சிறுகதைகள்
Trending

துண்டு

ஐ.கிருத்திகா

” வாரேன்….”

கந்தசாமி  விருட்டென  எழுந்து  வெளியே  வந்து விட்டார்.

வந்தார், திண்ணையில்  அமர்ந்தார், அலமேலு  தந்த  சொம்பு  நீரை  கடகடவென  வாயில்  சரித்து   கொண்டு  கேட்டார்.

உத்திராபதி  தயங்கித் தயங்கி  விஷயத்தைச்  சொல்ல, அடுத்த நொடி  புயல் போல்  கிளம்பி விட்டார். அலமேலு  கவலையோடு  அவர்  போவதையே  பார்த்தபடி  நின்றிருந்தாள்.

“தண்ணி  சொம்ப  உள்ளாற  வச்சிட்டு  வர்றதுக்குள்ள  என்னா  நடந்துச்சு…..அண்ணன்  கோவிச்சிக்கிட்டு  போறாரே….” கணவனிடம்  பதட்டமாகக்  கேட்டாள்.

” மருந்தடிக்கிற  ஸ்பிரேயரக்  கேட்டான். தரேன்னு  சொல்லிப்புட்டு   வூட்டுக்கு  வந்தா  ஸ்பிரேயரக் காணும்.”

“அ….அது  நாந்தான்  மாரிமுத்து   கேட்டான்னு  குடுத்தேன்.”

” அதான்  சொன்னியே. அப்பவே  பக்குன்னுச்சு. கந்தசாமிட்ட  இல்லன்னு  சொன்னா  கோவிச்சிக்குவானேன்னு  பயந்துகிட்டே  இருந்தேன். அதே மாரி  ஆயிப்போச்சு…” என்ற  உத்திராபதியின்  குரல்  பலகீனமாக  ஒலித்தது.

நண்பனின்  கோபம்  பற்றி  அவர்   அறியாதவரல்ல. இருவரும்  பால்யகால  சிநேகிதர்கள். புத்தகமூட்டையை  ஒரு  கழியில்  மாட்டி  ஆளுக்கொரு  கைபிடித்து  சுமந்து  செல்வார்கள்.

வழியில்  புளியங்காய்  அடிப்பது, வாய்க்கால்  மதகடியில்  ஒளிந்து  நின்று  ஊளையிட்டுக்  குளித்துக்  கொண்டிருப்பவர்களைக்  கலவரப்படுத்துவது  என  சகலக்  குறும்புகளும்  செய்வார்கள். இருவருக்குமே  படிப்பில்  நாட்டமில்லை.

அப்பாவின்  சாத்துப்படிக்கு  பயந்தே  பள்ளிக்கு  ஓடுவார்கள். அதனாலேயே  பத்தாவது  பரீட்சை  முடிந்ததும்  புத்தகங்களை  எடைக்கு  போட்டுவிட்டு  இருவரும்  குலத்தொழிலான  விவசாயத்துக்கு  வந்து விட்டனர்.

“படிப்பு  ஏறாட்டியும்  சொந்த  புத்தி  கொண்டு  வெவசாயம்  செஞ்சு  பொழச்சிக்கட்டும்” என்று  மனதைத்  தேற்றிக் கொண்டனர்  அப்பாக்கள்  இருவரும்.

கந்தசாமிக்கு  சிறு வயதிலிருந்தே  மூக்குக்கு மேல்  கோபம்  வரும். அதுவும்  காய்ந்த  ஓலையில்  தீப்பிடிக்கிற  வேகத்தில்  வரும். கோபம்  வந்தால்  காச்,மூச்சென்று  கத்துவார்.

” இவன  கட்டிக்கப் போறவ  பாவந்தான்…” என்று  அப்பத்தா  சொல்லிச்  சிரிப்பாள்.

கோபம்  எவ்வளவு  வருமோ  அவ்வளவுக்குத்  தங்கமானவர்.

” அவனுக்குக்  கோபம்  கொஞ்சம்  வரும். அத  பெருசுப்படுத்தாதீங்க  அண்ணி. கோவக்காரப்பயலுக்கு  பாசமும்  ஜாஸ்தி” என்று  உத்திராபதி  திருமணமான  அடுத்தநாளே  கந்தசாமியின்  மனைவி  விமலாவிடம்  கூறிவிட்டார்.

‘அவரோட  கோவத்ததான்  நேத்து  ராத்திரியே  பாத்துட்டேனே’ என்று  மனசுக்குள்  சொல்லிக் கொண்ட  விமலா  வெறுமனே  தலையாட்டி  வைத்தாள்.

” நான்  வேணா  மாரிமுத்து  வூட்டுக்கு  போயி  ஸ்பிரேயர  வாங்கிட்டு  வந்துரவா …?”

அலமேலு  அருகில்  வந்து  மெதுவாகக்  கேட்க , உத்திராபதி  அவசரம், அவசரமாக  தலையாட்டினார்.

” குடுத்ததுக்குப்  பொறவு  கேட்டு  வாங்குறது  தப்பு. அதோட  இனிமே  ஸ்பிரேயரக்  குடுத்தாலும்  கந்தசாமி  வாங்கிக்க மாட்டான்.”

