கவிதைகள்
Trending

கவிதைகள்- வருணன்

மிக நீண்டதொரு நாள்

உங்களுக்குத் தெரியுமா?
என் வாழ்நாளின் மிக நீண்டதொரு நாள்
பதினெட்டு மணிநேரம் பதிமூன்று நிமிடங்கள் உடையதாய் இருந்தது
யாதொன்றும் செய்யாத அந்நாளில் தான்
என் வாழ்நாளில் செய்ய நினைந்திருந்த சகலத்தையும் செய்தேன்
கனவும் நினைவும், உறக்கமும் விழிப்பும்
என எல்லாமுமாய் இருந்தது அந்நாள், ஏககாலத்தில்
எல்லையற்ற பிரபஞ்சத்தில்- ஒற்றை உயிராய்
திரிதல் போன்ற பித்தேறிய பிரமை நிலை
நினைவுகளின் எல்லைவரை செல்வதற்கான சாத்தியங்கள் நிறைந்த
முடிவற்ற பொழுதினால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தேன்.

கணக்கற்ற காலத்தை செலவழிப்பதற்கான
யோசனைகளோ, திட்டங்களோ கைவசமில்லை
அதற்கு அவசியங்களுமில்லையென ஆறுதல் சொல்லிக் கொண்டேன்
நீண்ட மலைத்தொடரின் இடையிருக்கும் அடர்வனத்துள்
வாழும் கூட்டிற்கான வழியைத் தொலைத்த பறவை போல மனது
இலக்குகளின்றிப் பறத்தல் கடினம்
இறகுகளின்றிப் பறத்தல் அதனினும்…
சிகரம் தழுவிக் கலையும் மேகம் போலான நினைவுகளை
சிரத்தையாய் கூட்டிச் சேர்க்க
ஒவ்வொரு சந்திப்பின் ஞாபகமாய்
ஒரு சிறகைப் பரிசளித்திருந்தது விளங்கியது.

கானலில் நீந்திடும் ஒற்றைச் சருகென
அலைவுறுகிறேன் நிலமமில்லாமல் பிடியுமில்லாமல்
வெறுமைக் கடலினில் அலைக்கழியும் ஒற்றைத் தோனியின்
அடி தூர்த்திடும் முடிவோடு மோதி நுரைக்கும் நினைவலைகள்

நானெடுத்த நிழற்படத்திலுள்ள பூ இன்னும்
மலர்ந்தே இருக்கிறது
நினைவுகளில் வாழும் உன்னைப் போலவே.
மனக்குகையெங்கும்
நாம் சுகித்திருந்த கணங்களின் ஓவியங்களையுனக்கு
வார்த்தைகளால் சுற்றிக் காட்டினேன்
நீயோ நான் சமைக்கும் சொற்களில் தூவிய சில சிட்டிகை
நுண்ணுணர்வுகளை புரிந்து கொள்ளல் கடினமென்கிறாய்.
உனதிந்த இயலாமைகளில் தொக்கி நிற்கிறது
புரிய வைத்திடவியலாத என் பிரியங்களனைத்தும்
ஊற்றெடுக்கும் காதலையும்
அகழ அகழ சொற்களையும் தவிர
வேறென்ன சிறப்பாய் தந்துவிட முடியும்
ஒரு கவிஞனால்!?

**********

ஈதல்

பிரபஞ்ச ரகசியங்களை
தன் அதரங்களில் ஒளித்து வைத்து
நிபுணி போல் வகுப்பெடுக்கிறாள்
தனக்கே தெரியாமல்…

தோள்கள் குறுக்கிய விலங்கின்
ரோமங்கள் நெகிழ்த்தி
சிறகுகள் மறந்த பறவையொன்றின்
இறகுகள் நீவுகிறாள் இதமாக,
பறத்தலுக்கான ஆயத்தமாய்

இடை யிடையே உறங்கிடும்
மகரந்தங்களை துயிலெழுப்பும்
சூட்சுமங்கள் கைகூடுமவளுக்கு
அனாயசமாக
முன்தயாரிப்புகள் ஏதுமில்லாமலேயே

இந்த ரகசியங்களை
அவள் செவிமடல் வருடும்
இடைவேளைகளில் சொன்னால்
அப்படியாவென ஆச்சரியம் கூட்டுகிறாள்
கரங்கள் குவித்து வாய்பொத்தி
தேனடை காக்கும் சிறுவெண் மதிற் பற்கள்
மறைத்தும்
கன்ன மேட்டில் வெட்க வெளிச்சம்
படர விளக்குகள் ஏற்றியும்

கணங்கள் யுகங்களாகும் ரசவாதத்தின்
ஆதி நொடியில்
கரைகள் குறித்த கவலைகள் துறந்து
திசையறியா யாத்திரையில் என்னுடல்
காமப் பெரும்புனலின் இசைவிற்கேற்ப.

**********

உன் நினைவொழுகுமிந்த மழையிரவு

சிறகுகளின்றி துளிகளாய் பிறந்து
காற்றில் மிதந்து
கூரைச் செவ்வோடுகளின் நிறமேற்றி
நிழல் உடை தரிக்காத
நிர்வாண மரமொன்றின் கிளையின்
நுனிச் சுள்ளி தாவி – கீழிறங்கி
துணைக் கிளைகளில் விரவி
அடிமரம் தழுவி
நிலம் நனைத்து
வேர் புணரும் மழை போல,
விரல் வழி ஸ்பரிசங்கள்
நாசி வழி நறுமணங்கள்
பரவும் வெம்மை வழியுன்
அருகாமை
இறுதியாய் சுயம் சேருமந்த முக்தி நிலையென…
உன்னைச் சொல்கிற நினைவுகள்
மெல்லவே வியாபிகின்றன.

**********

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. சிறப்பான கவிதைகள்.. வார்த்தைகளை குறைக்கலாம்… சொ பிரபாகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button