தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட
பெருநகரம்கருப்பு துணி போர்த்திய நேரம்
வானவில் உடுத்தியிருந்த
முதியவளின் புன்னகை
ஆயசம் நிறைந்தது
பேரம் முடிந்த சம்போகத்தின்
தடையாக தொங்கியபடி
வெளிச்சம் கசிகிறது சோடியம் விளக்கு
கூடுதலாக வருமானம்
எதிர்பார்த்த ஆட்டோ ஓட்டுநர்
சாவுகிராக்கி ஒருவனின் வாந்தியை
அலசிச்சிச் செல்கிறான்
பொதுக்கழிப்பிடத்தில்
குறி வரைந்த வக்கிரத்தின்
கரிக்கோட்டு எண்கள்
யாருக்கனவை
வேகத்தடைகளை மதிக்காமல் சீறிப்பாய்கிறது
நான்கு வழிச்சாலை மிருகம்
சாக்கடையில் மிதக்கும்
வெள்ளி மோதிரம்
சுயத்தை மறைத்த கணத்தில்
எல்லோருக்கும்
நல்லிரவு…..
**********
களவும்
கற்று
மறந்து விடாதே
அடிக்கடி தொலையவே
ஆவலுடன் திரிகிறேன்.
கையும் களவுமாக உன்
கண்கள்
என் இமையில் சிக்கியது….
**********
வளையல் கணக்கு
தேர்வு நேரத்தில்
வட்டமிட தூக்கி நீ எறிந்த வளையல்
இன்னும் என்னிடத்தில்
பத்திரமாகவே இருக்கிறது
திருவிழாவின் போது கைகள் முழுவதும்
போடப்பட்ட வளையலுக்காக
உண்டியலில் கை வைத்து
உலக்கையில் வாங்கிய அடியின் தழும்பு
வளையலை ஒத்திருக்கிறது
சாலையோர பித்தள் ஒருத்தி
கை நீட்டி வானத்தோடு பேசிக்கொண்டிருக்கும் போது ஜொலிக்கும் கைகளில் பூட்டிய
அலுமினிய வளையல்களில்
விடிகிறது வெள்ளி
ஆஸ்பத்திரி செலவுக்கும்
அதுக்கும் இதுக்குமென
அடகுக்கடையில் புழங்கும்
தங்க வளையல்கள் மேல்
இப்போதெல்லாம் பிரியம் தேங்குவதில்லை எனக்கு
வளைகாப்பு நாளில்
கைகளில் வண்ணமிட்ட வளையல்களை
மழை நாட்களில்
வானத்தில் வளையக் காண்கிறேன்
தாயம் ஆடும் சிறுமிகளின்
உடைந்த வளையல் துண்டுகள்
கூட்டிக் கழித்துப் போடுகின்றன
வாழ்க்கையின் கணக்கை…..
**********
காலநதியின் கரையில்
ஞாபகங்களை த்தூண்டிலிட்டு காத்திருக்கிறேன்
வானம் சாயம் போன பொழுதொன்றில்
அபத்த புழுக்களை விழுங்கிய
அரூப மீன்கள்
கையில் குதித்து விளையாடுகிறன
தனிமைச்சேற்றில் தத்தளிக்கும்
தலைப்பிரட்டையின் சப்தங்கள்
மீட்சியின் பேரிடரை சுமந்தபடி
மூளைக்குள் எரியும் மின்விளக்கில்
சுடர்விடும் யாவும்
சுமக்க இயலாத பெருங்கனவு ஒன்றின் ஆற்றாமையில்
நீளும் பொழுதில் தக்கையாகிறேன்…….
**********
ஒவ்வொரு விதத்திலும் ஆச்சரியம் கொட்டிக்கிடக்கும்
கடலில் ஆயிரம் உண்டு
ஆனாலும் அந்த ஒன்றில் மட்டுமே
நீ மையம் கொண்டிருக்கிறாய்
தீபத்தின் சுடரில்
அகலவிரியும் வெளிச்சத்தின்
கோலங்களை சட்டை செய்யாத நீ
அனைத்து விடவே ஆர்வம் கொள்கிறாய்
காதிருக்கும் நொடிகளில்
மனதில் பூக்கும்
கனவு மலர்களின் கிளர்ச்சியில்
சஞ்சாரம் செய்யும் பொழுதிலும்
கற்பனை சிறகுகளின் ஊர்வலம்
தரும் போதையில் தள்ளாடிய போதிலும் நிஜத்தில் தேள் கொட்டியது போல் உனது இருத்தல்
எனது இருளில் மிளிரும்
நிலவானவன் நீ
எனது பன்மைகாணும் நாளை
இப்பிறவியில் காண்பேனா…
**********
நீ மறைத்து
வைத்திருக்கும்
மொழியை
திருட கன்னமிடுகிறேன்…
**********
விருப்பமில்லா விடுமுறையாக
ஊர்ந்து தொலைக்கிறது காலம்….
