சித்த மருத்துவம்: பிணி தீர்க்கும் மரபின் வரலாறும் அறிவியலும் – பிரபாகரன்
கட்டுரைகள் | வாசகசாலை
மொழிபெயர்ப்புக் கட்டுரை
ஆங்கிலம் : ந.வினோத் குமார்
தமிழில் : பிரபாகரன்
ஒவ்வொரு முறையும் மேற்குலக நாடுகள் இந்தியாவை, பாம்புகளை வைத்து வித்தைகள் காட்டும் மந்திரவாதிகள் மற்றும் ஃபக்கீர்களின் நிலமாக சித்தரிக்கும்பொழுது, பெரும்பாலான மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக குற்றம் சாட்டுகிறார்கள், மேலும் அவற்றை புரிந்துகொள்ளக்கூடியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில், பலர் சிரித்துக் கொண்டே அத்தகைய கூற்றை ஆமோதிக்கும் விதமாக தலையை ஆட்டலாம்.
பல ஆண்டுகளாக அடர்த்தியான காடுகளில் தங்களுடைய கடுமையான தவத்தின் மூலமாக சில விஷேச சக்திகளை அடைந்ததாக நம்பப்படுகின்ற, காவி உடுத்திய சந்நியாசிகள் அல்லது மந்திரவாதிகள் என்ற பொருளுடைய 18 சித்தர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தர், பாம்புகளைக் கூட தனக்கு அடங்கச் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆரம்ப கால கட்டங்களில் இந்த சித்தர்கள் அனைவரும் மருத்துவ நிபுணர்களாக இருந்துள்ளனர்.
பெரும்பாலும் இப்போது மேற்கு தமிழ்நாட்டுப் பகுதிகளில் வாழக்கூடிய இந்த சித்தர்கள் வானியல், இலக்கியம், கலை, இசை, நாடகம் மற்றும் காடுகள், மலைகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் “சித்தா” என்ற ஒரு குறிப்பிட்ட மருத்துவ முறை போன்ற பல்வேறு தளங்களில் அறிவார்ந்தவர்களாக அறியப்படுகின்றனர்.
காய்ச்சல், சளி போன்ற சாதாரண நோய்களுக்கு சிகிச்சையளிப்பதுடன், இந்த சித்த மருத்துவமானது நீரிழிவு நோய், சிறுநீரக நோய்கள் போன்ற தொற்றில்லா நோய்களுக்கும் சமீப காலங்களில், டெங்கு காய்ச்சலுக்கும் சிகிச்சையளிப்பதில் பயன்படுத்தப்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம். இப்போது இது, உலகம் முழுவதும் அதி வேகமாக பரவி வரும் கோவிட்-19 என்று சொல்லக்கூடிய கொரோனா வைரஸ் என்ற தொற்று நோயை கட்டுப்படுத்தக் கூடிய, அதற்குத் தீர்வான மருத்துவ முறையாகவும் பிரபலமாகி வருகிறது.
சித்த மருத்துவ வல்லுநர்களுக்கு கோவிட்-19 தொற்று நோய்க்கு சிகிச்சையளிக்க அனுமதிக்கும் தமிழக அரசாங்கத்தின் சமீபத்திய நடவடிக்கை, அதன் செயல்திறன் குறித்த ஒரு விவாதத்தைத் தூண்டியுள்ளது. அலோபதி மற்றும் நவீன மருத்துவ வல்லுநர்கள், சித்த மருத்துவம் உண்மையிலேயே கோவிட்-19 க்கு எதிராக வேலை செய்யும் என்று நம்ப மறுக்கின்றனர். ஏனெனில் சித்த மருத்துவம், அது எப்படி வேலை செய்கிறது என்ற ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட உண்மைகளை வைத்து பேசாமல், அதன் மூலம் குணமானவர்களை மட்டுமே சான்றுகளாக வைத்து தன்னால் கொரோனா தொற்றிற்குத் தீர்வு காண முடியும் என நம்பிக் கொண்டிருக்கிறது.
