போனில் அழைத்த அந்தப் பெண் அரைமணி நேரத்தில் வந்துவிடுவேனென்று சொன்னாள். இரண்டு மூன்று நாட்களுக்கு மேலாக யோசித்தே முடிவெடுத்திருந்தாலும், அரைமணி நேரத்தில் என்று கேட்டபோது சட்டென்று பதற்றமானான்.
*
பணத்தை கட்டியவுடன், `ஆளை நீங்கள் தேர்வுசெய்கிறீர்களா நாங்களே அனுப்பட்டுமா?’ என்று கேட்டார்கள். அவர்களின் தளத்தில் இருந்தவர்களில் முப்பதுகளின் தொடக்கத்தில் இருந்தவள் அவள் மட்டுமே. திலீபனுக்கு அவனைவிட வயதில் சிறியவர்களைத் தேர்வுசெய்ய விருப்பமில்லை. அவளின் படத்தைப் பார்த்தவுடன் வேறு யாரையும் தேடாமல் அவளைத் தேர்வுசெய்தான். “பார்த்தவுடன் பிடிக்கும் எல்லாவற்றுக்குப் பின்னாலும் ஏதோ ஒரு காரணம் இருக்கும். காரணமின்றி யாரையும் யாருக்கும் பிடிப்பதில்லை. இந்தக் கண்டதும் காதலெல்லாம் காரணங்களை அறிய விருப்பமில்லாமல், அடச்ச… எதற்காக இதையெல்லம் யோசித்துக்கொண்டிருக்கிறேன்’ – அவளின் விபரங்களைத் தேடினான். வயது முப்பது. பெயர் அகல்யா. அதற்குமேல் எந்த விபரமும் இல்லை.
*
அவள் வருவதற்குமுன் அறையைச் சுத்தம் செய்ய நினைத்தான். ஊருக்கு வெளியே இருக்கும் நிறுவனத்தில் வேலை செய்வதால், அங்கேயே ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தான். அறை தோழர்கள் எல்லோரும் வெளி மாநிலத்தவர்கள். ஊரடங்கு அறிவிப்பு வருவதற்கு முன்பே எல்லோரும் சொந்த ஊர்த் திரும்பிவிட்டார்கள்.
`நல்லவேளைப் போனார்கள். இல்லை அவர்கள் இருந்திருந்தால் நான் இப்படி ஒரு யோசனைக்கே வந்திருக்க மாட்டேன். அப்படி என்ன செய்யப்போகிறாய் என இவ்வளவு அலட்டிக்கொள்கிறாய். இது எவ்வளவு பெரிய விஷயம். எது? இதுவா? அவனவன் என்னென்னவோ செய்கிறான். ஆனாலும் நீ இவ்வளவு கோழையாக இருக்கக் கூடாது. யாராவது பார்த்துவிட்டால்? யார் பார்ப்பார்கள். இது உன் ஊர் இல்லை. மேலும், இப்போது உலகமே வீட்டுக்குள்தான் இருக்கிறது’ – நல்லது என்று நினைத்து செய்யும் எந்த விஷயத்துக்கும் இந்த மனம் இவ்வளவு தைரியம் தராது. இது மாதிரி விஷயமென்றால் மட்டும் பார்க்கணுமே அட அட அட…
வீட்டிற்கு வெளியே வந்து ஒருமுறைப் பார்த்தான். அவனின் யமஹா பைக்கும், அவன் அப்பாவின் சைக்கிளும் நின்றுகொண்டிருந்தன. அலுவலகத்துக்கு சைக்கிளில் போகலாமென்றிருக்கிறேன் என்று ஒருமுறைச் சொன்னபோது, “புதுசுலாம் வாங்காத. நான் என்னுத கொண்டுவந்து போடுறேன். சும்மாதான கிடக்கு” என்று அடுத்த வாரமே சைக்கிளோடு ட்ரைனில் வந்து இறங்கினார். அவனைப் பார்த்து திரும்பியிருந்த சைக்கிளின் முன்சக்கரம் “என்னடா இதெல்லாம்” என்று முறைப்பதுபோலிருந்தது.
