தொடர்கள்
Trending

நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;11 ‘எல்லைகளற்ற நகரம்’ – சுமாசினி முத்துசாமி

தொடர் | வாசகசாலை

“நியூயார்க் நகரம் ‘உறங்கும்’ நேரம்…” என்று நம் தானைத்தலைவர் அஞ்சா சிங்கம் சூர்யா பாடினது போல் நியூயார்க் நகரம் கிடையாது. அது உறங்கவே உறங்காத நகரம். தூங்கா நகரம் என்று மதுரை அறிமுகமான போதே ‘ஆ’வென்று இருந்தது. இரவு பலருக்கு வாழ்க்கையை விடியலாக்கிக் கொண்டிருந்தது. சிறு வயதில் முதல் முறை இதைக் கண் கூடாகக் காணும் பொழுது மதுரைக்காரர்கள் உழைப்பால் அசர வைத்தனர். சிலப்பதிகார காலம் தொட்டு ‘நாளங்காடியும் அல்லங்காடியும்’ இயங்கிய, பெரு வரலாறு கொண்ட மிகத் தொன்மையானது நம் மதுரை. வருடக் கணக்கில் அத்துணை தொன்மை கணக்கு இல்லாவிடினும், நியூயார்க்கின் வரலாறும் மிக முக்கியமானது.

நியூயார்க் என்பது அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்களில் ஒன்று. நயாகரா நீர்வீழ்ச்சியும், நியூயார்க் நகரமும் இந்த மாகாணத்தின் இரு கண்கள். நகரத்தின் பெயரும் மாகாணத்தின் பெயரும் ஒன்று. இந்த நகரம், மாகாணத்தின் தலைநகரம் கூட கிடையாது. இருந்தும் இந்த மாகாணத்தின் முக்கியமான, இல்லை அமெரிக்காவின் மிக முக்கியமான  நகரம், ‘நியூயார்க் நகரம்’ (New York City ). அமெரிக்காவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் இதுதான். இதை NYC என்றும் சொல்லுவார்கள். உண்மையில், உலகின் ‘The City’ என்று கூறப்படும் அளவிற்கு அனைத்து கூறுகளும் கொண்டது இந்த மாநகரம். இந்த வாரம், இந்த நகரத்தைக் கொஞ்சம் கூர்ந்து புரிந்து கொள்ள முயலுவோம்.

இந்நகரத்தை, உலகின் நிதி/ வங்கித்துறை, கலாச்சார மற்றும் ஊடகத்துறையின் தலைநகரம் என்பர். இரண்டு முறை கிழக்கும் மேற்கும், வடக்கும் தெற்கும் நடந்தால் அது உண்மை என்பது விளங்கி விடும். இந்த நகரத்தை வலம் வர மிகச் சிறந்த வழி,  ‘நடைராஜா’ சர்வீஸ்தான். உலகின் பெரும்பான்மையான அனைத்து நிறுவனங்களின் தலைமையகமோ அல்லது ஒரு அலுவலகமோ இங்கு இருக்கும். ஓப்பரா, நம்முடைய பாலிவுட் பாட்டுக்கள், கர்நாடக சங்கீதம், கே-பாப், ஆப்ரிக்காவின் கலாச்சார சங்கீதம் முதல் ஆப்ரோ-பாப் வரை, இங்குள்ள சபைகளிலும் சாலைகளிலும் ஒலித்துக் கொண்டேதான் இருக்கின்றன. எந்த நாட்டின் உடையோ, உணவோ ஆகட்டும், இல்லை ஒரு சமூகத்திற்கு மட்டுமே சம்பந்தப்பட்ட சாமானோ ஆகட்டும், இந்த நகரத்தின் ஏதோ ஒரு மூலையில் கிடைத்து விடும். இல்லை, வாங்குவதற்கு ஆள் இருக்கிறார்கள் என்று தெரிந்தால் எப்படியோ இறக்குமதி செய்து விற்கத் தயாராக இங்கு பலர் இருப்பர். இந்த நகரம் ஏதோ வகையில் உலகின் வர்த்தகத்தை, அறிவியல் ஆராய்ச்சிகளை, தொழில்நுட்பத்தை, கல்வியை, பொழுதுபோக்கை, சுற்றுலாவை, கலை வடிவங்களை, ஃபேஷனை, விளையாட்டுத் துறையை மற்றும் மிக மிக முக்கியமாக அரசியலைத் தீர்மானிக்கும் நிலையில் உள்ளது.

