தின்னக்கம் – முத்துராசா குமார்
எக்கச்சக்க கல்வெட்டுத் தழும்புகளாலான திருவேடகம் ஏடகநாதர் கோயில் நூற்றாண்டுகள் கடந்த பழந்தொன்மையானது. வைகைக் கரையில் இருக்கிறது. கோயிலிலிருந்து கொஞ்ச நடை தூரத்திலுள்ள தர்கா, பரப்பளவில் சிறிதானாலும் கோயிலின் வயதிற்குக் கொஞ்சம் நெருங்கி வரும். தர்காவின் தலைவாசலில் முறுக்குக்கம்பிகள் வெளியே தெரியும் கான்க்ரீட் நிழற்குடை உள்ளது. பேருந்துகள் நிறுத்தத்திற்கான இடமது. லித்தோ போஸ்டர்களையே தனது தோலாக்கிக் கொண்ட நிழற்குடைக்குள் காலியான சரக்குப் பாட்டில்கள், கசக்கிய வாட்டர் கேன்கள், காகிதக் கப்புகள், சிகரெட் துண்டுகள் எப்போதும் குவிந்து கிடக்கும். இவையெதையும் கண்டுகொள்ளாமல் ஈக்கள் மொய்க்கும் அதனுள் பருத்த யோசனையுடன் உட்கார்ந்திருந்தான் பேச்சி. இரண்டு சிஸர் பில்ட்டர்களை முடித்து அதன் தொடர்ச்சியாகப் பீடியை எடுத்துப் பற்ற வைத்தான். இருபுறமும் ஏறிக்கொண்டிருக்கும் பேச்சியின் தலைப்பொட்டுக்கு வயது எப்படியும் முப்பத்தி நான்கிருக்கும். கல்யாணம் ஆகவில்லை. தள்ளியெல்லாம் போடவில்லை. எந்தப் பெண்ணும் அமையவில்லை.
ஊதுவர்த்திகளின் புகையும், மணற்பரப்புமுள்ள தர்கா கொக்குகளின் எச்சம் படிந்த வேப்பமரங்களாலும், புளியமரங்களாலும் ஆனது. முகப்பு மதில்கள் ஒருஆள் மட்டத்தின் நெஞ்சு வரைக்குமிருக்கும். உள்ளிருந்து சற்று எக்கினால் வெளி நடமாட்டங்களைப் பார்க்கலாம். பின்னாடி, சுவர் கிடையாது. ரஸ்தாளி வாழைத் தோப்புதான். இடப்பிரச்சனையால் சுவர் எடுக்கவில்லை. எல்லைத் தடுப்புக்காக சில பனைமரங்கள் முறையற்ற வரிசையில் நிற்கும். மூத்தப் பனைமரத் தூரில் பேச்சியின் அப்பா, ராமுவின் வலது கால் சங்கிலியால் இறுகக் கட்டப்பட்டிருக்கிறது. கட்டி வைத்து ஆறு மாதத்தைக் கடந்தும் ராமுவிடம் எந்த மாற்றங்களும் இல்லை, தெளிச்சிகளும் இல்லை. துருபிடித்தச் சங்கிலியை ஒருமுறை மாற்றியுள்ளார் வள்ளி. ராமுவுக்கும் வள்ளிக்கும் பேச்சி ஒரே மகன். இருவருக்கும் அறுபதையொட்டிய தொத்தல் உடம்புகள். ரேக்ளா வண்டியின் சோடி மாடுகளைப் போன்று இருவரும் சம உயரமுடையவர்கள்.
வானம் மோடமாக இருந்ததால் ஊமைவெயிலாக அடித்தது. வியர்வை, மலமூத்திர வாடையடிக்கும் ராமுவின் வேட்டி சட்டையை அவிழ்த்துவிட்டு, பச்சையற்றத் தென்னந்தட்டியை மறைவாக வைத்து அவருக்கு பல் விளக்கிவிட்டு, குளிப்பாட்டி துவைத்த துணிகளை போட்டுவிட்டார் வள்ளி. உள்ளாடையைத் தவிர. அதிக வீச்சமுடைய ராமுவின் துணிமணிகளைப் பொட்டலமாக்கி வெற்று ஆத்துக்குள் தூக்கிப்போட ரோட்டைக் கடந்தார். பித்தவெடிப்புகள் நிறைந்த அம்மாவின் வயோதிக நடையை நிழற்குடைக்குள் அமர்ந்து பார்த்தபடியே இருந்தான் பேச்சி.
ராமுவோடு சேர்த்து மொத்தம் ஆறு பேரைப் புத்தி புரண்டவர்களாக அவரவர் வீட்டினர் தர்காவிற்குக் கொண்டு வந்தனர். எல்லோருமே பக்கத்து ஊர்களைச் சேர்ந்தவர்கள். அதில் இரண்டு பெண்கள். ஒருவர் திருமணமானவர். இரண்டாமவர் இளம்பெண். இளம்பெண்ணைத் தவிர மீதியுள்ளவர்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டவர்கள். அனைவரிலும் ராமுவே அதிக நரையானவர். அறுபட்ட புளியமரத்தில் கட்டப்பட்டவர் போதை மாத்திரைகளால் தனது சித்தத்தைக் கலங்கவிட்டவர். வெறும் துண்டுடன், டொக்கு விழுந்த தன் நெஞ்சில் மூச்சு வாங்க வாங்க சினிமாப் பாடல்களைப் பாடிக் கொண்டேயிருப்பார். வாயில் எச்சில் வற்றி சோர்ந்து படுக்குமளவிற்குப் பாடுவார். இன்னொருவர் பட்ட மேற்படிப்புகள் படித்து வீட்டில் டியூஷன் எடுத்தவர். சதா எதையோ முணுமுணுப்பார். தடித்த இரும்புக் கம்பி அவரது இடம்.
