மாற்று சிந்தனைகளை விமர்சனங்களுடன் ஏற்றல் அல்லது ஏற்பின்மை என்ற நிலைமாறி வெறுப்புடன் சகிப்பின்மையாகி ஒடுக்குதல் தீவிரமடைந்துள்ளது . பழமைவாதம் மற்றும் பழமையை ஏற்றுக்கொள்ளாத அமைப்புகளிலும் தற்போது சகிப்பற்றநிலை பெருமளவிற்கு காணப்படுகிறது. காரணம், பின்நவீனத்துவ சிந்தனைகள் வாழ்வியலில் பெரும் அளவிற்கு செல்வாக்கு செலுத்துகையில் லட்சியவாதம் உள்ளிட்ட அனைத்து தீவிரத்தன்மை வாய்ந்த அரசியல்களும் பதற்றத்திற்குள்ளாகின்றன. சமூக வலைதளங்களில் தான் இந்த சகிப்புத்தன்மையை வெகுவாக பார்க்க முடிகிறது. தீவிரத்தன்மை இழக்கிற போது உலக அரங்கில் கலையில் சார்புத் தன்மையற்ற முக்கியக் கூறுகள் அடங்கிய படைப்புகள் உருவாகும். தமிழில் நவீன இலக்கியம் தோன்றிய காலங்களிருந்தே தீவிரத்தன்மை அல்லாத நவீனத்துக்கான கூறுகளுடனே பெருமளவில் செயல்பட்டு வந்துள்ளது.
நவீனத்துவ அழகியல்களுக்கு இணையான எளிய மக்களுக்கான சமத்துவ சார்புநிலைக்குள் அடங்கும் கலைகள் கூட காலம் தாண்டி நிற்கும். புதுமைப்பித்தன், பிரமிள் போன்ற ஆசான்கள் அதை நிகழ்த்திக் காட்டியுள்ளனர். ஆனால் அந்த சார்பு நிலைக்குள் இயங்கும் படைப்பாளிகள் தங்கள் படைப்புக்குள் சார்பு அரசியலை முன்னிறுத்துவதை மிக சாதுர்யமாகக் கையாள்வர். அதற்குள் ஒரு சார்பரசியல் உள்ளடக்கம் ஆகியிருப்பது தேர்ந்த வாசகனுக்குக் கூட அகநிலையில் உள்வாங்கக் கடினமாகும். அது நேரடி அரசியலற்ற அழகியல் சார்ந்த இலக்கிய வரையறைக்குள் அடங்குமாறு காணப்படும். உள்ளடக்க அரசியல் அற்ற படைப்புகள் பெரும்பாலும் நிலவெளிசார் தன்மை இழந்து நேரடியாய் அகத்தின் வழி ஊடாடி அதிலிருத்து உளவியல், விஞ்ஞானம் என்று விரியும்.
ஒரு கலைப்படைப்பு என்பது வெறுமனே சமூகத்தில் நிகழும் அறத்திற்கு எதிரான போக்குகளை மட்டும் பதிவு செய்வதில்லை. அந்த அறம் உருவாகுமாறு மனநிலைகளை உருவாக்க சார்பற்ற அகவெளி தரிசனங்கள் வாசகனுக்கு நிகழ்வதை உருவாக்க வேண்டும். அங்கே மொழியைக் கொண்டு பலவிதமான மேஜிக் நிகழ்த்திக் காட்ட முடியும். அதற்காக பொறுப்பற்ற கலைஞன் என்ற முத்திரை குத்தி ஒதுக்குவது மிகத் தவறான போக்கு.
அதே சமயம் ஒரு கலைஞனாக சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் குரல் கொடுப்பது என்பதெல்லாம் ஒரு எழுத்தாளன் அல்லது கலைஞனின் அகம் சார்ந்த விஷயம்.
இன்றைய நவீனம் தாண்டிய யுகத்தில் அனைத்தும் சிதறல்களாக இருக்கும். தீர்க்கமான பார்வை இராது. அனைத்துமே விமர்சனமாகும். விமர்சனத்தின் வழியாக புதிய பாதைகள் உருவாகும். விமர்சனமே தவறாக பிற்காலத்தில் கருதப்படும். அதற்காக அந்த விமர்சனம் செய்தவர் தவறான கருதுகோளுக்கு ஆட்பட்டவர் என்றில்லை. விமர்சனங்களும், சிந்தனைகளும் வெகு குறுகிய காலகட்டத்தில் அடுக்கடுக்காக பரிமாணத்திற்கு உட்படுகிறது. இதில் பழைய லட்சியவாதம் சார்ந்த மனநிலை உடையோர் இந்த நிலையின் மீது, மிகப் பதற்றம் கொள்கிறார்.
