சிறுகதைகள்
Trending

உப்பைத் தின்னு- தண்ணீர் குடி !

எம்.கே.மணி

சிம்ரன் தொங்கினாள்.

நாலு கோணத்தில் சுற்றி வந்து எடுத்து விட்டேன் என்றாலும், ஒரு பதற்றத்தில் நான் சிம்ரனை தன்னையறியாமல் சுற்றி வருகிறேன் என்பது  பட்டது இப்போது தான். நோக்கமில்லாத மும்முரத்துக்கிடையில் எனது தோளால் அவளது கால்களை இடித்து விட, அவள் ஊஞ்சலாடினாள். நான் மலைத்து நின்றேன். அத்தனைப் பேரும் கீழே விழுகிற ஒரு கண்ணாடிப் பாத்திரம் நொறுங்குவதைப் பார்ப்பது போல வெறித்துக் கொண்டு நின்றார்கள். நான் ஏதோ ஒரு நாவலின் வரிகளால் அவளது கண்கள் இமைக்கிறதா என்று பார்த்துக் கொண்டேன். தொழிலில் இதெல்லாம் சகஜமென்று புழங்க வேண்டிய கட்டாயமுண்டு. நான் கேமிராவில் ஒளிந்து போக்கசை திருக அவளது உதடுகள். இப்போது கூட சுவைக்க முடியும் போல. நான் என்னை கட்டாயம் செய்து மாற்றி நிறுத்தியவாறு நம்ம போலீஸ் மேஸ்திரி குறிப்பிட்ட கோணங்களை கவர் செய்தேன். அட்வான்ஸ் என்றில்லை. புகைப்படங்களை நெருக்கிப் பிடித்துக் கேட்பார்கள். பணத்துக்கு ஏறாத மலையெல்லாம் ஏறியிறங்க வேண்டும். நான் பார்க்காத சடலங்கள் இல்லை தான். ஆனால் இந்தப் பெண் ஆட்டம் முடிஞ்சுதா, எறக்கி விடுங்க என்று சொல்லும் போலிருக்கிறது. அட லூசு, இந்த வயதில் சாகிற அளவிற்கு உனக்கென்ன கஷ்டம்?

பிணத்தை இறக்கி வைத்து அதை அழகு பார்க்கிற டிப்பார்ட்மென்ட் தனது வேலையில் மும்முரமாய் இருந்த போது நான் கொல்லைப்பக்கம் ஒதுங்கினேன். அங்கு தான் அசிஸ்டென்ட் ஸ்டுடியோ ப்ராப்பர்டிகளுடன் நின்றிருந்தான். அவனிடம் கேமிரா பிளாஷை ஒப்படைத்துவிட்டு என்னைக் கூட்டிக் கொண்டு வந்த கதிரேசன் சாரிடம் வரட்டுமா என்று கண்களால் கேட்டேன். அவர் இரு என்பது போல செய்தார். அவரை சார் என்று சொல்லும் போதெல்லாம் அண்ணன்னு சொல்லு தம்பி என்று வாயார சொல்லுவது வழக்கம். சந்தர்ப்பம் அமைந்தால் நூறு தம்பிகளின் கோவணங்களை உருவியவர். நல்ல பாம்பு. என்னிடம் ஒரு சிகரெட்டை அபகரிக்க என்ன கேவலமான இளிப்பு. இருவரும் ஒதுங்கி நின்று கொண்டிருந்தோம்.

“ சாவறப்ப மனசுல என்ன இருந்திச்சோ? “ என்றேன்.

“ படுபாவி, நல்லா இருக்க மாட்டேடா ன்னு நெனைச்சிருப்பா, எப்படியாவது இவன் போலீஸ்ல மாட்டணும்னு கடவுளை வேண்டியிருப்பா. “

அவர் இலேசாக கண்கள் காட்டிய இடத்தில் அவளது புருஷன் இருந்தான்.

“ பொடவை சுருக்க எடுத்தியே, கவனிக்கலையா? “

நான் வெறுமனே நிற்பதாக தோன்றியது.

அல்லது ஒருமுறை சில்லிட்டதா?