**********
அருவியூரில்நீர் பொழிவில்லாத
தொடர் மெளனம்
சலசலத்தோடுகிறது மனதில்
காபியில் ததும்பும்
கடைசி மிடற்று கசப்பு
கோப்பையை உடைக்கிறது
மின்சாரக் கம்பத்தில் அறைகூவலிடும்
பறவையின் குரலில்
வெறுமையின் மாயம்
வேனிலை விரிக்கிறது
எப்போதும் வெறுமை
நிரம்பிய வயிற்றுக்குள்
நீர்வண்டியின் சப்தம்
செடியோடு சமாதியான
தட்டானின் கனவுகளில்
எந்த வண்ணம் மிகுந்திருக்கும்
ஆகிருதி யாவும்
ஆவியாகும் நிலையில்
தத்தளிக்கும் போது
தான் கட்டிய மணல் வீட்டிற்கு
விரைந்து அழைக்கிறாள் குழந்தை….
**********
கூண்டு நீ
நான் பறவை
என்னுள்
அடக்குமுறை செய்கிறாய்
காற்று நீ
கானம் நான்
உள்ளே புகுந்து
இதயம்கொய்கிறாய்
ருசி நீ
பசி நான்
மிடறு மிடறாய்
அருந்துகிறாய்
மௌனம் நீ
சப்தம் நான்
நான் அடங்க
நீ தொடங்குகிறாய்
மின்னல் நீ
வானம் நான்
அருளாய் என்னில்
இறங்குகிறாய்
ஆழ்கடல் நீ
அலைகள் நான்
அடிக்கடிஅலைக்கழிப்பு
செய்கிறாய்
ஒளி நீ
இருள் நான்
பலவந்தமாக க் கூடுகிறாய்
ஆவி நீ
ஆயுள் நான்
உயிருடன் கல்லறை
கட்டுகிறாய்….
**********
அடையாளமற்ற பறவையின் சிறகுகள்
நேற்று முன்தினம்
நள்ளிரவு
எனக்கு சிறகுகள் முளைத்தன
திணித்த அடையாளத்தின்
அழித்தொழிப்பில் நீ
இறங்கிய பின்னர் தான்
தீர்க்கமாய் முளைத்தன
வீடடங்கி ஊரடங்கி நாடடங்கி இருக்க
நீ கற்பித்த நேரத்தில்
கண்டம் தாண்டவே முளைத்தன
பாதயாதித்திரை புனித மென
பசிப்பிணி விரதமென
பழக்கபடுத்திய கயமையில்
அவை முளைத்தன
விலையில்லா வாய்க்கரிசி
வேண்டுமளவு தந்த போது
கல்லறை தோட்டத்திலிருந்து முளைத்தன
நீண்ட சாலையில் ரத்தம் நனைந்த
தொப்புள் கொடியின் நடையணத்தில்
பிறந்த சிசுவிற்கும் முளைத்தன
இயந்திரபறவை
மலர்தூவி
அஞ்சலி செலுத்திய நேரத்தில்
முளைத்தன
நீ எமது கால்கள் நொறுக்கிய தருணத்தில்
அடையாளமில்லா பறவை ஒன்று
தனது திசையை தீர்மானிக்க
அகலமாய் முளைத்தன சிறகுகள்…..
**********
எனது சொல்லை
எடுத்துதொலை தூர
மரமொன்றில்
தூளியில்போட்டு
ஆட்டிக்கொண்டு இருக்கிறாய்.
