கட்டுரைகள்
Trending

புதிய மாதவியின் ‘பச்சைக் குதிரை’ நாவல் வாசிப்பு அனுபவம் – இறை.ச. இராசேந்திரன்

கொரானா நம்மை மட்டுமல்ல, நம் நாட்டை மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகையே இயங்க விடாமல் முடக்கிப் போட்டுவிட்டது. உலக வல்லரசுகளெல்லாம் இயற்கை முன் மண்டியிட்டுக் கிடக்கிறது. ஆதி காலந்தொட்டு அருளாட்சி நடத்தி வந்த தெய்வங்கள் எல்லாம்  கொரானாவுக்குப் பயந்து மலையேறி தப்பித்து ஓடிவிட்டன. இயற்கையை நேசிக்கும் மனிதநேய பண்பாளர்கள் மட்டுந்தான் கொரானாவோடு போரிடுகிறார்கள். அந்த மனிதநேயம் இந்தியாவில் புத்தனில் ஊற்றெடுத்து வள்ளுவம், அம்பேத்காரியம், பெரியாரியம் என பெருவெள்ளமாய் பெருக்கெடுத்து இந்தியத் தெருக்களில் மனிதநேய தாகம் தணிக்கிறது. 

கொரானா தந்த வீட்டுச் சிறையிருப்பு பல நல்ல புத்தகங்களை படிக்கும் வாய்ப்பைக் கொடுத்தது. நான் நேற்று படித்த அல்லது அதோடு வாழ்ந்த ஒரு புத்தகம் புதியமாதவியின் ‘பச்சைக் குதிரை’ நாவல். சமாதான மேரி, செந்தாமரை, சங்கீதா, கண்மணி என்ற நான்கு பெண்களின் வாழ்க்கைச் சூழலை உள்ளெடுத்து ஒழுகுகிறது நாவல்.  

மும்பையில் பிறந்து வளர்ந்து, படித்து இலக்கியத்துறையில் பல சாதனைகள் செய்த, செய்து கொண்டிருக்கும் புதியமாதவியின் முதல் நாவல். தமிழகக் கிராமங்களில் தொலைந்து போன எண்ணற்ற விளையாட்டில் பச்சைக் குதிரையும் ஒன்று. பச்சைக் குதிரை விளையாட்டில் ஒருவர் குனிந்து நிற்க, நான்கைந்துபேர் ஒருவர் பின் ஒருவராய் தாண்டிக் குதிப்பார்கள். குனிந்து நிற்பவர் குதிரையேறி தாண்டும் முறை வரும்முன் சில நேரங்களில் விளையாட்டு முடிந்துவிடும். சமா தன் காதலனோடு கூடிக்களித்த காதல் நெருப்பின் கதகதப்பிலும் அதனால் ஒழுகும் கண்ணீரின் வெதுவெதுப்பிலுமே வாழ்க்கையை ஓட்டிச் செல்கிறார். காதலன் முலையின் மச்சத்தைத் தடவிப் பார்த்து ‘‘நீ மச்சக்காரிடீ..’’ என்று சொன்ன சொல் வாழ்க்கையின் செல்வமாய், அடிக்கடி நினைவில் நிறுத்தி மோகிக்கும் போதையாய் தங்கிப்போனது. இளக்கமான இடத்தில்தான் கடப்பாரை ஆழமாய் இறங்கும். சமாவிடம் முடிந்த அளவு பணம்பறிக்கும் அக்கா ஆரோக்கிய மேரி பாசமாய் இருந்தாலும் அது அவள் வளர்க்கும் பசுமாட்டுக்குக் வைக்கும் தவிடும் புண்ணாக்கும் போல்தான். பால் வேண்டுமானால் தவிடும் புண்ணாக்கும் போட்டுதானே ஆகவேண்டும். திருமணம் ஆகவில்லை என்றால் ஆணோ பெண்ணோ குடும்பத்துக்கு நேந்துவிட்ட பால்மாடுதான். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கறந்து கொள்ள வேண்டியதுதான். அந்த பரிதாப நிலைக்கு ஆளாகி காலம் முழுக்க யார்யாரோ குதிரையேற குனிந்தே வாழும் சமாதான மேரி நம் மனதில் நிறைந்த பாத்திரம்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலில்தான் வேறுபாடு. குணத்திலோ, வாழ்க்கை முறையிலோ வேதனையிலோ, இன்பத்திலோ இல்லை அல்லவா? செந்தாமரை தமிழக அரசியல் பொறிக்குள் மட்டிக்கொண்ட கொழுத்த மான்குட்டி. வேட்டைச் சமூகம் விட்டு வைக்குமா என்ன? காலப்போக்கில் தன்னை வேட்டையாடி பசித்த மதர்த்த சிங்கங்களைத் தேடி இறையாகி, முடியும் மட்டும் வயிற்றை கழுவி அல்லல் படுகிறாள். செந்தாமரை சமாவை பார்க்கக் கூசுகிறாள். சந்திக்க மறுக்கிறாள். ஆயிரம் அழுக்குகளை அள்ளிக் குவித்து மேடை இட்டு அதன் முகட்டில் சமூகம் விரும்புவதைப்போல சம்மணமிட்டு மனது உட்கார்ந்து கொள்கிறது. அந்த அழுக்கை காதல் விரதம் இருக்கும் சமா கண்டுக்கொள்ளக் கூடாதே என்ற பயம்.