” அதுசரி, ஆனா,  கோவிச்சிக்கிட்டுப்  போன  மனுசன  எப்புடி  சமாதானப்படுத்துவீங்க…?” என்ற  அலமேலுவுக்கு  கந்தசாமியின்  கோபம்  அத்துப்படியாகியிருந்தது.

மனைவியிடம், மகனிடம், பக்கத்து  வீடு, எதிர்வீட்டுக்காரர்களிடம், பால்காரன், சலூன்காரனிடம்  என்று  அனைவரிடமும்  கோபித்துக்  கொள்பவர்  உத்திராபதியிடம்  ஒருமுறை கூட  சண்டையிட்டதில்லை. அதற்கான  சந்தர்ப்பம்  அமைந்ததில்லை  என்பதை விட   இருவரும்  சந்தர்ப்பம்  உருவாக  வாய்ப்புக்  கொடுத்ததில்லை.

” அவந்தான்  கோவக்காரனாச்சே….” என்று  உத்திராபதியும்,

” அவனுக்கு  என்னப்பத்தி  தெரியும்” என்று  கந்தசாமியும்  சொல்லி  நட்புப்பயிரை  நல்லமுறையில்  வளர்த்து  வந்தனர். அந்த  நாற்பது  வருட  நட்பில்  சிறு  விரிசல் கூட  விழுந்ததில்லை. இதுதான்  முதல் தடவை.

” இதொன்னும்  பெரிய  விசயமில்லப்பா. ஒங்களுக்கு  தெரியாம  ஸ்பிரேயரக் குடுத்தது  அம்மா. இதுல  ஒங்க  தப்பென்ன  இருக்கு. போயி  நடந்தத  எடுத்து  சொல்லி  மாமாவ  சமாதானப்படுத்துங்க. மாமா  புரிஞ்சிக்குவாரு” என்றாள்   கல்யாணி.

உத்திராபதிக்கும்  அது  சரியென்று  பட, தோளில் கிடந்த  துண்டை  சரி செய்து  போட்டுக் கொண்டு  கிளம்பி விட்டார்.

கருஞ்சிவப்பு  உத்திராட்ச  பார்டர்  போட்ட  துண்டு  அது. உத்திராபதி  அதைத்  தோளை  விட்டு  இறக்கமாட்டார். அவர்  படுத்துறங்கும் போது  துண்டு  அவரருகிலேயே  குழந்தை போல்  கிடக்கும்.

ஒருநாள்  பலத்த  மழை  பெய்த போது  முழுவதுமாக  நனைந்துவிட்ட  உத்திராபதி  அவசரத்துக்கு  கந்தசாமி  வீட்டு  திண்ணையில்  ஒதுங்கி  நின்றார்.

” மழ  வுட்டதும்  போவலாம். உள்ளாற  வந்து  என்  உடுப்ப  போட்டுக்க” என்று  கந்தசாமி  எவ்வளவோ  சொல்லியும்  உத்திராபதி  கேட்கவில்லை.

” அட  கிறுக்குப்பயலே…..இந்த  துண்டால  தலைய  மட்டுமாவது  தொவட்டிக்க…….”

கந்தசாமி  தன்னுடைய  துண்டை  கொடுக்க, வாங்கி  தலை  துவட்டிக் கொண்டவர், துவைத்து  தருவதாக  கூறி  வீட்டுக்கு  எடுத்து வந்து  விட்டார்.

திரும்பக்  கொடுக்கும்  எண்ணம்  மட்டும்  வரவேயில்லை. தும்பைப்பூ  வெள்ளையில்  கருஞ்சிவப்பு  நிறக்கரை  எடுப்பாய்  தெரிய  தோளில்  போட்டுக் கொண்டு  கண்ணாடி  முன்  நின்று  பார்த்தவருக்கு  அவ்வளவு  பிடித்திருந்தது. பேசாமல்  துண்டை  அவரே  வைத்துக் கொண்டார்.

” அண்ணங்கிட்ட  துண்ட  தர வேணாமா….?”

அலமேலு  மூன்று  நாட்கள்  கழித்துக்  கேட்டாள், இரவல்  வாங்கிய  துண்டைத்  தோளில்  போட்டுக்கொண்டு  திரிகிறாரே  என்ற  கோபத்தில்.

” கந்தசாமி  குடும்பத்தோட  பழனிக்கு  போயிட்டு  நேத்து தான  வந்துருக்கான். ”

” அவரு ஊர்ல  இல்லீன்னா  அவரு  துண்ட  நாம  ஒபயோகப்படுத்தலாமா…..?”

” ஒபயோகப்படுத்தல. சும்மாதான்  தோள்ல  போட்டுகிட்டேன்” என்ற  உத்திராபதி  அவளின்  அடுத்த  கேள்விக்கு  பயந்து  அறைக்குள்  புகுந்து கொண்டார். அலமேலுவுக்கு  ஆச்சர்யமாக  இருந்தது.

” ஒங்கப்பாருக்கு  என்னமோ  ஆயிருச்சிடி. காலமான  காலத்துல  மனுசனுக்கு  வந்த  ஆசையப் பாரு” என்றாள்  கல்யாணியிடம்.

