![](https://vasagasalai.com/wp-content/uploads/2019/08/images-2019-08-31T061909.407-640x405.jpeg)
(18.8.2019 மதுரை ‘புதிய சந்திப்பு’ கூட்டத்தில் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்)
இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த சுரேஷ் பிரதீப்பின் முதல் நாவல் ஒளிர் நிழல் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. உடைந்த கண்ணாடி சிதறலில் துலங்கும் பிம்பத் துணுக்குகள் என அந்நாவல் நவீன கூறுமுறையில் புதிய தலைமுறையின் சிக்கலை பதிவு செய்தது. நூற்றாண்டுகளுக்கு பின்னும் தாஸ்தாவெஸ்கியின் குரல் புனைவு வெளிகளில் ஒலிக்கிறது எனும் வியப்பு ஆட்கொண்டது. அதற்கு பின்பான காலத்தில் அவர் எழுதிய கதைகள் தான் ‘எஞ்சும் சொற்கள்’ தொகுப்பில் உள்ளவை. ஒளிர்நிழல் கவனிக்கப்பட்ட அளவிற்கு அவருடைய முதல் சிறுகதை தொகுப்பான ‘நாயகியர் நாயகர்கள்’ கவனிக்கப்படவில்லை. ஒரு நேர்காணலில் நாவலைக் காட்டிலும் சிறுகதை தனக்கு சவாலான வடிவம் என குறிப்பிட்டிருந்தார்.
‘எஞ்சும் சொற்கள்’ மொத்தம் பன்னிரண்டு கதைகள் கொண்ட தொகுப்பாக கிழக்கு பிரசுரத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இத்தொகுப்பு வழியாக சுரேஷ் பிரதீப் தன்னை சிறுகதை எழுத்தாளராகவும் நிறுவிக் கொள்கிறார். தமிழில் கதை சொல்லி மற்றும் இலக்கியவாதி என தோராயமான ஒரு வரையறை செய்தோம் எனில் சுரேஷ் இலக்கியவாதி வகையைச் சேர்ந்தவர். இறுக்கமான சொற் பிரயோகங்கள், மிக அத்தியாவசியமான இடங்களில் மட்டும் புறச் சித்தரிப்பை பயன்படுத்துதல், ஆழ்ந்த அக உரையாடல்களை நிகழ்த்துதல், இரைக்காக நா சுருட்டி விழிப்புடன் காத்திருக்கும் தவளையைப் போல் அகத்தின் சிறு சலனங்களைக் கூட கைப்பற்ற முயல்தல் என இலக்கியவாதிகளின் அத்தனைக் கூறுகளையும் கொண்டிருக்கிறார். இதன் மறு எல்லையும் இதன்வழி துலங்கும். கதைசொல்லிகள் உரையாடலை அபாரமாக பயன்படுத்துவார்கள். உரையாடல் வழி அகச் சலனங்களை குறிப்புணர்த்த முடியும் என தி. ஜாவை வாசித்தால் உணர்ந்து கொள்ள முடியும். கதைசொல்லிகள் விரிவாக புற உலகை சித்தரித்து காட்சி அனுபவங்களை ஏற்படுத்துவார்கள். சுரேஷின் கதைகள் நீராவிக் குளியல் அறையில் நிகழ்பவை போல் வாசகனை உணரச் செய்பவை. இறுகிய அகச்சுவருக்குள் கதைகள் அடுக்கடுக்கான எண்ண அதிர்வுகளுக்கு மத்தியில் நிகழ்பவை.