இந்தப் பின்னணியில் தான் தி ஃபெடரல், சித்த மருத்துவம் எவ்வாறு இப்போது முக்கிய தேவையாக இருக்கும் மாற்று மருத்துவ முறையாக மாறியது, அதன் கல்வியின் பரிணாமம், அதை நடைமுறைக்குக் கொண்டு வந்து அதன் மீதான பிரதான விவாதங்கள் நிகழ்வதற்கான பின்னணியில் உள்ளவர்கள் மற்றும் அது எதிர்கொள்ளும் சவால்கள் என அனைத்தையும் அவதானித்தது.
சித்த மருத்துவத்தின் வேர்களைக் கண்டறிதல்
சித்த மருத்துவத்தின் வரலாற்றைக் கண்டறிவது என்பது அடிப்படையில் தமிழக வரலாற்றைக் கண்டறிவதேயாகும். சித்தாவைப் பற்றிய குறிப்புகள் பல வழிகளில் கண்டறியப்படுகிறது. இவற்றில் வரலாற்றுப் பதிவுகள், தொல்லியல் மற்றும் கல்வெட்டு சான்றுகள், வெளிநாட்டு ஆய்வாளர்களின் எழுத்து பதிவுகள், திராவிட பழங்குடியினர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் சங்க நூல்கள் போன்றவை முக்கியமானதாகும். மேலும் பிரத்தியேக சித்த மருத்துவ உரைகள், மாற்று மருத்துவ முறைகளான சீன, ஹுமேரியன் மற்றும் அரேபிய பாரம்பரிய மருத்துவ நடைமுறைகளுடன் சித்த மருத்துவத்தை ஒப்பிட்டு எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புகள் போன்றவையும் சித்த மருத்துவத்தைப் பற்றி அறிய துணை நிற்கின்றன.
இந்திய இலக்கியம் மற்றும் மொழியியலில் அறிஞரான செக் குடியரசை சேர்ந்த கமில் வி ஸ்வெலேபில் (Kamil V Zvelebil) என்ற ஆய்வாளரின் கருத்துப்படி, தமிழ் சித்த பாரம்பரியம் என்பது தாந்த்ரீக யோகா இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஏகத்துவத்தை நம்பிய யோகிகள் ஒரே உலகம், ஒரே கடவுள் என்ற கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தனர். அவர்கள் தங்களுடைய சுவாசத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மூச்சுப் பயிற்சியான பிராணயாமத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்காக பயிற்சி செய்தனர். அவர்கள் மோட்சத்தை அடைவதை நோக்கியே தங்கள் வாழ்க்கையை வழிநடத்தியதால் எப்போதும் ஒரு தியான நிலையிலேயே காணப்பட்டனர். அவர்கள் ரசவாதம் பற்றி நன்கு அறிந்திருந்ததோடு, அஷ்டமா சித்தி (எட்டு விஷேச சக்திகள்) என்று அழைக்கப்படும் சக்திகளையும் அடைந்திருந்தனர்.
‘சித்தி’ என்ற சொல்லுக்கு அறிவு அல்லது முழுமை (அ) ஒழுங்கு என்று பொருள். இன்னும் சுருக்கமாகக் கூறுவதென்றால், ‘சித்தி’ என்பது காடுகளில் பிரம்மச்சரிய வாழ்க்கையை வாழ்ந்த சித்தர்கள் தங்களின் அனுபவத்தால் கற்றறிந்த அனுபவ அறிவு. அவர்கள் தங்களின் கண்டுபிடிப்புகளை பனை ஓலைகளில் செய்யுள் அல்லது உரைநடை வடிவில் தமிழ் மொழியில் பதிவு செய்தனர்.
தமிழில் மிகவும் கொண்டாடக்கூடிய புகழ்பெற்ற தமிழ் தத்துவஞானி-புலவர் திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறளில் சித்த மருத்துவ சிகிச்சை முறை பற்றி இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்”
இந்த குறளுக்கான விளக்கம், “நோயின் தன்மை, அதன் காரணம் மற்றும் குணப்படுத்தும் முறை ஆகியவற்றைக் குறித்து மருத்துவர் ஆராய்ந்து அதன்படி உடலுக்குப் பொருந்தும் முறையில் உண்மையாக சிகிச்சையளிக்க வேண்டும்” என்பதாகும்.