உத்திராபதி  பெரிதாக  ஆசைப்படுகிற  ஆளில்லை. பசிக்கும்  வயிற்றுக்கு  மூன்றுவேளை  சோறு. அது  ஆறியிருந்தாலும்  பரவாயில்லை. நேரத்துக்கு  சாப்பிட்டுவிட வேண்டும். அது போதும்  அவருக்கு. அதைத் தாண்டி  எதையும்  தனக்கென்று  அவர்  செய்து  கொண்டதில்லை . அவருடைய  வருமானம்  அதற்கு  இடம்  கொடுத்ததில்லை  என்பதைவிட  தேவைகளைப் பற்றி  அவர்  யோசித்ததில்லை என்பதுதான்  உண்மை.

” பொம்பளைங்க  செயின், நெக்லஸுக்கு  ஆசப்படுற மாதிரி  அப்பாவுக்கு  துண்டுமேல  ஆச  வந்துருக்கு” என்று  கல்யாணி  கிண்டலடித்தாள்.

” துண்டுமேல  ஆச  வந்தா  கடத்தெருவுக்கு  போயி  ஒரு  துண்டு  எடுத்தார வேண்டியது தான. இப்புடியா  அடுத்தவங்க  துண்ட  ஆட்டைய  போடுறது” என்றாள்  அலமேலு  வெடுக்கென்று.

இது   அத்தனையையும் அறைக்குள்ளிருந்து  உத்திராபதி  கேட்டுக்  கொண்டு தானிருந்தார். காதில்  விழுந்த  செய்தி  மனசுக்குள்  ஏறவேயில்லை.

போனவேகத்தில்  திரும்பி  வந்த  கந்தசாமியைக் கண்ட  விமலாவுக்கு  உள்ளுக்குள்  நெருடலாக  இருந்தது. விஷயத்தைக்  கேட்க  அருகில்  போனவள்,  அவருடைய  கடுகடுத்த  முகத்தைப்பார்த்து  மெல்ல  விலகினாள். மனிதர்  கோபத்திலிருக்கும்போது  வாயைக்  கொடுக்க மாட்டாள். கொடுத்தால்  குதறியெடுத்து விடுவார். சரவணனும்  அப்பாவின்  மனநிலை  அறிந்தே  அவரை  அணுகுவான்.

” என்னாம்மா  அப்பா  உர்ருன்னு  இருக்காரு. என்னா  விசயம்?”
சரவணன்  மெதுவாக  காது  கடித்தான்.

” ஸ்பிரேயரு  வாங்கியாறேன்னு  அண்ணன்  வூட்டுக்குப் போனாரு. போன  சுருக்குக்குத்  திரும்பி  வந்துட்டாரு. அங்க  என்னா  நடந்துச்சுன்னு  தெரியல.”

”   நான்  போயி  விசாரிச்சிட்டு  வரட்டுமா….?”

” பிரெண்ட  பாக்கப் போற மாரி  கெளம்பிப் போ.”

விமலா  சொன்ன  யோசனையின்படி,

” கார்த்திகேயன  பாத்துட்டு  வந்துடுறம்மா…” என்று    உரக்க  சொல்லிவிட்டு  சரவணன்  செருப்பை  மாட்ட, உத்திராபதி  தயங்கித்தயங்கி  உள்ளே  நுழைந்தார்.

” அட, உத்திராபதி  மாமா….வாங்க, வாங்க….”
சரவணன்  சத்தமாய்  வரவேற்றான். விமலா  வாசலுக்கு  ஓடி வந்தாள்.

” வாங்கண்ணே. அவரு  உள்ளாரதான்  இருக்காரு. வாங்க.”

” இ….இருக்கட்டும்  அண்ணி. அவனக் கொஞ்சம்  கூப்புடுங்களேன்.”

உத்திராபதி  மெதுவாக  கூற, உள்ளிருந்து  கந்தசாமியின்  குரல்  மட்டும்  சத்தமாக  கேட்டது.

” நான்  எங்கியும்  வர்றதாயில்ல. அவன  போவச் சொல்லு  விமலா.”

விமலா  பரிதாபமாக  விழித்தாள். சரவணன்  உத்திராபதியின்  கையை  நெகிழ்ச்சியுடன்  பிடித்து கொண்டான்.

” என்னாச்சு  மாமா….அப்பா  ஏன்  இவ்ளோ  கோவமா   இருக்காரு. அவரு  ஒங்கமேல  கோவப்பட்டதேயில்லியே.”

உத்திராபதி  நடந்ததைக் கூற, விமலாவுக்கு  ச்சே  என்றாகி விட்டது.

” இந்த  மனுசனுக்கு  வரவர  எதுக்கெடுத்தாலும்  கோவம்  வருது. இதுக்கெல்லாம்  எங்க  போயி  முட்டிக்கிறதுன்னு  தெரியல.”

” சத்தம்  போட்டு  சொல்லாதீங்க  அண்ணி. அவன்  காதுல  வுழுந்தா  ஒங்கள  உண்டு, இல்லேன்னு  ஆக்கிடுவான்” என்று  உத்திராபதி  எச்சரிக்க, தன்னை மறந்து  இரைந்து விட்டதை  எண்ணிய  விமலா  கப்சிப்பானாள்.

