நூல் விமர்சனம்
Trending

’நீ கூடிடு கூடலே’ நூல் குறித்த வாசிப்பு அனுபவம் – அபிநயா ஸ்ரீகாந்த்

அபிநயா ஸ்ரீகாந்த்

ஆதலால் அன்பு செய்வோம்!

மின்னம்பலத்தில் தினந்தோறும் இணையக் கட்டுரைத்தொடர்களாக வெளிவந்து இருந்தாலும் அமேசான் கிண்டில் வழி மொத்தமாக வாசிக்கும்போது, காதல் நிரம்பிய வாழ்வை கைப்பற்றி அழைத்து வருவதற்கான தோழியுடனான உரையாடலாகவே தோன்றும். பல வருடங்களாகக் கற்றுத்தரப்பட்ட கற்பிதங்களைச் சற்றே தளர்த்தி தற்காலச் சூழலுக்கான உளவியல், எந்திர மயமான வாழ்வு, செயல்பாடுகளை மையமாக வைத்து நாம் பின்பற்றி பரிசோதனைக்கு உட்படுத்தக்கூடிய சில நடைமுறைகளை இக்கட்டுரைகள் விவரிக்கின்றன.

இதில் பகிரப்படும் ஆலோசனைகள், அறிவுரைகள் இளைஞர்களுக்கோ, திருமணபந்தம் இல்லாமல் இணைந்து வாழ்பவர்களுக்கோ மட்டுமேயானது என்று வரையறுத்துவிட முடியாது. அன்புக்குரியவர்களை எப்போதும் நம்முடனேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்று பிரியப்படும் அனைத்து மக்களுக்குமானது. அணுக்கமாக சொல்லப்பட்டிருக்கும் காதல் ததும்ப வைக்கக்கூடிய சில ரகசிய சமிஞ்கைகளை, பின்பற்றித்தான் பார்ப்போமே என்ற குறுகுறுப்பு ஏற்படுகின்றது. சலிப்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோமே, காதல் வடிந்து விட்டதோ  என்று புலம்பித் தவிப்பவர்களுக்கு இந்த வாசிப்பு அனுபவம் ஒரு புனர்வாழ் கூடத்திற்குள் சென்று திரும்பிய புத்துணர்ச்சியைக் கொடுக்கக்கூடியது.

நமக்காகப் பிறந்தவர்கள் என்று இவ்வுலகத்தில் எவரும் இல்லை. காதலினால் நாம் அவர்களுக்கானவர்களாக நம்மை எப்படி புதுப்பித்துக் கொள்கின்றோம், மேம்படுத்திக்கொள்கின்றோம் என்பதில் தான் இவன் எனக்கானவன், இவள் எனக்கானவள் என்ற கர்வமும் பெருமையும் மேலோங்குகின்றது. நம் அன்பால் அவர்கள் நமக்குப் பிடித்தவர்களாக எப்படி மாற்றம் கொள்கிறார்கள் என்பதில் தான் காதலும் அன்பும் அதன் பூரணத்துவத்தை அடைகின்றது. தியாகம், மாற்றங்கள் ஆகியவை அதீத அன்பால் ஆத்மார்த்தமாக விளைபவை. கட்டுப்பாடுகளால் செய்யப்படும் தியாகங்களுக்கும், முணுமுணுப்புடன் நாம்

மேற்கொள்ளும் மாற்றங்களுக்கும் ஆயுள் மிகக்குறைவு. பெரும்பாலான காதல், திருமணத்தை அடையும் பொழுது இலக்கை அடைந்துவிட்ட வீரனைப் போல சோர்ந்து விடுகின்றது. ஆனால், வாழ்க்கைப்பயணம் அங்கிருந்துதான் தொடங்கப்படுகின்றது என்று பலரும் உணர மறந்துவிடுவதுண்டு.

