சிறுகதைகள்
Trending

அணில்குட்டி – காலச்சித்தன்

சிறுகதை | வாசகசாலை

துரத்தி வரும் டைனோசரிடமிருந்து தப்பிக்க அப்பா சைக்கிளின் பெடலை வேகமாக மிதித்துக் கொண்டிருந்தார். அவரது நெற்றியிலிருந்து வியர்வை ஆறாகப் பெருகிக்கொண்டிருந்தது. அவரது மூச்சுக்காற்று பலமாக அவனது உச்சந்தலையில் மோதியது. சைக்கிள் மலை முகடுகளிலும், ரயில்வே பாலங்களிலிலும், கடலுக்குள்ளும் ஓடியபோது அதன் பார் கம்பி அழுத்தி நிதினின் பின்புறம் கடுமையாக வலித்தது.

 

அவன் பின்னால் திரும்பிப் பார்த்தபோது, வாயில் நெருப்புப் பொறி பறக்க துரத்தி வந்த டைனோசர் ’ஹோ’ என்று கடும் குரலெழுப்பியவாறு தன்னுடைய சிவந்த நாக்கை நிதினை நோக்கி நீட்டியது. பயத்தில் “அப்பா, வேகமா போப்பா, வேகமா போப்பா…” என்று நிதின் கத்த, அதன் நாக்கு திடீரென வளர்ந்து சைக்கிளைத் துரத்தியது. நித்தினின் கண்கள் நிலைகுத்தி நிற்க அந்த நாக்கு அவனது கையில் இருந்த ஐஸ்கிரீமை லாவகமாகப் பிடுங்கிக் கொண்டது. ஒரே இழுப்பில் ஐஸ்கிரீம் டைனோசரின் வாய்க்குள் செல்ல அது சப்புக்கொட்டி சாப்பிட்டுவிட்டு நித்தினைப் பார்த்து கெக்கலித்தது.

 

ஐஸ்கிரீமைப் பறித்தது மட்டுமல்லாமல் தன்னைப் பார்த்து கொக்காணி காட்டும் டைனோசரின் மீது நிதினுக்குக் கடும் கோபம் வர “டாடாய்ய்ய்ய்ய்ய்ய்ய் ” என்று கத்தியவாறு சைக்கிளில் இருந்து நிதின் குதித்தபோதுதான், “கண்ணு, ராசா எந்திரிப்பா” என்ற அம்மாவின் குரல் கேட்டது. அம்மா இங்க எங்க வந்தாள் எனக் குழம்பியவாறு, மலங்க மலங்க விழித்தபடி எழுந்த நிதினுக்கு டைனோசரைக் காணாமல் ஏமாற்றமாக இருந்தது.

 

“அம்மா, என்னோட ஐஸ்கிரீம், அந்த டைனோசர்”.

 

“இன்னைக்கும் கெனாக் கண்டியா?. அந்த செல்போன்ல கண்ட கண்ட கார்ட்டூனெல்லாம் பாக்காதன்னு சொன்னா கேட்டாத்தான…? எந்திருச்சு இந்த பாலக் குடி. அம்மா இன்னிக்கு வேலைக்கு போகனும்”.

 

நிதினுக்கு திக்கென்று இருந்தது. இனிமே பகல் பூராவும் தான் தனியாகத்தான் இருக்கனுமா? ஸ்கூல் இருந்தாலாச்சும் பரவால்ல. கொரானாவால ஸ்கூலும் இல்ல. கூட வெளையாட யாருமே இல்ல.

 

“செல்போன குடுத்துட்டு போயிரும்மா. இல்லாட்டி எனக்கு போர் அடிக்கும்”.

 

“ஏம்ப்பா செல்போன உனக்கு குடுத்துட்டா அப்புறம் நான் பேசறதுக்கு என்ன பண்றது? நீ இப்போ எந்திருச்சு பல்ல வெளக்கி, அம்மா குடுக்கறத சாப்பிட்டுட்டு பக்கத்து வீட்டு தாத்தா கூட இருப்பியாம். நான் சாயங்காலம் உனக்கு பால் பன் வாங்கிட்டு வருவேனாம். சரியா?”