இந்த சந்நியாசிகளை மூன்று குழுக்களாக வகைப்படுத்தலாம் – அதாவது பண்டைய இரசவாதிகளான அகத்தியர் மற்றும் திருமூலர், இடைக்கால ஆச்சரியமூட்டும் கவிஞர்களான பட்டிநாதர் மற்றும் பாம்பாட்டி சித்தர், மற்றும் பிற்கால கவிஞர்களான தாயுமனவர் மற்றும் ராமலிங்க அடிகளார் (வள்ளலார்)
சித்த மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, சித்த மருத்துவ நடைமுறைகளை 18 சித்தர்கள் வளர்த்துள்ளனர். இந்த 18 சித்தர்கள் யார் என்பதில் கருத்து வேறுபாடு இருந்தாலும், அவர்களில் பெரும்பாலும் பதஞ்சலி, அகத்தியர், திருமூலர், போகர், குதம்பைச் சித்தர், கோரக்கர் போன்ற சில சித்தர்கள் பொதுவானவர்களாக அறியப்படுகின்றனர்.
சித்த மருத்துவ வல்லுநர்களில் ஒரு பகுதியினர் சித்த மருத்துவம், யோகிகளுக்கு, சிவபெருமானால் கொடுக்கப்பட்டதாகவும் இன்னும் சிலர் அதை கடவுள் முருகன் கொடுத்ததாகவும் நம்புகிறார்கள்.
18 சித்தர்களும் வாதம் (ரசவாதம்), வைத்தியம் (மருத்துவம்), யோகம் (யோகா) மற்றும் தத்துவம் ஆகியவற்றில் நன்கு தேர்ந்தவர்களாக இருந்தனர். எனவே, அவர்களின் சீடர்களுக்கும் அவர்களின் சந்ததியினருக்கும் இவற்றைப் பற்றிய அறிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்று, பெரும்பாலான சித்த மருத்துவ பயிற்சியாளர்களுக்கு ரசவாதம் மற்றும் தத்துவம் குறித்த நிபுணத்துவம் இல்லை அல்லது குறைவாக உள்ளது என்பதே உண்மை.
சித்தாவின் மூன்று பண்டிதர்கள்
சித்த மருத்துவம் முக்கிய மருத்துவமாக மக்களிடையே பிரபலமாவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, இந்த மருத்துவமானது நடைமுறையில் பல ‘வைத்தியர்களால்’ பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை அவர்கள் ஒரு தொழிலாக செய்யாமல், அவர்களின் அன்றாட வேலைகளுடன் ஒரு பொறுப்பாகவே பரம்பரை பரம்பரையாக செய்துள்ளனர்.
இந்த நடைமுறையை தமிழில் ‘பண்டுவம் பார்த்தல்’ என்றும், அதன் பயிற்சியாளர்கள் ‘பண்டிதர்கள்’ என்றும் அழைக்கப்பட்டனர். ‘பண்டிதர்’ என்ற சொல் ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களில் அறிவு பெற்ற, உயர் கல்வி கற்றவர்களைக் குறிக்கிறது.
இன்று சித்த மருத்துவமானது, அயோத்திதாச பண்டிதர், ஆபிரகாம் பண்டிதர் மற்றும் ஆனந்தம் பண்டிதர் ஆகிய மூன்று முக்கியமான பண்டிதர்களுக்கு கடன்பட்டுள்ளது.
“தமிழன்” என்ற இதழை ஏழு வருடங்களாக (1907-1914) நடத்திய அயோத்திதாச பண்டிதர், பட்டியலின மக்களின் விடுதலைக்காக போராடியவர்.
