“கதிர்வேல் கதையை காதும், காதும் வச்ச மாதிரி முடிச்சுடு. நம்ம சாதித் தலைவருக்குத் தெரிஞ்ச ஒரு ரவுடி குரூப் இருக்கு. அவங்க நம்பர் தர்றேன். அவங்களையும் கூப்பிட்டுக்க. நமக்கு கவுரம்தான் முக்கியம்” என்று கோபமும் ஆவேசமுமாக சுப்புராஜ் தன் மூத்த மகனைக் கொல்லத் தன் இளைய மகன் சங்கரிடம் திட்டம் போட்டுக் கொடுத்தார்.
மரத்தை வெட்டி விட்டு வா என்று சொல்வது போல சாதாரணமாக அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனான் சங்கர்.
“பெத்த மகனை எப்படிப்பா கொல்ல உனக்கு மனசு வருது. அதுவும் கூடப்பிறந்த அவனை எப்படிப்பா என்னால கொல்ல முடியும். அவனையும், அவன் மனைவியையும் ஏத்துக்கலாம்பா”
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த லட்சுமி அருகில் வந்தாள்.
“அப்பா சொல்றதை செய்யுடா……” என்று கெட்டவார்த்தை கலந்து கடுமையான கோபத்துடன் சொன்னவள், “அந்த …….தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்றான். அவளைக் கூட்டிட்டு இந்த வீட்டுக்கு வந்தா, நான் எப்படிடா மானத்தோட வாழ்றது என்றாள்” ஆவேசமாக.
“நாம அவனை மன்னிச்சு, ஏத்துக்கிட்டாலும், நம்ம சாதி சனம் நம்மளை ஒதுக்கி வச்சுடும்டா. இப்பத்தான் புதுசா ஜின்னிங் பேக்டரி வச்சிருக்கோம். நம்ம ஜாதிக்காரப் பயலுக ஒருத்தன்கூட உனக்கு பருத்தி விக்கமாட்டாங்க. நீ வெளியூர்ல இருந்து லாரில பருத்தி கொண்டு வந்தா, லாரியோட கொழுத்திப்புடுவாங்க. சாதிக்கட்டுப்பாட்டை மீறி ஒன்னும் பண்ண முடியாது. தெரியுதா” என்றார் குரல் உயர்த்தி சுப்புராஜ்.
“சரிப்பா” என்றான் லேசாக நடுங்கிய குரலில் சங்கர்.
“உடுமலைப்பேட்டைல நடந்த மாதிரி எல்லோருக்கும் தெரியுற மாதிரி மாதிரி பண்ணிடாதடா. கேமரா இல்லாத இடமா பார்த்து கிராமத்துப் பகுதில போடனும். புரியுதா” என்றார்
“ம்…சரிப்பா” என்றான்.
அப்பா சாதிப்பற்றுடன் இருப்பவர் என்று அண்ணனுக்குத் தெரியும். அப்புறம் ஏன் அவளைப் போய் இவன் காதலித்தான். அப்பாவுடைய சாதிப்பற்றை முதன்முதலில் அறிந்த போது சங்கர் ஆடிப் போய் விட்டான்.
சென்னையில் உள்ள பிரபலமான கல்லூரி ஒன்றில் சங்கர் பி.இ படித்தான். இறுதி ஆண்டு படிக்கும் முன்பு, அவனும், அவனுடன் படித்த சிலரும் சேர்ந்து ஒரு புதுமையான ஐடியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கலாம் என்று நினைத்தனர்.
அந்த ஐடியாவை அப்பாவிடம் சொல்லி பணம் கேட்பதற்காக, அவனும், அவனுடைய நண்பர்களில் ஒருவனான சந்திரனும் ஊருக்கு வந்திருந்தனர்.
காலையில் அப்பா வீட்டில் இல்லை. குளித்து விட்டு, சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அப்பா வந்தார்.
“வாடா எப்ப வந்தே” என்றார்.
“இப்பத்தாம்பா வந்தேன்.”
“யாரு அது. உன் பிரண்ட்டா” என்றவர், சந்திரனைப் பார்த்து, “தம்பி உங்க சொந்த ஊரு எது” என்றார்.