 

“அம்மா, எனக்கு அந்த தாத்தா வீட்டுக்கு போக பிடிக்கல. உச்சா நாத்தம் அந்த வீட்டுல. டிவில எப்பவுமே நாடகம் மட்டும்தான் ஓடுது. கார்ட்டூன் போட மாட்டேங்குறாங்க. நீ வேலைக்கு போகாதம்மா. நான் இங்கியே நம்ம செல்போன்லையே வெளையாடுறேன்”.

 

“வேலைக்கு போகாட்டி எப்பிடி கஞ்சி குடிக்கிறது..? எப்பவோ தையல் கத்து வெச்சிருந்ததால இன்னிக்கு நமக்கு சோத்துக்கு ஒரு வழி கெடச்சிருக்கு. இல்லாட்டி நமக்கு யாரு ஒரு வாய் கஞ்சி ஊத்துவா..? உங்க அப்பா இருக்கற வரைக்கும் நம்மள கஷ்டம் தெரியாம வெச்சிருந்தாரு. இப்பிடி அனாதையா விட்டுட்டுப் போவான்னு யாரு கண்டா..?”

 

அம்மா அழுவதைப் பார்த்து நிதினுக்கும் அழுகை முட்டியது. படுக்கையில் இருந்து எந்திரிச்சு கைல பிரஷ்ஷை எடுத்துட்டு பொறக்கடைக்குப் போனான்.

 

பல்விளக்க விளக்க நிதினுக்கு வட்ட வட்டமா பல் வெளக்க சொல்லிக்கொடுத்த அப்பாவோட நெனப்பு வந்திருச்சு. அப்பா வேலை செஞ்ச கட தான் அந்த ஊர்லையே பெரிய கட. நெறைய வாட்டி நித்தினும் அந்தக் கடைக்கு போயிருக்கான். அப்படி போறப்பெல்லாம் கல்லாப்பெட்டில உட்கார்ந்திருக்க அண்ணன் சாக்லேட் தருவாரு. “நீ ஏன்பா அங்க உக்காற மாட்டேங்குற”,என்று நித்தின் கேக்கறப்போ “அவருதான் கட மொதலாளி. அவருதான் அங்க உக்காருவாருன்னு சொன்ன அப்பாகிட்ட” நாமளும் இப்பிடி ஒரு கடை வெக்கலாம்பா. நீயும் அங்க உக்காந்துக்கோ”, என்று சொல்லி இருந்தான் நிதின்.

 

அப்பா இருக்கும்போதெல்லாம் நிதினுக்கு ரொம்ப ஜாலியா இருக்கும். அவனும் அப்பாவும்தான் எப்பவுமே வெளையாடுவாங்க. அப்பா கூட சைக்கிள்ல போறது நித்தினுக்கு ரொம்பப் பிடிக்கும். எப்போதும் அவர் மேல பாண்ட்ஸ் பவுடர் வாசனை அடிக்கும். முன்னாடி இருக்குற கம்பில உக்காற வெச்சுக்குவார். சில டைம் நிதினுக்கு கம்பி அழுத்தி பின்னாடி ரொம்ப வலிக்கும். நைட்டு அப்பாதான் அங்க எண்ணெய் போட்டு விடுவாரு. அவன் அழுததப் பாத்து ஒரு சின்ன சீட்ட வாங்கி மாட்டினாரு. அதுக்கப்புறம் நிதினுக்கு வலி இல்ல. ரெண்டு பேரும் சைக்கிள்ல ஏறி மார்க்கெட்டு புல்லா சுத்துவாங்க. அவன் என்ன கேட்டாலும் அப்பா வாங்கித் தருவாரு. போன வாரம் அம்மா அந்த சைக்கிள வித்தப்ப நிதினுக்கு அழுகையா வந்துச்சு.