சமூகம் ஒருவிதமாக இயங்கிக் கொண்டிருக்கையில் அதனிடமிருந்து முற்றிலும் முரண்பட்டு ஒரு விவாதத்தை முன்னெடுக்கும் ரீதியில் மாற்று சிந்தனைகளுடன்தான் ஒரு கலைஞன் இயங்குவான். அந்த சிதறல்களிடமிருந்தே புதிய கருதுகோள்கள் உருவாகி வந்திருக்கின்றன. ஆனால் அனைத்துமே நவீனத்துவ எல்லைகளுக்கு உட்பட்டே இருந்ததால் முற்போக்கு சிந்தனைகளும் அதனை லட்சியமாக கொண்டு சேர்ந்து இயங்கின. அதற்குள் ஜனநாயகத்தன்மை இருந்தது. ஆனால் மிக கறாராய் கருதப்படும் சிந்தனைகளை லேசாக வருடி தொட்டு விமர்சித்து எளிதாக புறக்கணித்து புதிய பாதைகளை தேடும் பின்நவீனத்துவம் மீது அனைத்து விதமான லட்சியவாதம் சார்ந்த அமைப்புகளும் நம்பிக்கை இழந்துவிட்டன. காரணம், அதன் கூறுகளை உள்வாங்க முடியாத நிலை தான்.
சமீபத்தில் இலக்கிய நண்பர் ஒருவருக்கு நடந்த நிகழ்வே உதாரணம். அவர் கவிஞர் பிரமிளின் தீவிர வாசகர் . ஆனால் தற்போதைய திராவிட அரசியல் கட்சிகளுக்கு எதிர்நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இந்த எதிர் முரணை திராவிட அரசியல் நிலைப்பாடு உடையோரால் எளிதாக உள்வாங்க முடியவில்லை. வெளி அரசியலில் எதிர்நிலைப்பாடு எடுத்தால் பிரமிளிற்கு வாசகர் என்ற அடையாளம் தேவையில்லை என்று அழுத்தம் கொடுத்ததால் தற்போது நெருதாவின் அபிமானியாகிவிட்டார். ஒரு ஆதர்சத்தை அபிமானியாகக் கொண்டால் அவரின் சார்பு நிலையை ஏற்றுக்கொண்டதாக இருக்க வேண்டும் என நினைப்பது நவீனத்துவத்திற்கே நேர்முரண் ஆகும். அதற்காக ஒரு கவிஞர் அளிக்கும் விரிந்த தரிசனங்களுக்கு சார்புநிலையை ஏற்றுக் கொள்வதில் இருக்கும் முரணை மட்டுமே கொண்டு முட்டுகட்டையாக இருப்பது நவீனதிற்குள்ளே அறமற்றதாகும். மரபில் கம்பனின் அரசியலை எதிர்ப்பவர்கள் அவர் தமிழை புறக்கணிப்பார்களா?
அனைத்தின் மீதும் நிபந்தனையற்ற விமர்சனங்களும் எதன் மீதும் பற்றற்ற அமைப்புகள் கூட ஒருவிதத் தீவிரத் தன்மை கொண்டிருக்கும். அவ்வாறு எதையும் ஏற்றுக் கொள்ளாத சார்பிழக்கும் அமைப்புகள், ஓட்டுனர் பயிற்சி பேருந்தை போன்றவை. அதில் பயிற்சியடைந்து உடனே வெளியேறி ஒரு குறிப்பிட்ட வழிக்கான பேருந்தில் வேலை செய்யத் தொடங்கி விடுவர். அந்த மாதிரியான அமைப்புகளின் கருத்துகள் நீர்த்துப் போகத் தொடங்கிவிட்டன.
சார்புநிலை கொள்பவர் தற்போது எதிர்முரணியக்க சிந்தனை உடையோரை தனக்கு எதிர்நிலை கொள்பவரின் மாற்று வேடமே என ஒரு கற்பிதத்தை அனைத்துவித கறார் மனநிலை உடையோரும் வரிந்து கட்டிக்கொண்டு உருவாக்குகின்றனர். முரணியக்க அல்லது மாற்று நிலை எடுப்பவர் தற்போதையை மக்களின் பிரச்சனைகளையும் ஒடுக்கு முறைமைகளையும் உள்வாங்காதவர் என்பது மாதிரியான பிம்பத்தை அளிக்கின்றனர்.
இந்த பிம்பத்தைத் தொடர்ச்சியாக செலுத்துகையில் அவர் ஒரு எதிராளியின் பிரதிநிதி எனத் தொடந்து கூறப்பட்டு சிலநேரங்களில் அந்த ஆளுமையின் நிலைப்பாடை தானே சந்தேகிக்கும்படியான நிலைக்கு கொண்டு செல்வர். எதிராளிகள் இவர் தங்களுக்கான ஆள் என தப்புக்கணக்கு போடுவர். இம்மாதிரி நிலைப்பாடு கொள்பவர் என்றும் சந்தேகிக்கும்படியான நபராகவே வைத்திருப்பர். ஒரு நிலைப்பாட்டை தற்சார்புடன் எடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வது மிக தலைவலியாக இருக்கும்.