இத்தொகுதியை சில மாதங்களுக்கு முன் வாசித்திருந்தாலும் இக்கூட்டத்தின் பொருட்டு மீண்டும் வாசித்து வந்தேன். சுரேஷ் அவருடைய முன்னுரையில் வகுப்பது போல் யதார்த்தவாத கதைகள் மற்றும் பிற எனும் பகுப்பைக் காட்டிலும் பல கதைமாந்தர் சொல்லும் கதைகள் ஒரு கதைமாந்தர் எழுதும் கதைகள் என வகுக்கலாம் எனத் தோன்றுகிறது. பொதுவாக சிறுகதை இலக்கணம் ஒரு கதைசொல்லியையே வலியுறுத்துவது. தமிழில் யுவன், சுரேஷ்குமார இந்திரஜித் போன்றோர் பல கதைசொல்லிகளை பயன்படுத்தி சிறுகதைகள் எழுதி இருக்கிறார்கள். ஒரு நிகழ்வை பலகோணங்களில் இருந்து காட்ட முற்படும் போது அவை ஒன்றோடு ஒன்று மோதி முயங்கி இயல்பாகவே ஒரு வாசக இடைவெளியை உருவாக்கும். ஒன்றின் விடுபடல்களை மற்றொன்று நிரவ முற்படும். மறைந்திருப்பவை, ஆழத்தில் மிதப்பது, அபி, வரையறுத்தல், பாரம் ஆகிய கதைகள் பலகதைசொல்லிகளை கொண்டவை. வீதிகள், எஞ்சும் சொற்கள், பரிசுப் பொருள், பதினோரு அறைகள், மடி, ஈர்ப்பு, 446A ஆகிய கதைகள் ஒரு கதைசொல்லியால் எழுதப்பட்டவை. யதார்த்த தளமா இல்லையா என்பது கதைசொல்லிகளால் முடிவு செய்யப்படுவது அல்ல. ஒரு கதை பல கதைசொல்லிகளால் சொல்லப்பட்டாலும் அது உலக நடப்பை, நிகழ்வை விவரிக்கும் வரை யதார்த்த தளத்தில் நிகழ்கிறது என்றே சொல்லவேண்டும். அப்படிப் பார்த்தால் இத்தொகுதியில் ஒரேயொரு கதை மட்டுமே யதார்த்த தளத்தை விட்டு விலகியுள்ளது. ‘பாரம்’ என் வாசிப்பில் அதுவே இத்தொகுதியின் சிறந்த கதை என சொல்வேன். சுரேஷ் யதார்த்த தளத்தில் கதை எழுதினாலும் அவர் யதார்த்தவாத எழுத்தாளர் அல்ல. அவரை நவீனத்துவர் என்றே அடையாளப்படுத்த தோன்றுகிறது.
அவருடைய கதைகளில் வெளிப்படும் கூரிய சமூக பிரக்ஞை மற்றும் வரலாற்று நோக்கின் காரணமாக பிற வளர்ந்துவரும் படைப்பாளிகளிடமிருந்து தனித்த இயல்பு கொண்டவராக ஆகிறார். அகச் சலனம், உள நாடகங்களை மட்டும் பதிவு செய்யாமல் அவற்றுக்கு ஒரு சமூக வரலாற்று சித்திரத்தை பொதிந்து அளிக்க அவருடைய கதைகள் முற்படுகின்றன. நுண்ணிய அரசியல் குரல் உடையவை என்றும் சொல்லலாம். இத்தன்மைகள் மிகச் சிறப்பாக வெளிப்பட்ட கதைகள் என வீதிகள், எஞ்சும் சொற்கள் கதைகளை சொல்லலாம். ‘வரையறுத்தல்’ கதையையும் இதே வரிசையைச் சார்ந்ததே. வீதிகள் கதையில் பிரவீனா சிறுவயதில் ஒருமுறை வந்து சென்ற ஊர் தலைவரின் வீட்டை நினைவில் கொணர்வாள். அவர்களின் வீட்டைப்போல் இல்லாமல் மாடி வீடாக இருக்கும். அவர்கள் உணவு உண்பதற்கு அழைத்தபோது எத்தனை கட்டாயப்படுத்தியும் பிரவீனாவின் அம்மா அதை மறுப்பார். இந்த ஒரு வரி சித்திரம் வழியாக பொருளியல் மாற்றம், அதிகார மாற்றம் என ஒரு சமூக சூழலை அவரால் சித்தரிக்க முடிகிறது. வீதிகள் உண்மையில் ஒரு வரைபடம். வாழ்வின் முன் நிற்கும் தேர்வுகள். எது நம்மை எங்கு அழைத்து