இருபது வயதைத் தாண்டிய அனைவருக்கும் அன்றைய நாள் மறக்கவே முடியாத ஒரு கனவைப் போல மனதில் பதிந்திருக்கும். நாடே அல்லோலகல்லோலப் பட்ட, மந்தமான வானிலையுடைய அந்த தினமும், அதிபரின் தன்னம்பிக்கை பிரகாசித்த அந்த முகமும் யாராலும் மறக்க முடியாதது. வெள்ளை மாளிகை அதிபர் அன்று தான் அஃப்ரேசியாவிற்கு உத்தியோகபூர்வமாக வருகை தந்திருந்தார். கொந்தளிப்பான, ஊழலில் ஊறிப்போன ஒரு தேசத்திற்கு உறவுகளை வலுப்படுத்தும் நிமித்தம் நிகழ்ந்த அமெரிக்க அதிபரின் வருகை அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆனால், தன் புகழ் மங்கிக்கொண்டே வருவதைத் தெளிவாக உணர்ந்த, தன் மீது வைக்கப்படும் ‘ஆப்ரிக்காவிற்கு எதிரான கொள்கையுடையவர்’ முதலிய விமர்சனங்களுக்கு பதில் அளித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஜனாதிபதிக்கு இதொன்றும் அத்தனை ஆச்சரியமான விஷயம் இல்லை.
முழுமுற்றாகத் தனது பாதுகாப்புப் படையினரால் சூழப்பட்ட ஜனாதிபதி மாறாப் புன்னகையுடன் அஃப்ராத் வீதிகளில் உலா வந்தார். அந்தப் புன்னகை இனம் புரியாத ஒரு அச்சத்தை வீதியெங்கும் பரப்பியவாறு அவர் உதட்டுடன் ஒட்டாமல் சென்று கொண்டிருந்தது. எங்கிருந்தோ வந்த ஒரு குண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அவருள் சென்றதும் அந்த உடல் நிலை தடுமாறி பின்னோக்கி சரிந்தது எனக்கு இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது. பாதுகாவலர்கள் அவருக்குக் கவசமாக விரைந்த வேகத்தையும் நான் நினைவில் வைத்திருக்கிறேன். ஆனால், எந்தப் பயனும் இல்லமால் உலகின் சக்தி வாய்ந்த ஒரு மனிதனின் கால்கள் உபயோகமற்று மண்ணில் வீழ்ந்தன. மே 5, 2007, ஐந்து ஐந்து, நினைவில் வைத்துக் கொள்வதற்கு சுலபமான இந்தத் தேதியை வரலாறு பத்திரமாக தன் பக்கங்களுக்குள் பொதித்துக் கொண்டது.
அன்றைய மாலையே, அஃப்ரேசியாவில் மாணவராகத் தங்கியிருந்த, அமெரிக்காவைச் சேர்ந்த இருபத்தைந்து வயதான இளைஞரால் தான் இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டது என செய்திகள் வெளியாகின. கொலையாளி கைது செய்யப் பட்டார். கோல்ட்ஸ்டீன் என்ற பெயருடைய அக்கொலையாளியை உலகம் செல்லமாக ‘ஜி’ என்று நினைவில் நிறுத்திக் கொண்டது. 13 வருடங்களுக்கு முன்னால் உலக வரலாற்றையே தன் ஒற்றைக் குண்டால் மாற்றி வைத்த வல்லவர் ஜி.
சர்வதேச அளவில் வலுவான அழுத்தம் இருந்த போதிலும், ஜி. யை அமெரிக்கா வசம் ஒப்படைக்க அஃப்ரேசிய அரசாங்கம் மறுத்துவிட்டது. பலத்த பாதுகாப்புடன் தன் நாட்டுச் சிறையிலேயே அடைத்தது. புதிய ஜனாதிபதி தங்களுடன் இதற்காக ஏதேனும் புதிய ஒப்பந்தத்திற்கு முன்வரலாம் என அவர்கள் நினைத்திருக்கலாம். உலகின் அனைத்துப் பத்திரிகையாளர்களும் அன்றைய தேதியில் ஜி’யைச் சந்திக்க விரும்பினர். நேர்காணல் செய்ய விரும்பினர். கொஞ்சம் கூச்சத்துடன் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். ஜி’யை சந்திக்க நானும் விரும்பினேன். அதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என நன்றாகத் தெரிந்த போதும் விரும்பினேன்.