“மதுரைங்க”
“மதுரையில எங்க?”
“பக்கத்துல கிராமங்க..”
“எந்த கிராமம்…”
“—– கிராமங்க…”
“ஓ அங்கனயா? அங்க எங்க இருக்கீங்க?”
“காலனிலங்க…”
தம் மகனை நோக்கி கோபமாகத் திரும்பியவர், “டேய் சங்கர் உள்ள வாடா” என்று உள்ளே இருந்த அறைக்குள் அவனை அழைத்துப் போனார்.
“சாதி கெட்ட பயகூட எல்லாம் ஏன்டா பழக்கம் வச்சிருக்க” என்றார் குரலில் சத்தத்தை குறைக்காமல். வெளியே சாப்பிட்டுக் கொண்டிருந்த சந்திரனுக்குக் கேட்டிருக்கும் என்று நினைத்தான் சங்கர்.
“சாதி, சனம் அறிஞ்சு பழகனும் புரிஞ்சதா” என்றார் அதட்டலுடன்…
சங்கர் உள் அறையில் இருந்து திரும்பி வந்தான். சாப்பிட்டுக் கொண்டிருந்த இடத்தில் சந்திரன் இல்லை. அவன் கிளம்பியிருந்தான்.
அப்பா அந்தப் பக்கம் நகர்ந்த உடன், மொபைலில் சந்திரனைக் கூப்பிட்டான். ரிங்க் போனது. அவன் எடுக்கவில்லை. அவன் மனம் எவ்வளவு துன்பப்பட்டிருக்கும் என சங்கருக்குப் புரிந்தது.
அதில் இருந்து யாரையும் அவன் வீட்டுக்கு கூட்டி வருவதில்லை. அவ்வளவாகப் பலரிடம் பழகுவதும் இல்லை. இது கதிர்வேல் அண்ணனுக்கும் தெரியும். இதெல்லாம் தெரிந்தும் எப்படி துணிந்து வேறு சாதிப் பெண்ணை காதலித்தார் என்று தெரியவில்லை.
முதலில் அண்ணன் எங்கே இருக்கிறான் என்று விசாரித்தான். அண்ணன் நெருங்கிப்பழகுவது சுடரொளியுடன்தான். சுடரொளி சங்கருக்கும் நண்பன்தான். ஆனால், அவனுடன் பழகுவது அப்பாவுக்குத் தெரியாது. அவனுக்கு அப்பா, அம்மா வைத்த பெயர் நமச்சிவாயம். ஆனால், தமிழ் பற்று காரணமாக சுடரொளி என்று தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டான். அவனும், அவனது நண்பர்களும் சாதி வெறிக்கு எதிராக அடிக்கடி டவுனில் ஆர்பாட்டம் எல்லாம் செய்வார்கள். சுடரின் மொபைலுக்குக் கூப்பிட்டான்.
“சுடர், நான் சங்கர் பேசுறேன். எங்க அண்ணன் வீட்டுக்கே வரல. அவனைப் பார்த்துப் பேசனும். எங்க இருக்காங்கன்னு தெரியுமா?” என்றான்.
“தெரியும்டா. அவனுக்கு பிரச்னை வந்துடக் கூடாது. உன் அப்பா கிட்ட கொடுத்துடாத” என்றான்.
“பிரச்னை வராதுடா. நான் அப்பாகிட்ட பேசிக்கிறேன். தனியா குடித்தனம் வச்சிடலாம்னு அப்பா சொல்றாரு” என்று பொய் சொன்னான்.
“சரி உன்னோட மொபைலுக்கு அவன் நம்பர் அனுப்புறேன். பேசு. நானும் பேசும்போது சொல்றேன்” என்றான்.
அடுத்த சில நொடிகளில் கதிர்வேல் புதிய எண் என்று சுடர் அனுப்பிய எண்ணில் அழைத்தான்.
மறுபுறம் கதிர் அழைப்பை எடுத்ததும், “நான் சங்கர் பேசுறேண்ணே. அப்பா கடுமையான கோபத்துல இருந்தாரு. நானும் அம்மாவும்தான் அவரை சமாதானப்படுத்தினோம்” என்றான்.