அப்பாவைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் திலீபனுக்கு கலவையான உணர்வே தோன்றும். கடுமையான உடல் உழைப்பாளி அவர். காலையில் பத்து மணிக்கு ஹோட்டலுக்குப் போனால், இரவு வீடு திரும்ப ஒன்றாகிவிடும். திலீபனின் தாய் மாமா நடத்தும் ஹோட்டலில்தான் வேலை செய்தார். இதுதான் வேலை என்று இல்லை. கல்லாவில் இருப்பார், காய்கறிகள் வாங்கப்போவார். மூட்டைத் தூக்க ஆளில்லை என்றால், அவரே சுமந்து வருவார். “நாமன்னா தூக்க மாட்டோம். மாப்ள கவுரவம் பாக்காம செய்றார்” என்று திலீபனின் மூத்த மாமா அவரைப் பாராட்டும்போது அவனுக்கச் சில சமயம் பெருமையாக இருக்கும். சில சமயம் ஏனோ வருத்தமாக இருக்கும். அப்பாவிடம் கேட்டால், “இதுல என்னப்பா இருக்கு?” என்பார்.
அவனுக்கு விபரம் தெரியத் தொடங்கிய காலத்திலிருந்து மிகச்சமீபம் வரை, அவரை ஞாயிற்றுக்கிழமைகளில் தவிர மற்ற நாட்களில் வீட்டில் பார்த்ததேயில்லை. எட்டு மணி நேரம் பயணம் செய்துகொண்டு வந்து போட்டிருக்கிறாரே ஹெர்குலிஸ் சைக்கிள், அதில் அவரோடு போன ஞாபகம் இல்லை. அவனையும் அவன் தம்பியையும் அவன் அம்மாதான் வளர்த்தாள். பள்ளியில் சேர்த்தது முதல் ஒவ்வொரு தடவையும் உடல்நிலை சரியில்லாமல் போனால், மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு போனது வரை எல்லாமும் அவள்தான். ஒருமுறை மாடியிலிருந்து விழுந்து தாவாங்கட்டை உடைந்து, முகமெல்லாம் ரத்தமாகக் கிடந்தபோது அவன் அப்பா வீட்டில்தான் இருந்தார். திலீபன் எப்போதுமே அந்தக் கணத்தை மறக்க மாட்டான். விழுந்த அதிர்ச்சியில் ஒன்றும் புரியாமல் அழத் தொடங்கியவனை, ஓடிவந்து முதலில் தூக்கினாள் அம்மா. அவளுக்குப் பின்னால் நின்று கவலையோடு கண்கள் கலங்கப் பார்த்துக்கொண்டிருந்தார் அவன் அப்பா. ரத்த வெள்ளத்தில் கிடப்பவனை எட்டி நின்று பார்ப்பவரைப் பற்றி என்ன சொல்வது? அதற்காக அவருக்குப் பாசம் இல்லையென்று சொல்லமுடியாது. என்ன ஓர் அடி தள்ளி இருந்தது அவ்வளவுதான்.
வேலைக்காக அவன் சென்னை வந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் மாதம் ஒருமுறை ஊருக்குப் போனவன், பின்பு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை என்றாகி, அப்படியே இடைவெளி அதிகரித்து, கடைசி இரண்டு வருடங்களில் ஒரு முறைதான் வீட்டுக்குப் போனான்.
திலீபனுக்குத் தனியாக இருப்பது ஒருபோதும் பிரச்னையாய் இருந்ததில்லை. அப்படித்தான் இந்தக் கொரானா தொடங்கும் வரை நினைத்திருந்தான். எப்போது பேசினாலும், “ஏன்டா வரவே மாட்டேங்கிற” என அழும் அம்மாவிடம், அவனால் காரணங்கள் எதுவும் சொல்லாமல் சமாளிக்க முடிந்தது. பலமுறை அறையில் அவன் தனியாய் இருந்திருக்கிறான். சொல்லப்போனால் ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும், எல்லோரும் ஊருக்குப் போய்விடுவார்கள். அவன் அந்த நாட்களுக்காக காத்திருப்பான்.
ஊரடங்கு தொடங்கி சில நாட்கள் வரை உற்சாகமாக இருந்தான் திலீபன். இப்படி ஒரு வாய்ப்பு இனி வாழ்நாளில் எப்போதுமே கிடைக்கப்போவதில்லை என்று மகிழ்ந்தான். மொட்டை மாடியில் போய் மணிக்கணக்காக உட்கார்ந்திருந்தான். அங்கொன்றும் இங்குகொன்றுமாய் வாகனங்கள் போகும் சாலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தான். வழக்கத்துக்கு மாறாய் வீட்டிலிருந்து வரும் அழைப்புகளைத் தவறவிடாமல் எடுத்துப் பேசினான். எழுதாமல் கிடந்த டைரியைத் தன் குப்பைக் கூளத்திலிருந்து தேடி எடுத்தான். அவ்வப்போது பாடல்கள் கேட்டான். வாசிக்காமல் கிடந்த சில புத்தகங்களை வாசித்தான். Corona is a blessing in disguise என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டான்.