 

ஒரு மாசம் கடையைப் பூட்டிட்டாங்கன்னு அப்பா வீட்ல இருந்தாரு. அப்புறமா கடை திறந்த பின்னாடி வேலைக்குப் போனாரு. ஒரு வாரம் கூட இருக்காது. ஒருநாள் சாயங்காலம் ரொம்ப டயர்டா வந்து படுத்தவர்தான். அவ்வளவு காய்ச்சல். நிதினால அவரத் தொடக்கூட முடில. அடுத்த நாள் அம்மாதான் அவர ஆஸ்பித்திரி கூட்டிட்டுப் போனா. சாயங்காலம் அவளும், ஒரு நர்சு அப்புறம் இன்னும் ரெண்டு அண்ணாங்களும் வந்தாங்க. அப்பாவக் காணோம். அம்மா அழுதுட்டே இருந்தா. அதப் பார்த்து நிதினுக்கும் அழுகாச்சியா வந்துச்சு. அப்புறம் அந்த நர்ஸ் நிதினோட மூக்குல நீளமா ஒரு குச்சிய விட்டு செக் பண்ணிச்சு. அம்மாவையும்தான். அவங்க போனப்புறம் அப்பா எங்கன்னு நிதின் கேக்கவும் அம்மா, ’ஓஒ…’ன்னு அழுதுச்சு. அப்பாவுக்கு கொரோனா வந்துருச்சாம். ஆஸ்பித்திரி கொண்டு போயிட்டாங்களாம். நாமளும் வெளில போகக் கூடாதுன்னு சொல்லிட்டாங்கடான்னு சொல்லிச்சு. அன்னைக்கு அவன் தூங்கினதுக்கு அப்புறமும் அம்மா அழுதுகிட்டே கெடந்துச்சு.

 

அடுத்த நாள் நித்தின் எந்திரிச்சுப் பாத்தப்ப அவன் வீட்டுக் கதவுல ஏதோ பேப்பர் ஒட்டி இருந்தாங்க. ரோடு முச்சூடும் சுண்ணாம்பு தெளிச்சு இருந்தாங்க. வீதி முக்குல தகரத்த அடிச்சு தடுத்து இருந்தாங்க. பக்கத்து வீடு எல்லாம் வெளில பூட்டி இருந்துச்சு. யாரும் வீதில வெளையாடக் காணோம். எப்ப பாத்தாலும் நித்தின கொஞ்சுற எதுத்த வீட்டு ஆயா கூட அவங்க வீட்டுக்குள்ளையே நின்னுட்டு நித்தினோட வீட்டக் குறுகுறுன்னு பாத்துகிட்டு இருந்துச்சு.

 

யார் யாரோ வந்தாங்க. எல்லாரும் உடம்ப மூடுற மாதிரி உடுப்பு மாட்டி இருந்தாங்க. மாத்திரை மருந்தெல்லாம் குடுத்தாங்க. ஏதோ சத்து மாத்திரயாம். அப்பாவோட பழைய வேட்டியக் கிழிச்சு அம்மா நிதினோட மூஞ்சில கட்டி விட்டுச்சு. மாஸ்க்காம். அம்மா சொல்லிச்சி. ஆனா அப்பா தான் வீட்டுக்கு வரல. எப்ப வருவாருன்னு நிதின் கேட்டதுக்கு தெரிலியேப்பான்னு அம்மா அழுவுச்சு. அதனால அதுக்கப்புறம் நிதின் கேக்காமலே இருந்தான்.

 

அன்னிக்கு நைட்டு ஒரு ஆம்புலன்ஸ் வந்திச்சு. நீலக்கலர் உடுப்பு மாட்டினவங்க அம்மாகிட்ட ஏதோ சொல்லவும் அம்மா அவன கட்டிப்பிடிச்சு அழுகறா. இவனுக்கு ஒண்ணுமே புரியல. ரெண்டு பேரையும் ஆம்புலன்ஸ்ல ஏத்திகிட்டு போனாங்க. வண்டியோட தலைல ’ஜொங்ய் ஜொய்ங்’ன்னு கலர் லைட்டு சுத்துச்சு.. உய்ய்ய்ய்ய்ய் ’உய்ய்ய்ய்ய்ய்’ன்னு சத்தத்தோட வண்டி ஸ்பீடா போகவும் நித்தினுக்கு குஷி தாங்கல. வழில வந்த மித்த வண்டிக எல்லாம் ஓரமா ஒதுங்கி வழி விடறத பாக்கும்போது நித்தினுக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சு. ஆனா இந்த அம்மா வழி முழுசும் அழுதுட்டே வந்தா.