எனது புன்னகை
அந்த மைதானத்தில்
உன் பாதங்களுக்கு
மத்தியில் மீண்டும் உருண்டுவரும்
சலசலத்து ஓடும்
அருவியில் நீ
முகத்தில் தெளித்து
கொள்வது எனது கண்ணீர்
அன்றி வேறில்லை
முன்னே சுழன்று உன்
கண்ணில் உருத்தும்
தூசியில் இருப்பது என் மூச்சு
உன் தொண்டையில்
சிக்கிய உணவு துணுக்கில் நீ
எனக்களித்த வாக்குறுதி
சதா உன்னை சுற்றும்
எதிலும்
வானம் தேடும்
நீயாகிய நான்
**********
கிருமிக்கால கேள்வி
மிச்சமாகும் நாட்களுக்கு சில்லறை
யாசிப்பவன் தீகடலின்
புகையருகே வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தான்
அனாதையாக்கப்பட்ட
சூதாட்டசாலை எங்கும்
வெறுமையின் எச்சில்கள்
தனித்து விடப்பட்ட இரவில்
அழுகிய பழம் சிதைந்த படி
வெள்ளை புழுக்களின் மத்தியில்
ஊர்ந்து செல்கிறது
மின்சார கம்பத்தில் பறவைகள்
குடும்ப சகிதமாய் அரசியல்
விவாதத்தில்
வாயுறை என்பது கருத்துக்கும்
சேர்த்துதான் என
அறிவிப்பு வந்த வண்ணம் இருக்கிறது.
மாலை சிற்றுண்டி
உளுந்து வடையா
உருளைக்கிழங்கு போண்டாவா
என்பவனுக்கு என்ன
**********
ஆரஞ்சு நிறயானையின் அறிவுரை
சங்கரி விட்டு சேவல்
கூட வீட்டில் எட்டி பார்க்கவில்லை
நாளுக்கு நாலுமுறை வரும்
நாயையும் காணவில்லை
வெரசா போயிட்டு
இருக்கும்போது வெடுக்கென்று கையை பிடித்து முகத்தை பார்த்து ‘
ஒருடீ சாப்பிட்டு
போலாம் இல்ல..’
என்று நம்பிக்கையை வாங்கித்தரும் நண்பனைப் பார்த்து நாள் ஆயிற்று
ஆயுள் தண்டனையில் இருந்த ஒட்டகம்
மனுஷ மக்களை பார்க்க வேண்டி
பரோலில் வந்த பொழுது
வெறிச்சோடிக் கிடந்த வீதியை பார்த்துவிட்டு மீண்டும்பாலைவனம் செல்ல ஆயத்தமானது
பழம் விற்கும் பாட்டியிடம்
பூவிற்கும் அக்காவிடம்
‘சில்லறை இல்லையினா இறங்கு’ ௭ன கோபப்படும் நடத்துனரிடம்
இதுக்கு எதுக்கு லக்கேசு..
என மாராயபடும் பெருசுக்கு
கோளாறு சொல்லும் வயசாளுக்கு
வெத்தலைக்கு சுண்ணாம்பு
கொடுக்கும் கொண்டையம்மா அப்பத்தாவிற்கு
சாவுகிராக்கி வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா என திட்டும் காரோட்டிக்கு
மிதிவண்டியில் சுக்கு காப்பி விற்கும் அண்ணனிடம்
ஆட்டோ டியூ கட்ட முடியாமல்
கண்ணீரில் டீசல் போடும் மாரிக்கு
இன்னும் வயிற்றில் காற்றை நிரப்பிக் கொண்டிருக்கும் எல்லோரிடமும் பிரியங்களை
பரிமாறிக் கொள்வது
எப்போது
தும்பிக்கை இல்லாமத
அந்த ஆரஞ்சு யானை
எமக்காக ஆறுதல் சொல்லாமல் அறிவுரை சொன்ன போது
யானை சிலை ஆகும்போது காகம் பார்த்துக்கொள்ளும் என்று சொல்லத் தோன்றியது…
**********
காற்று போன
நிலையில்
கால பந்து
நினைவு எறும்புகள்
கடித்த இடத்தில்
எல்லாம் தடயம்
பூச்சிப்பல் எடுக்க
போடப்பட்ட வலிநிவாரணியில்
இனிப்பு மயக்கம்
ஒத்திசைவு இல்ல
பேரிரச்சலில் சூழலும்
மாய வலையில்
யாவும்
குடம் தாங்கிய
நீரில் ததும்மி வழியும்
நம்பிக்கை…
**********
காய் விட்ட இடங்களில்
பழம் தராத பால்யம் கண்டு
வெம்பு கிறது முதுமை….
**********