‘ஓத்தாலோக்க ஒன்னைய கருவறுக்காம விடமாட்டேன்டா. இந்தா வன்ட்டேன்டா அவுசாரி மனே. ஒன்னய முண்டக்கட்டயா எரிக்கிறேன்டா…’ என்று தலையில் பாலித்தீன் பையை மாட்டி, அவரது உடைமைகளை வேகவேகமாக எடுத்து வைத்துக் கிளம்புவார் மற்றொருவர். கல் தூண் சங்கிலி அவரது காலைப் பிடித்திழுக்கும். மறுபடி மறுபடி இதையே செய்வார். திருமணமான அந்தப் பெண் படுத்தேயிருப்பார். சட்டென எழுந்து பழைய ஆங்கில நாளிதழ்களைப் பரீட்சைக்குப் படிக்கும் பிள்ளையைப் போல மனப்பாடம் செய்வார். சங்கிலிப் பிடி தங்கையிடம் இருக்கும். எந்த நேரமென்று சொல்லமுடியாது திடீரென ஆக்ரோஷமாவாள் இளம்பெண். அவள் வந்து சில மாதங்கள்தான் ஆகின்றன.
நாக்கு இருக்கிறதா? இல்லை அறுந்துவிட்டதா? என்றளவுக்கு அமைதியாகவே இருப்பார் ராமு. பின்னிரவொன்றில் சினிமா பாட்டுப் பாடும் அந்த ஆள் சங்கிலியைக் கழட்டிக்கொண்டு வந்து, ராமுவின் தோள்பட்டையில் ஏறி தலையில் செங்கலால் அடித்தார். விசும்பல் சத்தங்கேட்டு எழுந்தவர்கள் ராமுவை அந்த ஆளிடமிருந்து காப்பாற்றினர். ரத்த வடியலில் அப்போதும் அமைதியாகவே இருந்தார். வாடிக்கையாக வரும் நர்ஸ் ஒருவர் ராமுவின் தலையை மூன்று தையல்களால் மூடிப்போனார். பிறகு, அந்தப் பாட்டு ஆளை வேறுயிடத்தில் கைகளில் கட்டிப் போட்டனர். நின்றால் மூன்று நாட்களுக்குக் கூட நிற்பார் ராமு. அவ்வப்போது நின்ற இடத்திலேயே நடப்பார். காற்றிலாடும் காய்ந்த வாழைச் சோகைகளையே பார்ப்பார். திரும்பி சில நேரங்களில் ரோட்டைப் பார்ப்பார். பெருங்கூட்டத்தின் முன்பு உட்காருவதைப் போல சம்மணமிட்டபடி அதே நாட்களுக்கும் உட்கார்ந்திருப்பார். வெயில், மழை என்று எல்லா பருவங்களிலும் நாட்டார் தெய்வம் போன்று அவரது இடத்தில் வெட்டவெளியாகவே கிடப்பார். ஏதாவது ஒரு சொல் அவரது வாயிலிருந்து வராதா என்று அசராது கவனிப்பார் வள்ளி.
வைத்தியம் பார்த்து இனியும் பலனில்லையென உறவினர் இவர்களைத் தர்காவுக்குத் தூக்கி வந்துள்ளனர். வெளியிலும், வீட்டிலும் இவர்களை ஏற்றுக்கொள்ளாதபோதும், வக்கத்து வாழ்வு வதைக்கும் போதும், உயிரை மட்டுமாவது காப்பாற்றிக் கொள்ள நம்பிக்கையினைக் கடந்து ஒரு இடத்திற்காக தர்காவில் பொருந்திக் கொண்டனர். ராமுவைத் தவிர எல்லோரும் வருடக்கணக்கில் வசிக்கின்றனர். தகர சீட்டுகளாலான பெரிய கொட்டகை, கழிவறை, சமையல்கூடம் தர்காவினுள் உள்ளது.
அந்தக் கொட்டகையில் சொந்தங்கள் தங்குவார்கள். பாத்திரங்கள் வாங்கித் தங்களுக்கு வேண்டியதை தாங்களே சமைத்துச் சாப்பிடுவார்கள். தர்காவிலிருந்து குணமாகிப் போனவர்கள், வேண்டுதல்கள் நிறைவேறியவர்கள் எப்போதாவது நேர்த்திக்கடன் அன்னதானம் போடுவார்கள். சந்தனக்கூடு, பக்ரீத், ரம்ஜான் திருவிழாக் காலங்களில் நல்ல உணவுகள் கிடைக்கும். தினமும் அவர்கள் மீது மயிலிறகுகளால் பாத்திஹா ஓதுவார் அஜரத். மீதி நேரங்களில் வர்ண ஜரிகைகளால் அலங்கரிக்கப்பட்ட சமாதிகளின் முன்பு தீரத்தீரக் கொத்தான ஊதுவர்த்திகள் நட்டு உறவினர்கள் பிரார்த்தனையில் இருப்பார்கள் அல்லது சங்கிலிகள் அறுத்த அவர்களின் காயங்களை ஆற்றிக் கொண்டிருப்பார்கள். அதில் வள்ளியும் ஒரு ஆள்.
