கவிதைகள்

கவிதைகள்- முகம்மட் இஸ்மாயில் அச்சிமுகம்மட்

முகம்மட் இஸ்மாயில் அச்சிமுகம்மட்

01 ஈழத் தாயே

ஈன்றாய் நீயே

அறிவைத் திரட்டும் நூலகத்தை

அன்று

கூளச் சாக்கடை

யெரித்தது உன்னைத்

தீயே தின்றது தாயகத்தை

தாயகப் பெருமையைத்

தரணியிற் கொன்று

தகனம் செய்தவர் யாரு?

எங்கள்

வாயகம் ஒலித்த

வாசிக சாலையை

விழுங்கிய தீயே கூறு?

கூறும் போதே

கொடுமை யெண்ணிக்

குத்திடும் முட்கள் உள்ளத்தில்

துயர்

ஆறும் வகையில்

ஆறுதல் இல்லை

ஐயோ விழிகள் வெள்ளத்தில்

வெள்ளக் காடு

விரைந்தே ஓடி

வேக் காடாகிப் பெருகியது

சிலர்

உள்ளக் காடு

ஊனத் தோடு

உட் பகை கொண்டே திருகியது

திருகும் உளத்திற்

தீவினைத் தோன்றித்

தீரா வடுவை யுண்டாக்கும்

நூல்

பருகும் போதே

பகுத்தறி வூட்டிப்

பாவக் கறையைத் துண்டாக்கும்

துண்டாய்ப் போன

நூலகத் தருக்கள்

துளிர் விடுங் காலம் எக்காலம்?

கனி

உண்டாற் தானே

ஊறும் அறிவு

உண்மையில் அதுதான் பொற்காலம்

காலம் வரைந்த

கோலம் மறந்து

கயமை அழிப்போம் வாருங்கள்

உறவுப்

பாலம் அமைத்து

நூலகஞ் சிறக்க

நூற்களை அதிகஞ் சேருங்கள்

சேர்ந்தே வாழ்ந்தாற்

செகமே போற்றும்

செயமே கிடைக்கும் தாயகத்தில்

தயை

கூர்ந்தே கொடுப்போம்

குறைவிலா நூற்கள்

கூர்மதி பெருக்கும் நூலகத்தில்

####

 

02 வீரத் தமிழன்

விசிறிய குருதியில்

விண்ணைத் தொட்ட

நூலகமே

இழி

கோரத் தனத்தில்

கொழுத்திய தீயில்

குற்றுயிரானது யாழகமே

அறிவின் கருவை

அக்கினி தின்ற

அகவை முப்பத்து ஏழே

ஐம்

பொறியும் அழிந்து

புலன்கள் இழந்து

போனதை எழுதும் கோலே

விழியில் நதியை

வேகப் புயலை

விரைந்தே தந்தது எங்களுக்கு

இதை

மொழியில் வரைந்து

முடிக்கும் முன்னே

அழுகை வந்தது திங்களுக்கு

ஆசிய மண்ணின்

அதிசயமாக அமைந்ததில்

வந்தது இடையூறா

மதி

வீசிய தேசம்

வெந்தழல் மீது

வீழ்ந்திடக் காரணம் கண்ணூறா

சரித்திரமானது

சாம்பல் நிறத்தில்

சரிந்தது ஆயிரம் வருடங்கள்

இதை

விரித்திடும் போது

விம்மிப் புடைக்கும்

விழிகள் தாங்கிய புருவங்கள்

யாரும் சுவாசக்

காற்றில்லாமல்

யாத்திரை உலகில் இருப்பீரா?

புலன்

தோறும் அறிவைத்

தெளிக்கும் நூற்கள்

தேவை யின்றிக் கிடப்பீரா?

கருகிப்போன

நூலின் நிறத்தில்

காய்ந்தது சிலரது உள்ளங்கள்

அன்று

உருகிப்போனது

நூற்கள் அல்ல

உள்ளொளி வாய்ந்த செல்வங்கள்

அறிவைச் சார்ந்த

பொருளாதாரத்தை

அழியா வண்ணம் காப்போமே

முரண்

பொறியிற் சிக்கா

புலைமைப் பூக்கள்

புலத்தில் வாழச் சேர்ப்போமே…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button