சிறார் இலக்கியம்
Trending

கிளி ஜோசியம் – சிறுவர் கதை

ஞா.கலையரசி

அன்று ஞாயிறு என்பதால், தமிழ்ச்செல்வி வாசலில் விளையாடிக் கொண்டிருந்தாள்.

“கிளி ஜோசியம் பார்க்கலியோ, கிளி ஜோசியம்!” என்று கூவியபடி, ஒருவர் தெருவில் போய்க் கொண்டிருந்தார். அவர் வைத்திருந்தக் கூண்டுக்குள், ஒரு பச்சைக்கிளி இருந்தது.

“கிளி ஜோசியக்காரரே! இங்க வாங்க!”,. என்று தமிழ்ச்செல்வியின் அம்மா அவரைக் கூப்பிட்டாள்.

அவர் தமிழ்ச்செல்வியின் வீட்டு வாசலுக்கு வந்து, கீழே அமர்ந்தார்…

செல்வியும் ஆர்வத்துடன், அம்மா பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டாள். கிளியைக் கிட்டத்தில் பார்க்க, அவளுக்கு மிகவும் ஆசை.
அது போல் ஒரு கிளியை வளர்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாய், செல்வி அம்மாவை நச்சரித்துக் கொண்டிருந்தாள். அம்மாதான் வாங்கித் தராமல், ஏதேதோ சாக்குபோக்கு சொல்லிக்கொண்டிருந்தாள்.

“யாரு பேருக்கு, ஜோசியம் பார்க்கணும்?” என்றார் ஜோசியர்.

“என் மவளுக்குத் தான் பார்க்கணும்; பேரு தமிழ்ச்செல்வி. இவ எதிர்காலம் எப்படியிருக்கும்னு, சீட்டை எடுத்து, நல்லா பார்த்துச் சொல்லுங்க, ஜோசியரே!” என்றாள் அம்மா.

இருபதுக்கும் மேற்பட்ட சீட்டுகளை, ஒன்றின் மேல் ஒன்றாகத் தரையில் அடுக்கி வைத்து விட்டு, ஜோசியர் கூண்டைத் திறந்து விட்டார்.

“சிங்காரம் வெளியில வா! வந்து பாப்பாவுக்கு நல்ல சீட்டாப் பார்த்து எடுத்துப் போடு!” என்று அவர் கிளியைக் கூப்பிட்டார்.

கிளி வெளியில் வந்து, மூன்று சீட்டுகளை எடுத்துக் கீழே போட்டுவிட்டு, நாலாவதை எடுத்து, அவர் கையில் கொடுத்தது.

அவர் அதைப் பிரித்துப் பார்த்து விட்டு, அதிலிருந்த மாரியம்மன் படத்தை எடுத்து அம்மாவிடம் காட்டினார்.

“அந்த மாரியம்மனே, ஒங்கப் பாப்பாவுக்கு வந்திருக்கா! இவளோட எதிர்காலம் சூப்பரா இருக்கும்! நல்ல யோக திசை இருக்கு; நல்லாப் படிச்சு, பெரிய வேலைக்குப்போய் கை நெறைய சம்பாதிப்பா!” என்றார் ஜோசியர்.

அம்மாவுக்கும், செல்விக்கும் அதைக்கேட்டு, மிக்க மகிழ்ச்சியாயிருந்தது.

ஜோசியம் பார்க்க அவர் கேட்ட இருபது ரூபாயுடன், பத்து ரூபாய் சேர்த்து, அம்மா கொடுத்தாள். . .

“கொஞ்ச நேரம் இந்தக் கூண்டை இங்க வைச்சிட்டுப் போறேம்மா.. காலையிலேர்ந்து ஒன்னும் சாப்பிடல. நான் போயி ஒரு டீ குடிச்சிட்டு வந்துடறேன்,” என்றார் அவர்.

“சரிங்க. இப்பிடி வைச்சுட்டுப் போங்க; நான் பார்த்துக்கறேன்,” என்றாள் அம்மா.

அவர் கடைக்குப் போயிருந்த சமயம்,
“அம்மா! அம்மா! கிளியைக் கையிலத் தூக்கிக் கொஞ்சணும்னு, ரொம்ப ஆசையாயிருக்கு,” என்று செல்வி சொன்னாள்.