ராமுவுக்கு மாமன் மகள் முறைதான் வள்ளி. வடக்கேயிருந்து தஞ்சைக்கு வந்த இவர்களது முப்பாட்டன் காலத்திலிருந்தே தலைமுறை தலைமுறையாக தோல்பாவைக் கூத்துக் கலைஞர்களாக வாழ்கின்றனர். கால்களை ஊன்றி ஒருயிடத்தில் நிலையாக நிற்க சிறுநிலமோ, ஊரோ, வீடோ, பாஷையோ, காட்டுவதற்கு அடையாள அட்டைகளோ இவர்களுக்கென்று சொந்தமாக எதுவும் இருந்ததில்லை. இப்போதுமில்லை. நல்லதங்காள், அரிச்சந்திர நாடகம், ஞானசவுந்தரி, ராமாயண காண்டங்கள், மகாபாரதம், நடைமுறை வாழ்க்கைக் கதைகள் என்று ஊர் விட்டு ஊர் மாட்டுவண்டிகளில் பயணித்து, பாவைக்கூத்து போட்டு பல நிலத்தின் தண்ணீர் குடித்துத் தழைப்பவர்கள். வாத்தியங்கள் பழுதானால் கூடுமானவரை அவர்களே சரி செய்ய முயலுவர். முடியாதென்ற பட்சத்தில்தான் புதிதாக வாங்க யோசிப்பார்கள். தலைமுறைதொட்டு கைமாற்றப்படும் அந்தத் தோல்பாவைகளைத்தான் எந்தச் சூழ்நிலையிலும் பெரும் செல்வங்களாகவும், தெய்வங்களாகவும் போற்றி வணங்கிப் பேணுவார்கள். திருமணமானவுடன் உடன்பிறப்புகள் ஒவ்வொரு திசைக்கும் பயணமாகத் தொடங்குகையில் பாவைகளை சரி பாதியாகப் பாகம் பிரித்துப் பெட்டியில் வைத்து ஆளுக்கொன்றாக எடுத்துக் கொள்வார்கள்.
போகக்கூடிய ஊர்களில் சத்திரம், சாவடி, மடத்தில் ஒண்டிக்கொண்டு மழைக் காலங்களைத் தவிர எல்லா நாட்களும் கூத்துப் போடுவார்கள். சில நேரங்களில் ஊர்க்காரர்களே தங்குவதற்கு சிறிய வீடு தந்து காடாத் துணி, வாயில் வேட்டி, விளக்கு எண்ணெய், திரிகள் தருவார்கள். பத்து நாட்கள் வரை ஒரு ஊரில் தங்குவார்கள். ஊருக்குள் வந்தவுடன் இவர்களின் வருகையையும், தோல்பாவைக்கூத்து அறிவிப்புகளையும் ஊரார் டமுக்கடித்து அறிவிப்பர். ஒரு நாளைக்கு மூன்று ரூபாய் வருமானம் கிடைக்கும். அதுபோக அரிசி, பருப்புகளையும் ஊர் மக்களே கொடுப்பார்கள்.
பயணிக்கும் வழித்தடங்களிலேயே இவர்களின் வாரிசுகள் சுகப்பிரசவங்களாக ஜனிப்பார்கள். குலசையில் ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் வள்ளி பிறந்தார். விருதுநகர் பக்கத்தில் ஒரு கல்மண்டபத்தில் ராமு பிறந்தார். சந்ததியில் யாருமே பள்ளிக்கூடம் பக்கம் படிக்கப் போனதே கிடையாது. போகும் ஊர்களிலெல்லாம் தங்களது அப்பா, அம்மாக்கள் காட்டிய கூத்துகளுக்குக் கிடைத்த மரியாதைகளையும், சேர்ந்த கூட்டங்களையும், வராத மழை பாவைக்கூத்துக்கு வந்து செழித்ததையும் மனதுக்குள் அப்படியே பதித்து வளர்ந்தனர் ராமுவும், வள்ளியும். சிங்கிச்சலங்கை அடித்தல், பாவைகளை எடுத்து அடுக்கி வைத்தல், வாள்கள், வில், அம்புகளைப் பிரித்து வைத்தல், வீணான பழைய பாவைத் தோல்களைக் கிழித்து கூத்துக்கு டிக்கெட் செய்வது, கூட்டத்தை ஒழுங்குப்படுத்துவதென இருந்த ராமு பதினைந்து வயதில் திரைக்குப் பின்னால் போய் கால்கட்டை மாட்டி பாவைகளைப் பிடிக்கவும், குரல் பயிற்சி எடுத்து கூத்துக் காட்டவும் கற்றுக் கொண்டார்.
பெண்கள் திரைக்குப் பின்னால் போய் கூத்துப் போடக் கூடாதென்பதால் இதிகாசப் பாடல்கள், சாமி பாடல்கள், கோமாளி பாடல்கள் பாடி ஆர்மோனியம் இசைத்தார் வள்ளி. எல்லாமே பார்த்துப் பார்த்துக் கற்றுக்கொண்டவை. வள்ளிக்கு உடன்பிறந்தவர்கள் யாரும் கிடையாது. ராமுவுக்கு ஒரு தம்பி மட்டுமே. மிருதங்கம் வாசிக்கும் தம்பி மாட்டு வண்டியை ஓட்டுவார். கைவைத்தியத்தில் மாடுகளின் நோய்களை குணப்படுத்தும் விவரமும், ராசியும் சின்னப் பிள்ளையிலிருந்தே அவருக்குண்டு. ராமுவும் வள்ளியும் இருப்பத்திரெண்டு வயதில் கல்யாணம் செய்து கொண்டனர். சில வருடங்கள் கழித்து நாகர்கோவிலில் ஒரு ஆலமரத்தடியில் பேச்சி பிறந்தான்.
குழந்தைகள் முன்வரிசையில் உட்கார்ந்து ஆர்ப்பரிக்க, திரளும் கூட்டத்தைத் திரைக்குப் பின்னாலிருந்து பார்க்கும் ராமு, “சகலமான பெரியவர்களுக்கும், வாலிபர்களுக்கும், குழந்தைகளுக்கும் வணக்கம்…” என்று ஆரம்பித்து போயிருக்கும் ஊர் பெருமைகளைச் சொல்லி ஒத்துழைப்புத் தருமாறு கேட்டவுடன், இசைக்கோர்வைகள் பிசகாது ஆர்மோனியத்தின் கறுப்பு வெள்ளைக் கட்டைகளில் இடவலமாக வேகமாக ஓடி பிள்ளையார் பாட்டைப் பாடி கூத்தைத் தொடங்கி வைப்பார் வள்ளி. உடன் தம்பியின் மிருதங்கத் தோலிசை கடடவென உருளும். பேச்சியின் சிங்கிச்சலங்கை தேவையான இடங்களில் சலசலக்கும்.