ஆனால், புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டதும் காட்சிகள் மாறின. யாரோ ஒருவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் புதியவர் கிஞ்சித்தும் அக்கறை காட்டவில்லை. அஃப்ரேசியர்கள் எதிர்பார்த்த முன்னுரிமை ஏற்பாடுகள் ஒருபோதும் நிறைவேறாது என்பது தெளிவாகத் தெரிந்த போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் அதிகாரப்பூர்வமாக வெட்டப்பட்டன. ஜி தனது அரசியல் மதிப்பை இழந்ததும், பல பத்திரிகையாளர்கள் அவர் மீதான ஆர்வத்தை இழந்தனர். கடைசியில் நான் மட்டுமே எனது விருப்பத்தில் விடாப்பிடியாக இருந்தேன். என் விருப்பம் உத்தியோகம் சார்ந்ததோ அல்லது பரபரப்புத் தன்மை சார்ந்ததோ அல்ல என்பது காரணமாக இருக்கலாம். நான் சிறை ஆளுநரிடம் தொடர்ந்து ஜியைச் சந்திப்பதற்காகப் போராடிக் கொண்டிருந்தேன். ஒருவழியாக கடிதத் தொடர்புக்கு மட்டும் அனுமதி கிடைத்தது. அதுவும் மூன்று வருடங்களுக்கு முன்பு தான். இந்த மூன்று வருடத்தில் ஏராளமான கடிதங்களை நானும் ஜியும் பரிமாறியிருக்கிறோம். முதலில் நாகரீகமாகத் தொடங்கிய கடிதங்கள் போகப்போக நட்புரீதியானவையாக மாறி இருக்கின்றன. உங்களுக்குத் தெரியுமா? இப்போதெல்லாம் ஜி என் மனைவியைப் பற்றி, வேலையைப் பற்றி எல்லாம் விசாரிக்கிறார்.
ஜியை நேரில் சந்திப்பேன் என்ற நம்பிக்கையைக் கிட்டத்தட்ட நான் இழந்திருந்த நேரத்தில் தான் அந்தக் கடிதம் வந்தது. ஆளுநர் குழுவின் கண்காணிப்பில் சரியாக ஒரு மணி நேரம் ஜியை நேர்காணல் செய்ய எனக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. அதற்குத் தான் இன்று இங்கு வந்திருக்கிறேன்.பார்த்த உடனேயே பயத்தைத் தரும் பிரம்மாண்ட இரும்புக் கதவுகளைக் கடந்து, என் உடமைகளை ஒன்று விடாமல் ஒப்படைத்து விட்டு, கண்களாலும், கைகளாலும், இயந்திரங்களாலும் ஸ்கேன் செய்யப்பட்ட பின்பு இங்கே அனுமதிக்கப்பட்டிருக்கிறேன்.
சினிமாக்களில் காட்டப்படும், அந்தரத்தில் ஆடிக் கொண்டிருக்கும் ஒற்றை விளக்குடன் கூடிய மேஜை ஒன்றைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். நடுங்கும் அளவிற்கு குளிரூட்டப்பட்ட ஒரு அறையில் அந்த விளக்கின் அடியில் தான் நான் ஜி’க்காக காத்துக் கொண்டிருக்கிறேன். என் அருகிலேயே இருக்கும் கண்ணாடிக் கதவுகளுக்கு அந்தப் பக்கம் ஆளுநர் குழு என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. எங்கள் உரையாடலை எந்நேரமும் இடையில் புகுந்து அவர்களால் நிறுத்த முடியும். இதோ உலகை உலுக்கிய கொலைக்குற்றவாளியுடன் உலகின் முதல் நேர்காணல் நிகழப்போகிறது.
ஒரு பத்திரிகையாளரின் கண்ணோட்டத்தில் ஜி மிகவும் சுவாரஸ்யமான நபர். அவரைப் பற்றிய ஏராளாமான கட்டுரைகள், புத்தகங்கள் வெளியாகியுள்ளன. போன வருடம் அவரின் வாழ்க்கை வரலாறு கூட வெளியானது. ஆனால், என்னைப் பொறுத்தவரை இது சுவாரஸ்யம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. ஜி’யின் குண்டு வீழ்த்திய உலகின் அதிவல்லமை பொருந்திய அமெரிக்க அதிபர் தனது பதவிக் காலத்தில் அரசியலமைப்பைத் தனக்கு ஏற்றவாறு வளைத்த போது, சர்வதேச ஒப்பந்தங்களை எந்தவொரு குற்றவுணர்ச்சியும் இல்லாமல் மீறிய போது, ஏராளமான இனக்குழுக்களை மனசாட்சியில்லாமல் அழித்தொழித்த போது, நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்த போது என் மனநிலை எப்படி இருந்தது என இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது. கண் முன்னால் நான் நேசிக்கும் தேசம் சிதைந்து கொண்டிருப்பதைக் கண்டு ஏதொன்றும் செய்ய இயலாதவனாகி மனஉளைச்சலில், இயலாமையின் உச்சத்தில், இந்த வரலாற்றில் நாமும் பங்கு கொண்டு விட மாட்டோமா என நினைத்திருக்கிறேன்.