எல்லாம் அவன் விரும்பியபடி போய்க்கொண்டிருக்கும் அதேவேளையில், கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றின் மீதும் சலிப்பு ஏற்படுவதை அவன் கவனிக்கத் தவறவில்லை. வாயில் போட்ட சக்கரை கரைவது சரிதான். நாக்கில் எஞ்சுவது ஏன் கசக்கிறதென்று குழப்பமடைந்தான். பத்து நாட்களில் முற்றிலும் தன்வசம் இழந்தான்.
வீட்டுக்கு அவனே அழைத்துப் பேசினான். அவர்களிடமிருந்து அழைப்பு வர சற்று தாமதமானால்கூட, “அப்படி என்ன வெட்டி முறிக்கிறீங்க” என்று கத்தினான். தூங்கும்போது அறை விளக்கை எரியவிட்டான். எல்லோரும் அடைபட்டுக் கிடக்கும் நாட்களில் தனது வீட்டுக் கதவுகள் மட்டும் திறந்துகிடப்பதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. “அதுநாள் வரை அவன் விரும்பிய தனிமைக்கு என்னாயிற்று? ஏன் இவ்வளவு பயமாய் இருக்கிறது. ஏன் வீட்டுக்குப் போகத் துடிக்கிறது மனம்? ஏன் அம்மாவின் மடியில் தலை சாய்த்துகொள்ள வேண்டுமென வெறி ஏற்படுகிறது?” – கேள்விகளால் நிரம்பி வழியும் ஒவ்வொரு நாளையும் பிடித்து தள்ள வேண்டியிருந்தது அவனுக்கு.
இணையத்தை மேய்ந்துகொண்டிருந்த அப்படி ஒரு நாளில்தான் அந்த விளம்பரம் அவன் கண்ணில் பட்டது. `Professional Cuddlers – கொரானாக்காலத் தனிமையைப் போக்க எங்கள் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்’ என்றொரு விளம்பரத்தைப் ஃபேஸ்புக்கில் பார்த்தான். இந்த Professional Cuddling பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும், இந்தியாவில் அதுவும் சென்னையில் இருக்குமென்று அவனால் நம்பமுடியவில்லை.
Cuddlers பாலியல் தொழிலாளிகள் இல்லை. அவர்களுடன் உறவில் ஈடுபட முடியாது. அவர்கள் பல்வேறு காரணங்களால் மன அழுத்ததுக்கு ஆளானோர்க்கு, சக மனித ஸ்பரிசமே இல்லாமல் தனிமையில் வாடுவோர்க்கு அவர்களுக்குத் தேவையான அணைப்பை கொடுப்பவர்கள். ஒரு குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் தாய்போல் உடனிருந்து கவனிப்பார்கள். அவர்கள் மடியில் உறங்கலாம், பக்கத்தில் படுத்துக்கொண்டு தலையைக் கோதச் சொல்லலாம். தழுவிக்கொள்ளலாம். ஒரு மணி நேரத்துக்கு ஆயிரம் ரூபாய் என்கிற கட்டணம் அவர்களின் சேவைக்குக் குறைவுதான்.
I never had a hug! Not from my father.. not from my mother, not from my brother, not even from my friends. I would love to have my first hug! அந்த விளம்பரத்தைப் பார்த்தவுடன் பிடித்துப்போனாலும், இரண்டு நாட்கள் தீவிரமாக யோசித்தான். எப்படியெல்லாமோ அதைக் கற்பனைச் செய்துப் பார்த்தான். பின், ஒரு வேகத்தில் பணத்தைக் கட்டிவிட்டான்.
*
“உங்கள் வீட்டுக்கு வெளியேதான் நிற்கிறேன்” – மீண்டும் போனில் அழைத்துச் சொன்னாள்.
திலீபன் போய்க் கதவைத் திறந்தான்.