 

ஆஸ்பத்திரிக்கு போனப்ப அவனோட அப்பாவ பிளாஸ்டிக் பேப்பர்ல சுத்தி வெச்சிருந்தாங்க. நித்தினையும் அவனோட அம்மாவையும் பக்கத்துல கூட போக விடல. அம்மா தொடக்கூட விடமாட்டீங்கிறீங்களேன்னு சத்தமா அழுதா. அப்புறம் அப்பாவ தூக்கிட்டு போயிட்டாங்க. யாரும் வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அம்மா அழுது அழுது மயங்கி போயிட்டா. நித்தினுக்கு அத்த, மாமா, சித்தப்பான்னு யாருமே இல்ல. அப்பாவும் அம்மாவும் மட்டும்தான். அப்பாகூட வேல செய்யறவங்க மட்டும் தான் இருந்தாங்க. பக்கத்துவீட்டு மணி அண்ணன்தான் கூட இருந்து நித்தினையும் அம்மாவையும் வீட்டுக்குக் கூட்டுட்டு வந்தாரு.

 

அதுக்கு அப்புறம் அம்மாவும் அவனும் 15 நாள் வீட்ல தனியா இருந்தாங்க. யாராரோ வந்து வெளில போகக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. ஒரு நா ஆஸ்பித்திரில இருந்து வந்த ஒரு அண்ணா நித்தினுக்கும் அம்மாவுக்கும் கொரோனா இல்லன்னு சொன்னதுக்கு அப்புறம்தான் கதவுல ஒட்டியிருந்த நோட்டீஸக் கிழிச்சாங்க. வீதில போட்டிருந்த தகரத்தையும் கழட்டினாங்க.

 

அப்பா இருக்கும்போது நித்தினுக்கு வித விதமா திங்கறதுக்கு கெடைக்கும். அவனுக்கு பால் பன்னு ரொம்ப பிடிக்கும். அப்பா டெய்லி வாங்கிட்டு வருவார். அம்மாவும் டெய்லி முட்ட தருவா. ஆனா அப்பா செத்துப்போனதுக்கு அப்புறம் அதெல்லாம் நித்தினுக்கு கெடைக்கல. ரசம் சோறு மட்டும்தான். முட்ட வேணும்னு கேட்டா அம்மா அழ ஆரம்பிச்சுடுவாங்கறதால நிதின் இப்பெல்லாம் கேக்கறது இல்ல.

 

நிதின்னுக்கு வீட்ல இருந்தா செல்போன்ல வெளையாடறதுதான் வேல. ஸ்கூல் வேற மூடிக் கெடக்கு. கூட வெளையாட யாரும் இல்ல. அதனால எப்பப் பாத்தாலும் செல்போன்ல கேம் வெளையாடிட்டே இருப்பான். அப்பா இருக்கும்போது செல்போனத் தொட்டாலே அம்மா அடிப்பா. ஆனா இப்ப எல்லாம் ஒண்ணும் சொல்றது இல்ல. ஆனா, ”தம்பி நல்லாப் படிச்சு நீ பெரிய ஆளா வரணும்டா…”ன்னு அடிக்கடி சொல்லுறா. நிதின்தான் இப்ப மூணாப்பு முடிச்சு நாலாப்பு போறானே…

 

அவனுக்குப் பக்கத்து வீட்லதான் மணி அண்ணனும் அவரோட தாத்தாவும் இருக்காங்க. அந்த தாத்தா எப்பவும் பெட்லதான் இருப்பாரு. அவரு உடம்புல டியூப் சொருகி இருக்கும். அவரு பக்கத்தில போனாவே உச்சா ஸ்மெல் அடிக்கும். மணி அண்ணன் ஏதோ காலேஜ்ல படிக்கறதா அம்மா சொல்லி இருக்கா. மணி அண்ணன் ஒரு செல்போன் வெச்சு இருக்காரு. அம்மா போன விட பெருசு. அவர்ட்ட ஒரு நாள் செல்போன வாங்கி கேம் விளையாடனும்.