பல்வேறு கடமைகளும், வாழ்வின் ஓட்டங்களும் சலிப்பை ஏற்படுத்தக்கூடியவை. காதலை சிதைக்கக் கூடியவை. சமூக வலைதளங்கள் வழி நம் எண்ணங்களுக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப, நம்மை விரும்பி உற்சாகப்படுத்தும் நண்பர்கள் கிடைக்கும் சாத்தியம் பெருகி இருக்கின்றது. வாழ்க்கை முழுவதும் நமக்கான ஒருவரிடம் மட்டும் தான் அன்பும், காதலும், காமமும் கிடைக்கும் என்ற சூழலும் கோட்பாடுகளும் இணைய உலகில் மாற்றம் பெற்றுள்ளன. ஒருவருடனான ஊடலையும் கூடலையும் கையாள்வதற்கே பலரும் சிரமப்படும் வேலையில்தான் மற்றொரு காதல் ஏற்படுகின்றது. இந்தக் குழப்பங்களின் ஆரம்பம், சிக்கல்களைக் கையாளும் விதம் என்று பல சூட்சமங்கள் இந்தக் கட்டுரைகளில் பொதிந்து கிடக்கின்றன. குறிப்பிடப்பட்டுள்ள பல உண்மைகளும், உளவியல்களையும் சிலர் நம்பத் தயங்கலாம். நாமே அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் கதாப்பாத்திரமாகவும் இருக்கும் அதிர்ச்சியான உண்மைகள் மனஅழுத்தத்தை ஏற்படுத்தலாம். ஆனால், இறுதியில் அது சுயபரிசோதனையாக, சுகபகுப்பாய்வாக மாறும் பட்சத்தில் மூடுபனி விலகி நமக்கான அழகான வாழ்க்கைப்பாதை கண்களுக்கு புலப்படும்.

நம் அன்புக்குரியவர்கள் நமக்கு மட்டுமே சொந்தம் என்ற உடைமையுணர்வு அதிகரிக்கும் பொழுது அன்பு அவசரமாக வெளியேறிச் சென்று விடுவதைப் பலரும் கண்டு கொள்வதில்லை. காதலால் நாம் செய்யும் செயல்களுக்கும், கடமை என்று நாம் செய்யும் செயல்களுக்கும் எளிதில் வேறுபாட்டைக் கண்டு கொள்ளலாம். போலியான உணர்வுகளோ , மேலோட்டமான புரிதல்களோ இல்லாது பிரச்சினைகளின் ஆதி முதல் அந்தம் வரை அலசிச் செல்லும் எளிமையான சிறு பகடி நிறைந்த மொழிநடை கட்டுரைகளை மட்டுமல்லாமல் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சிக்கல்களையும் நம்முடன் இணக்கமாக்குகின்றது. பண்பாடு, கலாச்சாரம் என்ற வெளிப்பூச்சுக்களைத் தாண்டி துணிச்சலுடன் விவாதிக்கப்பட்டு இருக்கும் சிக்கல்கள் பலருக்கும் நம்பிக்கையையும் புரிதலையும் ஏற்படுத்தும்.

ஆண்டாள் பாசுரத்தின் சொற்றொடரான ‘ நீ கூடிடு கூடலே ‘ கோதையின் கதையாக மட்டுமல்லாமல் , அவர்கள் காதல் வசப்பட்டிருக்கும் கோமகன்கள் எதிர் கொள்ளும் சிக்கல்களையும் பேசுகின்றது.

பெற்றோர், நண்பர்கள் , காதலன், காதலி, சமுதாயம் என்று அத்தனை மனிதர்களின் எண்ண ஓட்டங்களும், உளவியல்களும் சில நேரங்களில் சுயநலமிக்கதாகத் தோன்றி அச்சத்தை ஏற்படுத்தினாலும் உண்மை அதுவாகவே இருக்கின்றது. சலித்துப்போகும் காமத்தைக் காதல் கொண்டு மட்டுமே மீட்க முடியும் என்பது தான் நிதர்சனமும் கூட. எத்தனை காதல்களைக் கடந்து வந்தாலும்  மூப்பெய்தி, துயரங்கள் தாண்டி சோர்வாகிச் சரியும் நேரங்களில் நம்முடன் இணைத்து கொள்ளக் காத்திருக்கும் அந்தக்  கைகளின் இளஞ்சூட்டைப் பற்றிக் கொள்ளவே மனம் பிரியப்படும். ஆதலால் காதல் செய்வோம்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button