அந்த பிம்ப வடிவமைப்பை சில அசலான கலைஞர்கள் தங்கள் தனிப்பட்ட வளர்ச்சிக்காகவும், பிரபலத் தன்மையை தக்க வைப்பதற்காகவும் எதிர் தாக்குதல்களை கவனத்தோடு கையாள்கின்றனர்.
கறார் நிலைகள் ஒரு வளையத்தை உருவாக்கி குறிப்பிட்ட சுற்றுக்குள்ளே அடைக்கின்றன. அதை உடைத்து புதிய பார்வைகளை உருவாக்க கருத்து உடைதல்கள் நிகழ வேண்டும். விரிசல்கள் இல்லாத தீவிர நிலைகள் அனைத்துமே உலகில் ஒருநாள் நெருக்கடிக்கு உள்ளாகின்றன. காலாவதி ஆகிவிட்டதாக உணரப்பட்டு வழக்கொழிய வாய்ப்புள்ளது. தீவிரத் தன்மையுள்ள அமைப்புகள் தங்களுக்கான சார்பின் சாரத்தை இழக்காமல் விமர்சனத்தையும், முரணையும் உருவாக்கும் அழகியலை ஏற்றுக் கொண்டால் கண்டிப்பாக தங்கள் நிலை உடைதல் உருவாகி அதற்கான எதிர்காலம் நீட்டிக்கப்படும். இங்கே கருத்தியல்கள் அனைத்துமே தங்களுக்கான பாரம்பரியம் அல்லது உலகின் தாங்கள் உருவாக்கிய மாற்றம் அதன் வழியே நிகழ்ந்தது. இதுவே உயர்ந்த கருதுகோள் என மன நிலைக்குள்ளே உழல்கின்றன.
உலகை மாற்றுக் கோணத்தில் இயக்கிய கருதுகோள்கள் அனைத்துமே காலத்தின் கூறுகளுக்கு உட்பட்டே இயங்குகின்றன. காலத்திற்கு மிஞ்சிய கருத்தியல் என எதுவுமே இல்லை. மறுபரிசீலனைக்கு செல்லாத கருத்தியல்கள் அனைத்துமே காலாவதியாகிக் களையப்படும். ஒரு திரைப்படம் குறிப்பிட்ட காலகட்டத்தில் கொண்டாடப்பட்டு அது மீண்டும் எதிர் விமர்சனத்திற்கு உட்பட்டால் உடனே புரிதலின்மையின் வெளிப்பாடு எனத் தூற்றுவார்கள். அந்தத் திரைப்படத்தின் மீதான எதிர் பார்வைக்கு அந்த திரைப்படம் தகுதியாயிருப்பது தான் நம் சிந்தனை மேம்பாட்டுக்கு நல்வினை.
மேற்குலகில் விஞ்ஞானம் சார்ந்து கோட்பாடுகளுக்கும், தேற்றங்களுக்கும் எதிர்க்கோட்பாடு உருவாகிக் கொண்டே தான் இருக்கிறது. முந்தைய கோட்பாட்டை நிறுவியவர்கள் அனைவருமே உலகமே ஏற்றுக் கொண்ட மேதைகள். ஆனாலும் புதிய கோட்பாடுகள் உருவாக்கும் முயற்சி தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. அதற்காக முந்தையவர்கள் மேதைகள் இலர் என்பதல்ல. காந்தியை விமர்சனங்கள் வழியாகப் புரிந்து கொள்ளாமல் தீர்க்கமான ஒரே எதிர்பார்வையின் வழியாக நம்மிடமிருந்து அகற்றும் முடிவு மீள் ஆய்வுக்குரியது.
சிதறலான போக்கும் சரியான புரிதலின்றி கட்டற்ற நிலைக்கு தள்ளப்பட்டு எதையுமே ஏற்காத, அல்லது அனைத்தையும் விமர்சிக்கும் விரைவில் நீர்த்துப் போகும் அமைப்புகள் போல் மாறும் அபாயம் உண்டு. காரணம் மேற்கத்திய நவீனத்துவம் அப்படியே கையாள்வது. இங்கிருக்கும் மரபிற்கு உட்படாமல் அதிதீவிர அமைப்புகள் இயங்கியதே காலாவதிக்கு காரணம். நிலத்திற்கான பண்பாட்டு விழுமியங்களை உள்ளடக்கிய விமர்சன பார்வையின் வழியே சமூகம் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரும்.