“ கிருஷ்ணகுமார், கொஞ்சம் வாப்பா “

கதிரேசன் கூப்பிட்டதும் தனது அலுவலக நண்பர்களுக்கு நடுவேயிருந்து அவன் வந்தான். நாசூக்காய் கண்களைத் துடைத்துக் கொண்டு எங்களைப் பார்த்தான். எனது வேலையை பற்றி சொல்லி, பணத்தை கேட்டார். அதில் பாதியை எடுத்துக் கொண்டு என்னிடம் மீதியைக் கொடுத்து விட்டு அவசர வேலை இருப்பது போலவே பாவனை பண்ணி கதிரேசன் உள்ளே செல்ல, நான் அவனுக்கு ஒரு சிகரெட்டைக் கொடுத்தேன். வாயில் வைப்பதற்குள் பற்ற வைத்தேன். அவனை கவனிக்க யத்தனித்தேன். எல்லோருக்கும் பணிந்து கொடுத்து விட்டால் தப்பிக்க சந்தர்ப்பம் இருக்கிறது என்று உள்ளில் கணக்கு போட்டிருக்கிறான். நான் அவனைத் தட்டிக் கொடுத்தேன். வழக்கம் போல நம்மிடம் என்ன இருக்கிறது என்பது போல ஒரு வாழைப்பழ மூஞ்சியைக் காட்ட ஒரு சிரமமும் இல்லாமலிருந்தது. அந்த இடைவெளியில், கிருஷ்ண குமார் தனது நியாயங்களை சொல்ல முயன்றான். சின்ன வாக்குவாதம் தானாம். சாப்பிட்டு விட்டு அலுவலகம் கிளம்பி சென்று திரும்புவதற்குள் இப்படி ஒரு அசம்பாவிதம். ஊரில் இருந்து வந்திருந்த கசின் பிரதர் ஜாக்கிங் என்று பூங்காவிற்கு போய் தொலைந்திருக்கிறான். ஆளில்லாத வீட்டில் அவளது விதி வேலை செய்திருக்கிறது.

சரிடா. சரிடா. இந்த சம்பிரதாயமெல்லாம் முடியட்டும். இரண்டு நாள் எதுவுமே நடக்காது. தப்பித்து விட்டேன் என்று கூட நெடுமூச்சு விட்டிருப்பாய். நல்ல தூக்கத்தில் கதவு தட்டுவார்கள். எச்சில் பைசாவிற்கெல்லாம் மண்டி போடுபவர்களாக இருந்தாலும் அவர்களுடைய திறமையை உன்னால் கற்பனை செய்ய முடியாது.

“ ஓகே, நான் கெளம்பறேன் சார். யானைக்கு தும்பிக்கை. மனுஷனுக்கு நம்பிக்கை. லைப பேஸ் பண்ணுங்க. சியர்ஸ். “

என்ன நடந்திருக்கலாம்?

எட்டு மணியளவில் பாருக்கு வருவதற்கு முன் கதிரேசன் கிருஷ்ணகுமாரை அரெஸ்ட் பண்ணி விட்டோம் என்று வாட்சப் பண்ணியிருந்தார். அந்த அளவிற்கு அவன் பலவீனமான கொலைகாரன். தற்கொலை என்று சடலம் அறுப்புக்கு போவதற்கு முன்னாலேயே மாட்டிக் கொண்டு விட்டிருக்கிறானே. அடப்போங்கடா. நீங்களும் உங்க கொலைகளும். சேது வரும் வரை குடித்து, வந்த பிறகும் குடித்து கொஞ்சம் ஓவர் தான். இரண்டு பேருமே டூ வீலரை எடுக்கவில்லை. டாக்சி புக் செய்தான், சேது வீட்டிலேயே விட்டு விட்டுக் கூட போனான். அன்று கனவில் பாஞ்சாலி நாடகம் மாதிரி சிம்ரன் ஹிந்தியில் ஏதோ சொல்லிக் கொண்டு தனது புடவையை அவிழ்த்து விட்டவாறே இருந்தாள். மறுபக்கம் யாராவது இழுத்துக் கொண்டிருந்தார்களா என்று எட்டி எட்டிப் பார்த்ததில் காலையில் கழுத்து வலி புதிராயிருந்தது.

அந்த என்ன நடந்திருக்கலாம் என்பது விட்டுப் போகவில்லை.