“வணக்கம் வணக்கமுங்க வணக்கம்
இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம்
நாட்டுக்கு சேவை செய்ய நாகரீக கோமாளி வந்தான்னையா
ஆட்டம் ஆடி நல்ல பாட்டு பாடி
எங்க நாகரீக கோமாளி வந்தான்னையா
முன்னொரு காலத்திலே வந்தான்னையா
மோட்டாரு வாகனத்திலே வந்தான்னையா
மக்களை சிரிக்க வைக்க சிரிக்க வைக்க
வந்தான்னையா…”
ராமு கோமாளிப் பாவைகளை எடுத்து திரையில் காட்டி பாட ஆரம்பிக்கையில், கூடவே வள்ளி, பேச்சி, தம்பி மூவரும் சேர்ந்து பாட சிறுபிள்ளைகள் ரொம்பவே குதூகலமாவார்கள். உச்சிக்குடும்பி, தொப்பை வயிற்றுப் பாவைகளை எடுத்து நடப்புக் கதைகளை நையாண்டியாக்கிப் பேசுகையில் அனைவரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.
“…ஏய் சீதா லட்சுமி
எனது பத்துத் தலைகளைப் பார்
இருபது கைகளைப் பார்
மூன்று உலத்தையும் ஆட்சிபுரிந்து வரும்
நான் இராவண ஈஸ்வரன் வந்திருக்கிறேன்.
வா… வா… வா… வாயைத் திறந்து பேசடி…ஏய்” என்று
ராவணன் குரலில் ராமு உக்கிரமாகி அதட்டி பேசுகையில், சோர்வாகாமல் ஆட்டப்படும் பாவைகளைப் பார்க்கையில் கூட்டத்தினர் அரண்டுபோய் அமைதியாக உட்கார்ந்திருப்பார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள், அரக்கர்கள், மிருகங்கள் என்று பத்துக்கும் மேலான குரல்களில் சிரிப்பு, அழுகை, கோபம், இரக்கம், கேலி, பய உணர்ச்சிகளில் பேசும் ராமுவின் தொண்டை அனைவரையும் வியக்க வைத்துவிடும். கூத்து நடக்கும் அந்த ரெண்டுமணி நேரமும் ராமுவின் குரல்வளையைக் கண்டு வள்ளியும், பேச்சியும், தம்பியும் ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்பட்டுத்தான் போவார்கள். எத்தனை பேர் உட்கார்ந்துகொண்டு பேசுகிறார்களென பல ஊர்களில், திரைக்குப் பின்னால் சனங்கள் எட்டிப் பார்த்த கதையெல்லாம் நடந்திருக்கிறது. கூத்து முடிந்தவுடன் அப்பாவின் தொண்டையை வியந்து பார்த்து, வருடி முத்தமிடும் பேச்சியைத் தலைக்கு மேலே தூக்கிப்போட்டு பிடித்து ஆனந்தமடைவார் ராமு. “தெரைக்குப் பின்னாடி போயிட்டா நம்ம பாட்டன், தாத்தான், அப்பனெல்லாம் உனக்குள்ள அருள்வாக்கா எறங்கிறாங்கண்ணா” என்பார் தம்பி.
பஞ்சாயத்துப் போர்டு டி.விகள் பெருகப் பெருக பாவைக்கூத்துக்கு வரத்துக் குறைந்தது. திருவிழாக்களுக்கு மட்டும் ராமுவைக் கூப்பிட்டார்கள். அதிலும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் ஊட வர ஆரம்பித்தன. “ஊர் சாவடியில தங்கி நீங்களே கூத்துப் போடுங்க. சனங்க தர்ற காச எடுத்துக்கங்க.” என்று சில ஊரில் சொன்னார்கள். சாப்பாட்டுக்கே பிரச்சனையானது. ஒரே ஊரில் ரொம்ப காலம் தங்க முடியாதென்பதால் அடுத்தடுத்த ஊர்களுக்குத் தங்குவதற்கு மட்டுமே பயணம் போனார்கள். உள்கிராமங்களில் பள்ளிக்கூட சிறுவர்கள் தரும் சில்லறைகளில் ஏதோ சமாளித்தனர். கஷ்டத்தோடு கஷ்டமாக கேரளாவிலிருந்த சொந்தக்காரப் பெண் ஒருத்தியுடன் ராமுவின் தம்பிக்கு கல்யாணம் முடித்து வைக்கப்பட்டது . பேச்சிக்கு அப்போது விவரம் தெரிந்திருந்தது. பாவைகளை ராமு இரண்டு பங்காக எடுத்து வைக்கையில்,
“எனக்குப் பங்கு வேணாம் ராமண்ணா. நம்ம பாட்டன், தாத்தன், அப்பன் மேலயிருந்து என்னையப் பழிச்சாலும் பரவாயில்ல. போதும் நம்மளோட இந்தப் பொழப்ப நிறுத்திக்குவோம். நம்ம பிள்ளைக காலத்துலயாவது ஒரு இடத்துல நிம்மதியா ஊன்டி நிப்போம். நம்ம பொம்பளைகள இன்னும் வெட்டவெளில தங்க வைக்கிறது நல்லதாப் படல. நம்ம சாபத்துக்கு அஞ்சுற சனம், நமக்குப் பாதுகாப்பா இருக்குற சனமெல்லாம் கொறச்சலா ஆயிட்டு வருது. மாடுகளும் இன்னும் எத்தன நாளைக்கு நம்மள இழுக்கப் போது. வீட்டுப் பொம்பளைங்களும், பிள்ளைகளும் எவ்வளோ காலத்துக்கு நம்ம கூடக் கெடந்து சீரழியப் போறாங்க. நம்ம பாவைகளே நமக்குப் பெரிய சொமையா மாறிருச்சு. எல்லாமே நாகரீகமாயிட்டு இருக்கு. நம்ம அப்படியேதான் இருக்கோம். வேற வழியே இல்ல. எல்லாத்தையும் தூக்கிப் போடு. எங்கையாவது பஞ்சம் பொழைக்கப் போவோம்.” என்று விரக்தித் தயக்கத்தில் சொன்னார் தம்பி.
