது
விதைகளற்ற நிலம்.
இடுக்குகள் வழியே கசிந்து ஓடும்
விடாய்க் குருதி மணம் வீசும் மண்ணை
சரக் சரக்கென்று குத்துகின்றன
சக்கரங்கள் உடைத்துச் சிதறும்
பிராந்தி பாட்டில் சில்லுகள்.
நகரும் நிலம்
வழியனுப்பும் வயல்களை
வேடிக்கை பார்க்க எழும்போது
கால்களை உடைப்பது
சீட்டுக்கட்டு ஆடுபவர்களின் காதுகளுக்கு
உவப்பாக இருக்கிறது.
குட்டிகளுக்குச் சொல்லாமல்
கடத்தி ஏற்றப்பட்ட ஆடு
முலைப்பாலை கசிய விடும் போது
காம்புகளைத் தழுவுகின்றன
துடிக்கும் மண்ணின் நாவுகள்.
நிலத்தைக் கொளுத்தி
இறைச்சியைச் சுட வைத்தால்
பிராந்திக்கு ஏற்ற பதத்தில் இருக்கும் என்பவன்
விறகை மண்ணுக்குள் குத்தி
மேல்நோக்கி சிரிக்கிறான்.
மண்ணெண்ணெய் ஊற்றி
நிலத்தை எரித்து
போதைக்காக
மண்ணை அள்ளித் திண்ணுகிறார்கள்
கரகரவென்று சுடுகிறது.
சோளப் பொரிகளைக் கொட்டியபோது
நிலையழிந்து கவிழும் லாரி
ஆற்றுக்குள் விழுந்தது
தற்செயலாக நிகழ்ந்தது மட்டுமே.
சிறிய
வெடித்த
சோள விதைகள்
சத்தியமாகக் காரணமில்லை.