 

நித்தின் மொகம் கழுவிட்டு வந்தபோது அம்மா தட்ல இட்லியப் போட்டு வெச்சிருந்தா.

“தம்பி இத சாப்பிட்டுட்டு தாத்தா வீட்ல போயி இரு. இன்னைக்குதான் அம்மா மொதல் நாள் வேலைக்கு போறேன். கம்பெனில இன்னைக்கு கேட்டுட்டு நாளைல இருந்து உன்னையும் கூட்டிட்டு போறேன். மத்தியானத்துக்கு இந்த குண்டால சாப்பாடு வெச்சிருக்கேன். சாப்பிட்டுக்க. தாத்தாவ தொந்தரவு பண்ணாம டிவிய பாத்துட்டு இரு. சரியா”, என்றாள்.

 

“ம்மா. அவரு எப்ப பாத்தாலும் நாடகம் தான் பாக்குறாரு. நீ கார்ட்டூன் போட்டு விட சொல்றியா?”.

 

“இன்னைக்கு ஒரு நாள் தான தம்பி. நாளைல இருந்து உன்ன கூட கூட்டிட்டு போயிடுறேன். என் செல்லம்ல”, என்று அம்மா தன்னைக் கொஞ்சவும் நிதின் கொஞ்சம் சமாதானம் ஆனான். சாப்பிட்டு முடிச்சவுடனே அம்மா அப்பாவோட போட்டோக்கு முன்னாடி நின்னு சாமி கும்பிட்டா. எப்பவும் போல அழுதா.

 

தாத்தா வீட்டுக்கு நுழையறதுக்கு முன்னாடியே உச்சா நாத்தம் அடிக்க அரம்பிச்சிருச்சு. நிதின் மூக்கப் பொத்திகிட்டான். அவன் முகம் போன போக்கப் பாத்த அம்மா, “இன்னிக்கு ஒரு நாள் பொறுத்துக்கப்பா”, எனச் சொல்லவும் கொஞ்சம் சமாதானம் ஆனான். “தாத்தா சீக்கிரம் வந்து கூப்பிட்டுக்குறேன் இன்னைக்கு ஒரு நாள் இங்க இருக்கட்டும்”, என்று சொன்னவள் சாப்பாட்டு குண்டாவை ஜன்னலின் மேல் வைத்து விட்டு அவனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள். “குண்டால முட்டை அவிச்சு வெச்சிருக்கேன் சாப்பிட்டுக்க. குறும்பு பண்ணாம இருக்கணும்”னு சொல்லிட்டு கதவத் தெறந்துட்டு வெளில போயிட்டா.

 

நிதின் டிவியைப் பார்த்தான். எப்போதும் போல நாடகம் ஓடிட்டு இருந்துச்சு. தாத்தா நிதினைப் பார்த்து சிரிச்சாரு.

 

’இந்தாடா…’ ன்னு ஏதோ தின்பண்டத்தை நீட்டினாரு… வேண்டாம் என்று தலையை ஆட்டியவன் ஜன்னலுக்குப் பக்கத்தில ஓடிப்போயி நின்னுகிட்டான். ஜன்னலுக்கு வெளியே இருந்த வேப்ப மரத்துல ஒரு குட்டி அணிலை இன்னொரு அணில் தொரத்திட்டு இருந்துச்சு. குட்டி அணில் சரசரன்னு மரத்து மேல ஏறும்போது இன்னொரு அணில் அதத் தொரத்திட்டு மேல எறுரதும் திடீர்னு குட்டி அணில் திரும்பின உடனே தொரத்திட்டுப் போன அணில் சரசரன்னு கீழே இறங்கறதுமா இருக்கறதப் பாக்கும்போது நிதினுக்கு சிரிப்பு சிரிப்பா வந்துச்சு.