எல்லோரும் அமைதியாக இருந்தனர்.
சிந்தனைக்குப் பிறகு பேசினார் ராமு, “நீ சொல்றதும் சரிதான்டா. மொதமொறையா கண்ணிய அறுத்துட்டு வெளியேறலாம்னு சொல்ற. காலமும் கண்ணுமண்ணுத் தெரியாம ஓடுது. நடைமுறைக்கு ஏத்த மாதிரிதான் பேசுற. உன்மேல கோவம்லாயில்ல. உனக்கும் தனிக்குடும்பம் வந்துருச்சு. நீ உன் யோசனைப்படி ஏதாவது வேலைகளுக்குப் போ. நானும் வள்ளியும் வரல. நம்ம எனத்துல பாவை பிடிக்கிற கடைசி மனுசங்களா நானும் வள்ளியும் இருக்கிற வரை இருந்துட்டுப் போறோம். எனக்கு ஒரேயொரு ஒத்தாசை மட்டும் பண்ணு.”
“சொல்லுண்ணா”
“பேச்சிய மட்டும் உன்கூட கூட்டிட்டுப் போயிடு. அவனாவது வெளில போய் வேற பொழப்பு பொழைக்கட்டும். இனியாவது உன் பிள்ளைகளுக்கும், பேச்சி பிள்ளைகளுக்கும் நம்ம வாசனை எதுவுமே இல்லாம புதுசா ஒரு வாழ்க்கைய ஆரம்பிக்கட்டும்’
ஈரக்கண்களுடன் அமைதியாக இருந்தார் வள்ளி. இருவரது மனவோட்டங்களும், பின்வாங்காத முடிவுகளும் எப்போதும் ஒன்றுபோல்தான் இருக்குமென்று தம்பிக்குத் தெரியும். அதனால் வள்ளியிடம் எதுவும் கேட்கவில்லை தம்பி.
“ரெண்டு பேரும் வாங்க, சேர்ந்து போயிடலாம்மா…” என்றான் பேச்சி.
“நீ சித்தப்பா கூடப் போயி இருடா பேச்சி. நாங்க அடிக்கடி வந்து ஒன்னப் பாக்குறோம். கவலப்படாத…” என்றார் வள்ளி. அச்சமயம் எல்லோரும் தூத்துக்குடி பழைய காயலில் இருந்தனர். பேச்சி, அவனது சித்தப்பா, சித்தி மூவரும் தெரிந்தவர் மூலமாக சிவகங்கையில் உள்ள செங்கல் சூளையில் உறைவிடமாகி கல்லறுக்கச் சென்றனர். சூளைக்குப் பக்கத்தில் லாரிக்கு பாடி கட்டும் பட்டறை இருந்தது. சூளை முதலாளியின் பட்டறைதான் அது. அங்கு பேச்சியை வெல்டிங் வேலைக்குச் சேர்த்து விட்டனர். வேறு திசையில் டோரா, மோட்டு, பட்டுலு போன்ற கார்ட்டூன்களையும் பாவைகளாக்கத் தொடங்கினார் ராமு. சினிமாப் பாடல்களை மனனம் செய்ய மனதையும், பாட நாவையும் பழக்கினார் வள்ளி. பேச்சி மிகவும் சிரமப்பட்டு வேலைகளைக் கற்றுக் கொண்டான். பெரியளவு வருமானம் இல்லையென்றாலும் நேரத்திற்குச் சாப்பாடு, தங்குவதற்குச் சுற்றி நான்கு சுவர்களும், மேலே மறைப்புமுள்ள நிரந்தர இடமென வாழ்க்கை கொஞ்சம் நிறம் மாறியது. எந்த ஊரில் ராமுவும், வள்ளியும் இருக்கிறார்களோ அங்குபோய் அனைவரும் பண்டிகை நாட்களில் பார்த்து வருவார்கள்.
அவர்கள் எவ்வளவு வற்புறுத்திக் கூப்பிட்டாலும் ராமுவும் வள்ளியும் கூட வரவே மாட்டார்கள். செலவுக்குக் காசும் வாங்க மாட்டார்கள். ஒவ்வொரு தடவையும் பேச்சியின் வளரும் வாலிபத்தை, நடை, உடை, பேச்சுகளைக் கண்டுப் பூரிப்பார்கள். “ஒரு ரெண்டு நாளு உங்க கூடத் தங்குறேனே…” எனக் கெஞ்சிக் கேட்கும் பேச்சியை உடனே கிளப்பி விடுவார்கள். திட்டான திட்டுத் திட்டி புது செல்போனை மட்டும் அவர்களிடம் கொடுத்து விட்டு வந்தான் பேச்சி. வாங்கிக் கொண்டார்கள். “எங்க இருக்கீக? சாப்டீங்களா? சூதானமா இருங்க…” என்று நேரம் கிடைக்கையில் அப்பா, அம்மாவிடம் போனில் பேசிக்கொள்வான். வருடம் முழுக்க வேலைகள் இருக்குமென்பதால் சித்தப்பாவும், சித்தியும் சென்னையில் கட்டிட வேலைகள் பார்க்கக் கிளம்பினார்கள். பேச்சிக்கு அங்கு போக விருப்பமில்லை. சென்னைக்கு அழைத்துச் செல்லும் பெரிய கான்ட்ராக்டரிடம் பேசி, பெரியார் பஸ் ஸ்டாண்டை இடித்துக் கட்டும் பிரம்மாண்ட கட்டுமானத்தில் பேச்சியை வெல்டிங் வேலைகளுக்குச் சேர்த்து விட்டுப் போயிருந்தார் சித்தப்பா. சிவகங்கையிலிருந்து மதுரைக்குள் இடம்பெயர்ந்தான் பேச்சி. இந்த இழுபறி அலைச்சல்களில் அப்பா, அம்மாவிடம் பேசி இரண்டு வாரங்களுக்கும் மேலானது. அவர்களுக்கு போன் செய்யலாமென நினைக்கையில்தான் பேச்சிக்கு சித்தப்பா கூப்பிட்டார், “அண்ணனுக்கு போன் பண்ணேன்பா. போனு சுச்சாப்புன்னு வருதேப்பா…” என்றார். “சரி, நான் அவுகளுக்குத் தகவல் சொல்லிறேன்.” என்றான்.