இந்த இயலாமை உணர்வில் இருந்து வெளியேற நான் என்ன செய்ய முடியும் என என்னை நானே இரவுபகலாகக் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்த காலம் அது. அப்போது தான், நான் எனது ஆயுதமாக எழுத்தைத் தெரிவு செய்தேன். செய்தித்தாள்களுக்கும், வார மற்றும் மாத இதழ்களுக்கும் தொடர்ந்து கட்டுரைகளும், கருத்துத் துணுக்குகளையும் எழுதி அனுப்பினேன். ஆர்ப்பாட்டங்களில் துண்டு பிரசுரங்களை அச்சடித்து விநியோகித்தேன். அவர் மட்டும் அப்போது அதிபராக இல்லாமல் இருந்திருந்தால் என் வாழ்வு இன்று வேறொன்றாக இருந்திருக்கும். எனது படைப்புகள் தொடர்ந்து பிரசுரமாகத் தொடங்கிய பின்னர் செய்து கொண்டிருந்த வேலையே விட்டுவிட்டு முழுமூச்சாக அரசிற்கு எதிரான என் ஆயுதத்தை ஏந்தினேன். ஆனால், என் ஆயுதம் ஒருபோதும் வெள்ளை மாளிகைக்குள் நுழையாது. அதை நெருங்கக் கூட செய்யாது என்பதை நான் நன்றாக அறிவேன். ஜனாதிபதி தொடர்ந்து ஆட்சி செய்து கொண்டுதான் இருந்தார். தப்பியோடி விடவில்லை. பிறகெப்படித் தான் நான் என் கோபத்தை வெளிப்படுத்துவது? வல்லரசின் அதிபரை வீழ்ச்சியடையச் செய்யகூடியோ செயலோ வார்த்தையோ இருக்கிறதா என்ன ?
உண்மையில் அப்படியான ஒரு செயல் இருந்தது, அது வெல்லவும் செய்தது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஒரு ஐரிஷ் பத்திரிகை தனது அட்டைப்படத்தில், அமெரிக்க அதிபரின் புகைப்படத்தைத் துப்பாக்கியின் குறிபார்க்கும் வெளிச்ச வட்டத்தோடு வெளியிட்டிருந்தது. அதன் தலைப்பு : Why Not ? . அந்தக் கட்டுரையில், கத்தோலிக்க இறையியலாளர் செயின்ட் தாமஸ் அக்வினாஸ் மேற்கோள் காட்டப்பட்டிருந்தார். “தனது நிலத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு கொடுங்கோலரைக் கொன்ற ஒருவர் சர்வ நிச்சயமாகப் பாராட்டுக்குத் தகுதியானவர்” என்று அவர் கூறியுள்ளாராம். ரோமானியக் குடியரசை முடிவுக்குக் கொண்டு வந்த சர்வாதிகாரியான சீசரைக் கொல்வதற்கான காரணங்களைக் கண்டறிந்த காசியஸ் மற்றும் புருட்டஸின் வழக்கும் அக்கட்டுரையில் ஆராயப்பட்டிருந்தது. பயன்பாட்டுத் தத்துவவாதிகளின் நிலைப்பாடும் விவாதிக்கப்பட்டிருந்தது: ஒரு செயலின் சரி தவறானது அதன் பல்வேறு வகைப்பட்ட கோணங்களால் தீர்மானிக்கப்படுகிறது என்று அவர்கள் நம்பினர். ஒரு தீய செயல் ஏராளமான மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரவல்லது என்றால், அதைத் தீமை என்று எடுத்துக் கொள்ள முடியுமா? எதிர்வரும் படுகொலைக்கான தத்துவார்த்தக் கட்டமைப்பு எவ்வாறு நிறுவப்பட வேண்டும் என முன்னரே விவாதித்தது அக்கட்டுரை. அது வெளியாகி மிகச்சரியாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஜி ஜனாதிபதியைத் தன் துப்பாக்கியின் வழி குறி பார்த்தார்.நான் அச்சம்பவத்தை தொலைக்காட்சி வழியே விழி அகலப் பார்த்துக் கொண்டிருந்தேன், துக்கப்படுவதா அல்லது மகிழ்ச்சியைக் கொண்டாடுவதா என்ற பிரக்ஞையற்றவனாக.