மதியம் கிருஷ்ண குமார் சாப்பிட வந்திருக்கிறான். அவனும் அவனோடு வந்த உமேஷும், கசின் பிரதர் விச்சுவும் சாப்பிட உட்கார்ந்து, சிம்ரன் தான் பரிமாறுகிறாள். விச்சு அவ்வப்போது ஜோக்கடிக்கிறான். கிருஷ்ண குமாரும் ஜோக்கடிப்பதில் சளைத்தவனில்லை. பெண்கள் சிரிப்பதற்கு பலதும் செய்ய முடியும் அவனால். அங்கே குடும்ப சங்கீதம் பொங்கி சிம்ரன் சந்தோஷத்தில் நனையவே செய்தாள். ஒருவாரம், பத்து நாட்களாக அவளுடன் படுக்காத குற்றவுணர்ச்சி மறைந்து கிருஷ்ண குமார் காபிடன்சுடன் தான் புறப்பட்டான். தொழிலைப் பற்றி பேச்சு வந்ததில், அலுவலக கோப்பை வீட்டில் வைத்து விட்டது நினைவில் வந்தது. உமேஷ் காரைத் திருப்பினான். இருவருமே வீட்டுக்குள் புகுந்தார்கள். கிருஷ்ண குமார் பதட்டத்துடன் சிமரனை அழைத்தான். அவள் படுக்கையறைக் கதவை திறந்து கொண்டு வந்து என்னவென்று கேட்டாள். கோப்புக்களை எடுத்துக் கொடுத்தாள். இருவரும் திரும்புகிறார்கள். எப்போதுமே டிவி பார்த்துக் கொண்டு ஹாலில் படுத்திருக்கிற விச்சு எங்கே? ஒத்தா, விச்சு எங்கடி? அவன் கேட்கவேயில்லை. அவளாக சொல்லுகிறாள். தவளை தனது வாயால் சிக்குகிறது. விச்சு சிகரெட் புடிக்க போயிருக்கான்னு நெனைக்கிறேன். கதவை லாக் கூட செய்யவில்லை பாருங்கள். கொஞ்சமும் பொறுப்பில்லாத பையன். கார் கிளம்பியது.

உமேஷிடம் அவனால் எதுவும் பேச முடியவில்லை.

சந்தர்ப்பம் வர காத்திருந்து, அவளது கழுத்தை நெருக்கிக் கொன்று மாட்டுகிற வரையில் அவளது கட்டிலுக்கு அடியில் தான் விச்சு படுத்திருந்தான் என்பதை அவனது மனசு இடைவெளியே இல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது. அந்த வரி சட்டென்று நின்று அவன் திடுக்கிட்டிருக்கலாம். அவள் அப்போது தொங்கிக் கொண்டிருந்ததே கூட ஒரு திடுக்கிடலாக இருந்திருக்கலாம். அல்லது ஒரு பரவசம், விடுதலையுணர்ச்சி? சொல்ல முடியாது. ஒரு குத்தாட்டம் கூட போட்டிருக்கலாம். நான் இப்போது கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன். கிருஷ்ணகுமாரின் வீட்டில் இப்படியெல்லாம் நடந்ததா என்று தெரியாது. நானும் சேதுவும் தையல் மிசின் வாங்கக் கிளம்பி ஆதார் கார்டு எடுக்கத் திரும்பியபோது அவளது கசினைக் காணோம். அவள், எனது தர்ம பத்தினி  படுக்கையறையிலிருந்து வெளியேறி பீரோ இருக்கிற அறைக்கு ஓடிய போது நான் படுக்கிற அறைக்குள் நுழையவே செய்தேன். எனது வீடு, எனது மனைவி, எனது கட்டில்டா லவடா. ஆனா சட்டென உட்கார்ந்து கவனிக்க, குனிந்து பார்க்க ஒரு மயிரு தைரியம் அப்போது வரவில்லை.

பாருக்குக் கிளம்பும் போது கசின் வருகிறான்.