” நீங்க  வூட்டுக்கு  போங்க  மாமா. சாமி  இப்ப  மலையேறாது. ரெண்டு நாளாவும். ஆன  பிற்பாடு  பேசிக்கலாம்.”

சரவணன்  அவரை  சமாதானப்படுத்தி  அனுப்பி வைக்க  முனைந்தான்.

” அவன்  இதமாதிரி  வெடுக்குன்னு  கெளம்பி  வந்ததேயில்ல. அலமேலு  குடுக்குற  சுக்குடீ  குடிச்சிட்டு  சாவகாசமா  பேசிக்கிட்டிருந்துட்டு  வருவான். இன்னிக்கி  இப்புடி  பொசுக்குன்னு  வந்தது  மனசுக்கு  வேதனையா  இருக்கு.”

உத்திராபதி  சொல்லிக் கொண்டிருக்கும்போதே  கந்தசாமி  புயலென  வெளியே  வந்தார்.

” வாசத்திண்ணையில  நிக்க வச்சி  பஞ்சாயத்து  நடக்குதா….ஏன்டா, ஒனக்கு  ஒருதடவ  சொன்னாப் புரியாது. போடா…………”

தெருவைக்  கைகாட்டினார்.

” இ…இல்லடா…எம்மேல  தப்பில்ல. அலமேலுதான்  மாரிமுத்துகிட்ட  எடுத்து  குடுத்துடுச்சு. வேணும்னா  நான்  போயி…….”

” ஒரு  மண்ணும்  வேணாம். நீ  போய்ச்சேரு. போடான்னா………….”

கந்தசாமி  இரைய, உத்திராபதி  துண்டை  சரி செய்து  போட்டுக் கொண்டு  வாசலில்  இறங்கினார்.

விமலாவுக்கு  கண்கள்  சுரக்க, சரவணன்  பற்களைக் கடித்தான். கந்தசாமி  இருவரையும்  எரிப்பதுபோல்  பார்த்துவிட்டு  செருப்பை  மாட்டிக் கொண்டு  உத்திராபதி  சென்ற  திசைக்கு  எதிர்த்திசையில்  நடந்தார்.

நாட்கள்  ஓடிற்றே  தவிர  கந்தசாமி  மனசு  மாறுவதாயில்லை. முழுதாக  பத்துநாட்கள்  நகர்ந்திருந்ததில்  உத்திராபதி  பொறுக்கமாட்டாமல்  புலம்பினார்.

” ஒரு  நாளைக்கி  ரெண்டு தடவையாவது  பாத்துக்குவோம். நெலா  வெளிச்சத்துல, கோலம்  போட்ட  தரையில  அக்கடான்னு  ஒக்காந்து  ஊரு  கத, ஒலக  கதையெல்லாம்  பேசுவோம். ஒண்ணா  வயலுக்கு  போவோம், வருவோம். இந்த  பத்து  நாளா  எதுவுமில்லாம  மனசே  சூனியமா  கெடக்கு” என்றவரை  அலமேலு  பரிதாபமாக  பார்த்தாள்.

சரியாக  சாப்பிடுவதில்லை, மகளிடம் கூட  முகம்  கொடுத்து  பேசுவதில்லை. சதாசர்வ  காலமும்  எதையோ  பறிகொடுத்ததுபோல்  அமர்ந்திருக்கிறவரைப்  பார்க்க  காதலியை  பிரிந்து  வாடும்  காதலனைப் போல  தோன்றிற்று  அலமேலுவுக்கு.

” பத்துநாள்ல  ஒங்கப்பாரு  ஒரு  சுத்து  எளைச்சு  போனாப்ல  ஆயிட்டாரு. ஒனக்கு  தெரியிதாடி…?”

மகளிடம்  கேட்டாள். அவளும்  அதை  ஆமோதித்தாள்.

” மாமா  சத்தம்  போட்டதுலேருந்தே  அப்பா  சரியில்ல. அவரு  என்னிக்கி  வந்து  தானாப்  பேசுறாரோ  அன்னிக்கிதான்  இவரு  தெளிவாரு.”

” அதுக்காவ  அப்புடியே  வுட்றமுடியுமா. நான்  போயி  அண்ணங்கிட்ட  நாலு  வார்த்த  கேக்கத்தான்  போறேன்.”

அலமேலு  கிளம்ப, அதுவரை  அமைதியாயிருந்த  உத்திராபதி  பாய்ந்து  எழுந்தார்.

” வேணாம்  அலமேலு. நீ  போயி  அவன்  கோவத்த அதிகப்படுத்திடாத. இன்னும்  ரெண்டொருநாள்ல  அவனா  வந்து  பேசுவான். எனக்கு  நம்பிக்கை  இருக்கு. அதுக்குள்ளாற  நீ  ஒண்ணு  கெடக்க  ஒண்ணு  பண்ணி  காரியத்த  கெடுத்துடாத.”

” அதுசரி…”  என்ற  அலமேலு  பழிப்பு  காட்டிவிட்டு  அடுக்களைக்குள்  புகுந்து  கொண்டாள்.