ஜீன்ஸ், டீஸர்ட், கண்ணாடி சகிதம் நின்றுகொண்டிருந்தப் பெண்ணைப் பார்த்து, ஒரு நிமிடம் திகைத்துத்தான் போனான். போட்டோவில்விட நேரில் இன்னமும் அழகாக இருந்தாள்.
“மே ஐ கம் இன்?” என்று கேட்கவும், “எஸ் ப்ளீஸ்?” தள்ளி நின்று அவளுக்கு வழிவிட்டான்.
உள்ளே வந்ததும், “நான் குளித்துவிட்டு வந்துவிடுகிறேன். நீங்களும் குளித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்றாள். “கையில் க்ளவுஸ் அணிந்திருந்தாள். “மாஸ்க்க இப்பதான் தூக்கிப்போட்டேன்” என்றாள்.
“ஜஸ்ட் கேம் அவுட் ஆஃப் த ஷவர்” படபடப்பாகப் பேசியவனைப் பார்த்துச் சிரித்தவள், “டோன் பி நெர்வஸ்” என்று சொல்லிவிட்டு, குளியலறை எங்கிருக்கிறதென அவனிடம் கேட்டுக் குளிக்கச் சென்றாள்.
சிறிது நேரத்திலேயே வந்துவிட்டாள். வேறு டீஷர்ட்டும் ஜீன்ஸும் அணிந்திருந்தாள். திலீபனுக்கு அவள் அவ்வளவு சகஜமாக இருப்பது ஆச்சர்யமாய் இல்லாவிட்டாலும், ஏற்றுக்கொள்வது சுலபமாக இல்லை. பல நாள் பழகிய இடத்துக்கு வந்தவளைப்போல் அவள் நடந்துகொள்வது, அதுவும் தன் இடத்துக்கு வந்துவிட்டு, தன்னை பதற்றப்படாதீர்கள் என்று சொல்வதெல்லாம் வேறதான் என நினைத்துச் சிரித்தான்.
பள்ளியில் படிக்கும்போது நடந்த சம்பவம் ஒன்று அவன் நினைவுக்கு வந்தது. வகுப்பு ஆசிரியை வீட்டுக்குப் படிக்கச் செல்வான். ஒருநாள் போகும்போது காய்ச்சலால் உள்ளறையில் இருந்தார் அவர். எப்போதும் ஹாலில்தான் டியூசன் நடக்கும். அன்று வேறு வழியில்லாமல் அவர் இருந்த அறைக்கு உள்ளே அனுமதித்தார். அதற்கே அவரது கணவர் வந்தபோது, “பசங்கள எல்லாம் ஹாலைத் தாண்டி வரவிடாத” என்று ஆசிரியையைத் திட்டினார். அவருக்கு வயது நாற்பது இருக்கும். திலீபன் பதினொன்றாவது. அவன் ஊரில் இருந்து சென்னை நூறு கிலோமீட்டர்தான். ஆனால், அவளைப் பார்த்தபின் அதைவிடப் பல நூறு கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கிறதென நினைத்துக்கொண்டான்.
“நேர்முகத் தேர்வில் அமர்ந்திருப்பவனைப்போல் சோபாவின் நுனியில் உட்கார்ந்திருவனைப் பார்த்து “I understand it is awkward, don’t worry…let’s take it slow” என்று சொல்லிக்கொண்டே அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.
“சானிடைசர் இருக்கா?” திலீபன் கொண்டுவந்து கொடுத்தான்.
“உங்களுக்குத்தான். ப்ளீஸ் யூஸ் இட்” சிரித்துக்கொண்டே சொன்னாள்.
அவனும் சிரித்துக்கொண்டே கையைச் சுத்தப்படுத்திக்கொண்டாலும், அவள் அப்படிச் சொன்னவுடன் ரிஸ்க் எடுக்கிறோமோ என்று தோன்றியது.
பேச வாயெடுத்தவனை மறித்து, “என்னைப் பற்றி எதுவும் கேட்கக் கூடாது” என்று ஆரம்பத்திலேயே அணைப் போட்டாள்.
“இது உங்க ஃபுல்டைம் ஜாபா?”
“இல்ல..”
“நல்லவேள. இல்லன்னா இந்தக் கொரானாக்கு அப்றம் உங்களுக்கு கஷ்டமா போயிடும். மக்கள் பயப்படுவாங்கள்ல?” சதுரங்கத்தில் தவறான நகர்த்தலைச் செய்தபின் எதிராளி அதைக் கண்டுபிடித்துவிடுவானோ என்று பதற்றப்படுவதைப்போல் அதைச் சொன்ன பின்பு உணர்ந்தான். அவள் பதிலுக்கு ஒரு கேள்வி கேட்டால் முகத்தைத் தொங்கப்போடும்படி ஆகிவிடும்.