செல்லும் எனத் தெரியாது. அனிதா மணமான வீட்டில் எப்படி இருக்கிறாள் என்பதை உணர்த்த ‘அவளுடைய அழுகை அவ்வீட்டில் வித்தியாசமாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை எனப் புரிந்து கொள்ள முடிகிறது’ எனும் ஒருவரி போதும். கதை பிரவீனா அவளுடைய வீதியை விட்டு இறங்கத் தேவையில்லை, தான் இறங்கியது தவறு என அனிதா உரைக்கும் புள்ளியில் நிறைவு பெருகிறது. ‘எஞ்சும் சொற்கள்’ இத்தொகுதியின் சிறந்த கதைகளில் ஒன்று. உண்மையில் இதை முதன்முறை வாசிக்கும்போது இணையாக ஜெயமோகனின் ‘நூறு நாற்காலிகள்’ கதை நினைவுக்கு வந்தது. ஒருவகையில் இந்த கதை அதற்கு எதிர்வினையாக வாசிக்கத் தக்கது. அரசு அலுவலகத்தில் சாதிகளை கண்டுபிடிக்கும்/ நிறுவி சான்றளிக்கும் அபத்தமான ஒரு சடங்கு நிகழ்கிறது. அங்கே காத்திருக்கும் மனிதர்களைப் பற்றிய நுண்ணிய சித்திரங்கள் வழியாக அவர்களுடைய பின்புலங்கள் ஊகத்துக்கு விடப்படுகின்றன. ‘தலித்’ எனும் அடையாளம் ஒற்றை பரிணாமம் கொண்டது என அதை நிராகரிக்கும்/ விமர்சிக்கும் கதையாகவே இதை வாசிக்கிறேன். இந்தக் கதை ஒரு தனி மனிதன் அரசு எனும் நிறுவனத்தை எதிர்கொள்ளும்போது ஏற்படும் தவிப்பைச் சொல்கிறது. சுரேஷின் கதைகள் அவ்வகையில் தனிமனிதன் எதிர் அமைப்பு எனும் வகையில் செயல்படுபவை. தனி மனிதனுக்கு அமைப்பைச் சார்ந்து இருக்க வேண்டிய நிர்பந்தங்கள், தவிப்புகள், சங்கடங்கள், எரிச்சல்கள், சமரசங்கள் சார்ந்தே அவருடைய புனைவுலகம் இயங்குகிறது. குடும்பம், சாதி, அலுவலகம், அரசு என இவ்வமைப்புகள் வேறு வேறாக இருந்தாலும் அதனுள் பொருத்திக்கொள்ள முயலாமல் தவிக்கும் உதிரியின் கதை என பொதுவாக சுரேஷ் பிரதீப்பின் புனைவுலகம் குறித்து சொல்லலாம். ‘பதினோரு அறைகள்’ ‘ஆழத்தில் மிதப்பது’ ‘பாரம்’ ஆகியவை குடும்பம் எனும் அமைப்பு சார்ந்த கதைகள். பரிசு பொருள், அபி, மடி, மறைந்திருப்பவை, ஈர்ப்பு ஆகிய கதைகள் ஆண்- பெண் உறவு தளத்தில் நிகழ்ந்தாலும் அங்கும் கதைகளின் முக்கிய பேசுபொருள் கதை மாந்தர்களின் சுயமிழப்பு, உறவை தக்கவைத்துக்கொள்ள அவர்கள் செய்துகொள்ள வேண்டிய சமரசம் பற்றிய பதட்டம் ஆகிய தளங்களிலேயே அதிகம் நிகழ்பவை. ‘வரையறுத்தல்’ குடும்பம் எனும் அமைப்பு அதைவிட வலுவான சமூக அமைப்பான சாதியை எதிர்கொள்ளும்போது ஏற்படும் உரசல்களை பேசுகிறது. அமைப்பு அளிக்கும் கனிவு கூட தனி மனிதனை எரிச்சல் அடைய செய்வதையே எஞ்சும் சொற்கள் பதிவு செய்கிறது. இந்தக் குரலும் தத்தளிப்பும் புதிதல்ல. நவீனத்துவ அலையின் சாரமே இதுதான். சுரேஷின் அத்தனைக் கதைகளிலும் வன்மம் கொப்பளிக்கிறது. கதை மாந்தர் எவரையேனும் உடனடியாக அறைய வேண்டும், மிதிக்க வேண்டும், அடிக்க வேண்டும் என்று ஆத்திரத்தில் கொந்தளிக்கிறார்கள். அரிதாக நேரடி வன்முறையில் ஈடுபடுகிறான். பெரும்பாலும் அவனுடைய