இதோ வெளியே காலடி ஓசைகள் கேட்கின்றன. எனக்கு ஆறடி தொலைவில் மூன்று மனிதர்கள். கதவின் மேல் படர்ந்திருந்த வெளிச்சம் நிழல்களால் உடைகிறது. ஜி வந்து விட்டார். என் கைக்கெட்டும் தொலைவில் என் எதிரில் அமர்ந்திருக்கிறார். அவருடன் வந்த காவலர்கள் அந்தக் கதவின் அருகில் சென்று நின்று கொண்டனர். இதோ உலகின் அனைத்து மக்களாலும் அறியப்பட்ட ஜி உடலும் உயிருமாக என் முன்னே அமர்ந்திருக்கிறார். காலம் அவர் வயதைப் பறித்து அதன் தடயங்களை உடலில் பதித்திருக்கிறது. புகைப்படங்களில் அப்போது கண்டதை விட சற்று இளைத்திருக்கிறார். கண்கள் ஒரு ஆழமான குழிக்குள் இருந்து தீர்க்கமாக என்னை ஊடுருவுகின்றன. நான் இதற்கு முன் கேட்டேயிராத அவர் குரல் மென்மையாக, மிக மென்மையாக வெளிப்படுகிறது. இவரிடம் முதல் கேள்வியாக எதைக் கேட்பது என்பதைத் தான் அந்தக் கடிதத்தைப் பார்த்த நொடி முதல் கடந்த நொடி வரை யோசித்துக் கொண்டிருந்தேன். கேட்டே விட்டேன்.
எப்படி இருக்கிறீர்கள் ஜி ?
இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லப் போவதில்லை. அதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். இத்தனை வருடங்களில் எந்த விதக் கருணையுமின்றி இந்தக் கேள்வியை எதிர்கொண்டு வருகிறேன். பார்ப்பவர்கள் அனைவரும் என்னிடம் இதைக் கேட்கிறார்கள். உண்மையில் இந்தக் கேள்விக்கும் அதற்கு நான் சொல்லும் பதிலுக்கும் எந்த அர்த்தமுமில்லை. கேட்பவர்களுக்கு என் பதில் குறித்த அக்கறையுமில்லை. அமெரிக்க ஜனாதிபதியைப் படுகொலை செய்தவனின் சிறை வாழ்க்கை எப்படி இருக்குமென்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒருவேளை அது உங்கள் கற்பனைக்கு எட்டாததாக இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி.
சரியாக 15 வருடங்களாக சிறையில் இருக்கிறீர்கள். உங்களை சிறைக்கு அழைத்து வந்த அந்த நாள் நினைவிருக்கிறதா?
எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே அந்த நாள் நினைவில் இருக்கும். ஆனால், என் நினைவுகள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவை. நான் அதற்குப்பிறகு எந்த தொலைக்காட்சி செய்திகளையும் பார்க்கவில்லை.அது பற்றி அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்த எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்க வாய்க்கவில்லை. எனக்கு அந்தக் கட்டிடமும் அந்த ஜன்னலும் மட்டும் தான் நினைவிருக்கின்றன. அங்கு நான் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் ஏற்கனவே பலமுறை ஒத்திகை பார்க்கப்பட்டது. அந்தப் படுகொலை கனவில் நான் பலமுறை நிகழ்த்திப் பார்த்தது. காடுகளிலும் பாலைவனங்களில் இதற்காக பல மாதங்கள் நான் பயிற்சி எடுத்திருக்கிறேன். இணையத்தில் நூற்றுக்கணக்கான காணொளிகளைப் பார்த்திருக்கிறேன். இணையத்தில் வாங்கிய அந்தத் துப்பாக்கி பயன்படுத்துவதற்கு எளிமையானது. பல நாள் கனவைக் கண்களில் தேக்கி கிட்டத்தட்ட தவ நிலையில் நான் குறி பார்த்துக் கொண்டிருந்த போது, அதிபர் என்னிடம் இருந்து 40 மீட்டர் தூரத்தில் தான் இருந்தார்.அப்போது யாராலும் அதை செயல்படுத்தியிருக்க முடியும். அதொன்றும் அத்தனை கடினமான வேலையாக இருக்கவில்லை. மிகச்சரியான நேரத்தில் துல்லியமாக குறி வைத்து துப்பாக்கியை இயக்கினேன் அவ்வளவு தான்.
பிறகு இந்த கைது பற்றி? அது நினைவிருக்கிறதா?
எல்லா கைதுகளும் ஒரே மாதிரித் தான். கூச்சல், கை விலங்கு, போலீஸ் வேன்.