எத்தனை தடவை போன் செய்தான் என்று பேச்சிக்கே தெரியவில்லை. அவ்வளவு முறை பண்ணியும் ராமுவின் போன் சுவிட்ச் ஆஃப்பில்தான் இருந்தது. என்ன ஆனது? எங்கு இருக்கிறார்கள்? எங்கு போய் தேடுவது? எனப் பதட்டமும், கோபமும் கொண்டான். அந்த நேரத்தில் மதுரையின் வடக்கில் திருவேடகம் என்ற ஊருக்கு வந்திருந்தனர் ராமுவும் வள்ளியும். கிராம சமுதாயக்கூடத்தில் தங்கியிருந்தனர். பேச்சிக்கும் இவர்களுக்கும் இடையே ஐம்பது கிலோமீட்டர்தான் இடைவெளி. செல்போன், சார்ஜர், நம்பர்களை குறித்திருந்த சிறிய டைரி இவைகள் அனைத்தையும் ஒரு பைக்குள்தான் பத்திரப்படுத்தி வைத்திருந்தனர். அந்தப் பையை எங்கு எப்படித் தொலைத்தோம் என்று ராமுவுக்கும், வள்ளிக்கும் தெரியவில்லை. தொலைத்தோமா? இல்லை யாராவது ராத்திரியில் எடுத்துவிட்டார்களா? என்று இருவரும் மாறி மாறிக் குழம்பினர். எந்த நம்பர்களும் மனப்பாடமாகத் தெரியவில்லை. நம்பர்களை நினைவு படுத்த முயன்றுத் தோற்றனர். அந்தப் பகுதியின் சில தெருக்களில் கூத்துக்கு ஓரளவு வரவேற்பும் வருமானமும் இருந்தது.
நான்கு நாட்கள் கழித்து வள்ளி சொன்னாள்,
“எனக்கு என்னமோ உறுத்தலாவே இருக்கு பேச்சியப்பா. தெனம் பேசிட்டு இருப்பான். இப்ப பேசாதது ஒரு மாதிரி இருக்கு. அவனும் பயந்துட்டு கெடப்பான். நான் இங்க இருக்கேன். நீ பஸ்ல சிவகங்கைக்கு ஒரு எட்டுப் போயி பேச்சியப் பார்த்து நடந்தத சொல்லிட்டு வா.’
“ஒன்னத் தனியா விட்டுட்டு எப்புடிப் போறது?”
“ம்…நான் கொமரி பாரு”
“சரி, வண்டியக் கட்டுறேன் ரெண்டு பேரும் சேர்ந்து பார்த்துட்டு வருவோம்.” என்று இருவரும் கிளம்புகையில்தான், வள்ளிக்கு பேச்சியின் போன் நம்பர் ஞாபகம் வந்தது. “பேச்சியப்பா…பேச்சியப்பா அவன் போன் நம்பரு நெனவுக்கு வந்துருச்சு.” என்று கத்தினாள். “நம்பரச் சத்தமா சொல்லிட்டே எங்கூட வா” வென டீக்கடைக்குப் போய், “இவ சொல்லிட்டு இருக்குற நம்பருக்கு போன் பண்ணுங்களே. எங்க மகேந்தான் அவன்.” என்றார் ராமு. வேறு நம்பரிலிருந்து போன் வந்தவுடனே மறுமுனையில் உடனே எடுத்தான் பேச்சி.
“அலோ, பேச்சி… நாந்தாப்பா அப்பா பேசுறேன்.” என்றவுடனே அவரை எதுவும் பேசவிடாமல் நடுங்கும் குரலில் சத்தம் போட்டான் பேச்சி,
“ரெண்டு பேரும் எங்கப் போயி தொலஞ்சிங்க கெழட்டுப் புளுத்திகளா. சாகுறதுனா சொல்லிட்டுச் செத்துப் போயிருங்க. ஏன்? என்னையப் போட்டு கொல்றீங்க. கூடவும் வரமாட்டிக. பெத்த புள்ளைய வுட அந்த தர்த்ரியம் புடிச்ச பாவெகதான உங்களுக்குப் பெருசா போச்சு. நத்தம் சுண்டியும் அடங்கி ஒக்காராம மணியம் பண்றீங்க. ஒங்களுக்கு முன்ன நாந்தான் சாகப் போறேன்.”
இடைவெளிவிட்டு பேச்சி பெருமூச்சு விட்டான்.
ராமு எதுவுமே பேசவில்லை.
“ஊராவூட்டுப் போன்ல காசுத் தீருது. பேசாம இருக்க…” என
போனைப் பிடுங்கினார் வள்ளி.
“அலோ…பேச்சி”
“எங்கம்மா இருக்கீங்க ரெண்டு பேரும்?”
“இங்கதாம்பா சோழவந்தான் பக்கத்துல திருவேடகம்ன்னு…”
“சரி நானு நைட்டு வந்துறேன்.”
“ரவைக்கு நம்மள இங்கப் பார்க்க வாறானாம் பேச்சி.”
“புள்ள ரொம்ப பயந்துட்டான் போல வள்ளி.”