 

“தாத்தா வெளில போயி வெளையாடவா?”,

 

“வேண்டாம்டா. அம்மா உன்னைய வெளில போகக் கூடாதுன்னு சொல்லி இருக்கா.”,

 

நிதினுக்கு பொக்குன்னு போச்சு. அப்படியே தரையில உக்காந்தான். தாத்தாவின் ஒடம்பிலிருந்த டியூப் வழியா பிளாஸ்டிக் பைக்குள் உச்சா சொட்டு சொட்டா ரொம்பறத கொஞ்ச நேரம் பாத்துட்டு இருந்தான்.

 

நிதினுக்கு ரொம்ப போர் அடிச்சுது. பீரோவுக்கு கீழே குனிஞ்சு பார்த்தான், ஏதோ ஒன்று கிடக்க அத கையை விட்டு எடுத்தான். ஒரு பிளாஸ்டிக் கார். மூணு சக்கரம் மட்டும் தான் இருந்துச்சு. ஒண்ணக் காணோம். அத தரையில் வெச்சு வேகமா தள்ளினான். ஒரு பக்கம் சாஞ்சுகிட்டு கார் சறுக்கீட்டு போறத பார்த்த நிதினுக்கு சந்தோஷமா இருந்திச்சு. வாயால் ’உர்ர்ர்ர்ர்ர்…’ன்னு சத்தம் போட்டுட்டு கொஞ்ச நேரம் கார் ஓட்டினான். ஆனாலும் அவனுக்கு போர் அடிச்சிது.

 

“தாத்தா மணி அண்ணன் எங்க?.

 

“ஏண்டா?’

“இல்ல போர் அடிக்கிது. அவரோட செல்போன்ல கேம் விளையாடலாம்னு கேட்டேன்”.

 

“அவன் ஈபி ஆபீஸுக்கு போயிருக்கான்டா. இப்ப வந்திருவான். வந்ததுக்கு அப்புறம் விளையாடு”.

 

நிதின் மறுபடி கார ஓட்டினான். கார்ல உக்காந்தா பின்னாடி வலிக்காதில்ல. அதுல மெத்து மெத்துன்னு சீட் இருக்கும். ஒருவாட்டி அவன் அம்மா அப்பாவோட கோயிலுக்கு வாடக கார்ல போயிருக்கான். என்னா ஸ்பீடு.. ஜொய்ய்ன்னு. ஆனா அதவிட அந்த ஆம்புலன்ஸ் ரொம்ப ஸ்பீடா போச்சு. பெருசாகி ஆம்புலன்ஸ் வாங்கணும்.

 

“எப்படா உங்களுக்கு ஸ்கூலு’

“தெரில தாத்தா”.

 

“போர் அடிக்கிதா ஸ்கூல் இல்லாம”?

 

“செல்போன் இல்லாமதான் போர் அடிக்கிது. உங்ககிட்ட போன் இருக்கா?”

 

தாத்தா சிரிச்சிகிட்டே “என்கிட்ட பழைய போன் தான் இருக்கு”, இந்தான்னு ஒரு போன குடுத்தாரு. அத வாங்கி பாத்தவன் உதட்ட பிதுக்கிட்டு திருப்பி குடுத்துட்டான்.

 

மறுபடியும் ஜன்னலுக்கு பக்கத்துல போனவன் வெளியில் வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சான். அணில்களை இப்போ காணோம். கம்பிய பிடிச்சுட்டு எக்கி எக்கிப் பார்த்தும் அணில் அவனுக்கு தெரில. நிதினுக்கு பொசுக்குன்னு போச்சு.