” நீ  ஏம்மா  நிக்கிற…நீயும்  போம்மா…”

சொல்லிவிட்டு  துண்டால்  முகத்தை  துடைத்துக்  கொண்டவரைப்  பார்த்த  கல்யாணிக்கு  சிரிப்பு வந்தது.

கந்தசாமியிடம்  வாங்கி வந்த  துண்டை  அவரும்  கேட்கவில்லை, இவரும்  கொடுக்கவில்லை. நாளாக, ஆக  துண்டு  நிறம்  மங்கி  இழைகள்  விட்டுப்போனது. இருந்தும்  அது  இல்லாமல்  உத்திராபதி  வெளியில்  கிளம்பியதில்லை.

” துண்டு  ரொம்ப  பழசாயிருச்சு, தூக்கி  போட்டுட்டு  வேற  ஒண்ணு  வாங்கிக்குங்களேன்” என்று  அலமேலு  சொன்ன போது  அவளை  முறைத்தவர்,

” எனக்குத் தெரியும். நீ  வேலையப் பாரு” என்று  கூறிவிட்டார்.

ஒவ்வொரு  வருடமும்  தீபாவளிக்கு  ஊர்மக்கள்  கிராமத்திலிருக்கும்  ஜவுளிக்கடையில்  துணி  எடுத்துக் கொண்டு  தவணை  முறையில்  பணம்  தருவார்கள்.

வாய்க்கும், வயிற்றுக்கும்  பத்தாமல்  போராடும்  விவசாயிகளுக்கு  அதைவிட்டால்  வேறு  கதி……….காசுள்ளவர்கள்  மட்டும்  பக்கத்திலிருக்கும்  டவுனுக்கு  துணி  எடுக்கப் போவார்கள். கல்யாணிக்கும், அலமேலுவுக்கும்  துணிமணி  எடுத்து  தைக்க  கொடுத்தாகி விட்டது. உத்திராபதி  வழக்கம்போல்  நாலு  முழ  வேட்டியும், ஒரு  கைவைத்த  பனியனும்  எடுத்துக் கொண்டார். சட்டைத்துணி  எடுத்து  தைக்க  கொடுக்க  சொல்லி  அலமேலு  வற்புறுத்துவாள்.

” நல்லதா  நாலு  சட்ட  இருக்கு, அது  கிழிஞ்சதும்  பிற்பாடு  எடுத்துக்குறேன். இப்ப  என்னைய  வுட்டுடு” என்பவருக்கு  கடன்  சுமை  ஏறிப் போய்விடுமோ  என்கிற  கவலை.

கந்தசாமி  வீட்டிலும்  இதே  நிலைமைதான். மகன்  நல்லதாக  உடுத்திக்கொள்ள  தாயும், தந்தையும்  தங்களுக்கு  மலிவு  விலையில்  வாங்கிக் கொள்வார்கள்.

தீபாவளிக்கு  முதல்நாள்  முறுக்கு, சீனி  உருண்டை  செய்து  அலுமினிய  சம்படத்தில்  அடுக்கி  நிமிர்ந்த  அலமேலுவுக்கு  இடுப்பு  தனியாக  கழன்றுவிடும்  போலாகிவிட்டது.

” ஏ  கல்யாணி, வந்து  ஒத்தாசை  செய்யலாமுல்ல…மழையையே  வெறிச்சி  பாத்துகிட்டு  ஒக்காந்துருக்க…”

அடுக்களையிலிருந்து  சத்தம்  போட்டாள். அவள்  திட்டியது  கல்யாணிக்கு  உறைக்கவில்லை. அவள்  வாசலைப் பார்ப்பதும், கடிகாரத்தைப்  பார்ப்பதுமாக  இருந்தாள்.

உத்திராபதி  அவளை  கடைத்தெருவுக்கு  கூட்டிச்  செல்வதாகக்  கூறிவிட்டு  சென்றிருந்தார். இது  வருடந்தோறும்  நடப்பதுதான். தீபாவளியன்று  முதல் நாளிரவு  மகளை  கடைத்தெருவுக்குக்  கூட்டிச்  செல்பவர்  புது  ஆடைக்கு  பொருத்தமாக  தோடு, மணிமாலை , வளையல்  எல்லாம்  வாங்கித் தருவார்.

வைர  நகைகள்  வாங்குபவர்களுக்குக்  கூட  அவ்வளவு  சந்தோஷமிருக்காது. கல்யாணியின்  சந்தோஷம்  அதற்கெல்லாம்  அப்பாற்பட்டது.

மழை  நசநசத்துக்  கொண்டிருந்தது.

” கெளம்பியிரு. நான்  போன  சுருக்குக்கு  வந்துடுறேன்” என்று  கூறிவிட்டு  உத்திராபதி  அவசரமாக  எங்கோ  கிளம்பிப் போனார். அவ்வளவு  அவசரத்திலும்  துண்டை  மறக்கவில்லை. போனவர்  ஒரு  மணி  நேரத்துக்கு  மேலாகியும்  வரவேயில்லை.

