![பழனிக்குமார்](https://vasagasalai.com/wp-content/uploads/2019/09/FB_IMG_1567481748585-780x405.jpg)
அப்படியான ஓவியத்தில்
இருந்துகொள்ள
அந்தப் பறவைக்கு
விருப்பமில்லை தான்….
இந்த ஓவியத்தின்
முதல் தீற்றலாய்
விழுந்த
பறவையின் அலகு
வெகுக் கூராயிருப்பதில்
அதற்கொரு கவலை…
தான் ஒருபோதும்
அடர் சிறகுகளுடன்
பேடையுடன்
களிப்பதில்லை
என்பதறியாது
தீட்டப்பட்ட ஓவியத்தில்
இருந்துகொள்ள
பறவைக்கு
விருப்பமில்லாமல்
இருக்கலாம்..
தன்னியல்பாய்
இருப்பதைத் தவிர
வேறுவழிகளற்ற
பறவையின்
இறகினடியிலிருந்து
காற்றின்கீற்றொன்று
ஓவியத்தை
கிழித்தெறிய
பிரயத்னப்படுகிறது….
இப்படியான நிழலும்
இப்படியான கிளைமரமும்
இப்படியான நதிநீரோடையும்
இப்படியான என
எதுவுமற்ற
வனாந்திரத்தின்
தனித்தலையும் பட்சியின்
இன்னொரு கூடென
ஓவியத்தில் இருந்துகொள்ள
விருப்பமில்லாமல் இருக்கலாம்….
பறவை கொள்ளும்
ஒரே ஆறுதல்
தன் குழந்தையிடம்
ஓவியம் காண்பிக்கச்
சுருட்டியெடுக்கும்
ஓர் அப்பாவின்
உள்ளங்கையில்
வலசையாதல்…..
****************************
பெருஞ் சத்தத்துடன் தான்
உதிர்கிறது
அந்தச் செடியின்
முதலும் கடைசியுமான
பூவொன்று…
எவளோ ஒருத்தியின்
தோள்பற்றியழுத
சிறுகுழந்தையின்
எதிர் திசையில்
அப்பொழுதுதான் உடைந்த
ஒரு பலூனின்
காற்று கலைந்தழுதது…
யாருக்கும் அகப்படாத
கருஞ்சிவப்பு
நிறத்திலாலான
பட்டாம்பூச்சியொன்றின்
வெற்றுடலைத்
தூக்கியபடி விரைகிறது
நெடுஞ்சாலை
வண்டியொன்று….
அவிழும்
முந்தானை முடிச்சிலிருந்து
உருண்டோடி மறையும்
ஆகச்சிறிய
ஐந்து ரூபாய்
நாணயத்தைத் தேடியபடி
தற்சமயத்திலிருந்து
தொலைந்துபோகிறது
பாட்டியொன்று…
பரமபதங்களின்
எல்லாச் சாளரங்களிலும்
சர்பங்களினோவியம்
நெளிகிறது..
சுவாதீனங்களின்
எச்சத்தில்
ப்ரியங்களின்
திசை நோக்கி
நீள்கிறது
இதயத்தாலானப்
பிச்சைப்பாத்திரம்….