“அச்சச்சோ! கிளி பறந்து போயிட்டா ஆபத்து; அதை வைச்சுதான், அந்த மனுசன் பொழைச்சிக்கிட்டு இருக்கார். அப்புறம் அவருக்கு யாரு பதில் சொல்றது?” என்றாள் அம்மா.

“இல்லம்மா; அவரு வர்றதுக்குள்ளே, கொஞ்சம் நேரம் பார்த்துட்டு, மறுபடியும், கூண்டுக்குள்ளாற அனுப்பிடறேன்,” என்று செல்வி கெஞ்சினாள்.

“சரி சரி. சீக்கிரம் பார்த்துட்டுக் கூண்டை மூடி வைச்சிடு,. கிளி பத்திரம்,” என்று அம்மா அரைமனதோடு சம்மதித்தாள்..

“சரிம்மா,” என்றாள் செல்வி. .

செல்வி கூண்டைத் திறந்து, கிளியைக் கெட்டியாகப் பிடித்து வெளியே எடுத்தாள்.

“ஆ! ஆ! என்னைக் கீழே விடு. நீ இறுக்கிப் புடிச்சிருக்கிறது, எனக்கு ரொம்ப வலிக்குது,” என்று கிளி, கீச் கீச்சென்று கத்தியது.

“கீழே விட்டா, நீ பறந்து போயிடுவே! அப்புறம் அம்மா என்னை அடிப்பாங்க!,” என்று செல்வி சொன்னாள்.

“க்கும்! என் றெக்கை எல்லாத்தையும் தான், அந்த ஆளு, ஒட்ட நறுக்கி வைச்சிருக்காரே! நான் எப்பிடிப் பறக்குறது?” என்று கிளி அலுத்துக் கொண்டே சொன்னது.

“ஏன் இவருக்கிட்ட இருக்குறது, ஒனக்குப் பிடிக்கலையா?” என்று செல்வி கேட்டாள்.

“சுதந்திரமா ஜாலியாப் பறக்க வேண்டிய என்னைப் புடிச்சி, ரெக்கையை வெட்டிக் கூண்டுக்குள்ள போட்டு வைச்சிருக்காரு! இது எப்படி எனக்குப் புடிக்கும்? நான் தப்பே செய்யாமத் தண்டனை அனுபவிக்கிறேன்!. ஒன்னை வெளியிலேயே விடாம, அறைக்குள்ளேயே போட்டுப் பூட்டி வைச்சிருந்தா, ஒனக்குப் புடிக்குமா?” என்று கிளி கேட்டது..

“அச்சச்சோ! புடிக்கவே புடிக்காது!,” என்று செல்வி பதில் சொன்னாள்.

“சரி. என்னை எதுக்கு, வெளியில எடுத்தே? அதைச் சீக்கிரம் சொல்லு,” என்றது கிளி.

“நீ எப்பிடி அவ்ளோ சரியா, ஒவ்வொருத்தருக்கும் ஏத்த மாதிரி சீட்டு எடுத்துத் தரே?” என்று செல்வி வியப்புடன் கேட்டாள்.

“நான் எங்க எடுக்கிறேன்? அவரு கையை ஆட்டுனா, சீட்டைக் கீழப் போடணும். ஆட்டுறதை நிறுத்திட்டா, எடுத்து அவரு கையிலத் தரணும்னு, என்னைப் பழக்கி வைச்சிருக்காரு. அடுத்த முறை, எங்கியாவது, கிளி ஜோசியம் பார்க்கும் போது, ஜோசியரோட கையையோ, காலையோ, கவனிச்சுப் பார்த்தா, உண்மை தெரிஞ்சிடும்,” என்றது கிளி..

“அப்பிடியா? நீயா தேர்வு செஞ்சு, எடுத்துத் தரேன்னுல்ல, நான் நெனைச்சேன்!”..என்று செல்வி சொன்னாள்.

