‘பாரடாக்ஸ்’ (Paradox) என்பது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தமிழில் ‘முரண்நிலை’ என்று சொல்லலாம். ‘சரியாக இருப்பதுபோலத் தோன்றுமொன்றைத் தொடர்ந்துபோனால், அங்கே தவறு இருப்பதாகப்படும். மேலும் தொடர்ந்தால், மீண்டும் சரியானதுபோல ஆகிவிடும்’. பாரடாக்ஸைப் புரியவைக்கிறேன் பேர்வழியென்று இப்போது நான் உங்களைக் குழப்பியடித்தேனல்லவா? அதுபோலத்தான் பாரடாக்ஸும் சமயத்தில் உங்களைக் குழப்பும். பாரடாக்ஸை இலகுவில் புரியவேண்டுமென்றால், நம்ம வாசகசாலை அருணையும், திரிஷாவையும் எடுத்துக்கொள்ளுங்கள்…. ‘சேச்சே, நான் சும்மா!’ அருணுக்கும், திரிஷாவுக்கும், பாரடாக்ஸுக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை. இது ஜெஸ்ஸி வாரம் என்பதால், திரிஷாவையும், அருணையும் சும்மா இழுத்துவிட்டேன். அவ்வளவுதான். சரி விசயத்துக்கு வருவோம். நவீன அறிவியல் பெரும்பாலும் கோட்பாடுகளால் கட்டமைக்கப்படுகின்றன. குறிப்பாகக் குவாண்டம் இயற்பியல், கோட்பாடுகளையே கொண்டது. கோட்பாடுகளுக்கும், பாரடாக்ஸுகளுக்கும் எப்போதும் எட்டாப் பொருத்தம். காலப்பயணம் என்னும் அருமையான அறிவியலுக்கு முட்டுக்கட்டை போடுவது பாரடாக்ஸுகள்தான். காலப்பயணத்தை மையமாக வைத்து மூன்று முக்கிய பாரடாக்ஸுகள் சொல்லப்படுகின்றன. அவற்றில் முக்கியமானது, ‘கிராண்ட்ஃபாதர் பாரடாக்ஸ்’ (Grand father paradox) என்பதுதான்.
‘பாட்டனின் முரண்நிலை’ எனப்படும் இந்தப் பாரடாக்ஸ் இப்படித்தான் ஆரம்பமாகிறது. நீங்கள் ஒரு கால இயந்திரத்தைக் கண்டுபிடிக்கிறீர்கள். அதன்மூலம், உங்கள் அப்பாவின் அப்பா இளைஞனாக இருக்கும் காலத்திற்குப் பின்னோக்கிப் பயணமாகிறீர்கள். அப்போது, ஏதோவொரு காரணத்தினால், உங்கள் பாட்டனை நீங்களே கொல்லவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. கொன்றும் விடுகிறீர்கள். அதன்பின்னர் என்ன நடக்கும் என்பதுதான் பாரடாக்ஸே! உங்கள் பாட்டன் இளமையிலேயே கொல்லப்பட்டு விட்டதால், உங்கள் அப்பா பிறந்திருக்க முடியாது. அப்படியெனில், நீங்களும் பிறந்திருக்க முடியாது. நீங்கள் பிறந்திருக்காவிட்டால், உங்களால் காலப்பயணம் செய்திருக்க முடியாது. பாட்டனையும் கொல்ல முடியாது. நீங்கள் கொல்லவில்லையென்றால், பாட்டன் உயிரோடு இருந்திருப்பார். உங்கள் அப்பாவும் பிறந்திருப்பார். பின்னர் நீங்களும் பிறந்திருப்பீர்கள். நீங்கள் பிறந்தால், அப்புறம் என்ன? கால இயந்திரத்தைக் கண்டுபிடிப்பீர்கள். காலத்தால் பின்னோக்கிச் சென்று பாட்டனைக் கொல்வீர்கள். கோட்பாடுகளின்படி இவையெல்லாம் சாத்தியம்தான். இப்படியே இது ஒரு முரண்பட்ட சிக்கலாகச் சுற்றிக் கொண்டிருக்கும். காலப்பயணத்தின் சாத்தியத்தையும் கெடுக்கும். இதனாலேயே காலப்பயணம் என்பது சாத்தியமே இல்லை என்று சொல்லும் அறிஞர்களும் உண்டு.