விருகம்பாக்கத்தில் தண்ணீர் கஷ்டமாம். அறையில் இருக்கிற ஒவ்வொருவரும் வெளியே எங்காவது சென்று தான் குளித்து விட்டு வருகிறார்கள் என்று சொல்கிறான். டவலை எடுத்து தோளின் மீது போட்டுக் கொள்கிறான். நான் இப்போதே வெளியேறுவதாயின் இருவருமாக சேர்ந்து குளிப்பார்களாக்கும். ஜலக்கிரீடை. நான் அடுத்த கட்டத்தை முடிவு செய்து கொண்டு வெளியேறுகிறேன். ஆனால் பாரில் உட்கார்ந்தவன் எழுந்து கொள்ளவில்லை. விதவிதமாக கற்பனை செய்து அவளை நாலாவிதங்களில் கொலை செய்து குருதியை பூசிக் கொள்ளுந்தோறும் அடுத்த பெக்கை போடுவதற்கு ஆன்மபலம் கிட்டியது.  நீ தானா என்னை விழுந்து, விழுந்து காதலித்தவள்? துரத்தினவள்? ஒற்றைக் காலில் நின்று திருமணம் புரிந்து கொண்டவள்? ஒருதடவை எனக்கொரு காய்ச்சல் வந்தது. மருந்துகளின் கிறக்கத்தில் அப்போது என்னருகே பத்து தாயம்மாக்கள் உட்கார்ந்து பணிவிடை செய்தது பார்த்தேன். அந்த வருடம் தனது  ஊருக்கு சென்று மண்சோறு சாப்பிட்டிருக்கிறாள். நான் எனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களில் பிற பெண்களைத் தொடும்போது இவளால் வந்த குற்றவுணர்ச்சிகளுக்கு அளவுண்டா? ஒரு சோகப் பாட்டு எழுந்தாலும் அதை கண்ட்ரோல் செய்து ப்ராக்டிக்கலுக்கு வாடா மயிரே என்று சொல்லிக் கொண்டேன். முதலில் போலீசை எதிர்கொள்கிற தந்திரம் கைவசமாக வேண்டும். கிருஷ்ணகுமார் மாதிரி புடிச்சுக்கோ டைப் அசடு அல்ல நான். என்னவவாவது பேச வேண்டும் என்று உந்தியதில் கதிரேசனுக்கு போனைப் போட்டேன்.

“ அந்த வீட்ல விச்சுன்னு ஒர்த்தன் இருந்தான் இல்ல? சிம்ரனுக்கும் அவனுக்கும் கள்ளத்தொடர்பு. அதானே? “

“ அடேங்கப்பா ! எப்படித் தம்பி இதெல்லாம்? “

“ லட்சணம் தெரியும் அண்ணே. புருஷன் பாத்துட்டான். போட்டுட்டான். கரக்டா? “

“ இல்ல, கோவத்துல அவளப் போட்டது அவளோட வேற ஒரு கள்ளப் புருஷன். உமேஷ்னு ஒர்த்தன் இருந்தான், ல்ல? ஜட்டியோட உக்கார வெச்சாச்சு.. என்னா ஒரு லவ் ஸ்டோரி தெரியுமா? நாளைக்கு எல்லாத்துக்கும் நியுஸ் குடுத்துருவோம் “

இந்த முறை கண்டிப்பாக சில்லிட்டது.

க்ளிக், க்ளிக், க்ளிக் என்றவாறு இருந்தது மனம்.

சேது வந்தான்.

கவனித்தேன், எனக்கு ஊற்றிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறானே தவிர அவன் கண்ணியமாய் கட்டுப்பாட்டுடன் குடித்துக் கொண்டிருந்தான்.

“ மச்சான். வர்ற வழில உன் கசின பாத்தேன் “

“ என் பொண்டாட்டியோட கசின் “

“ கரெக்ட். உங்க வீட்டுல இருந்து தான் வர்றதா சொன்னான். குளிச்சிட்டுப் போறானாம். நானே அவன் கிட்ட சொன்னேன். டேய்,  இருக்கற ரூம்ல அட்ஜஸ்ட் பண்ணு. தண்ணி வந்தா குளி. தண்ணி வரலையா குளிக்காத. நீ பெரிய குளிகாரனா இருந்தா ஆகாயம் பொரண்டு படுத்துருமா? இப்படி நீ உன் இஷ்டத்துக்கு வந்துகிட்டு போயிகிட்டு இருக்கறது என் மச்சானுக்கு புடிக்கலேன்னு அடிச்சி சொல்லிட்டேன் மச்சான். “

“ நண்பேண்டா ! “

“ அப்டி சொல்லு. மொதல்ல இதப் போடுறா ! “

“ குடு, குடு, மொத்தத்தையும் போட்டு பிளாட் ஆவறேன் ! “

கொஞ்ச நேரத்தில் மண்டையை போட்டேன். நடிப்பு தான். இல்லையென்றால் ஏழேழு எழ்பது பெக்கை குடிக்க வைத்து ரத்த வாந்தி எடுக்க வைப்பான் என்பது தெரிந்து விட்டது. வண்டிகளை விட்டு விடுவோம், டாக்சி புக் பண்ணலாம் என்றான்.

ம்மென்றேன்.