 

யாரோ கதவ தட்டுற சத்தம் கேட்டுச்சு. “தம்பி, கதவத் தெறப்பான்னு தாத்தா சொன்னாரு.

 

குடுகுடுன்னு கதவு கிட்ட போயி கதவ தொறந்தான்.

“டேய், நீ எப்போ வந்தன்னு கேட்டுட்டே மணி அண்ணன் உள்ள வந்துச்சு.

 

நிதினோட கண்ணு மட்டும் மணியோட சட்டைப் பாக்கெட்டுக்கு போச்சு.

 

“அண்ணா, செல்போன் குடு”

 

“டேய், இப்பதான் உள்ள வர்றேன், அதுக்குள்ளவான்னு சொல்லிட்டே கையில இருந்த மிச்சப் பணத்தை தாத்தாவின் தலகாணிக்கடில வெச்சாரு.

 

நிதின், மணி அண்ணனின் கைல இருந்த செல்போனையே பார்த்துட்டு இருந்தான். அப்புறம் தாத்தாவைப் பார்த்தான்.

 

“தாத்தா”

 

“என்னடா”

 

“செல்போன் குடுக்க சொல்லு தாத்தா”

 

“டேய் மணி கொஞ்ச நேரம் குடுடா ,பாவம் பையன் பொக்குன்னு போயிடுவான்”

 

மணி நிதினைப் பார்த்து சிரிச்சாரு.

 

“உள்ள வான்னு சொல்லிட்டு அவரோட ரூமுக்கு மணி போச்சு. நிதினுக்கு சந்தோஷமா இருந்துச்சு.

 

“ஹைய்யா” அப்பிடின்னு கத்திகிட்டே மணிக்கு பின்னாடி நிதின் ஓடுனான்.

 

கட்டில்ல உக்காந்துட்டு இருந்த மணி அண்ணன் நிதினத் தூக்கி பக்கத்துல உக்கார வெச்சுகிட்டாரு. . “என்ன கேம்டா வெளையாடுற?”

 

“கார் கேம்ணா.. இருக்கா?”

 

கார் கேமைத் தேடிப்புடுச்சு நிதின்கிட்ட நீட்டுனாரு மணி அண்ணன். நிதினுக்கு வாயெல்லாம் பல்லா ஆயிருச்சு. கைய நீட்டி வாங்கிக்கிட்டான்.

 

பெட்ல சாஞ்சு நிதின் பட்டனை அமுக்கவும் கார் ’உர் உர்ரு’ன்னு பொகையக் கக்கீட்டுப் பாஞ்சுது. நிதினோட விரல வெச்சு பரபரன்னு செல்போனத் தேய்க்க, ரோட்டுல இருந்த எல்லா வண்டியையும் இடிச்சுத் தள்ளீட்டு ஃபர்ஸ்டா போகுது காரு.

 

திடீருன்னு நிதினோட நிக்கர யாரோ பின்னாடி இருந்து கழட்டற மாதிரி இருக்க நிதின் திரும்பிப் பாத்தான். மணி அண்ணன் நிதின வெறிக்க வெறிக்கப் பாத்துட்டு இருந்தாரு.

 

“அய்யய்யே ஏன் இந்த மணி அண்ணன் பப்பி ஷேமா இருக்கிறாரு…?” என நிதினுக்கு வெக்கமாப் போச்சு. அப்பதான் அவனுக்குப் பின்னாடி சுருக்குன்னு வலிச்சுச்சு. அப்பாகூட சைக்கிள் கம்பில உக்காந்து போகும்போது இப்பிடித்தான் வலிக்கும். ”அப்பா… வலிக்குதே…” நிதினுக்கு வலி தாங்க முடில. மூச்சு முட்டுச்சு. கண்ணுல தண்ணி கரகரன்னு ஒழுகுச்சு. செல்போன் நழுவி கீழ விழுந்துச்சு.

 

“அண்ணா.. வலிக்…..”.

 

அவனோட வாய மணி அண்ணா கை இறுக்கமா பொத்திச்சு.

 

****************

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button