ஆபிரகாம் பண்டிதர் தமிழ் இசையை புதுப்பித்த ஒரு இசைக்கலைஞர். இவரது ‘கருணாமிர்த சாகரம்’ என்ற புத்தகம் இன்று இசைத்துறையில் ஒரு முக்கிய படைப்பாக கருதப்படுகிறது.
முடிதிருத்தும் சமூகத்தை மேம்படுத்துவதற்காக பாடுபட்ட ஆனந்தம் பண்டிதர் சீர்திருத்தவாதியாக அறியப்படுகிறார். 1915 ஆம் ஆண்டில் ‘தென்னிந்திய மருத்துவர் சங்கம்’ நிறுவப்பட்டதன் மூலமும், ஆங்கிலேயர்களால் ஆங்கில மருத்துவம் திணிக்கப்பட்டதை எதிர்த்துப் போராடியதன் மூலமும் சித்த மருத்துவத்தை ஜனநாயகப் படுத்திய பெருமை இவருக்கு உண்டு.
அந்த கால கட்டங்களில், சிகையலங்கார நிபுணர்களாக இருந்த “அம்பட்டர்” என்ற சமூகம், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் சிகிச்சையளித்ததால் ‘மருத்துவர்கள்’ என்றும் அழைக்கப்பட்டனர். அவர்கள், மனித உடலில் மறைவிடத்திலுள்ள பகுதிகளிலிருக்கும் முடிகளையும் வெட்டிச் சீர்படுத்தியதாலும் நகங்களை வெட்டி விடுவதாலும் இறந்தவர்களின் இறுதி சடங்குகளைச் செய்வதாலும் தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்பட்டனர். காலப்போக்கில், அவர்கள் மருத்துவ நடைமுறையை கைவிட்டு, சிகையலங்கார நிபுணர்களாக மட்டுமே தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்.
1920 களில், நவீன மருந்துகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் பாரம்பரிய மருத்துவ முறைகளை தடை செய்ய ஆங்கிலேயர்கள் முயன்றபோது, ஆனந்தம் பண்டிதர் ‘மருத்துவன்’ என்ற பத்திரிகையைத் தொடங்கி அதன் மூலம் சித்த மருத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தினார்.
கல்வி முறையில் சித்த மருத்துவம்
1924 ஆம் ஆண்டில், முறையே பிராமணர்கள் மற்றும் முஸ்லிம்களால் பின்பற்றப்பட்ட ஆயுர்வேதம் மற்றும் யுனானி போன்ற பாரம்பரிய மருத்துவ நடைமுறைகள் குறித்த கல்வி நிறுவனங்களைத் தொடங்க அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் முடிவு செய்தபோது, சித்த மருத்துவம் பிராமணரல்லாதவர்களால், குறிப்பாக ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களால் பயிற்றுவிக்கப்பட்ட ஒரே காரணத்தால் புறக்கணிக்கப்பட்டது.
அதன் பின்பு ஆனந்தம் பண்டிதர் ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுப் போராடி, சித்த மருத்துவத்தையும் மற்ற இரண்டு இந்திய மருத்துவ முறைகளுடன் சேர்ப்பதை உறுதி செய்தார்.
1921-ல் யுனானி மருத்துவ முறையில் நிபுணரான முகமது உஸ்மான் (Mohammed Usman) மற்றும் நவீன மருத்துவத்திலும் பயிற்சிபெற்ற சட்ட நிபுணரான ஜி. சீனிவாச மூர்த்தி (G Srinivasa Murthi) ஆகியோரின் தலைமையிலான குழு சமர்ப்பித்த ‘இந்திய மருந்துகளின் அறிவியல் மற்றும் கலை பற்றிய குறிப்பு’ என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் சித்தா, ஆயுர்வேதம் மற்றும் யுனானி போன்ற மருத்துவ முறைகளை உள்ளடக்கிய இந்திய மருத்துவப் பள்ளி திறக்கப்பட்டது.
இந்த அறிக்கையானது, இந்திய மருத்துவ முறைக்கு அறுவைசிகிச்சை குறித்த நிபுணத்துவம் இல்லை என்றாலும், அவர்களால் அதன் மூலம் குறைந்த செலவில் தங்கள் நோய்களைக் குணப்படுத்த முடிகிறது என பரிந்துரைத்தது.