” அடியேய், இங்க  வாடி. வந்து  அடுப்படிய  கூட்டு. எனக்கு  இடுப்பு  நோவுது.”

” அவுங்கவுங்க  ஏழெட்டு  பலகாரம்  செய்யிறாங்க. நீ  இந்த  முறுக்கையும், ரவா  லட்டையும்  செஞ்சிபுட்டு  பெருசா  அலட்டிக்கிற…” என்று  முணுமுணுத்துக் கொண்டே  எழப் போன  கல்யாணி  வாசலில்  சத்தம்  கேட்க  பாய்ந்து  ஓடினாள். கந்தசாமி  நின்றிருந்தார்.

” வா…..வாங்க  மாமா. யம்மா, மாமா  வந்துருக்காங்க…”

ஏமாற்றத்தை  மறைத்துக் கொண்டு  உள்நோக்கி  குரல்  கொடுத்தவள்,

” உள்ளாற  வந்து  ஒக்காருங்க  மாமா” என்றாள்  பவ்யமாக.

” இப்புடியே  ஒக்கார்றம்மா. ஒங்கப்பன்  இல்ல….?”

” எங்கியோ  அவசரமா  கெளம்பி  போச்சு. இன்னும்  காணும்.”

கந்தசாமி  திண்ணையில்  அமர, அலமேலு  பலகாரத்தட்டு, தண்ணீர்  சொம்பு  சகிதம்  வந்தாள்.

” சாப்புடுங்கண்ணே…”

” வேணாம்மா….அங்கியும்  இதே  பலகாரந்தான். உப்பு  சரியா  இருக்கா, இனிப்பு  சரியா  இருக்கா, வெந்துருக்கான்னு  பாக்க  சொல்லியே  ஒங்கக்கா  என்  வயித்த  நெறச்சிப்புட்டா. இனிமே  ஒருவா  தண்ணி  குடிச்சாலும்  வெளில  வந்துரும்” என்றவர்  கையிலிருந்த  அந்த  சிறு  பையை  அலமேலுவிடம்  நீட்டினார். அவள்  புரியாமல்  விழிக்க,

” இதுல  வெள்ளத்துண்டு  இருக்கு. டவுனுக்கு  போனப்ப  அவனுக்காவ  எடுத்தாந்தேன். இத  அவங்கிட்ட  குடுத்துரும்மா…” என்றார்  கந்தசாமி.

” எ….எதுக்குண்ணே  இதெல்லாம்….?”

” அந்தப்பய  பழந்துண்ட  போட்டுகிட்டு  திரியிறான். பழுப்பு  நெறத்துல  ஓரமெல்லாம்  கிழிஞ்சி போயி  பாக்கவே  சகிக்கல. அதான்  வாங்கியாந்தேன். இனிமே  இத  போட்டுகிட  சொல்லு” என்றவர்  துண்டை  அவளிடம்  தந்துவிட்டு  நடையை  கட்டினார்.

வெளியே  சென்றுவிட்டு  வந்த  உத்திராபதி  துண்டைப்  பார்த்ததும்  பிரகாசமானார். மறுநாள்  காலை  குளித்து  புதுவேட்டி, பழைய  சட்டை  உடுத்தி  கந்தசாமி  வாங்கித் தந்திருந்த  துண்டை  தோளில்  போட்டுக்  கண்ணாடியில்  பார்த்து  திருப்தி  பட்டுக் கொண்டு  நண்பனைப்  பார்க்கச்  சென்றார்.

அதிலிருந்து  ஒவ்வொரு  வருடமும்  தீபாவளிக்கு  முதல்நாள்  கந்தசாமி  வீட்டிலிருந்து  உத்திராபதிக்கு  துண்டு  வந்துவிடும். உத்திராபதி  அதற்காக  நண்பனிடம்  சண்டை  போட்டதில்லை, மறுத்துப்  பேசியதில்லை.

” அவரு  எப்ப  குடுப்பாருன்னுதான்  நிக்கிறீங்க…” என்று  அலமேலுகூட  ஒருமுறை  கேலி  செய்தாள்.                            

தீபாவளி  நெருங்கிவிட்டது. கந்தசாமியும், உத்திராபதியும்  பேசிக் கொண்டு  மூன்று  மாதங்களாகி விட்டன. உத்திராபதி  தவித்துப்  போனார். ஆரம்பத்தில்  வீம்புடன்  இருந்த  கந்தசாமிக்கும்  நாள்  செல்ல, செல்ல  கோபம் கரையத்  தொடங்கியது. அவர்  மனதில்  உத்திராபதிக்கான  இடம்  வெறுமையாக  இருப்ப துபோன்ற  உணர்வில்  நிலை கொள்ளாமல்  தவிக்க  ஆரம்பித்தார்.

“ஒங்கப்பாருக்கு  வீம்பு  சாஸ்திடா.அண்ணன்  பாவம், நல்ல  மனுசன். அவருகிட்டயே  சண்ட  போட்டுட்டு  வந்துட்டாரே. அதுவும்  உப்பு  பெறாத  காரணத்துக்காவ.”

விமலா  பொறுக்க முடியாமல்  பொருமினாள்.

