#யாருமற்று ஊர்ந்து செல்லும்
பின்மதிய தார்ச் சாலை அறிவிக்கிறது
அது ஞாயிறென்று
வாரம் முழுவதும் நாட்களைத் தொலைத்து
வாழ்க்கைக்கு உழைப்பதாய் சொல்லுகிற யாவரும்
உலரப் போட்டிருக்கிறார்கள் நைந்த இருதயங்களை
படபடக்கும் ஈரத்துணிகளின் இடையிடையே
அவர்களால் சோம்பேறிப் பைத்தியமென
பெயரிடப்பட்ட அவன் மட்டும் தனித்து நடக்கிறான்
உலர்ந்து கொண்டிருக்கும் இருதயங்களை எண்ணியபடியே
நாய் குட்டியென மெல்ல
உடன் வருகிறதவன் வாழ்க்கை
நிழல் போல
ஏதோ ஒரு குறுக்குத் தெருவிலிருந்து
தெறித்து விழுகின்றது ஒரு பிரசங்கியின் குரல்
பறவைகளைப் பாருங்கள்
அவை விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை…
#வழிதவறிய புன்னகையொன்று
ஒப்பனைகள் கலைக்காத விதூஷகனை
சந்திக்க நேர்ந்தது.
பரிகசிப்புகளெனவே எல்லா புன்னகைகளையும்
இதுகாறும் நினைத்திருந்த அவனுக்கு
புன்னகைகளின் பிரிதொரு
பரிமாணத்தை அறிமுகம் செய்தது.
துருவேறிய இதயத்தின் எடையை
ஒரு புன்னகை எத்தனை இலகுவாக்குமென
அன்றவன் உணர்ந்து கொண்டான்.
ஆனந்தித்து விழிகளில் நீர் தளும்ப
நின்றிருந்த அவனை
ஆதரவாய் அள்ளியெடுத்து உச்சி முகர்ந்ததந்த
புன்னகை
வழியும் நீரே ஒப்பனைகளைக் கலைத்திட
அக்கணத்தில் தானும் மனிதனாயுணர்ந்தான்.
அவை (பறவைகள்) விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை
துருவேறிய இதயத்தின் எடையை
ஒரு புன்னகை எத்தனை இலகுவாக்குமென
அன்றவன் உணர்ந்து கொண்டான்.
போன்ற வருணணின் கவிதை வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன. கவிதைக்கு தலைப்பு கொடுத்திருக்கலாம். இருதயம் என்பதை இதயம் என உபயோகத்திருக்கலாமோ என்று எனக்குத் தோன்றியது. பைபிள் இதயத்தை இருதயம் என்று வாசித்ததாக ஞாபகம்.. சொ பிரபாகரன்