வன்மம் அவனுக்குள் மட்டும் சுழன்று செயலாக ஆகாமல் ஊமையாகிறது. இந்த வன்மத்தின் பிறப்பிடம் சுரேஷ் எனும் தனிமனிதரின் அகம் என்பதைக் காட்டிலும் அமைப்புகளின் மீதான ஆழ்ந்த அவநம்பிக்கையின் விளைவு என சொல்ல முடியும். ‘பதினோரு அறைகள்’ வன்மம் மற்றும் பழிதீர்ப்பு சார்ந்து நுண்ணிய அக ஆட்டம் கொண்ட கதை. தன்னை பதினோரு முறை அறைந்து வாயடக்கிய அம்மாவை பழித்தீர்க்க சில ஆண்டுகள் காத்திருக்கிறான். அம்மா அவனை விட்டுச்சென்ற பின்னர் சதீஷ் பிறக்கிறான். பல ஆண்டுகளுக்கு பின் அவனோடு நட்பு கொள்கிறான். அவர்கள் வீட்டிற்கு செல்கிறான். மெல்ல அவர்கள் குடும்பம் நொடிந்து போவதை அவன் வாயிலாகவே அறிகிறான். பிறகு அம்மா அளித்த பதினோரு அறைகளை சதீஷுக்கு அளித்து வஞ்சம் தீர்க்கிறான். இந்தக் கதை எனக்கு ‘நிழலின் தனிமையை’ நினைவுக்கு கொண்டுவந்தது. ஏதோ ஒருவகையில் இந்தக்கதை அதற்கு எதிர்வினை என பட்டது. வஞ்சத்தின் அபத்தத்தை நிழலின் தனிமை பேசியது என்றால் அதற்கு நேரெதிரான புள்ளியை பதினோரு அறைகள் பேசுகிறது.
தொகுதியின் இறுதிக் கதையான ‘பாரத்தில்’ ஒரு குழந்தை காலிடுக்கில் புகுந்து சென்று கொண்டிருப்பதை பார்ப்பான். அக்குழந்தை தனது பிணத்தை சொர்க்கத்திற்கு செல்லும் பாதையில் இழுத்துச் சென்று கொண்டிருக்கும். ஒரு அபராமான படிமம். சுரேஷின் மொத்த கதையுலகையும் விளக்கிக்கொள்ளத்தக்க படிமம். உயிர் சுமக்கும் பிணம் இந்த அமைப்புதான், அல்லது அதன் மீதான பிடிப்புதான். பிற கதைகள் ஒருவகையில் அமைப்பு நிராகரிப்பை பேசுபவை ஆனால் பாரம் மட்டுமே மறுதரப்பையும் கணக்கில் கொள்கிறது. அமைப்பின், பிடிப்பின் இன்றியமையாதத் தன்மையை ஒரு சலிப்பான பெருமூச்சுடன் அங்கீகரிக்கிறது. மனநோயாளியின் பூர்வாங்க கதை, சிககலுடைய விளக்கம், மரணத்திற்கு பின்பு அவன் காண்பவை, அவன் பெறும் அறிவு, பின்னர் பூமிக்கு மீள் நுழைவு என ஒரு முழு சுழற்சியை கதையாக்கி இருக்கிறார். உளவியல் தளத்திலிருந்து மேலெழும்பி மெய்யியல் மற்றும் ஆன்மீக தளத்தில் சில கேள்விகளை இக்கதை வழியாக எழுப்பி பதில் கண்டடைய முயன்றிருக்கிறார். தொழில்நுட்பரீதியாக இந்த கதையில் சில சிக்கல்கள் இருந்தாலும் அதையும் மீறி இக்கதை என்னை கவர்வதற்கு முக்கிய காரணம் இக்கதையில் அவரால் அகப் போக்கை வலுவான படிமம் வழியாக தொடர்புறுத்த முடிகிறது. நாம் எதை சுமக்கிறோம் எனும் கேள்விக்கு செல்ல முடிகிறது. கதைக்குள் இருக்கும் உளவியல் காரணிகள், விளக்கங்கள் துணையின்றி, தன்னிச்சையாக இந்த படிமம் வலுவாக உள்நுழைந்து வேர்பிடித்து வளர்கிறது. சுரேஷ் கைக்கொள்ள வேண்டிய எழுத்துமுறை என இதையே சொல்வேன். பக்கம் பக்கமாக நீளும் அக உரையாடல்களைக் காட்டிலும் இத்தகைய ஒரு படிமம் வலுவானது, நெகிழ்ச்சியானது, பலத்தளதன்மை