சென்னையில் இந்திய மருத்துவப் பள்ளியைத் திறக்க பரிந்துரைக்கும் அதே வேளையில், இந்திய மருத்துவத்தைக் கற்பிக்க நவீன மருத்துவப் பள்ளிகளிலும் சில இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கும் அந்த அறிக்கை பரிந்துரைத்தது.
மேலும் அந்த அறிக்கை இந்திய மருத்துவம் மற்றும் நவீன மருத்துவம் இரண்டையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தாலும், நவீன மருத்துவம் இந்திய மருத்துவத்தின் தனித்துவத்தை அழித்துவிடும் என்ற அச்சத்தில் சில முன்னாள் வல்லுநர்கள் அதை எதிர்த்தனர். ஆனால் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர், நோயாளிகளுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக இந்திய மருத்துவத்தை அலோபதியுடன் அரசாங்கம் ஒருங்கிணைக்க வேண்டும் என்று பாரம்பரிய மருத்துவ நிபுணர்கள் இப்போது கோரிக்கை விடுக்கின்றனர்.
கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி
இவ்வாறு 1925 ஆம் ஆண்டில், இந்திய மருத்துவப் பள்ளியானது அப்போதைய மெட்ராஸின் (தமிழ்நாட்டின்) முதல்வராக இருந்த பனகல் மன்னர் பனகந்தி ராமாராயங்கர் அவர்கள் நன்கொடையளித்த நிலத்தில் தொடங்கப்பட்டது. இங்கே நவீன மருத்துவத்துடன் (எம்.பி.பி.எஸ்), இந்திய மருத்துவமும் கற்பிக்கப்பட்டது. மேலும் நான்கு ஆண்டு ஆய்வுக்குப் பிறகு மாணவர்களுக்கு இந்திய மருத்துவத்தில் டிப்ளோமா பட்டயம் வழங்கப்பட்டது. பின்னர், இந்த பாடமுறையானது ஐந்து ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது. நவீன மருத்துவ பாடங்களை நவீன மருத்துவத்தில் பயிற்சி பெற்ற நபர்களால் கற்பிக்கப்பட்டாலும், சித்தா, ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவங்கள் முறையே தமிழ், சமஸ்கிருதம் மற்றும் உருது அறிஞர்களால் மட்டுமே கற்பிக்கப்பட்டது.
1947 ஆம் ஆண்டில், இந்த பள்ளியானது சுதேச மருத்துவக் கல்லூரியாக மேம்படுத்தப்பட்டது. பின்னர் அதை மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அந்த பல்கலைக்கழகத்தின் எதிர்ப்பால் தோல்வியடைந்தன. எனவே அரசாங்கம் ‘ஒருங்கிணைந்த மருத்துவக் கல்லூரியின் பட்டதாரி (Graduate of the College of Integrated Medicine (GCIM))’ என்ற பட்டங்களை வழங்கத் தொடங்கியது. பின்னர் 1955 ஆம் ஆண்டில், இந்த நிறுவனம் ‘ஒருங்கிணைந்த மருத்துவக் கல்லூரி’ என மறுபெயரிடப்பட்டது.
GCIM பட்டதாரிகள் நவீன மருத்துவ பட்டதாரிகளுக்கு சமமானவர்கள் என்றாலும், அவர்களுக்கு ஆரம்பத்தில் அரசு வேலை வாய்ப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை. GCIM பட்டதாரிகளின் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு, அவர்களும் அரசாங்க வேலைகளில் சேர்க்கப்பட்டனர். இருப்பினும், அவர்கள் நவீன மருத்துவ பட்டதாரிகளுக்கு கீழே, பெரும்பாலும் ஜூனியர்களாகவே வைக்கப்பட்டனர்.