டாக்சியில் தூங்காமல் தூங்கினேன். அவன் அவ்வப்போது அதை உறுதி படுத்திக் கொண்டே வந்தான். வீடு நெருங்கியதும் எனது தலையை முழுதுமாகக் கலைத்து விட்டு தனது தலையை வாரிக் கொண்டான். அடடா, இவ்வளவு நுட்பமான வாழ்வியல் இருக்கிறதா இதற்குள்? ஓரிரு முறை குறட்டை விட்டுக் காட்டி அவனை சந்தோஷப்படுத்தி எனக்குள் மும்முரப்பட்டுக் கொண்டு விட்டேன். நான் செய்யப் போவதை ஒரு முறை ஓட்டிப் பார்த்துக் கொண்டபோது உள்ளில் ஒரு நடுக்கம் ஓடிப் பரவிற்று.

என்னை அவன் இறக்கி விட்டு விட்டுப் போனான்.

இவள் என்னைப் படுக்க வைத்தாள்.

டாக்சி புறப்பட்டு செல்லும் சப்தம் கேட்டது.

இவள் இன்னும் என்னை தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அநேகமாக ஒரு பாட்டு கூட வந்து விடும் போலிருக்கிறதே?

என்ன ஒரு இதம், அன்பின் உருக்கம் அந்தத் தட்டலில்?

அடுத்தது என்ன நடக்கப் போகிறதென்று தெரியும். இவள் எழுந்து போவாள். கதவின் தாழ்ப்பாளை அத்தனை கவனத்துடன் நீக்குவாள். அவன் உள்ளே நுழைவான். டாக்சியை கணக்கு முடித்து அனுப்பி விட்டு காத்திருக்கிறான். இதோ, எழுந்து விட்டாளே, போகிறாள். பாருங்கள், நான் என்னையே வியந்து கொள்ளும் போது மீண்டும் பிராக்டிக்கலாக செய்ய வேண்டியதை மனம் தொகுத்துக் கொண்டிருந்தது.

அவர்கள் என்னை இழிவுபடுத்த விரும்பவில்லை. தள்ளிப்படுக்க வைத்ததுடன் முகத்தின் மீது ஒரு பெட்ஷீட் போட்டார்கள். காதல் ஜோடிகளுக்கும் அதன் வில்லனுக்கும் நடுவே ஒரு தலையணை சுவர் அமர்த்தப்பட்டது. எனது புலன்கள் கூர்மையடைந்ததில் அவர்களுடைய நாளாவட்டப் பழக்கம் புலனாயிற்று. ஒரு வேளை என்னைக் காட்டிலும் அவன் இலகுவாக என் கண்ணாட்டியை ஆழத்தில் தொட முடியும் போலும். நான் குறித்து வைத்திருந்த நேரத்துக்குக் காத்திருந்தேன். ஆம், அவர்கள் உச்சத்துக்கு போகவும் வேண்டும், அதைத் தொட்டு விடவும் கூடாது.

என்ன ஆயுதத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று ஒரு நினைப்பு சரியாக வந்து விழுந்ததும் எழுந்து கொண்டேன்.

இருவரும் ஆபாசமாக பிரிந்த அம்மணத்துடன் இயல்பற்ற உறைதலில் நடுங்கினார்கள்.

இந்நரக திறப்பு விழா நேரத்தில் மண்டைக்குள் ஒரு பண்டல் ரிப்பன் திகிலூட்டும் வர்ணங்களில் வட்டம் சுற்றுவதைப் பகுக்க முடியவில்லை. வாழ்க்கை ஒரு வட்டம் என்று யார் சொன்னது. உபநிஷத்துகளில் இருந்திருக்குமோ? இல்லை, இந்த மாதிரி சமஸ்கிருதம் கேட்டால் அது இந்துத்வா ஆகி விடும். எந்த மதத்தின் புனித நூலில் இந்த சக்கரை வரி இருக்கலாம்? எனக்குத் தெரிந்து திருமலை என்கிற வெந்து வராத படத்தில் விஜய் என்கிற நடிகன் நமது கண்களைப் பார்த்து சொல்லுவான் என்பது சரியா. அப்போ அஜித் என்கிற நடிகன் வாழ்க்கை ஒரு முக்கோணம் என்று சொல்லியிருக்க வேண்டுமே? சட்னியாகி நடுரோட்டில் கிடக்கிற பெருச்சாளியை காக்கைகள் கொத்தி இழுத்துக் கொண்டிருப்பது போல எனது மூளை சர்வ திக்கிலும் இழுபட்டாலும் சொல்ல வேண்டியதை சரியாகவே சொன்னேன்.

“ டேய் சேது, நான் தனியா ஒரு ஸ்டுடியோ போடணும். அதுக்கு நீதான் பத்து லட்ச ரூபா தர்றே ! “

***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button