“டேய் பொய் சொல்லாத. அப்பா என்னை கொல்லச் சொன்னாரா. என்னை கொல்றதுக்கு ஆள் பார்க்குறாருன்னு சொல்றாங்க”
“டேய் கதிர் அதெல்லாம் இல்லைடா” என்று சொன்னான். ஆனால், இதைச் சொன்னபிறகு அவன் மனம் அவனை துன்பத்தில் தள்ளியது.
“நீ எங்க இருக்கேன்னு சொல்லு. நான் வந்து பார்க்குறேன்” என்றான் துயரத்தை வெளிக்காட்டாமல்.
“நான் வீரக்கல்லுக்குப் பக்கத்துல தோட்டத்துல இருக்கேன். எனக்கு ஏதாவது ஆனாக்கூடப் பரவாயில்ல. என்னை நம்பி வந்த பொண்ணுக்கு ஏதும் ஆயிடக் கூடாதுங்கிறதுதான் என்னோட கவலை. அதனாலதான், நான் எங்கே இருக்கேன்னு சொல்ல வேண்டாம்னு சொல்லி இருந்தேன்” என்றான்.
“சரிடா கதிர். நான் யாருக்கிட்டையும் சொல்ல மாட்டேன்”என்றான்.
“வீரக்கல் பக்கத்துல நாகையன் தோட்டத்துல இருக்கேன்” என்றான்.
“நான் நாளைக்கு வர்றேன்” என்றான்.
“இல்லைடா.நாளைக்கு நாங்க, டவுனுக்கு துணி வாங்கப்போறோம் நாளைக்கு வேண்டாம். சனிக்கிழமை வா” என்றான்.
இன்னும் இரண்டு நாள் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டவன், “சரிடா” என்றான்.
பின்னர், அப்பாவுக்கு தொடர்பு கொண்டவன், அப்பா, “கதிர்கிட்ட பேசிட்டேன். அவன் வீரக்கல்லுக்குப் பக்கத்துல இருக்கானாம்” என்றான்.
“டேய் அந்த ரவுடி குரூப்புக்குப் பேசு. அவனுகள வரச் சொல்லு, ராத்திரியோட ராத்திரியா போட்டுத் தள்ளிடு” என்றார்.
“நாளைக்கு அவன் டவுனுக்குப் போறான். சனிக்கிழமை என்னை வரச்சொல்லி இருக்கான். அப்போ முடிச்சுடுவோம்” என்றான் குற்ற உணர்ச்சியுடன்.
“நாளைக்கு டவுனுக்குப் போறானா. அங்கயே முடிச்சிடுடலாமேடா” என்றார்.
“இல்லைப்பா. டவுனுல தெருவுக்குத் தெரு சிசிடிவி கேமரா வச்சிருக்காங்க. தெரிஞ்சுடும்பா” என்றான்.
“சரிடா. சனிக்கிழமையே வச்சுக்கிடுவோம். அதுவரைக்கும் பிழைச்சுப் போகட்டும்” என்றார்.
சில நிமிடங்கள் கழித்து ரவுடிக் கும்பலைத் தொடர்பு கொண்டான் சங்கர்.
அவன் அழைத்தபோது மறுமுனையில் யாரும் எடுக்கவில்லை. சில நிமிடங்கள் கழித்து அவன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. லேண்ட் லைனில் யாரோ அழைத்தார்கள்.
“யாரு தம்பி” என்ற குரல் கேட்டது.
“அண்ணே…… இருந்து பேசுறோம். தலைவர்தான் உங்க நம்பர் கொடுத்தார். ஒரு வேலை இருக்கு” என்றான்.
“சரி நாங்க மூணுபேர் வந்துட்றோம். டவுன்ல மீட் பண்ண வேண்டாம். பைப்பாஸ் பக்கத்துல ஒரு இடம் இருக்கு. அங்க மீட் பண்ணுவோம். வெள்ளிக்கிழமை சாயந்திரம் இருட்டுனதும் வந்துட்றோம். இடம், ஆள் யாருங்கிறதை பக்காவா சொல்லனும்”
“சரிங்கண்ணே” என்றான்.