கொண்டது. அவருடைய மற்றொரு கதையான ‘பரிசுப் பொருள்’ படிமத் தன்மை கொண்டதுதான். உணர்வுச் சுரண்டலுக்கு உள்ளான பெண் தன்னை சுரண்டி ஏமாற்றிய பிரபாகரனுக்கு நோய்மையால் சீர்கெட்ட அறுவை சிகிச்சையில் அகற்றப்பட்ட கர்ப்பப்பையை பரிசாக ஒரு பெட்டியில் பொதிந்து அளிக்கிறாள். ஒருவகையில் இதைத்தானே நீ கேட்டாய் எனும் தன்மையில் அவளுடைய பெண்மையையே அளிப்பதாக பொருள் கொள்ளத்தக்கது. இக்கதை எங்கும் உரையாடலில் வன்மம் தலைக்காட்டவில்லை ஆனால் கடைசி செயலில் அது வெளிப்படுகிறது. இந்தக் கதையின் சிக்கல் என்னவென்றால் இதன் நடைமுறை சாத்தியமின்மைதான். இது மருத்துவ அறிவு குறுக்கிட்டதன் விளைவாக இருக்கலாம். பெல்விக் இன்பலமேடரி நோய்க்கு கர்ப்பப்பையை அத்தனை எளிதில் எடுக்க மாட்டார்கள். அதுவும் திருமணம் ஆகாத இளம் பெண்ணுக்கு அது பரிந்துரைக்கப்படுவதே இல்லை என்பது என் அனுபவம். நிகழச் சாத்தியமே இல்லையா என்றால் நிகழக்கூடும் ஆனாலும் தர்க்கமனம் குறுக்கிட்டது. கதை முடிவு எட்டப்பட்டப்பின்னர் எழுதியதாக ஒரு உணர்வு. இந்த வழிமுறை என்பது நிச்சயம் விமர்சனத்திற்குரியதோ பிழையானதோ அல்ல. இதுவும் ஒரு வழிமுறைதான். மிக வலுவான ஒரு கருத்து படிமத்தன்மையும் கொள்கிறது ஆனால் கதையின் செய்நேர்த்தியில் உள்ள பலவீனம் காரணமாக கதை உத்தேசித்த உயரத்தை அடையவில்லை எனத் தோன்றியது.
‘ஈர்ப்பு’ போன்ற கதை பெண்ணை இழிவு செய்யும் நோக்கில் எழுதப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் வந்தன. சுரேஷின் கதைகளை படிக்கையில், குறிப்பாக பரிசுப் பொருள், ஆழத்தில் மிதப்பது போன்ற கதைகள் வாசித்தவருக்கு இது ஒரு கதாப்பாத்திரத்தின் வெளிப்பாடு என்பதை புரிந்துகொள்வதில் எந்த சிக்கலும் இருக்காது. ‘அவர் கதையில் வரும் அத்தனைப் பெண்களும் அவர்களுடைய அழகிய தருணங்களில், அல்லது கோணங்களில் தான் வெளிப்படுகிறார்கள். அவரை பெண் வெறுப்பாளர் எனும் அளவிற்கு சித்தரிக்க வேண்டியதில்லை. ஆனால் இக்கதையில் எனக்கு வேறு சிக்கல் உள்ளது. ஒரு எளிய முடிச்சை சொல்வதற்கு அது எடுத்துக்கொண்டிருக்கும் நீளம் ஆயாசம் அளிப்பதாக இருக்கிறது என்பதே ஈர்ப்பு கதையின் மீதான என் விமர்சனம். சுரேஷ் சிந்தனை தெறிப்புகளால் ஈர்க்கப்படுகிறார். கதையைவிட்டுவிட்டு சிலநேரம் சிந்தனைகளைப் பின்தொடர்ந்து வெகுதூரம் சென்றுவிடுகிறார். அவரும் மூச்சு வாங்கி வாசகரும் மூச்சு வாங்க வேண்டியிருக்கிறது. ‘ஈர்ப்பு’ கதையில் நிகழ்ந்ததும் அதுவே நோய்மைப் பீடித்த மனதின் வெளிப்பாடுகளை பல பகுதிகள் எழுதிய பின்னர் அதன் மறு எல்லையில் கதையை முடிப்பதற்கு உரிய விசை கதையின் இறுதி பகுதியில் போதிய அளவில் கைவரவில்லை. மேலும் கதைகளுக்குள் பல ‘grand staetment’ கள் வெளிப்படுகின்றன. ‘ஈர்ப்பு’ என்றல்ல பிற