” அப்பா  வெளியில  வீராப்பா  இருக்கமாரி  தெரிஞ்சாலும்  உள்ளுக்குள்ள  தவிக்கிறாரு. மொகத்தப்பாத்தாலே  தெரியிது” என்றான்  சரவணன்.

” அப்ப  எறங்கிப்போயி  பேச வேண்டியது தான. தப்பெல்லாம்  இவரு  மேல. நியாயமா  இவருதான்  அண்ணங்கிட்ட  மன்னிப்பு  கேக்கணும்.”

” யானைப்  படுத்தாலும்  ஆளு  மட்டம்னு  ஒனக்கு  தெரியாதாம்மா” என்று  கேட்டு சிரித்தான்  சரவணன்.

அவனும், விமலாவும்  வழக்கம் போல  உத்திராபதி  குடும்பத்துடன்  பழகுவதை நிறுத்திக்  கொள்ளவில்லை . இங்கிருந்து  அசைவ  சாப்பாடு  அங்கு  போவதும், அங்கிருந்து  பண்டம், பலகாரமெல்லாம்  இங்கு  வருவதும்  தொடர்ந்து  கொண்டேதானிருந்தது.

கந்தசாமிக்கு  உறக்கம்  வரவில்லை. நண்பனுடன்  பேசாதிருந்ததில்  நரக வேதனையாயிருந்தது. அதற்கு  ஒரு  முடிவு  கட்ட வேண்டுமென்றுதான்  அவரும்  நினைக்கிறார். ஆனால்  பாழாய்ப்போன  வறட்டு  கௌரவம்  பாடாய்படுத்திற்று.

அன்று  கோபமாய்  வந்தது  தவறென்று  மனசுக்கு  பட்டாலும்  ஏதோ  ஒன்று  உள்ளுக்குள்  புகைச்சலை  உண்டாக்கிக் கொண்டே  இருந்தது. உடனடியாக  பயிர்களுக்கு  பூச்சி  மருந்து  தெளிக்க  வேண்டிய  கட்டாயம்.

அதற்கான  எல்லா  ஏற்பாடுகளும்  செய்துவிட்டு  உத்திராபதியிடம்  ஸ்பிரேயர்  வாங்கிக் கொள்ளலாம்  என்றிருந்தார்  கந்தசாமி. உத்திராபதியும்  தருவதாகக் கூறிவிட்டு  கடைசியில்  கைவிரிக்க  மனிதருக்கு  கோபம்  வந்துவிட்டது. நெருங்கிய  நண்பன்  நம்பிக்கை  துரோகம்  செய்துவிட்டது  போன்ற  உணர்வு  உள்ளுக்குள்  எழ  வெடித்துவிட்டார்.

கந்தசாமி   நடந்ததை  எண்ணி  பெருமூச்செறிந்தார்.  மறக்க  நினைத்தும்  முடியாமல்  சிறுவயது  சம்பவங்களெல்லாம்  மனசுக்குள்  படம் பிடித்தாற்போல  காட்சிகளாய்  விரிந்தன.

ஒன்றாய்  சேர்ந்து  ஊரை  சுற்றியது, வாடகை  சைக்கிள்  எடுத்து  ஆளுக்கொரு  அரைமணி  நேரம்  பிரித்து  ஒட்டப்பழகியது, டென்ட்  கொட்டகையில்  மணல்  குவித்து  அமர்ந்து  சினிமா பார்த்தது  எல்லாம்  பசுமையான  நினைவுகளாய்  மனதில்  படிந்து  போயிருந்தன.

” இவன்  சரியான  முசுடு. ஆ, ஊன்னா  கோவம்  வந்துரும். இந்தப்பயல  எப்புடி  சிநேகிதம்  பண்ணிகிட்ட…?” என்று  கந்தசாமியின்  அப்பா  அடிக்கடி  உத்திராபதியிடம்  கேட்பார். உத்திராபதிக்கு   பதில்  சொல்லத் தெரியாது.

ஒருவரின்  குணநலன்களைப் பார்த்தா  நட்பை  ஏற்படுத்திக் கொள்ள முடியும். ஒண்ணாங்கிளாஸில்  அருகருகே  அமர்ந்து  பயத்தோடு  வாத்தியாரைப்  பார்த்துக்  கொண்டிருந்த  வேளையில்  எதேச்சையாக  அறிமுகம்  ஏற்பட்டது.

” இந்த   வாத்தியாரு  ரொம்ப  அடிப்பாராம்டா. எங்க  பெரியம்மா  மவன்  சொன்னான். அவன்  இங்க  நாலாங்கிளாஸ்  படிக்கிறான்” என்று  உத்திராபதி  சொன்ன போது,

” அவரு  அடிக்கிற  வரைக்கும்  நாம  முதுவ  காட்டிக்கிட்டு  இருக்கணுமாக்கும்” என்றார்  கந்தசாமி  கோபமாக. உத்திராபதி  ஆச்சர்யமாக  அவரைப் பார்த்தார்.