சங்கருக்கு அன்று இரவு உறக்கம் வரவில்லை. சொந்த அண்ணனைக் கொல்ல ஆள் பார்க்கிறோமே என்று மனசாட்சி உறுத்திக் கொண்டே இருந்தது. அப்பா சொல்வதைச் செய்கிறோம் என்று குரங்கு மனம் சமாதானம் சொன்னது.
“அண்ணன் கஷ்டப்பட்றான். பணம் கொடுத்துட்டு வா என்றா சொல்கிறார். உயிரை எடுக்க அல்லவா சொல்கிறார். அது சரியா” என உள்மனது சொல்லிக் காட்டியது. யோசனை தந்த அயர்ச்சியில் விடிகாலையில் தூங்கினான். எழுந்து முகம் கழுவி விட்டு, “அம்மா” என்று கூப்பிட்டான்.
“என்னடா” என்று எரிச்சலும் கோபமுமான குரலில் கேட்டபடியே வந்தாள்.
“அம்மா. நைட் எல்லாம் தூக்கமே இல்லம்மா. அண்ணன் பாவம்மா. வேண்டாம்னு சொல்லேம்மா அப்பாக்கிட்டே” என்றான்.
“டேய். அவன் பண்றது நல்லதுக்கு இல்ல. ஊர்ல நாம தலை காட்ட முடியாது. அவனை முடிச்சாத்தான் நிம்மதியா இருக்கும். கவுரவம்தான் நமக்கு முக்கியம்.”
“உங்க அப்பா கூட நாற்பது வருஷம் வாழ்ந்திருக்கேன். அவர் ஆரம்பத்துல எப்படி கஷ்டப்பட்டார்னு எனக்குத்தான் தெரியும். சாதி சனம் ஆதரவு இல்லாம இருந்தாரு. சாதி சனத்தை மதிச்சாத்தான் தொழிலே செய்ய முடியும். இல்லாட்டி ஒதுக்கி வச்சுருவாங்களான்னு கேட்காத. ஒதுக்கி வச்சுருவோம்னு சொல்ல மாட்டாங்க. ஆனால, நம்ம தொழில் பண்ணவே முடியாது. வயக்காட்டுக்குக் கூலிக்கு ஆள் வரமாட்டாங்க. நம்ம விளைச்சல வாங்க ஆள்வரமாட்டாங்க. பல வகையில அன்னியப்பட்டுப் போவோம்டா. என்ன இன்னும் நாற்பது வருஷம் கழிச்சு சாகப்போறவன். இப்ப சாகப்போறான். ரோட்டுல ஆக்சிடெண்ட்ல செத்துப் போனாப்ல மனசைக் கல்லாக்கிடணும். நாங்க சொல்றதை செய்யி. நாளைக்கு ஜின்னிங் பேக்டரி ஓடனும். சாதி ஜனத்தை நம்பித்தான் அந்த தொழிலையே உங்க அப்பா ஆரம்பிச்சிருக்காரு.”
“சரிம்மா” என்றான் லேசான குரலில்.
வெள்ளிக்கிழமை சாயங்காலம் பைபாஸ் சென்று, ரவுடி க்ரூப் சொன்ன இடத்தில் நின்றிருந்தான். ஏழு மணிக்கு சுமோவில் வந்து இறங்கினார்கள். சுமோவை பைபாஸில் ஒரு ஒர்க் ஷாப்பில் நிறுத்தி விட்டு, ஆட்டோ பிடித்துக் கொண்டார்கள்.
ஒருத்தர் மட்டும்தான் பார்க்க 40 வயசு போலத் தெரிந்தார். மற்ற இருவரும் மீசை முளைக்காத சிறுவர்கள் போல இருந்தனர். ஜின்னிங் பேக்டரிக்கு அவர்களைக் கூட்டிக் கொண்டு போனான். அங்கே போகும் வரை இடையில் ஏதும் பேசவில்லை. ஜின்னிங் பேக்டரியில் வேலை ஆட்களை முன் கூட்டியே போகச்சொல்லி விட்டார்கள்.