கதைகளிலும் கூட கதைசொல்லி பிறரை சில இயல்புகள் வழியாக வரையறுத்துக்கொண்டே இருக்கிறார். தங்களுக்குள் பெசிக்கொண்டிருக்குமிருவர் எவரிடமும் பேசி பழக முடியாதவர்கள் என சொல்கிறார் (எஞ்சும் சொற்கள்). இவை மனிதர்களின் நீர்மை இயல்பை மறுத்து உறையச் செய்பவை. தாஸ்தாவெஸ்கி கதை மாந்தர்கள் உண்மையான மனிதர்கள் என்பதைக் காட்டிலும் கருத்துலகப் பிரதிநிதிகள் என்றொரு வாதம் உண்டு. சுரேஷின் சில கதைகளில் இதைப் பொருத்திப் பார்க்க முடியும். கதை மாந்தர்கள் ஏதோ ஒரு கருத்துருவின் பிரதிநிதியாகும்போது கதை கட்டமைக்கப்படுகிறதோ என்றொரு ஐயம் எழுகிறது. எழுத்தாளனை மீறி கதையில் சிலவற்றை நிகழ அனுமதிக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. எழுத்தாளன் தன்னை மீறிய ஒன்றுக்கு ஊடகமாக, தான் திட்டமிடாத ஒன்றை அடைபவனாக ஆக முடிகிறதா என்பதே என்னுடைய கேள்வி. அறுதியான விதிமுறையாக இதைக்கொள்ள முடியாது தான் எனினும் எழுத்தின் வழி சில எதிர்பாராத இடங்களுக்கு சென்று சேர்வதே எழுத்தின் போதை எனத் தோன்றுகிறது. ‘பாரம்’ கதையில் அது நிகழ்ந்ததை உணர்கிறேன். அவருடைய புதிய நாவலில் சில பகுதிகளிலும் அத்தகைய உணர்வு எனக்கு ஏற்பட்டது. அவருடைய புனைவுலகின் குறைபாடு என சொல்லமுடியுமா எனத் தெரியவில்லை ஆனால் ஒரு இயல்பு/எல்லை என நிச்சயமாக சொல்லலாம்.
இந்தத் தொகுதியில் எனக்கு பிடித்த இன்னொரு கதை ‘மறைந்திருப்பவை’ பிரதாப், அவனுடைய மனைவி தீபா, மற்றும் எதிர்வீட்டு அன்னியன் என மூன்று கதைசொல்லிகள் கதை சொல்கிறார்கள். பிரதாப்பும் தீபாவும் மாறி மாறி ஒருவர் மற்றொருவர் பற்றியச் சித்திரத்தை அளிக்கிறார்கள். பிரதாப்பின் கனவுகளில் தீபாவின் குழந்தையைப் போல் அவளால் சுமக்கப்படுகிறான். தீபா கதை சொல்லும்போது அவளுடைய சிறு வயது நிகழ்வு ஒன்றை நினைவுகூர்கிறாள். அவர்கள் வீட்டு நாய் ஜூலி அது போட்ட குட்டியை முழுமையாக விழுங்குவதை காணும் அனுபவம். இங்கிருந்து தீபாவின் நடத்தைகளை உணர்ந்துகொள்ள முடியும். இந்த படிமத்தை வலுப்படுத்தி அவர்களின் உறவுநிலைகளை நோக்கிக் கொண்டு செல்லும்போது கதை வலுவடையும். அன்னை நாய் குட்டி நாயை உண்பதற்கு காரணம் பசியல்ல. அத்தகைய ஒரு செயலுக்கு எந்த காரணமும் இல்லாமல் இருக்கலாம். காரணமற்ற வன்மம் ஒருவித திகைப்பை அளிக்கிறது. இந்தக் கதையில் மூன்றாவது கதைசொல்லிக்கான தேவையில்லை என்றே தோன்றியது. சிறுகதை இலக்கணத்தில் எப்போதும் சொல்லப்படுவதுதான், ஒரு கதையை முடிக்க அதுவரையிலான கட்டுமானத்தை குலைக்கும் புதிய ஒன்றை இறுதியில் புகுத்தக் கூடாது. கதை முடிவு ஓர்மையுடன் கதைக்குள் வளர்ந்து வர வேண்டும். மூன்றாவது கதைசொல்லி இல்லாமலேயே அதை சாதித்திருக்க முடியும் எனத் தோன்றியது. எனினும் இதை மீறி இந்தக்கதை வாசகனை தொந்தரவு செய்கிறது.