அவளும் மிகச் சரியாக அந்தக் கேள்வியைக் கேட்டாள். “ம்…ம்? அப்படியா? அப்றம் நீங்க எப்படி இந்த செர்வீச avail பண்ணீங்க?” திலீபன் அசடு வழிந்தான்.
சோபாவில் காலை மடக்கி அமர்ந்துகொண்டு அவனைப் பக்கத்தில் அழைத்தாள். “How about a bear hug first?” திலீபனுக்கு லேசாக உதறல் எடுத்தது. அவனுக்கு காதலிகளோ, பெண் தோழிகளோ இல்லை. இதற்கு முன் ஒரு பெண்ணோடு தனித்திருந்தது கிடையாது. அதைப் பற்றி அவன் நினைத்துப் பார்த்துகூட இல்லை. அப்படியிருக்கையில் தன் அறையில் ஒரு நவ நாகரீக மங்கையோடு இருப்பது நிச்சயம் கனவுதான் என நினைத்தான். அவள் காத்திருந்ததைப் பார்க்கையில் அவனுக்கு வெட்கமாகவும் இருந்தது.
திலீபன் அவள் முகத்தைப் பார்த்தான். நல்ல உயரம். நின்றால் அவனைவிட ஒரு இன்ச் அதிகமாகத்தான் இருப்பள். குளித்துவிட்டு வந்தபின், தலைமுடியை விரித்து விட்டிருந்தாள். எவ்விதப் பதற்றமும் இல்லாமல் நிதானமாய் இருந்தாள். அனுபவசாலி போலிருக்கிறது. அப்படி நினைக்கையில் ஒரு நொடி தோன்றிய அருவருப்பும் கோபமும் நொடியிலேயே மறைந்துபோனது.
அப்படியே உட்கார்ந்திருந்தவனின் கைகளை எடுத்து, தன் இரு தொடைகளின் மீதும் வைத்தாள் அகல்யா. திலீபனுக்கு உடல் எடை குறையத் தொடங்கியது. அவனை அறியாமலேயே முன்னால் நகர்ந்து வந்தான். அகல்யா அவன் தோள்களின் மீது கையை வைத்து இழுத்து, அவள் மேல் சாய்த்துக்கொண்டாள்.
காலங்காலமாக திரைப்படப் பாடல்களில் வருவதைப்போல்தான் அந்தக் கணத்தை உணர்ந்தான் திலீபன். பூப்பந்தை மார்பில் சாய்த்துகொண்டதுபோல் இருந்தது அவனுக்கு. பெண்கள் மிருதுவானவர்கள்தான் என்பதை முதன்முதலாக தெரிந்துகொண்டான். அகல்யா அவன் முதுகில் தடவிக்கொடுக்கத் தொடங்கினாள். அவன் காதருகே மெதுவாக “ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்” என்றாள்.
“Won’t you be sexually aroused?” என்று கேட்டான் திலீபன்.
“I have to attend six customers today. நாங்க கஸ்டமர்ஸ நோயாளிகளாப் பாக்குறோம். இது ஒரு வகை ட்ரீட்மெண்டு அவ்வளவுதான்.” – ஏன்டா கேட்டோமென்று ஆகிவிட்டது அவனுக்கு.
“நம்பி வந்திருக்கிறாள், மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும். அப்படி ஒன்றும் என்னை நம்பியெல்லாம் வந்திருக்க மாட்டாள். நான் என்ன அவளின் காதலனா நம்புவதற்கு. அவள் குறித்த நேரத்துக்குள் திரும்பவில்லையென்றால், ஆட்கள் தேடி வரலாம். பெப்பர் ஸ்ப்ரே வைத்திருக்கலாம். ஏன் துப்பாக்கிகூட இருக்கும். எதற்காக இதையெல்லாம் யோசிப்பானேன்.. Let’s enjoy this moment”
திலீபனுக்கு தன் பள்ளி வயது “Crush” நினைவுக்கு வந்தாள். ஏதோ ஒரு விஷயத்துக்காக, `யார்ட்டயும் சொல்லக் கூடாது ப்ராமிஸ்’ என்று கை நீட்டியவளின் மீது, கை வைத்து சத்தியம் செய்வதற்குப் பதிலாக அவள் உள்ளங்கையில் கிள்ளி விட்டுவிட்டான். அன்று பேசாமல் போனவள்தான் பன்னிரெண்டாவது முடிந்து போவது வரை பேச்சுவார்த்தை இல்லை.
