காலை முதலே வகுப்பு ஒரே பரபரப்பாக இருந்தது. பள்ளியின் கழிப்பறைக்குள் நுழைய முடியவில்லை என்று மாணவிகள் பேசிக்கொண்டனர். அது பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளி. ஏழாம் வகுப்பு. பிரச்னை ஏழாம் வகுப்புக்கு மட்டுமல்ல, முதல் தளத்தில் இருந்த எல்லா வகுப்பு பசங்களுக்குமே. முதல் தளத்தில் இருந்த கழிப்பறையில்தான் காகம் ஒன்று யாரையும் உள்ளே போகவிடாமல் தடுத்துக்கொண்டு இருந்தது.
அந்தக் காகத்தினை நண்பர்கள் திட்ட ஆரம்பிக்கவும், காகத்துக்குப் பரிந்து பேச வந்தாள் பெ.நிவேதா. அவளுக்கு காகங்கள் என்றால் கொள்ளை ப்ரியம். தினமும் 100 கிராம் காராபூந்தியை (கார பூந்திதான் சரியான பெயர் என்றாலும் ஊர் பக்கம் எல்லாம் காராபூந்திதான்) வாங்கி வருவாள். ஆனால், ஒரு பொட்டுகூட அவள் சாப்பிடமாட்டாள். காகங்களுக்குப் பிடிக்கும் என சின்ன வயதில் யாரோ சொல்ல, தினமும் காகங்களுக்கு அந்த காரா பூந்தியை வைத்துவிடுவாள். அதுவும் அந்த பூந்தி நமர்த்து போய்விடக்கூடாது. காகங்கள் அவற்றை தன் அலகுகளால் கடுக் கடுக் எனத் தின்பதை கேட்க அவளுக்கு அலாதி ப்ரியம். இப்படிப்பட்டவள் காகங்களை குறை சொன்னால் சும்மாவிடுவாளா? காலை இடைவேளையின்போது மாணவிகளால் கழிப்பறைக்குள் நுழையமுடியாமல், கீழ்தள கழிப்பறைக்கு சென்றுவந்தனர். தாமதமாக வகுப்புகளுக்கு வந்த மாணவிகளை ஆசிரியரும் சும்மாவிடவில்லை.
மதிய உணவு இடைவேளையினபோது, எல்லோரும் அந்தக் கழிப்பறையின் வாசலில் கூடிநின்று எட்டிப் பார்த்தனர். காகம் ஒரு திட்டில் அமர்ந்து இருந்தது. `உஷ் உஷ்’ என்று விரட்டினர். அது கொத்துவது போல வந்ததும், ஓவென்று சத்தமிட்டு எல்லோரும் ஓடினார்கள். எல்லோரும் கொய்யா மர நிழலில் உணவருந்தி கொண்டிருந்தனர். பெ.நிவேதாவும் ஈ.மகேஸ்வரியும்தான் உற்ற தோழிகள். ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். எங்கிருந்து வந்ததென்றே தெரியவில்லை. திடீரென்று காகம் ஒன்று தோன்றி, ஈ.மகேஸ்வரியின் டிபன் பாக்ஸில் இருந்த முட்டையினை கொத்திச் சென்றது. மகேஸ்வரிக்கு இது புதிதில்லை என்றாலும், அந்த நொடி திக் என்று இருந்தது. இதே காகம்தான் இந்தச் சேட்டையை செய்யும். அந்தக் காகம் திடீரென்று பார்த்தால், அண்டங்காகம் போல இருக்கும். ஆனால், உற்றுப்பார்த்தால்தான் அது சாதாரண காகம் என்று தெரியும். நிவேதா சமாதானம் செய்தாள் “அட விடு மகேசு!”
மதியம் முதல் வேளைக்கு நடுவிலேயே மகேஸ்வரிக்கு வயிற்றை புரட்டியது. ”நிவி என்கூட டாய்லெட் வரியா? கீழ போக பயமா இருக்குப்பா” என்று நிவேதாவை துணைக்கு அழைத்தாள். அடுத்த பாடம் கம்யூட்டர் சயின்ஸ். அந்த ஆசிரியர் அதட்டமாட்டார். அவர் நுழையும்போதே, மகேஸும் நிவியும் “மேம் டாய்லட்” என்று வெளியேறினர். “அதெப்படி ரெண்டு பேருக்கும் ஒண்ணா வருமோ?” எனக் கிண்டலடித்தார் ஆசிரியர்.
கழிவறைக்கு செல்லும்போது காகம் காணவில்லை. மொத்தம் நான்கு அறைகள் இருந்தன. நிவி வெளியவே காத்திருந்தாள். அதுவரை இல்லாத காகம் திடீரென்று வந்துவிட்டது. நிவிக்கும் திக்கென்றுதான் இருந்தது. நிவியை காகம் கொத்த வந்தது. நிவி ஓடினாள். மகேஸுக்கு வெளியே நடந்தது தெரியவில்லை. கதவினை திறந்தபோது காகம் வெளியே இருந்தது தெரிந்தது. டக்கென்று கதவினை சாத்திக்கொண்டாள். ஒரு சின்ன ஓட்டை வழியே காகம் போகிறதா இல்லையா எனப் பார்த்துக்கொண்டே இருந்தாள். காகம் நகர்வது போல தெரியவில்லை. “நிவி… நிவி” என்று அழைத்துப்பார்த்தாள். “யாராச்சும் இருக்கீங்களா?” என்று கத்தினாள். “கா… கா…” எனக் காகம் கரைய ஆரம்பித்தது. சுமார் கால்மணி நேரம் அப்படியே நடந்துகொண்டு இருந்தது. கதவு திறப்பதும் காகம் மிரட்டுவதமாகவே இருந்தது.