1960 களில், மாணவர்களிடையே ஆர்வமின்மை காரணமாக இந்திய மருத்துவ முறைகளைக் கற்பிக்கும் கல்வி நிறுத்தப்பட்டது. பின்பு அதே ஆண்டில் அனைவருக்கும் நன்கு அறிமுகமான, அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் இன்று வரை எம்.பி.பி.எஸ் மட்டுமே நடைமுறையில் இருக்கிறது.
1964 ஆம் ஆண்டில், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மேத்தா குழு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் நான்கு ஆண்டு இளநிலை இந்திய மருத்துவம் (Bachelor of Indian Medicine (BIM)) படிப்பை வழங்க பரிந்துரைத்தது. அங்கு, மாணவர்கள் தங்களுக்கும் வெள்ளை கோட்டுகள் மற்றும் எம்.பி.பி.எஸ் மாணவர்கள் போன்ற ஸ்டெதாஸ்கோப்புகளையும் வழங்க வேண்டும் என்று கோரினர்.
1971 ஆம் ஆண்டில், இந்திய மருத்துவத்தின் மத்திய கவுன்சில் நிறுவப்பட்டு பின்பு BIM என்ற படிப்பானது சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலை (Bachelor of Siddha Medicine and Surgery (BSMS)), ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலை (Bachelor of Ayurveda Medicine and Surgery (BAMS)) மற்றும் யுனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலை (Bachelor of Unani Medicine and Surgery (BUMS)) என பிரித்து மறுபெயரிடப்பட்டதோடு பாடமுறையின் காலமும் ஐந்தரை ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது.
சித்தமருத்துவத்தை பிரதானப்படுத்துதல்
சித்த மருத்துவ மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்ட பெரும்பாலான நூல்கள் பண்டைய தமிழில் வசன வடிவில் எழுதப்பட்டுள்ளதால் அதற்கு மொழி குறித்த ஆழமான புரிதல் தேவை.
இன்று ஆங்கில புத்தகங்கள் இருந்தாலும் 1813 ஆம் ஆண்டு முதலே சித்தா பற்றிய ஆங்கில புத்தகங்கள் கிடைக்கின்றன. பிரிட்டிஷ் அறுவை சிகிச்சை நிபுணர் சர் வைட்லா ஐன்ஸ்லி (Sir Whitelaw Ainslie) சில தமிழ் சித்த நூல்களை மொழிபெயர்த்து அதை ‘மெட்டீரியா மெடிகா ஆஃப் இந்துஸ்தான்’ (Materia Medica of Hindoostan) என்றும் 1891 ஆம் ஆண்டில், டாக்டர் மூதீன் ஷெரிப் (Dr Moodeen Sheriff), உள்நாட்டு மருத்துவ தாவரங்களைப் பற்றி ‘மெட்டீரியா மெடிகா ஆஃப் மெட்ராஸ்’ (Materia Medica of Madras) என்றும் 1918 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் கண் மருத்துவர் ராபர்ட் ஹென்றி எலியட் (Robert Henry Eliot), ‘கண்புரைக்கான இந்திய நடவடிக்கை” (The Indian Operation of Couching for Cataract) என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையும் வெளியிட்டனர். இது கண்புரை செயல்பாட்டில் சித்த மருத்துவ நடைமுறைகளைப் பற்றி விவாதிக்கிறது.
சித்த மருத்துவம் ஒரு பாடமாக 1970 களில் இருந்து அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் கற்பிக்கப்பட்டாலும், இந்த நடைமுறை பிரதானப்படுத்தப்படவில்லை.
1990 களின் முற்பகுதியில் எச்.ஐ.வி (HIV) ஒரு பெரிய பொது சுகாதார அச்சுறுத்தலாக மாறிய போது, அப்போது உண்மையில் எந்தவிதமான நம்பத்தகுந்த சிகிச்சையும் இல்லை. அந்த சூழ்நிலையில் சித்த மருத்துவம் முன்னிலை வகித்தது.