சரி. அதன் பிறகு? உங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நீங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. உங்களைப் பற்றிய அறிக்கைகள் அடிக்கடி வெளியாகும். அதில் எங்கேயும் நீங்கள் உங்கள் குற்றத்திற்காக வருந்தவில்லை. மாறாக ஒப்புக்கொண்டு தண்டனையை ஏற்றுக் கொண்டீர்கள்,
குற்றவுணர்ச்சிக்கு ஆளாவதற்கும் வருந்துவதற்கும் மிக மெல்லிய வேறுபாடு இருக்கிறது.இந்தப் படுகொலைக்கு முன் வருங்காலத்தில் கொலைகாரன் ஆவதற்கான எந்த அறிகுறியும் என்னிடத்தில் இல்லை. வன்முறை எண்ணங்கள் இல்லை. ஆக்ரோஷமான கனவுகளைக் கூட நான் கண்டதில்லை. என் வரிகளை ஒழுங்காகச் செலுத்துபவனாக, நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாய்குட்டிகளுடன் விளையாடுபவனாக இருந்திருக்கிறேன். நம் முன்னாள் அதிபர் பதவி ஏற்கும் வரையில் எனக்கு அரசியல் பற்றிக் கூட பெரிதாகத் தெரியாது.உங்களுக்கு என்னைப் பற்றிய எல்லாமும் தெரிந்திருக்கும். ஆம், நான் ஒருவரின் வாழ்வை அஸ்தமிக்க வைத்திருக்கிறேன். ஆனால், அந்த ஒருவர் யார் என்பது தான் முக்கியம். நான் ஒருவர் மனைவியை விதவையாகவும், அவர் குழந்தைகளை தந்தையற்றவர்களாகவும் மாற்றியிருக்கிறேன். அதற்காக நான் வருந்துகிறேன். ஆனால், ஒருபோதும் ஜனாதிபதியைக் கொன்றதற்காக நான் குற்றவுணர்ச்சி கொள்ளவில்லை.
அப்படியானால் எந்த வருத்தமும் இல்லையா? எப்போதுமா?
ஆம், எப்போதும் இல்லை.
தன் குற்றத்திற்காக ஒருபோதும் வருத்தப்படாத ஒருவர் பிறரின் அனுதாபத்தை எதிர்பார்க்க முடியாதே?
நான் என்னுடைய நேர்மாறயான பிம்பத்திற்கு அதீத முக்கியத்துவம் கொடுப்பவனாக இருந்திருந்தால், சுதந்திர உலகின் தலைவனைக் கொன்றிருக்க மாட்டேன். எனக்கு யாருடைய அனுதாபமும் தேவையில்லை என்பதே உண்மை.
இந்தப் படுகொலை எதில் போய் முடியும் என நீங்கள் உணர்ந்திருந்தீர்களா?
அது எனக்கு சரியாகாத் தெரியாது. ஆனால், என்னைத் தவிர்த்து நாட்டின் மற்றவர்களது வாழ்க்கை மேம்படும் என்பதை மட்டும் நம்பினேன். வரலாறு என் நம்பிக்கையை மெய்யாகியிருக்கிறது. இந்தப் பாரிய உலகில் பிரச்சனைகள் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அப்போதிருந்த குழப்பங்கள், ஒழுங்கின்மை, நமக்கான சட்டங்களை நம் மீதே திருப்பி விட்ட துரோகங்களெல்லாம் இப்போது பழங்கதை ஆகியிருக்கின்றன. அதை மறுக்க முடியாது தானே.
ஜனாதிபதி மரணத்திற்கு சற்று முன்பாக நீங்கள் தொழிற்முறை சமுதாயம் மற்றும் அதன் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தீர்கள். அது பிறகு பெரும்பாலான பத்திரிக்கைகளில் ஒரு படுகொலையாளனின் அறிக்கை என்ற தலைப்பில் இணைப்பாக வெளியானது. அதில் ஒரு இடத்தில் நீங்கள் குறிப்பிட்டிருப்பீர்கள். ‘வரலாற்றை இரண்டு கூறுகளின் கூட்டுத்தொகையாக நினைத்துக் கொள்ளுங்கள்: வெளிப்படையான எந்தவொரு வடிவத்தையும் பின்பற்றாத கணிக்க முடியாத நிகழ்வுகளைக் கொண்ட ஒரு ஒழுங்கற்ற கூறு, மற்றும் நீண்டகால வரலாற்று போக்குகளைக் கொண்ட ஒரு நிலையான கூறு.’
அதன்படி உங்களது செயல் மேற்கண்ட எந்தக் கூறின் கீழ் வரும்?