“காக்கா ப்ளீஸ்… என்னை விட்டுடேன்” என்ற அளவுக்கு மகேஸ்வரி வந்துவிட்டாள். காகம் கரைந்துகொண்டு இருந்தது. மகேஸ்வரிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. `ஆவது ஆகட்டும்’ என்று கதவினை சடாரென திறந்து வெளியே ஓடினாள். காகம் துரத்திக்கொண்டு வந்து, அவள் தலையைத் தன் கால்களால் தட்டிவிட்டுச் சென்றது. பதறிவிட்டாள் ஈ.மகேஸ்வரி. ஓவென கத்திக்கொண்டே வகுப்பறைக்குள் நுழைந்தாள். கடகடவென தன் இருக்கைக்குச் சென்று அழ ஆரம்பித்தாள். எல்லோரும் சூழ்ந்துகொண்டனர். “என்னாச்சு? என்னாச்சு?” என விசாரித்தனர். ஆசிரியையும் வந்து விசாரித்தார். “அட ஒரு காகத்துக்கா” என்றார் நகைத்துக்கொண்டே. பள்ளியின் வாட்ச்மேன் உடனே வரவழைக்கப்பட்டார். ”காக்கா குட்டி போட்டிருக்கு. அதைப் பாதுகாக்கத்தான் அப்படி நடந்துகிட்டு இருக்கு. பத்திரமா எடுத்துட்டேன்” என்றதும், மொத்த வகுப்பும், “வாவ்! காக்கா குட்டியா?” என ஆவலானார்கள்.
நிவி கூறிக்கெண்டே இருந்தாள், “காக்கா எல்லாம் ஒன்னும் பண்ணாது மகேசு.”
ஆனால், மகேஸ்வரியின் பதற்றம் குறையவே இல்லை. கேவி கேவி அழுதுக்கொண்டே இருந்தாள். பள்ளியில் இருந்து வீட்டுக்கு போனதும் கூட அடங்கவே இல்லை. அம்மாவிடம் நடந்ததைச் சொன்னதும், “காக்கா கொத்தி இருக்குன்னா சனி பகவான் கோயிலுக்குப் போகணும்” என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்.
ஏரிக்குப்பத்தில் ஒரு சனி பகவான் கோயில் இருந்தது. அங்கே மறுநாள் போயே தீரவேண்டும் என்று சொல்லிவிட்டார். மறுநாள் காலையில் மகேஸ்வரியின் குடும்பம் ஏரிக்குப்பத்துக்குச் சென்றது. அப்பா, அம்மா, ஈ.மகேஸ்வரி, ஈ. மதன். மதன் தம்பி. கோயிலுக்குள் “நல்லா கும்பிடுங்க” என்றார் அம்மா. அன்றைய தினம் மகேஸ்வரியின் பதற்றம் குறைந்து இருந்தது. ஊருக்கு வெளியே இருந்தது கோயில். கடைகள்கூட இருக்கவில்லை.
தன்னை யாரோ பார்ப்பது போல மகேஸ்வரிக்கு தோன்றியது. யார் என்று தேடினாள். காகம். அதே காகம் தான். திடீரென பார்ப்பதற்கு அண்டங்காகம் போலவும், உற்றுப்பார்த்தால் சாதாரண காகம் போல இருக்கும் காகம். தன்னை தலையில் தட்டிய அதே காகம்தான். உறுதிப்படுத்தினாள் மகேஸ்வரி. தம்பி மதனிடம் கூறினாள். உடனே அவன் வீரன்போல அந்த காகத்தை விரட்டிக்கொண்டு சென்றான். வேகமாகப் பறக்கும் காகம், ஏனோ மெல்ல அவனை எங்கோ அழைத்துச் செல்வது போல பறந்தது. ஆலமரத்தில் மீது அமர்ந்தது. சில நிமிடங்களில் திரும்பினான்.
“அக்கா, இது உன் கம்மல்தானே?” என நீட்டினாள். நேற்று மாலை வீடு முழுக்க தலைகீழாக்கி மகேஸ் தேடிக்கொண்டிருந்த கம்மல். அவளுக்கு மிகவும் பிடித்த கம்மல். போன திருவிழாவின்போது பாட்டி வாங்கிக்கொடுத்த நீல நிற கம்மல். “எப்படிடா கிடைச்சுது?” என்று கேட்டதும், மரத்தின் கீழே நின்று கல்லால் அடிக்க முற்பட்டபோது, கிளையில் இருந்து அந்தக் காகம் இந்த கம்மலை தள்ளிவிட்டதாகக் கூறினான். உடனே மகேஸ்வரிக்கு புரிந்துவிட்டது. கழிவறையில் இருந்து பதற்றத்தில் ஓடிவரும்போது, கம்மல் விழுந்து இருக்க வேண்டும். அதனைக் கவனப்படுத்த தலையில் காகம் அடித்திருக்க வேண்டும். `அடச்ச… இந்த நல்ல காகத்தை போய் தவறாக நினைத்துவிட்டோமே?’
அப்பா எல்லோரையும் வண்டியில் ஏறச் சொன்னார். அவர்களுடனே மேலே அந்தக் காகம் பறந்து வந்ததை மகேஸ் பார்க்காமல் இல்லை.
ஊரின் நுழைவில் இருக்கும் புதிய பேக்கரியில் வண்டியை நிறுத்தினார்.
“உனக்கு என்ன வேணும் மகேஸு?”
“ஒரு கிலோ காரா பூந்தி”