அவர்களுக்கு முன் பணத்தைக் கொடுத்து விட்டு, சாப்பாடு வாங்கிக் கொடுத்து விட்டு, அந்த 40 வயதுக்காரனிடம் பேசினான். “அண்ணே. பார்த்தா சின்னப்பசங்க மாதிரி இருக்காங்க. அவங்களை வச்சு எப்படிண்ணே”
டேய் தம்பி இங்க வாடா. என்று அவர்களில் ஒருவனை அழைத்தார். “இவன் மதுரை பெரியார் பஸ்டாண்ட்ல பட்டபகல்ல ரெண்டு பேரை போட்டுத் தள்ளுனவன்” என்றவன், “அண்ணன் கிட்ட சொல்லுடா” என்றான்.
“ஆமாண்ணே” என்றான் பணிவுடன். அந்த பணிவில் கொலை வெறி இருக்குமா என்று சங்கரால் தீர்மானிக்க முடியவில்லை.
“இப்பெல்லாம் இவனுக மாதிரிதான் இந்த மாதிரி வேலைக்கு வச்சுக்கிறோம். அப்பத்தான் பையன் வயசுக்கு வரலன்னு சொல்ல முடியும். சட்டப்படி தண்டனை குறைவா கிடைக்கும். சீக்கிரம் வெளியே வந்துடலாம்” என்றான் அந்த 40 வயசுக்காரன்.
சங்கர் ஏற்கனவே செய்திகளில் இதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான். இப்படி ஒரு நேரடி அனுபவம் கிடைக்கும் என்று அவன் அறிந்திருக்கவில்லை. அன்றைக்கு இரவும் சங்கர் தூங்கவே இல்லை. சனிக்கிழமை விடிந்தது. பத்துமணியைப் போல கதிரை அழைத்தான்.
“அண்ணே. நான்தாண்ணே பேசுறேன். வரட்டுமாண்ணே” என்றான்.
“சரிடா. மதியானம் சாப்புட வந்துடு உனக்கும் சேர்த்து கறிக்குழம்பு வைக்கச் சொல்றேன்” என்றான்.
அவனுடைய பாசத்தை நினைத்தபடியே, “சரிண்ணே” என்று சங்கர் பதில் சொல்கையில் குரலில் சுரத்தில்லை.
பனிரெண்டு மணிக்கு அவர்களை வீரக்கல் பிரிவுக்கு வரச்சொல்லி விட்டான். அங்கிருந்து பதினைந்து நிமிடத்தில் கதிர் இருக்கும் தோட்டத்துக்குப் போக முடியும். தோட்டத்துக்கு வழி காட்டி விட்ட பிறகு நாம் கிளம்பி வந்து விட வேண்டும் என்று நினைத்தான்.
வீரக்கல் ஊருக்குள் சென்றுதான் தோட்டத்துக்குச் செல்ல வேண்டும். அவன் டூ வீலரில் முன்னே செல்ல, பல அடி தூரம் விட்டு ஆட்டோவில் அவர்கள் பின் தொடர்ந்தார்கள்.
வீரக்கல்லுக்குள் புகுந்தபோது, வண்டி திடீரென நின்று விட்டது. ஸ்டார்ட் பண்ணுவதற்காக வண்டியை விட்டு இறங்கினான்.
அப்போது சாலையோரத்தில் இருந்த டீக்கடையில் இருந்து அவனை நோக்கி வந்த ஒரு முதியவர், “தம்பி நீ சங்கர்தானே” என்றார்.
“ஆமாங்கய்யா” என்றபடியே அவரைப் பார்த்தான். அவர் எட்டாம் வகுப்பில் அவனுக்கு தமிழ் பாடம் எடுத்த ஆசிரியர் முத்துவேலன் ஐயா.
வண்டியை நிறுத்தி விட்டு, “வணக்கம் ஐயா” என்றான்.
“எங்க இந்தப் பக்கம்” என்றார்.
“ஒரு வேலையா வந்தேங்கய்யா. வண்டி நின்னுடுச்சு.”
“நல்லா இருக்கேன்யா” என்றான்.