இது சற்றுக் கடினமான கேள்வி தான். ஒரு கொலை முயற்சி என்பது நிச்சயமாக எதிர்பாராத ஒன்று தான். அதன் சாராம்சம் கூடக் குறைய இருக்கலாம். ஆனால், வரலாறு எதேச்சாதிகாரிகள் மற்றும் சர்வாதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களால் நிறைந்திருக்கிறது. உலகின் பல தத்துவ ஞானிகள், தங்களது சொந்த தேசத்து மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்படும், அவர்களுக்கு எதிராக சட்டங்களை ஆயுதமாக்கும் ஒரு சர்வாதிகாரியைக் கொள்வது விரும்பத்தக்கது மட்டுமில்லை சட்டபூர்வமானதும் கூட என நம்புகிறார்கள். பன்னிரண்டாம் நூற்றாண்டின் தத்துவஞானி ஜான் ஆஃப் சாலிஸ்பரி கருத்துப்படி, ஒரு அரசாங்கத்தின் அரசியல் மனித உடலைப் போல செயல்பட வேண்டும். அனைத்து உறுப்புகளும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து உடலின் ஆரோக்கியத்திற்காக உழைக்க வேண்டும். அதில் ஏதேனும் ஒரு உறுப்பு நோயுற்று விட்டால், அது மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளை பாதித்தால், அல்லது மற்ற உறுப்புகளுக்கு போதுமான முக்கியத்துவம் தரப்படவில்லையென்றால், அப்போது நோயுற்ற பகுதியை நிராகரிப்பது உடலின் கடமையாகும். உங்களுக்கு அமெரிக்க ஒன்றியத்தின் பெருமை வாய்ந்த சின்னத்தைப் பற்றித் தெரியும் என்று நினைக்கிறேன். அதன் குறிக்கோளாக பெஞ்சமின் ஃபிராங்க்ளின் பரிந்துரைத்த வாக்கியம் என்னவென்று தெரியுமா? : “கொடுங்கோலர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்வது கடவுளுக்கு கீழ்ப்படிவதாகும். (Rebellion to Tyrants is Obedience to God)”
நீங்கள் இந்த விஷயத்தை எப்படித் திருப்பினாலும், ஜனாதிபதி ஒன்றும் அவராகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்ளவில்லை. ஜனநாயக முறைப்படி மக்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
(மெல்லிய புன்னகையுடன்) அவர் தன்னை எதிர்த்த வேட்பாளரை விட 3 மில்லியன் வாக்குகள் குறைவாகப் பெற்றார். ஜனநாயகம் என்பதெல்லாம் வெறும் சாக்கு மட்டுமே. ஹிட்லர் கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் தான். மக்கள் தேர்ந்தெடுத்தார்கள் என்பதற்காக ஒரு கொடுங்கோலன் நியாயவான் ஆகி விட முடியுமா. ஜனநாயக வாக்கெடுப்பு என்பது அதிபர் பதவியேற்கும் நாளிலேயே காலாவதி ஆகிவிடும். அதன்பிறகு அவர் தனது சொற்களாலும் செயல்களாலும் தான் தனது நியாயத்தன்மையை சம்பாதிக்க வேண்டும். உங்கள் ஜனாதிபதி சர்வதேச ஒப்பந்தங்கள் மீதும், தேசிய சட்டங்கள் மீதும், உலகளாவிய மதிப்புகள் மீதும் எந்தவொரு சிறு கவனமும் செலுத்தவில்லை. துளியும் அவற்றை மதிக்கவில்லை. உறுப்பு தவறு செய்தால் உடல் எதிர்வினையாற்றும். அப்போது பங்குசந்தைகளில் ஏற்பட்ட குழப்பங்கள், ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புகள், வீழ்ச்சிகளை மறந்து விட்டீர்களா என்ன? அப்போது நம் உடல் விஷ காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது. அதை அப்படியே விட்டிருந்தால் தேசம் மரணித்திருக்கும்.
அந்த சகாப்தத்தின் அரசியல் மற்றும் சமூக சூழ்நிலை உங்களை அப்படி நடந்து கொள்ளத் தூண்டியது எனக் கூறலாமா?
சரியாகத் தெரியவில்லை. என் தேசத்தின் காய்ச்சலை நான் உணர்ந்தேன். அதை மாற்றி அமைதியாக்க விரும்பினேன் அவ்வளவே. நஞ்சாகிப் போன ஒரு உறுப்பை கவனத்தோடு அறுவைசிகிச்சை செய்து அகற்றிய தேர்ந்த மருத்துவரைப் போலத் தான் என்னை உணர்கிறேன்.
ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் அந்த குண்டு இடது புறமிருந்து வந்ததை காரணம் காட்டி, உங்களுக்கு இடதுசாரி சித்தாந்தங்கள் மீது நம்பிக்கை இருந்ததாக கூறுகிறார்களே.
இதை ஒருபோதும் ஏற்க மாட்டேன். இது ஒரு முட்டாள்தனமான கருத்து. எனது செயலுக்கும் இடதுசாரிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் செய்ததற்கு எந்தவொரு அரசியல் போக்கோ அல்லது குழுவோ பொறுப்பேற்க முடியாது. இதை முழுக்க முழுக்க நானே செய்தேன். நான். நான் மட்டும்.
உங்களையே நீங்கள் தியாகம் செய்திருக்கிறீர்கள்.
இது ஏதோ நாடகத்தனமாக இருக்கிறது. அனைவருமே ஏதாவது நடந்து விடாதா என காத்துக் கொண்டு தான் இருந்தார்கள். நீங்களும் அதில் ஒருவர் தான் என உங்கள் கடிதங்களில் தெரிவித்திருக்கிறீர்கள். அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால், அன்றைய தினத்தில் நான் மட்டுமே அந்தப் படுகொலையை அரங்கேற்றினேன். இன்று வரை நான் செய்தது சரி தான் என்று நினைக்கிறேன்.
உங்களை செயல் இரண்டு வித எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் மக்கள் பெருமகிழ்ச்சியடைந்துள்ளனர். மற்றும் சிலருக்கு உங்கள் மரண தண்டனை தான் தேவையாக இருக்கிறது.
இதில் நான் பெரும் முரண்பாட்டைக் காண்கிறேன். ஆனால், விவிலியத்தின்படி, ரத்தத்தைக் கண்டு துடித்துப் போனவர்களுக்கு பேச எல்லா உரிமையும் இருக்கிறது. நான் அவர்கள் ஜனாதிபதியைக் கொலை செய்திருக்கிறேன். அதை நான் ஒப்புக்கொண்டாலும் அதற்கான எந்த வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், அமெரிக்க நீதிமன்றம் எனக்கு என்ன தண்டனை விதித்தாலும் ஏற்றுக்கொள்ள நான் தயாராகவே இருந்தேன். இவர்கள் என்னை ஒப்படைக்கவில்லை. நான் என்ன செய்வது?
ஆனால், ஒப்படைக்காததால் தான் நீங்கள் இப்போது உயிருடன் இருக்கிறீர்கள்.
இதயத்துடிப்பை மட்டுமே வைத்துக் கொண்டு ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்று சொல்லி விட முடியாது.
‘இன்னும் பதினைந்து நிமிடங்கள் தான் இருக்கின்றன.’ என காவலாளி அறிவித்த பின் ஜியின் செய்கைகளில் சற்றே மாற்றம் தெரிகிறது. நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்ட அவர் முதல் முறையாக ஒரு உரையாடலை முன்னெடுக்கிறார். “நீங்கள் ஏன் என் முந்தைய கேள்விக்கு பதிலளிக்கவில்லை. அப்படி நடக்க வேண்டும் என நீங்களும் விரும்பினீர்கள் தானே. சரி ஏன் என்னைச் சந்திக்க இத்தனை காலம் போராடினீர்கள்? மற்ற பத்திரிகையாளர்கள் மறந்து விட்டனரே?”, “ஒரு பத்திரிகையாளராக அது எனது கடமை” என்கிறேன். ஜி மறுதலித்து தலையசைக்கிறார். ” இல்லை இது உண்மையான காரணமில்லை.”
உங்கள் செயலுக்கு என்னை ஒரு சாட்சியாக நான் கருதுகிறேன். அந்த நேரத்தில், நான் கொஞ்சம் கூட தூங்கவில்லை. தொலைக்காட்சியில் தொலைந்திருந்தேன்.
இல்லை இதுவும் உண்மையான காரணமில்லை.
பிறகு எது தான் காரணம்? உங்களைப் பொறுத்தவரையில்
‘நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். ஜனாதிபதி மரணத்தைக் கண்டபோது, அந்த சகிக்கவியலாத துப்பாக்கி சத்தத்தைக் கேட்ட போது, அந்த விபரீத சக்தி ஒரு நொடியில் மடிந்து போனதைக் கண்ட போது, நீங்கள் என்ன நினைத்தீர்கள்? அல்லது, நீங்கள் என்ன உணர்ந்தீர்கள்?
நான் திகைத்துப் போனேன். ஒரே நேரத்தில் பல விஷயங்கள் மூளைக்குள் ஓடின. எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.
அதைப் பற்றி எழுதியிருக்கிறீர்களா?
இல்லை.