‘பதினோரு அறைகள்’ மற்றும் ‘ஆழத்தில் மிதப்பது’ இரண்டு கதைகளுக்கும் ஒரு சிறிய உறவு உள்ளது. ‘பதினோரு அறைகள்’ கதைக்கும் ‘பாரம்’ கதையின் முதல் பகுதிக்கும் கூட சிறு தொடர்ச்சியை காணமுடியும். ‘ஆழத்தில் மிதப்பது’ கதையில் மெல்லிய கோடாக தீட்டப்படும் மகேந்திரன் தான் ‘ஈர்ப்பு’ கதையின் நாயகனாகிறான். ‘பதினோரு அறைகள்’ கதையில் அம்மா விட்டுச் செல்கிறாள் என்றால் ‘ஆழத்தில் மிதப்பது’ கதையில் ஒரு தந்தையின் இரு தாரங்கள் என கதை செல்கிறது. வளர்ப்பு மகளான ரம்யா. இரண்டாம் தாரத்தின் மகன் அர்ஜுன், அவனுடைய அம்மா என மூன்று கதைசொல்லிகள் வருகிறார்கள். ரம்யாவின் மீது அர்ஜுனுக்கு பிரியம் உண்டு ஆனால் அவள் தன்னை நெருங்கவில்லை எனும் வருத்தம் அவனுக்கு இருக்கிறது. பதின்ம வயது அர்ஜுன் தான் கோவப்பட்டு ஏற்படுத்தும் விரிசலின் வழியாக ஆறுதல் பெற ரம்யா முனைகிறாள் என எண்ணுகிறான். இந்த விரிசல் வழி உள்நுழைவது பிற்பாடு அவருடைய ஈர்ப்பு கதையில் ஒரு பெரிய கோட்பாடாகவே விரிவாகிறது. அர்ஜுன் தந்தையின் இடத்தை எடுத்துக்கொள்கிறான் என்பதே கதை. ரம்யாவின் மனவிலக்கத்திற்கு காரணம் அதுவே. கதை இறுதியில் ரம்யா தன்னை தந்தையாக காண்பதை தானும் உணர்ந்து அந்த பொறுப்பை ஏற்று அவனுடைய அம்மாவின் வார்த்தையை மீறி முடிவெடுக்கிறான். சொந்த சாதியில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதே அவர்களுடைய தந்தை சந்தானத்தின் இறுதி விருப்பம். அதை நிறைவேற்றவே அவர்களுடைய அம்மா முனைகிறாள். அப்பாவின் இறுதி விருப்பமா அல்லது மகளின் விருப்பமா என்றொரு கேள்வி எழும்போது அர்ஜுன் தந்தை இருந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ அதைச் செய்கிறான்.
446A நேரடியான நல்ல கதை. படர்கையில் கதை சொல்லப்படுகிறது என்று எண்ணிக்கொண்டிருக்கும்போது கதை முடிகையில் ‘என்று நரேன் என்னிடம் சொன்னான்’ என முடிகிறது. கதையின் உடல் பகுதியில் உள்ள சில விவரணைகள் நுண்மையானவை. வியர்வை வட்டங்கள், பெண்ணழகு விவரணை போன்றவை அனைத்தும் நரேனால் கதைசொல்லியிடம் சொல்லப்படுகிறது என்பது வடிவ ரீதியாக நெருடலை ஏற்படுத்துகிறது. அப்படி இல்லாமலேயே முடித்திருக்கலாம். மேலதிகமாக இந்த முடிவு என்ன தருகிறது எனத் தெரியவில்லை. நரேன் காணும் விதவிதமான பெண்கள் அவர்கள் அவனை எப்படிக் கிளர்த்துகிறார்கள் என்பதே கதை. கதையின் இறதிப் பகுதி எனக்கு ஜெயகாந்தனின் ‘சுமைதாங்கி’ கதையை நினைவுப்படுத்தியது. மற்றொரு தளத்தில் பஷீரின் ‘பர்ர்’ கதையையும் நினைவுக்கு வந்தது. விரும்பிய பெண்ணின் மீதான மயக்கம் தெளியும் கணம்.