“உன்னையும், வடிவேலுவையும் என்னால மறக்கவே முடியாதுப்பா. கட்டுரைப் போட்டில நீயும், வடிவேலுவும் கலந்துகிட்டீங்க. அப்போ யாருக்கு பர்ஸ்ட் பிரைஸ் கொடுக்குறதுன்னு திகைச்சுப் போயிட்டேன். உன்னோட கட்டுரைல முடிவுல முத்தாய்ப்பா ஒரு வரி எழுதி இருந்தே, அதை வச்சுத்தான் உனக்கு முதல் பரிசு கிடைச்சது. அப்போ இது உனக்குத் தெரியாது. அந்த கடைசி வரி, எனக்கு சட்டுன்னு ஞாபகத்துக்கு வரல…ம்” என்றபடியே யோசித்தார்.
நம் அவசரத்தைப் புரிந்து கொள்ளாமல் ஐயா வேறு குறுக்கே வந்து விட்டாரே என்ன செய்வது என்று குழம்பியவன். மீண்டும் வண்டியை காலால் அழுத்தி கிக் ஸ்டார்ட் கொடுத்தான். நல்லவேளை உடனே ஸ்டார்ட் ஆகிவிட்டது.
“ஐயா அவசரமா போறேன். உங்க கூட அப்புறம் பேசுறேன்” என்றான்.
“தம்பி உங்க போன் நம்பர் மட்டும் சொல்லுங்க. நான் அப்புறமா கூப்புட்றேன்” என்றார்.அவன் அவசர கதியில் தன் நம்பரை சொன்னான். அதை அவரது செல்போனில் பதிவு செய்து கொண்டார்.
“சரிங்க தம்பி நீங்க, போய்ட்டு வாங்க” என்றார். பின்னால், திரும்பிப் பார்த்தான் ஆட்டோ, தூரத்தில் நின்றிருந்தது. அவனுக்கும், அதற்கும் தொடர்பு இல்லை என்பது போல நின்றிருந்தது. நாகையன் தோட்டத்துக்கு போகும் வழிக்கு சில அடி தூரத்துக்கு முன்பே வண்டியை நிறுத்தி விட்டான். பின்னால், வந்த ஆட்டோ அவன் முன்னரே கூறியபடி பல அடி தூரத்துக்கு முன்பே நின்றது. அதில் இருந்த ஆட்கள் மட்டும் இறங்கினார்கள், அவன் வரப்பில் முன்னே செல்ல, அவர்கள் சில அடி தூரம் பின்னால் வந்தார்கள். கரும்பு காட்டின் ஊடே வரப்பு போனது.
கதிர் இருக்கிறாரானா என்று பார்ப்பதற்காக மொபைலில் அழைத்தான்.
“இங்கதான்டா இருக்கேன் வாடா” என்றான்.
“சரிங்கண்ணே. இதோ வந்துக்கிட்டு இருக்கேன். நீ வீட்லேயே இருண்ணே” என்றான்.
வரப்பில் ஒரு இடத்தில் நின்றவன், அவர்கள் அவனை நெருங்கி வந்ததும், அவர்களை அந்த தோட்டத்து வீட்டை நோக்கி கை காண்பித்து விட்டு, கரும்பு தோட்டத்துக்குள் பதுங்கி, பதுங்கி வெளியே போனான். அப்போது திடீரென அவன் மொபைல் போன் அடித்தது.
அழைப்பை எடுத்தான்.
“தம்பி நான்தான் முத்துவேலன் பேசுறேன்” என்றார் சற்றுமுன் அவன் பார்த்த தமிழாசிரியர்.
“ஐயா சொல்லுங்க” என்றான் தாழ்வான குரலில் அதே நேரத்தில் அவசரமாக.
“தம்பி நீங்க எழுதுன கட்டுரைல கடைசி வரி ஞாபகம் இல்லைன்னு சொன்னேன்ல. அது இப்பத்தான் எனக்கு ஞாபகம் வந்துச்சு. அந்தக் கட்டுரை ஜாதி ஒழிப்பைப் பற்றிய கட்டுரை. நீ அதுல கடைசில. ‘மனிதர்களுக்குள் வேர் விடும் சாதியைக் கருவறுப்போம்’னு நீங்க எழுதியிருந்த அந்த வரிதான் எனக்குப் பிடிச்சிருந்தது” என்றார். சங்கர் அப்படியே கரும்புக்காட்டுக்குள் கவிழ்ந்து உட்கார்ந்தான். அவன் கைகளில் இருந்து மொபைல் போன் நழுவியது. தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.
Super good article continue sir