சிறை ஆளுநர் சில நேரங்களில் நான் இணையத்தைப் பயன்படுத்த அனுமதிப்பார். கண்காணிப்புகள் கடுமையானதாக இருக்கும். ஜனாதிபதி உயிருடன் இருந்தபோது உங்கள் பணி அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததை கவனித்தேன். அது பேசியது தீவிர அரசியல். நீங்கள் தேசத்தின் மீது தீவிர அக்கறை கொண்டிருந்தீர்கள்.வேறொரு ஜனாதிபதியுடன் தேசம் இன்னும் சிறப்பாக இருக்கும் என அவதானித்திருக்கிறீர்கள். ஆனால் படுகொலைக்குப் பிறகு நீங்கள் மீண்டும் அரசியல் பற்றி எதையும் எழுதவில்லை. மாறாக பல்கலைக்கழகங்கள், விளையாட்டு, புத்தகங்கள், அறிவியல் பற்றி எழுதியுள்ளீர்கள், உண்மையில் அரசியல் தவிர எல்லாவற்றையும் பற்றி எழுதியுள்ளீர்கள். எனது செயல் உங்கள் வாழ்வின் திருப்புமுனையாக இருந்துள்ளது. உங்கள் எழுத்துகளுக்கும் என் செயலுக்கும் இருந்த ஒற்றுமையை உணர்ந்துள்ளீர்களா? உலகில் எந்த வார்த்தையாலும் செய்ய முடியாத ஒன்றை ஒரு செயல் சாதிக்கும். உலகை மாற்றும்.
‘ஐந்து நிமிடங்கள் தான் இருக்கின்றன. புறப்படத் தயாராகுங்கள்.’ மீண்டும் அறிவிக்கிறார் காவலாளி.
இன்னும் ஐந்து நிமிடங்கள் தான். ஜியைச் சந்திக்கும் வாய்ப்பு மறுபடி அமையப் போவதில்லை. நானே அதை விரும்பவும் மாட்டேன். என்னைப் பற்றிய ஜி.யின் பகுப்பாய்விற்கு நான் பதிலளிப்பதற்கு முன்பு, எனது கடைசி கேள்வி என்னவென்று அவருக்கு ஏற்கனவே தெரியும் என்று அவர் கூறுகிறார்: அவரைப் போன்ற ஒருவர், படித்தவர் மற்றும் ஒரு நல்ல நடுத்தர வர்க்கப் பின்னணியைச் சேர்ந்தவர், இது போன்ற செயலை எவ்வாறு செய்ய முடிந்தது? இந்த மேசையின் அந்தப் பக்கத்தில் எப்படி அவரால் வர முடிந்தது? ‘ஆனால் உண்மையில் நீங்கள் என்னிடம் வேறு கேள்வி கேட்க விரும்புகிறீர்கள்,’ என்று அவர் தொடர்கிறார். ‘உங்கள் ஆத்மாவின் ஆழத்தில், நீங்கள் உண்மையில் கேட்க விரும்புவது என்னவென்றால், என்னைப் போலவே அதே இலட்சியங்கள், நம்பிக்கைகள் மற்றும் கவலைகள் ஆகியவற்றைக் கொண்ட நீங்கள் எதிர்புறமான அந்தப்பக்கத்தில் உட்கார்ந்திருக்கும்போது, நான் எப்படி மேசையின் இந்த பக்கத்தில் இருக்கிறேன்? ‘
என்னையறியாமல் ஆமென்று எப்படி என்னால் தலையாட்ட முடிந்தது எனத் தெரியவில்லை.
மிகவும் எளிமையான பதில் தான். நிஜமாகவே தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?
விரும்புகிறேனா இல்லையா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் என்னால் பின்வாங்க முடியாது. மீண்டும் அனிச்சையாகத் தலையாட்டினேன்.
ஆனால், பதில் சொல்வதற்கு முன்னதாகவே நேரம் முடிந்திருந்தது. ஜி கிளம்பியிருந்தார். நன்றாகத் தெரியும் அவர் என்னைத் திரும்பிக் கூட பார்க்க மாட்டார். ஜி, அவரது கண்கள், தீர்க்கமான பார்வை, மர்மப் புன்னகை என அனைத்துமே வாழ்நாள் முழுவதும் எனைத் துரத்தும் ஒரு கேள்வியைப் பரிசளித்துச் சென்றுள்ளன.
“அந்த செயல் கொடூரத்தின் வெளிப்பாடா இல்லை இரக்கத்தின் வெளிப்பாடா?”
(டான் ஹீமா வேன் வாஸ் எழுதிய டச்சு மொழி சிறுகதையைத் தழுவி எழுதப்பட்டது.)