இதுபோலவே, பூட்ஸ்ட்ராப் பாரடாக்ஸ் (Bootstrap paradox) என்றொரு பாரடாக்ஸும் உண்டு. இங்கும் காலப் பயணம்தான். நீங்கள் ஒரு கால இயந்திரத்தைச் செய்ய விரும்புகிறீர்கள். எவ்வளவோ முயன்றும் அதைச் செய்வதில் சிக்கல் வருகிறது. அப்போதுதான் உங்கள் அப்பாவின் அப்பாவின் அப்பா அதாவது உங்கள் பூட்டன், எழுதிய ஒரு குறிப்புப் புத்தகம், ஒரு பழைய பெட்டியிலிருந்து உங்கள் கைக்குக் கிடைக்கிறது. அதில் கால இயந்திரம் செய்வதில் உங்களுக்கேற்பட்ட சிக்கலுக்கான தீர்வு எழுதப்பட்டிருக்கிறது. பூட்டனும் கால இயந்திரம் செய்வதில் மெனக்கெட்டிருப்பதும் தெரிய வருகிறது. அந்தக் குறிப்புகளை வைத்துக்கொண்டு கால இயந்திரத்தின் வடிவமைப்பை முழுமைப்படுத்துகிறீர்கள். நீங்கள் முழுமைப் படுத்தியவற்றையும் அந்தக் குறிப்புப் புத்தகத்தில் குறிக்கிறீர்கள். கால இயந்திரம் ரெடி. எங்கே போவது? உங்களுக்கு ஒரு ஐடியா தோன்றுகிறது. அந்த இயந்திரத்தின்மூலம் உங்கள் பூட்டனின் காலத்திற்குச் செல்கிறீர்கள். நீங்கள் சென்ற சமயத்தில் அவர் இருக்கவில்லை. உடன் நீங்கள் திரும்ப வேண்டுமென்பதால், அவரின் மனைவிடம் (பூட்டி), அந்தக் குறிப்புப் புத்தகத்தை அவரிடம் கொடுத்துவிடும்படி சொல்லிவிட்டுத் திரும்புகிறீர்கள். பூட்டன் வருகிறார். கால இயந்திரம் செய்வதுபற்றிய குறிப்புக் கிடைக்கிறது. அதை வைத்துக் கொண்டு ஒரு இயந்திரத்தைத் தயாரிக்க முயல்கிறார். இங்கு நடந்தவற்றையெல்லாம் பூட்டனின் காலத்திலிருந்து திரும்பவும் மீட்டுப் பாருங்கள். இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள். அந்தக் குறிப்புப் புத்தகத்தை எழுதியது யார்? அந்தக் கால இயந்திரத்தை தயாரிக்க உதவியது யார்? தலை சுற்றுகிறதல்லவா? இதுதான் காலணிநூல் முரண்நிலை (Bootstrap paradox). ‘Dark’ என்னும் அருமையான நெட்ஃபிளிக்ஸ் தொடரின் இரண்டாம் பகுதியில், இந்த காலணிநூல் முரண்நிலையை வைத்து ஒரு கதை சொல்லப்படுகிறது. முடிந்தால் பாருங்கள்.
மூன்றாவது பாரடாக்ஸ்தான் இங்கு முக்கியமானது. கொஞ்சம் மனதைக் கலங்க வைக்கும் பாரடாக்ஸும் கூட. இதற்குப் பெயர் ‘பிரீடெஸ்டினேசன் பாரடாக்ஸ்’ (Predestination paradox) என்பதாகும். இதுவும் காலப்பயணம் சம்மந்தமானதுதான். ஒருவன் கால இயந்திரத்தின் மூலம் சில ஆண்டுகள் பின்னோக்கிப் பயணமாகிறான். அங்கு அவன் ஒரு அழகிய இளம் பெண்ணைக் காண்கிறான். ஏதோவொரு தப்பான தருணத்தில் அவளின் கர்ப்பத்திற்கு இவன் காரணமாகிவிடுகிறான். பின்னர், தன் தவறை அறிந்து மீண்டும் நிகழ்காலத்திற்கே வந்துவிடுகிறான். இறந்தகாலத்தில் இவனால் கர்ப்பமான பெண்ணை, அவளது காதலன் ஏற்றுக்கொண்டு திருமணம் செய்கிறாள். அவளுக்குக் குழந்தையும் பிறக்கிறது. ஆனால், வாகன விபத்தொன்றில் அவளும், கணவனும் இறக்கிறார்கள். குழந்தை மட்டும் தப்புகிறது. அந்தக் குழந்தையை வேறொரு தம்பதியினர் எடுத்து வளர்க்கின்றனர். குழந்தை வளர்ந்து பெரிய விஞ்ஞானியாகிறது. வளர்ந்த குழந்தை வேறு யாருமில்லை, இவனேதான். அதாவது, இவனுக்குத் தகப்பன் இவனே! இது மாபெரும் முரண்நிலை. நடக்கவே முடியாத ஆனால், நடக்கக்கூடிய முரண்நிலை. நவீன இயற்பியலின்படி, காலப்பயணம் சாத்தியமானால், இப்படியான சம்பவமும் சாத்தியமாகலாம். இதை வைத்துக்கொண்டே Predestinatrion என்னும் திரைப்படத்தின் கதையும் நகர்கிறது. காலப்பயணத்தைச் சொல்லும் மிகவும் குழப்பமான கதையமைப்புக் கொண்டது இந்தத் திரைப்படம். பாரடாக்ஸுகளை உள்ளடக்கிய படம். பார்க்காவிட்டால், நிச்சயம் பாருங்கள்.
என் நினைவு சரியாக இருக்கும் பட்சத்தில், டேர்மினேட்டர் படத்தின் ஏதோவொரு பகுதியில் இந்தப் பிரீடெஸ்டினேசன் பாரடாக்ஸை கையாண்டிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். சரியாக ஞாபகமில்லை.
தொடரும்…
மூன்று வகை பாரடாக்ஸ்களில் திகில் அனுபவத்தை கொடுப்பதாக மூம்றாவதாக் குறிய predestination paradox இருந்தது. நீங்கள் கூறியவைகளில் ஸ்டாட்டிக் மற்றும் டைனாமிக் டைம்லைன் உள்ளன. இந்த டைம்லைன்கள் பற்றி விளக்க முடியுமா?