திலீபன் சிரித்தான். “What happened?” என்று கேட்ட அகல்யாவிடம், “ஒன்றுமில்லை” என்று சொன்னவன், “கொஞ்சம் மடில படுத்துக்கலாமா” எனக் கேட்டான்.
“sure”
பெண்களிடம் பழகுவதே அவனுக்குச் சங்கடமான காரியம்தான். வேலைக்கு வந்த புதிதில் வேலையைவிட அணியிலிருந்த பெண்களிடம் பேசுவதைக் கற்றுக்கொள்ளத்தான் மிகவும் சிரமப்பட்டான். எதற்கு எப்போது எப்படி எதிர்வினையாற்றுவார்கள் அவனால் புரிந்துகொள்ள முடிந்ததேயில்லை. இரண்டு நிமிடங்கள் சேர்ந்தார்போல் அவர்கள் முகம் பார்த்து பேசமுடியாமல் சிரமப்படுவான்.
அகல்யா கிளம்பிப்போகும்போது மறக்காமல் நன்றி சொல்ல வேண்டுமென நினைத்துக்கொண்டான்.
நேரம் ஆக ஆக அகல்யாவிடம் முழுவதுமாக சரணடையத் தொடங்கினான் திலீபன். ஆரம்பத்தில் ஏற்பட்ட சிறு சலனத்தின் சுவடே பின்பு இல்லை. ஒருவரை அணைத்துகொள்வதில் இவ்வளவு ஆச்சர்யங்கள் இருக்க முடியுமா என்று வியப்பாக இருந்தது அவனுக்கு. நம் ஊரில் ஏன் யாரும் யாரையும் அணைத்துகொள்வதில்லை. கணவன், மனைவிகூட நான்கு சுவருக்குள்தான் அந்நியோன்யமாக இருக்க அனுமதிக்கப்படுவது எதனால்? அவன் ஆசிர்வதிக்கப்பட்டுக்கொண்டிருப்பதாக உணர்ந்தான். அவன் மனதில் இருந்த பல அழுக்குகள் மறையத் தொடங்கின. பலப் பல விசயங்கள் மனதில் அவன் அப்பாவைப்போல தள்ளித் தள்ளி இருந்தன. அவையெல்லாம் நெருங்கி வரத்தொடங்கின. “அப்பா.. Yes.. just one hug will bring him closer to me. All these years of distance will disappear in matter of seconds.. I will hug him.. I will make sure he hugs me too….”
அகல்யாவை எவ்வளவு இறுக்கமாக அணைத்துக்கொள்ள முடியுமோ, அவ்வளவு இறுக்கமாக அணைத்துக்கொண்டான். அவளும் அவன் மேல் ஒரு கொடியைப்போல் படர்ந்தாள்.
*
அகல்யா ஒரு மணி நேரம் முடிந்தவுடன் கிளம்பிச் சென்றாள். அவள் போன பிறகு மிகவும் உற்சாகமாக உணர்ந்தான் திலீபன். அப்போதும் அவன் அறை யாருமில்லாத அறைதான். எனினும் சுவர்களெல்லாம் பளிச்சென்று தெரிந்தன. சோபா, கட்டில், லேப்டாப், அழுக்குத் துணி மூட்டை எல்லாமும் அவனையே ஆர்வமாய்ப் பார்ப்பதுபோல் இருந்தது. “What? Why are you guys looking at me differently? Same me.. same old Dileepan”
மழையில் நனைந்த ஒட்டகம்போல் கழுத்தை நீட்டிக்கொண்டு அறையைச் சுற்றிச் சுற்றி வந்தான்.
ஊரடங்கை இன்னும் ஒரு மாதம் நீட்டித்தாலும் சமாளிக்க முடியுமென்கிற தைரியம் வந்தது. அதற்கும் மேலென்றால் இன்னொரு ஒரு மணி நேரம் தேவைப்படலாம் என்று நினைத்து சிரித்தான்.
வீட்டுக்கு அழைத்தான்.
“ஹலோ?” எதிர்முனையில் அவன் அப்பாவின் குரல் கேட்டது.