டாக்டர் சங்கீதவுக்கு மட்டுமே கொஞ்சம் வலியற்ற வாழ்க்கை. நட்புக்கு நன்றிக் கடன்பட்டு நிற்கும் தோழி. படித்த பெண்கள் என்பதால் தொடர்பில் இருக்க வாய்ப்பு கிட்டியிருக்கிறது. இல்லை என்றால் குழந்தை குட்டி, கணவன் என்று வேறொரு சிறை வாழ்க்கை வாய்த்திருக்கும். படிப்பும் தொலைத்தொடர்புக் கருவிகளாலும் இன்று பெண்களுக்கு சின்னதாய் வானம் கிடைத்திருக்கிறது. அதுவும் பறப்பதற்கல்ல. பார்ப்பதற்கு மட்டுந்தான்.

மும்பை என்றாலே நிழல் உலகத்தை ஒருகாலத்தில் தன் சட்டைப்பையில் வைத்திருந்த வரதராசனாரை தவிர்க்கமுடியாது. புதியமாதவி அவரையும் கதைக்குள் இழுத்து மும்பையின் பழைய நினைவுகளை சுவையாக சுட்டி கண்மணி பாத்திரத்தை முடைகிறார். மும்பையில் பணத்தில் புரளும் பலரின் வாழ்க்கை எப்படியெல்லாம் புரண்டு சம்பாதிக்கிறார்கள் என்பதற்கு கண்மணியின் அம்மாவும் அப்பாவும் ஒரு சின்ன அடையாளம். மும்பை போன்ற நகரங்களில் பணம் தேடுதல் சிலருக்கு வேண்டிமானால் அறத்தோடு வாய்க்கும். பலபேருக்கு? இங்கே உழைப்பிற்கு ஏத்தக்கூலி தொண்ணூறு விழுக்காடு கிடைப்பதில்லை. கையெழுத்துக்கு ஒரு சம்பளம். கையில் கிடைப்பது ஒரு சம்பளம். ஒட்டுமொத்த சமூகமுமே ஒவ்வொரு தனிமனிதனை குற்றம் செய்யவே தூண்டுகிறது. குற்றம் செய்வது சமூகக் கடனாய் மாறி நிற்கிறது. படித்த கண்மணி மிரண்டு தவறாய் தன் காதலனை தேர்ந்தெடுக்கிறாள். ஆனாலும் சமாவின் காதலனின் மகளின் காதல் வாழ்விற்கு காப்பரண் கொடுக்கிறாள். மண்பிடிப்பே இல்லாமல் வாழை அண்டி கற்குவியலில் கிடந்தாலும் கன்று விடுவதைப்போல, சமூகத்தில் எந்த நிலையில் அழுந்திக் கிடந்தாலும் மனிதநேயம் தளிர்க்கண் திறந்து அறம் பேணவே செய்கிறது.

வில்சன் சமாவை ஏமாற்ற வில்லை என்பதை நூறு விழுக்காடு மெய்ப்பிக்க தன் மகளை அவள் காதலனோடு தொடர்வண்டியில் அனுப்பிவைக்கும் காட்சி, கடைசியில் ஊரில் நடந்த சாதி வெறிக்கு வில்சன் பலியான காட்சியை பூடகமாக உணர்த்துவது இவை எல்லாம் புதியமாதவியின் கலை நேர்த்தியைக் காட்டுகிறது. 

பச்சைக் குதிரையின் பயணம் பெண்களின் வெளியே தெரியாத சீழ்கட்டிய வலிகளோடும் அதையும் தாண்டி அவர்களின் சமூகப் பங்களிப்போடும் முற்றுகிறது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button