‘வரையறுத்தல்’ தன்னளவில் வலுவான கதை. மாறுபட்ட கூறுமுறை கதையின் கணத்திற்கு உதவாமல் ஊறு விளைவித்துள்ளது என சொல்லத் தோன்றுகிறது. ஏறத்தாழ ஓர் சினிமாக்காட்சி போன்று இரண்டு காலகட்டங்களுக்கு கதை மாறி மாறி நகர்கிறது. சுரேஷ் கதையில் சிந்தனைகளை சொல்லும்போது அதை உரையாக மாற்றிக் கொள்கிறார், அல்லது நீண்ட தன்னுரையாடலாக அல்லது ஆங்கிலத்தில் பேசும் பகுதியாக ஆக்கிக் கொள்கிறார். இலக்கியவாதிகளின் பலவீனமான பகுதி உரையாடலை அமைப்பது தான். இக்கதையில் சாதியை வரையறுத்தல் பற்றி மாலதி ஆற்றும் உரையைக் காட்டிலும் மாலதி மாதேஷ் கதை வலுவாக இருக்கிறது. சாதி ஒரு தொலைகாட்சி போன்ற பொருளால், பொருள் வசதியால் வரையறுக்கப் படுகிறதா? அல்லது மாலதி சொல்வது போல் பாலுருப்புகளால் நிர்மாணிக்கப்படுகிறதா? மாதேஷின் அம்மா வாசுகி பார்த்திபனின் ஆண் குறியை மிதிக்கிறாள். அதன் வழி அவள் அந்த வரையறையை உடைக்கிறாள். இறுதியில் ஒரு சின்ன திருப்பமும் உண்டு. சுரேஷின் புனைவுலகு இரு எல்லைகளில் ஊசலாடுகிறது. ஒரு பக்கம் இளமை நினைவுகளை மீட்கும் விடலை மறுபக்கம் வாழ்வை கசப்புடன் நோக்கும் அனுபவமும் அறிவும் வாய்த்த அறிவுஜீவி. எனக்கு சுரேஷின் விடலைத்தனமான குரல் வெளிப்படும் பகுதிகளே நெருக்கமாகவும் இயல்பாகவும் உயிர்ப்புடனும் இருப்பதாகத் தோன்றியது. இந்த இரு விசைகளை சமன்படுத்தும் முயற்சியே அவருடைய புனைவுச் செயல்பாடு என சொல்லலாம். சுரேஷின் கதைகளில் வெளிப்படும் பதின்ம வயது மற்றும் குழந்தை பருவத்து குறுகுறுப்பான சிறுவன் வரும் பகுதிகள் ஒருவகையான வெள்ளந்தித்தனம் கொண்டவை.
ஒட்டுமொத்தமாக இந்த தொகுப்பு முழுமையாக வாசிக்க முடிந்தது, அகமொழி மிகக் கூர்மையாக வெளிப்படும் எழுத்தாளர் என சுரேஷை சொல்லலாம். பல கதைசொல்லிகள் வரும் கதைகளில் அவரால் பலகுரல் தன்மையை சரிவர அடையமுடியவில்லை. எனினும் இதை ஒரு குறைபாடாக கொள்ளமுடியாத அளவிற்கு அவருடைய மொழி வலிமை பொருந்தியது. சரிபாதிக்கு மேல் நல்ல கதைகள் ஒரு தொகுதியில் அமைவது அரிது. அவ்வகையில் எஞ்சும் சொற்கள் நிறைவான வாசிப்பனுபவத்தை அளித்தது. இன்றைய தேதியில் அதிகமான கதைகளை எழுதி வருபவரும், நிறைய வாசிப்பு உடையவரும் கூட. ஆண்-பெண் உறவு, அமைப்புக்கு எதிரான கலகக் குரல் ஆகிய இரு தளங்களோடு மட்டும் நின்றுவிடாமல் பல புதிய தளங்களில் அவருடைய கதைகள் பயணிக்க வேண்டும் என ஒரு நண்பராக விழைகிறேன். இனி வருங்காலங்களில் சிறந்த கதைகளை எழுதுவார் எனும் நம்பிக்கை ஒரு சக பயணியாக அவர் மீது எனக்கு உண்டு.