ராமுவும் வள்ளியும் இட்லிகளைச் சாப்பிட்டுவிட்டு பேச்சிக்கும் பார்சல் வாங்கி வைத்திருந்தனர். கொசுத்தொல்லைகள் அதிகமிருந்ததால் உதிர்ந்த தேக்கயிலைகளையும், குப்பைக்கூளங்களையும் கூட்டி சமுதாயக்கூடத்தின் எதிரேயுள்ள ஆழக்கிடங்கில் கொட்டி எரித்தனர். தகதகவென உயர்ந்தெழும் நெருப்பை மட்டுப்படுத்த பச்சை வேப்பிலைகளைப் போடப்போகையில்தான் பேச்சி வந்தான். “வாப்பா” என்று இருவரும் சொல்லும் போதே,
“ஒழுங்கா ரெண்டு பேரும் இப்பவே என்கூட கெளம்புங்க. நீங்க உங்கப் பாவெகளுக்கு உண்மையா இருந்ததெல்லாம் போதும். மொத பெத்தப் புள்ளைக்கு ஆத்தா அப்பனா இருங்க” என்று கோவப்பட்டான்.
“செல்போன தொலைச்சிப்புட்டோம்பா. எங்களுக்கு ஒன்னும் ஆகலய்யா பேச்சி.” மெதுவாக சொன்னார் வள்ளி.
“எதுவும் பேசாதமா. உன் புருஷனுக்கு ஏத்த ஆளுதான நீயி?” என்றான்.
நாமும் பேசினால் இன்னும் கோவப்படுவானென எதுவும் பேசாமல், பாவைகளை சுத்தப்படுத்தி எடுத்து அடுக்கி வைத்தபடியிருந்தார் ராமு.
பாவைகளையும், அப்பாவையும் பார்த்து எரிச்சலான பேச்சி அவரைத் தள்ளிவிட்டு, பாவைகள் அனைத்தையும் அள்ளி மொத்தமாக நெருப்புக்குள் போட்டான். “அய்யய்யோ…..” என ராமுவும், வள்ளியும் கத்தினர். வாத்தியப் பெட்டிகளை எட்டி மிதித்தான். அவனைத் தடுப்பதற்குள், ராமு கிடங்கினுள் இறங்கினார். கிடங்குச்சரிவில் சரிக்கிய ராமுவை, ஓடிப் போய் பின்னாலிருந்து மேலே இழுத்தார் வள்ளி. இருந்த தண்ணியை ஊற்றியும், மண்ணள்ளிப் போட்டும் தீயை அணைக்க முடியவில்லை. பெரிய கொடிக்கால் கம்பினால் பாவைகளை தீயிலிருந்து எடுப்பதற்குள் எல்லாமும் பொசுங்கின. ராமுவும் வள்ளியும் உயிர்களாகவும், பொக்கிஷங்களாகவும் இத்தனை காலங்கள் சுமந்திருந்த அந்தப் பாவைகள் தங்களின் உடல்களையும், சாயங்களையும், உறுப்புகளான மூங்கில்களையும் இளக்கிக் கொண்டு தீய்ந்த வாடையுடன் மரித்தன.
“அடேய் பாவிப்பயலே….கொலத்த அழிச்சிட்டியேடா…எந்தக் காலத்துலயும் நடக்காத ஒன்ன இப்படி செஞ்சுப்புட்டயேடா. இதுக்கு எங்க ரெண்டு பேரயும் இங்கேயே கொன்னு போடுடா…’ பேச்சியை அடித்தார் வள்ளி.
அப்படியே பேச்சற்று சிலையாகி விட்டார் ராமு.
“ஏன் இப்புடி இடிஞ்சு போயிருக்க எதாவது பேசு, சொல்லு” அனல் சூட்டுடன் இருந்த ராமுவை உலுப்பினார் வள்ளி.
ராமு எதுவுமே பேசவில்லை.
“நீ அடிமாண்டு போக. மனுசன இப்படி ஆக்கிட்டியேடா. நீ பரதேசியா பசியா அலையாக் கூடாதுன்னுதான் ஒன்ன வெளில அனுப்புனோம். வெத்து ஆளுக எங்களால அதுமட்டுந்தான்டா முடிஞ்சது” என்று ராமுவைக் கட்டிக்கொண்டு கதறினார் வள்ளி.
ராமு ராத்திரி முழுக்க எதுவும் பேசவேயில்லை.
பேச்சியும், வள்ளியும் காலையில் ராமுவைப் பெரியாஸ்பத்திரிக்குக் கூட்டிச் சென்றனர். பல பரிசோதனைகள் செய்தனர். பேச்சியின் சேமிப்புப் பணத்திற்கும் மேல், வண்டிமாடுகளை வந்த விலைக்கு விற்று ஆஸ்பத்திரிகளுக்கும் ஊருக்குமாக அலைந்தனர். பைகள் நிறைய மருந்துச் சீட்டுகளும், ஸ்கேன் ரிப்போர்ட்டுகளுமாக நிறைந்ததுதான் மிச்சம். வள்ளியும், பேச்சியும் ராப்பகலாக ராமுவிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே இருந்தனர். அவரிடமிருந்து எப்பதிலும் வரவில்லை. இப்படியிருக்க தன்னை அறியாமல் தனந்தனியாக நடக்கவும் ஆரம்பித்தார் ராமு. ஆற்றுக்குள் இறங்கி நடந்து போனவரை பவுர்ணமி நடுநிசியில் சுடுகாட்டில் தேடிப் பிடித்துக் கூட்டி வந்தனர். ராமுவைப் பிடித்து நிற்க வைக்க எப்போதும் ஒரு ஆள் கூடவே இருக்கும் நிலையானது.
குற்றவுணர்ச்சியால் உள்ளுக்குள் வதங்கினான் பேச்சி.
சித்தப்பாவிடம் நடந்த எதையும் சொல்லத் தோன்றவில்லை. அம்மாவிடம் இதைக் கேட்கவே கூடாது என்று நினைத்தான். மனம் பொறுக்காமல் கேட்டான், “என் கூட டவுனுக்குள்ள வந்து தங்கிருங்க. நான் வைத்தியம் பார்த்துக்கிறேன்.” என்றான். “பாவக்கூத்துப் போட வந்த ஊர்லேயே நாங்க பொணமானதா இருக்கட்டும்டா. நீ போய் வேலச்சோலிகள பாரு.” என பேச்சியை மதுரைக்கு அனுப்பி வைத்தார். ராமுவின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சதா ஏடகநாதரிடம் வேண்டுவார் வள்ளி. ஒரு மதியத்தில் வள்ளி அசந்து தூங்கிவிட, நடக்க ஆரம்பித்த ராமு பின்னால் வந்த கேஸ்சிலிண்டர் லாரியைக் கவனிக்காமல் போனார். ஹாரன் சத்தங்கேட்டு வாரிச்சுருட்டி எழுந்த வள்ளி ராமுவை ரோட்டோரத்திற்கு தள்ளி விட்டார்.