அதுதான்  அவர்  பார்த்து  முதன்முதலாய்  கந்தசாமி  கோபப்பட்டது. அதன் பிறகு  அந்த  நாற்பது  வருடங்களில்   எத்தனையோ  முறை  பார்த்துவிட்டார். ஆனால்,  அவரிடம்  மட்டும்  கந்தசாமி  கோபித்துக் கொண்டதேயில்லை. அவரும்   படுத்தபடியே  பலமாக  யோசித்துப்  பார்த்தார். ஒரு  சம்பவமும்  நினைவுக்கு  வரவில்லை.

‘ எப்படி  இத்தனை  வருடங்கள்  அவனிடம்  கோபித்து  கொள்ளாமலிருந்தேன். ‘

அவர்  தனக்குள்  கேட்டுக் கொண்ட  வினாடி  சட்டென  அது  பிடிபட்டு  போனது.

உத்திராபதி  ஒருமுறை  கூட  அவர்  கோபித்துக்கொள்ள  இடம்  தந்ததேயில்லை. அதுமாதிரியான  சந்தர்ப்பத்தை  அவர்  ஏற்படுத்தியதேயில்லை.

” அவனுக்குதான்  கோவம்  வரும்னு  தெரியிமேம்மா” என்று  அடிக்கடி  அவர்  விமலாவிடம்  சொன்னதை  கந்தசாமியே  கேட்டிருக்கிறார்.

நண்பனின்  குணம்  அறிந்தே  அவரை  அன்புடன்  ஏற்றுக்கொண்டு  நட்பில்  துளி  விரிசலும்  உண்டாகாமல்  அத்தனை   வருடங்களாக சுக, துக்கத்தில்  பங்கு கொண்ட  உத்திராபதி  என்ற  அந்த  மிகச்சாதாரண  மனிதனின்  உயர்வான  குணத்தை  எண்ணிய  கந்தசாமியின்  கண்கள்  குளமாயின.

அதுவரை  உள்ளுக்குள்  இறுகிக் கிடந்த  மனசு  நெகிழ்ந்து  போனது. மூன்று  மாதங்களாக  இருவருமே  ஒரு  நிதானத்திலில்லை. எதையோ  தொலைத்தது  போலவே  இருந்தனர். அதற்கு  முதற்காரணம்  தான் தான்  என்பது  கந்தசாமிக்கு  வெட்ட  வெளிச்சமாகிவிட்டது.

” ஒனக்கு  ரொம்ப  கோவம்  வருதுடா. அதக் கொறைக்கணும்  நீ. இல்லீன்னா  ஒன்  ஒடம்பு  கெட்டுப்போயிரும். அத  நெனச்சாதான்  எனக்கு  கவலையா  இருக்கு ” என்று  உத்திராபதி  ஒருநாள்  சொன்னார். அது  ஞாபகத்துக்கு  வர, கந்தசாமி  சட்டென  எழுந்து  சட்டையை  மாட்டிக்கொண்டார்.

அடுக்களையிலிருந்து  எண்ணெய்  புகையும்  வாசம்  வந்தது. விமலா  சிறு, சிறு  தட்டுகளை  திருப்பி  வைத்து  முறுக்கு  பிழிந்து  எண்ணெயில்  போட்டுக்கொண்டிருந்தாள்.

” வெளில  போயிட்டு  வந்துடுறேன்” என்ற  கந்தசாமி  அவள்  பதிலை  எதிர்பாராமல்  வெளியே  வந்தார்.

அங்கொன்றும், இங்கொன்றுமாய்  வெடிகள்  வெடித்தன. சிறுவர்கள்  கையில்  பிளாஸ்டிக்  துப்பாக்கிகளோடு  திரிந்தனர்.

உத்திராபதிக்கு  லேசாக  காய்ச்சலடித்ததில்  படுத்தே  கிடந்தார். எப்போதுமே  தீபாவளி  அவ்வளவு  பெரிய  விசேஷநாளாக  அவருக்கு  தோன்றியதில்லை. சிறுவயதில்  புது  உடுப்பு, பலகாரத்துக்காக  ஆசைப்பட்ட  காலத்தில்  தீபாவளி  எப்போது  வருமென்றிருக்கும். வயது  கூட, கூட  சுமை  அதிகமாகிப் போனதில்  அதுவும்  ஒருநாள்  என்ற  எண்ணமே  மிஞ்சி  நின்றது.

கல்யாணியை  கடைத்தெருவுக்கு  கூட்டிப் போக  வேண்டுமென்ற  எண்ணத்தில்  மெல்ல  அறையை விட்டு  வெளியே  வந்த  உத்திராபதி  நாற்காலியில்  இருந்த  அந்தப்பையை  பார்த்தார்.

ஆர்வம்  மேலிட  மெல்ல  பையை  எடுத்து  பிரித்தார். உள்ளே  கருஞ்சிவப்பு  கரையிட்ட  வெள்ளைத்துண்டு. பார்த்த  மாத்திரத்தில்  உத்திராபதிக்கு  கண்ணீர்  பெருகிற்று.

அவர்  துண்டை  மார்போடு  அணைத்து  கொள்ள, மறைந்து  நின்று  பார்த்துக்கொண்டிருந்த  அம்மாவும், மகளும்  கண்களை  துடைத்துக்கொண்டனர்.

முற்றும்

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button