அந்த காலகட்டத்தில், “தாம்பரம் சானிடோரியத்தில் எச்.ஐ.வி நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க டாக்டர் சி.என். தெய்வநாயகம் (CN Deivanayagam 1942-2012) முன்வந்ததாக” தெய்வாநாயகத்தின் கீழ் பயிற்சி பெற்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த மருத்துவர் ஆர் கார்த்திக் (R Karthik) கூறுகிறார்.
வெளிநாட்டில் படித்து புகழ்பெற்ற இதய மருத்துவர் தெய்வநாயகம் தான், எச்.ஐ.வி பாதிப்புக்குள்ளானவரின் உடலில் பிரேத பரிசோதனை செய்தவர்களில் முதன்மையானவர். வேறு எந்த மருந்துகளும் வேலை செய்யாதபோது, சித்த மருந்துகளான ரசகந்தா மெழுகு (Rasaghanda mezhugu), அமுக்குரா சூரணம் (Amukkura chooranam) மற்றும் நெல்லிக்காய் லேகியம் (Nellikkai lehiyam) போன்றவற்றை அவர் முயற்சித்தார்.
“அவர் இந்த சிகிச்சை முறையை RAN (மருந்துகளின் ஆங்கில பெயர்களில் உள்ள முதல் எழுத்துக்களின் அடிப்படையில்) சிகிச்சை என்று அழைத்தார். இது சிறந்த முடிவுகளைத் தந்தது. அவர் தனது இந்த சிகிச்சை முடிவுகளை தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் சமர்ப்பித்தார்” என மருத்துவர் கார்த்திக் கூறுகிறார். பின்னர் அவர் தனது வழிகாட்டியின் மேலுள்ள மரியாதையால் தனது பெயரை கார்த்திக் தெய்வநாயகம் என்றும் மாற்றிக்கொண்டார்.
மேலும் அவர், “அலோபதி மற்றும் இந்திய மருத்துவத்தை இணைத்து ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான மருந்தை வழங்கும் கருத்தாக்கமானது அன்றிலிருந்தே தொடங்கியது” என்றும் கூறுகிறார்.
சித்த மருத்துவத்தின் அறிவியல்
சித்த மருத்துவம் 96 தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டது. இது மனிதர்களை மூன்று உணர்வுகள் (வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் உடல் திரவங்கள்), ஏழு அடிப்படை திசுக்கள் மற்றும் ஐந்து கூறுகளின் கலவையாகக் கருதுகிறது. மூன்று உணர்வுகளை (‘முக்குற்றம்’ அல்லது ‘முப்பிணி’) வாதம், பிதம் மற்றும் கபம் என்றும் ஏழு திசுக்களை நிணநீர், குருதி, தசை, கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை மற்றும் விந்து அல்லது மாதவிடாய் திரவங்கள் என்றும், ஐந்து கூறுகளை (பஞ்ச பூதங்கள்) நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் என்றும் வகைப்படுத்துகிறது. இவற்றில் ஏதேனும் ஒன்று அதிகமாகவோ அல்லது குறைவாகவோ செல்லும்போது, அது உடலில் வியாதிகளை உருவாக்குகிறது.
சித்த மருத்துவத்தில் நாடித் துடிப்பைப் படிப்பது, சிறுநீர் அல்லது மலத்தை ஆராய்வது, கண்கள், நாக்கு மற்றும் குரலைப் படிப்பது, உடல் நிறத்தில் ஏற்படும் மாற்றத்தை ஆராய்வது, மற்றும் உடலின் உணர்வை ஆராய்வது ஆகிய சித்தாவிற்கென்றே தனியாக எட்டு வகையான நோயறிதல் முறைகள் உள்ளன.
சித்த மருந்துகள் பெரும்பாலும் மூலிகைகள், தாது (அ) கனிம பொருட்கள் மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்பட்ட பொருட்கள் ஆகியவற்றால் ஆனவை. மொத்தம் 32 வகையான மருந்துகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. அவை நோயின் தன்மையை பொறுத்து வாய்வழியாக உட்கொண்டோ அல்லது உடலின் வெளிப்புறமாக தடவியோ பயன்படுத்தலாம்.