என்ன செய்வதென தெரியாமல் நெஞ்சைக் பட்டியக்கல்லாக்கிக் கொண்டு ராமுவை தர்காவில் கட்டிப் போட்டார் வள்ளி. லீவு கிடைக்கும் போதெல்லாம் தர்காவிற்கு வந்து போவான் பேச்சி. வந்து அப்பாவையே பேசாமல் பார்ப்பான். “போனா போதுன்னு நெனைக்கிற மனச நீ வாங்கி வந்திருக்கலாம் பேச்சியப்பா…” என்று வருத்தப்படுவார் வள்ளி.
இன்று காலையில் தர்காவிற்குள் நுழைகையில்தான் அந்தக் காட்சியைக் கண்டான் பேச்சி. ராமுவைக் குளிக்க வைக்கும் முன்பு அவர் கீழே தனது பிறப்புறுப்பைக் காட்டி முகத்தை வலிக்கும் பாவனையில் வைத்தார். வள்ளி அவரது கைலியை அவிழ்த்துப் பார்த்தார். நிறைய சீனிப்பேன்கள் முடிகளிலும், சுற்றிலும் பற்றி கடித்துக்கொண்டிருந்தன. கொஞ்சங்கூட யோசிக்காமல் அவற்றை ஒவ்வொன்றாகப் பிடுங்கி கருங்கல்லில் வைத்துக் குத்தினாள். விக்கித்து நின்ற பேச்சி அப்படியே திரும்பி நிழற்குடைக்குள் போனான். பஸ் ஏறிப் போனவன் இரண்டு வாரங்கள் கழித்து கட்டைப்பையுடன் வந்தான். நேராக ராமுவின் முன்னால் போய் உட்கார்ந்தான்.
தண்ணீர் தெளித்து காற்றுப் போகாமல் நாள் முழுக்க சுருட்டி வைத்திருந்த ஆட்டுத்தோல்களை மறுநாள் விரித்தான். கவுச்சிக்கு மூக்கில் துணி கூடக் கட்டாமல் அதன் ரோமங்களைப் பிடுங்கினான். கைகள் பொக்கப் பொக்க அதன் சவ்வுகளைப் பிய்த்தான். சாப்பிட முடியாதளவுக்கு பேச்சியின் கைகளில் நாற்றம் அடித்தது. அப்பாவின் காலியான தொண்டையையும், கரைந்த நாக்கையும் நினைத்துக் கொண்டான். தோல்களை நன்றாக அலசி ஆணிகள் அடித்து வெயிலில் காய வைத்தான். கத்தியை வைத்துச் சுரண்டி தோல்களை மென்மையாக்கினான். கடந்த வாரங்களில் பேச்சி இதை மட்டுமே செய்தான்.
இந்த ஆட்டுத்தோலை எடுத்து வெளியில் வைத்தான். சீமெண்ணெய் விளக்கை எரியவிட்டு அதில் மண்சட்டியைக் கவிழ்த்தி, சட்டியில் படியும் நைசான கரும்புகையை வழித்து கொட்டாச்சியில் பிசினாக்கினான். பூவரசமரத்திலிருந்து எடுத்த மஞ்சள் வண்ணம், கற்றாழைப் பழத்திலிருந்து எடுத்த சிவப்பு வண்ணம் நிரப்பப்பட்ட குடுவைகளை எடுத்தான். உருண்டை மூங்கிலையெடுத்து அறுத்தான். அப்பாவையும், அம்மாவையும் ஒரு முறை உள்வாங்கினான். பதப்படுத்திய ஆட்டுத்தோல்களில் அடுப்புக் கரிக்கட்டையால் இருவரையும் அவனறிந்த இளமைத்தோற்றத்தில் அச்சுப்பிறழாது வரைந்து, வண்ணங்களில் திளைக்கவிட்டு உருவேற்றினான். கை, கால் பாகங்களை வெட்டி மூங்கில்கள் கொடுத்து ஊசி நூலால் தைத்தான்.
இவை அனைத்தையும் மிகப் பொறுமையாக தனது அப்பாவின் கண்களுக்கு முன்னாலேயே செய்தான் சிறுவயது பேச்சி. தர்காவே பேச்சியை உன்னித்துப் பார்த்தன. வள்ளியும் அப்படியே. பின்பு, கொஞ்சநாள் தர்காவிலேயே தங்கினான். சங்கிலியால் கட்டப்பட்ட அனைவரையும், வண்ணப் பாவைகளாக்கினான். இவைகள் முடியும்வரை அம்மாவிடம் அவன் பேசவேயில்லை. சந்தனக்கூடு கொடியேற்றம் அன்றைக்கு அத்தர்களின் நெடியேறும் இருள் மாலையில், அப்பாவின் வேட்டிகளை இணைத்துப் பெரிய திரையாக்கி அவரைப் பார்வையாளராக்கினான். திரைக்குப் பின்னால் சென்று அவரது கால்கட்டையை மாட்டி, எல்லாப் பாவைகளையும் குரலற்ற அசைவுகளில் திரையில் காட்டினான். அதில் பேச்சியின் அப்பா, அம்மா, சங்கிலியில் கட்டப்பட்டவர்கள் அனைவரும் பாவைகளாக மாறி ஆடினர். ஆர்மோனியத்தில் கண்ணீர் கால்களுடன் ஓடத் தொடங்கினார் வள்ளி.