“நீ மட்டுமில்ல, ஜனங்க எல்லாருமே, முட்டாள்தனமா, அப்பிடித்தான் நெனைக்கிறாங்க. இந்த மூடநம்பிக்கை இருக்கிறவரைக்கும், எங்கக் கிளி இனத்துக்கே கஷ்ட காலம் தான். என்னோட எதிர்காலமே எனக்குத் தெரியாம இருண்டு கெடக்குது!. இதுல, நான் எங்க அடுத்தவங்களோட எதிர்காலத்தைச் சொல்றது? எவ்ளோ நாள் இப்பிடிக் கூண்டுக்குள்ளே ஆயுள் தண்டனை அனுபவிக்கப் போறேனோ தெரியல?” என்று கிளி வருத்தத்துடன் சொன்னது.

தெருக்கோடியில் ஜோசியர் வருவது தெரிந்தவுடன், செல்வி கிளிக்கு டாட்டா காட்டி, கூண்டுக்குள் அனுப்பினாள்.

கிளியும் பதிலுக்கு டாடா சொல்லிவிட்டு, சோகத்துடன் உள்ளே போனபோது செல்விக்கு வருத்தமாய் இருந்தது.

அதற்குப் பிறகு, இரண்டு நாட்கள் செல்வி தூங்கவேயில்லை. கிளி சொன்ன வார்த்தைகள் அவள் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தன..
பத்துநாட்கள் கழிந்திருக்கும். அன்று அவள் பிறந்தநாள்.

அவள் சற்றும் எதிர்பாராத வண்ணம், சந்தைக்குப் போன அம்மா, அவளுக்குப் பிறந்த நாள் பரிசாக, ஒரு கூண்டுக்கிளி வாங்கி வந்திருந்தாள்.
அதைக் கண்டு மகள் மகிழ்வாள் என எதிர்பார்த்த அம்மாவுக்கு, செல்வியின் நடவடிக்கை புதிராக இருந்தது.

செல்வி அந்தக் கூண்டைத் திறந்து, கிளியை வெளியே எடுத்து சிறிது நேரம் கொஞ்சினாள்.

பிறகு கொல்லைப் பக்கம் போய், இரண்டு கைகளாலும் அந்தக் கிளியைத் தலைக்கு மேல் தூக்கி, வானில் பறக்க விட்டாள்.

கிளி உற்சாகமாகச் சிறகடித்து, வான்வெளியில் பறந்து சென்றதைப் பார்த்து செல்வி கைகளைத் தட்டி, ஆனந்தமாகக் கூக்குரலிட்டாள்.

“ஏன்டி இப்பிடிச் செஞ்சே? ரொம்ப நாளாக் கிளி வேணும்னு, ஆசையாக் கேட்டியேன்னு தான் வாங்கிட்டு வந்தேன். காசு கொடுத்து வாங்கினதை இப்பிடிப் பறக்க விட்டுட்டியேடி!,” என்று அம்மா கோபப்பட்டாள்.

“என்னை மன்னிச்சிடுங்கம்மா; மொதல்ல கிளி வளர்க்கணும்னு ஆசைப்பட்டது உண்மை தான்;. ஆனா வானத்துல சுதந்திரமாப் பறக்க வேண்டிய பறவைகளைப் புடிச்சிக் கூண்டுல அடைச்சி, வளர்க்கிறது எவ்ளோ பெரிய பாவம்னு கிளி ஜோசியம் பார்த்த அன்னிக்குத்தான் தெரிஞ்சிக்கிட்டேன்.

கொஞ்சம் கொஞ்சமாக் காசு சேர்த்து, என் பொறந்த நாள் அன்னிக்கு, இந்த மாதிரி விக்கிற கிளிகளை வாங்கிட்டு வந்து கூண்டைத் தொறந்து வெளியில விடப் போறேன்; அதுங்க விடுதலை ஆகிப் பறக்கிறதைப் பார்க்கும் போது தான், எனக்கு அதிக மகிழ்ச்சி கெடைக்குது,” என்று உற்சாகத்துடன் சொன்னாள் செல்வி.

அவள் சொன்னதில் இருந்த உண்மையைப் புரிந்துகொண்ட அம்மா, ஆமோதிக்கும் விதமாக, அவளை இறுகக் கட்டி அணைத்து, நெற்றியில்
முத்தமிட்டாள்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button