கோவிட்-19 க்கான சித்த மருத்துவம்
இன்று, சித்த மருத்துவத்தின் நடைமுறை பயன்பாடு, நவீன நோய்களுக்கான சிகிச்சையில் ஒரு புயலை உருவாக்கியுள்ளது. முதலில் நிலவேம்பு குடிநீர் டெங்கு சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டது. அதே போல் இப்போது, கோவிட்-19 க்காக கபசுர குடிநீர் பயன்படுத்தப்படுகிறது.
சித்த மருத்துவத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று கூறப்படும் இந்த வேளையில், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மூலிகை கலவைகளை விநியோகிக்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையில் உள்ள வியாசர்பாடியில் 226 படுக்கைகள் கொண்ட சித்தா கோவிட் பராமரிப்பு மையத்தையும் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
“ஆரம்பத்தில், கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக பரிந்துரைக்கப்பட்டன. கொரோனா ஒருவரைத் தாக்கும் சமயத்தில், நோயாளிகளுக்கு அமுக்குரா சூரண மாத்திரைகள் மற்றும் நெல்லிக்காய் லேகியம் வழங்கப்பட்டன. வரலாற்றில் முதல்முறையாக, “ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையின் அடிப்படையில் அலோபதி மருந்துகளுடன் கபசுர குடிநீரையும் வழங்க மாநில அரசு கட்டளை பிறப்பித்துள்ளது” என சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவ நிபுணர் ஜி சிவராமன் (G Sivaraman) தி இந்து தமிழில் எழுதுகிறார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்தில் இதற்கான முதல் பரிசோதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அங்குள்ள ஒரு அரசு மருத்துவமனை இரண்டாவது சுற்று சோதனைகளை நடத்தியுள்ளது. அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
“அவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்ட பிறகு, அவர்களின் LDH (Lactate Dehydrogenase Enzyme) மற்றும் CPK (Creatine Phosphokinase Enzyme) ஆகிய என்சைம்களின் அளவு குறைந்துள்ளது கண்டறியப்பட்டது. இது மற்றொரு திருப்புமுனை” என்று திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம் குமார் (Vikram Kumar) கூறுகிறார்.
மேலும் இது போன்ற சோதனைகளை சித்த மருத்துவத்தின் மத்திய ஆராய்ச்சி கலகமும் மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும், அலோபதி மருத்துவர்கள் சித்த மருந்துகளை வெகுஜன பயன்பாட்டிற்கு ஏற்றதாக அறிவிப்பதற்கு முன்பு சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகள் போன்ற பல சோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றனர்.
ஈரோட்டில் பரம்பரை பரம்பரையாக சித்த வைத்தியம் செய்து வரும் குடும்பத்தைச் சார்ந்த, கல்லூரி பேராசிரியரான வெற்றிவேல் (Vetrivel) கூறுகையில், “கடந்த 70 ஆண்டுகளில் திராவிடக் கட்சிகள் இதை மேம்படுத்த எதுவும் செய்யவில்லை என்பதால் சித்த மருத்துவம் தமிழர் மருத்துவமாக இருந்தபோதிலும் அவை கண்டுகொள்ளப் படாமலே இருக்கின்றன” என்கிறார்.
மேலும் அவர், “நிதி பற்றாக்குறை, அரசியல்வாதிகளின் இடையூறு மற்றும் சித்த மருத்துவ பயிற்சியாளர்களிடையே ஒற்றுமை இல்லாமை ஆகியவையே சித்த மருத்துவம் மக்களின் நோய்களைத் தீர்க்கும் என்பதற்கான சான்றுகளை ஆதார அடிப்படையிலான உண்மைகளாக மாற்றாதற்கான காரணங்கள்” என்றும் வருந்துகிறார்.
நன்றி: The Federal https://thefederal.com/the-eighth-column/siddha-understanding-the-science-and-history-behind-mysterious-cures/
நான் இன்று இந்த கட்டுரையை கல்லூரி கட்டுரை போட்டியில் சமர்பித்து உள்ளேன்…