1. மழலைகள் வார்த்தை வாசங்களில் மிதப்பவன்
நான் கோமாளிதான்
என் செய்கைகள் சிரிப்பு வரக்கூடியதாகவே இருக்கும்
சிரிப்பு மருந்து கொடுக்கும்
மருத்துவன் நான்.
முகபாவனைகள் மாறியிருக்கும்
பார்த்தாலே கோபம் குறையும்
வெடிகளை இதயத்தில் சுமந்தாலும்
சிரிப்பை முகத்தில் சுமப்பவன்.
ஆடைகளை வனையத் தெரியாதவன்
அன்பின் கூடுகளை பொருத்தத் தெரிந்தவன்
கூடைகளில் பூக்கள் பூப்பதில்லை
செடிகளில் வாசம் வராமலிருப்பதில்லை
அழவந்தாலும் சிரிக்க கற்றுக் கொண்டவன்.
ஆறடி உசர சட்டைப் பாக்கெட்டில்
பணத்திற்கு பதில் சிரிப்பு சில்லறையாக
நிறைந்திருக்கும்.
ஐய்…
கோமாளி போறான்
ஐய்…
கோமாளி உக்காந்திருக்கான்
சொல்லும் மழலைகள் வார்த்தை வாசங்களில்….
நான் கண்ணீர் சிந்துவதில்லை!
2. கொக்குகள் அளந்த பூமி
பறக்கும் கொக்குகள் பார்த்தால்
கொக்கே கொக்கே வா வா
கோழி கொக்கே வா வா
கைகளை மடித்து நெட்டி முறித்து
கை திறந்தால் நகக் கண்ணில்
வெள்ளை வண்ணம் சிறிதாய்
பூத்திருக்கும்.
ஆலமரத்து இருக்கையில்
குளக் கதை பேசும் கண்கள்
கொக்குகளையே நோட்டமிடும்
வாயில் மீன் கவ்வி பறக்க
நீரில் வரையும் வட்டங்கள்
வாழ்வைப் பேசும்.
கிராமம் செல்லும் கண்கள்
வாய்க்காலையும் குளத்தையும்
தவறாமல் விசாரிக்கத் தவறுவதில்லை.
அசோகா கைகளில்
முதல் நாள் இரவில் மருதாணியிட்ட
விரலெங்கும் வண்ணம் பூத்திருந்தது.
நீச்சலுக்காக குளத்தில் இறங்க
வெள்ளைப்பறவையை வண்ண விரலால்
கொக்கு கொக்கு குரல் கொடுத்தே
நீச்சலடித்தாள்.
என் பால்யக் கதை சொல்லி
அவள் விரல் வண்ணத்தை கலைக்க
மனசு விரும்பவில்லை.
3. முற்றங்கள்தோறும் நிலாச்சோறு
தோசை மாவு தாயாராக
சுடுவதற்கு தயாராகும் வேளை
இரவு கருமையை
வெளிச்சத்தில் தடவி விடுகிறது
எண்ணெயெடுத்து கல்லில் தடவ
சூடாகும் தருணங்களில்
கரண்டியில் உள்ள மாவு வட்டமிடுகிறது
நிலா தன் பங்குக்கு சாளரம் வழி
எட்டியும் பார்க்கிறது
அமாவாசயில் மட்டுமல்ல
பௌர்ணமியிலும் எனக்கான தோசை
வட்டமாகவே இருக்கிறது
நிலா இரண்டிற்குமிடையில் வட்டத்தை
சுருக்கியும் பெரிதாக்கியும் கொள்கிறது…
வட்ட வடிவ நிலாவே
மனதை வசியம் செய்கிறது
பிறையும் மனதை கவ்வுகிறது
நகத்தில் மீதமிருக்கும் வானவில் போல…
தோசையில் கருகல் மெலுசு
எல்லாமே சுவையாக்குகிறது
நிலா ரசனைகளை இதயம் வழி கடத்தி
மொட்டைமாடியை அத்தை மகளுக்காய்
தாரை வார்க்கிறது…
தோசை மாவில் அம்மாவுக்கு அப்பாவுக்கு
என கணக்கு வைக்க
நிலா மட்டும் கணக்கு வைப்பதில்லை
ஒவ்வொருவருக்கும் திலகமாகி விடுகிறது…
தோசை நிறைவதில்லை
நிலா நிறைந்துவிடுகிறது…..