இந்த ஒரு நகரத்தில் மட்டும் 800 மொழிகள் பேசப்படுகின்றன. இங்கு வாழும் 8 மில்லியன் மக்களில் கிட்டத்தட்ட 3 மில்லியனுக்கு மேல் வேறு நாட்டில் பிறந்தவர்கள். கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் இந்நாட்டு மண்ணில் பிறந்தவர்கள் அல்ல. இருந்தும் இவர்கள்தான் இதன் உயிரோட்டம். இவர்களுக்கு இந்த நகரத்தின் மேல் உள்ள ஆசையும் மோகமும்தான் இதன் அச்சாணி. இத்தனை வெவ்வேறு மொழிகளும், வெவ்வேறு தேசங்களின் பிரதிநிதித்துவமும் என்றால், எத்தனை வித மத நம்பிக்கைகள், கலாச்சாரங்களின் கூட்டாக இந்த நகரம் இருக்கும் என்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

சுற்றுலா என்ற பெயரில் இந்த நகரத்தைப் பார்க்கவென்றே மக்கள் உலகமெங்கிருந்தும் குவிந்து கொண்டேயிருந்தனர். (இப்பொழுது அனைத்துமே முடங்கிக் கிடக்கின்றது. கொரோனா காலத்  துயர இடைவெளி). இவ்வளவு மக்கள் வருவதும் போவதுமாக இருந்தால் பாதுகாப்பு என்று ஒன்று வேறு உள்ளதே…பணக்காரர்களில் பெரிய பணக்காரரும் இந்த நகரத்தில் இருக்கிறார்கள்.  “வீடில்லை, வாசலில்லை, சாப்பிட ‘பன்’ இல்லை, தெருவில் நிற்கிறேன் உதவுங்கள்” என்று தட்டி போர்டு வைத்துப் பிச்சை கேட்பவர்களும் இந்த நகரத்தில் இருக்கிறார்கள். அமெரிக்கப் பிரதமரை விட அதிக அழுத்தம் உள்ள நிலைமை இந்த நகரத்தை நிர்வகிக்கும் ஆளுநருக்குத்தான் என்று நான் நினைக்கிறேன்.

Map of New York City (Map source: https://ontheworldmap.com/usa/city/new-york-city/)

ஐந்து பார்ரோக்கள் (borough) (டவுன்கள் அல்லது சிறு ஊர் என்று எளிதாக வைத்துக்கொள்வோம் ) சேர்ந்ததுதான்  NYC. இந்த ஐந்தில் மிக முக்கியமானது, மான்ஹாட்டன்! சிலர், நேரடியாக மான்ஹாட்டன் என்றே நியூயார்க் நகரத்தைக் கூறுவார்கள். இது போதாதென்று, இதையும் மூன்றாகப் பிரித்து, டௌன்/ லோவர் டவுன் (down or lower town), மிட் டவுன் (mid town), அப் டவுன் (up town) என்றும் கூறுவார்கள். வந்த முதல் வாரமே எனக்கு இங்குதான் வேலை. இந்த நகரம் கொடுத்த பிரமிப்பு,  நகர வடிவமைப்பு புரியாமல் ஒரு குழப்பம், இதையெல்லாம் விட எந்த ட்ரெயின் எந்த திசைக்குப் போகிறது என்று தெரியாமல் முழித்தது என்று ஒரு பெரிய அதிர்ச்சியை இந்த நகரம் எனக்கு ‘நல்வரவு’ என்று கூறிப் பரிசளித்தது. வார இறுதி முழுவதும் உட்கார்ந்து நான் பால பாடம் போல், இந்த நகரத்தைப் பற்றி வரைபடம் எல்லாம் போட்டுப்  படித்தேன். இப்பொழுதும், அடிக்கடி பயணிக்கும் வழித்தடங்களைத் தவிர வேறு ஒரு ட்ரெயின் வழித்தடம் என்றால் ஒன்றுக்கு மூன்று முறையாவது உறுதி செய்யாமல் பயணிப்பதில்லை.

கிட்டத்தட்ட 260 அடிகளை ஒரு ‘பிளாக்’ (block) என்று இங்குக் கூறுவார்கள். “நாலு பிளாக் தாண்டினால் நீங்க தேடும் இடம்” என்பது போல் இங்கு வழி சொல்லுவார்கள். அப்படி அடுத்த ப்ளாக்கில் மிகக் கொடூரமான ஒரு கொலை நடந்திருந்தால் கூட இந்த ப்ளாக்கில் இருப்பவருக்குத் தெரிய வாய்ப்பில்லை. தமிழ்ப் படங்களில் வருவது போல் தொலைந்த அண்ணனை தம்பி இந்த நகரத்தில் தேடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அடுத்த இரண்டாவது ப்ளாக்கில் அண்ணன் வாழ்ந்தால் கூட தம்பி தொழில்நுட்ப உதவியும், தற்செயலின் ஆசீர்வாதமும் இல்லாமல் எப்படி தேடினாலும் அண்ணனைக் கண்டுபிடிக்க முடியாது. பன்முகத்தன்மை கொண்ட, விசித்திரமான, வண்ணமயமான நகரம் இது.

இது இயற்கை துறைமுக நகரம்.  1950கள் வரை புலம் பெயர்ந்து, இந்த நாட்டிற்குள் குடியேற்றம் கோரி வரும் மக்களுக்கு இதுவே வாயிலாக இருந்தது. எல்லிஸ் தீவு எனப்படும் தீவில் இந்த சுவடுகளையும், வரலாற்றையும் தாங்கி நிற்கும் பெரிய அருங்காட்சியகம் உள்ளது. கண்டிப்பாகப் பார்த்து உள்வாங்க வேண்டிய இடம்.

இந்த நகரத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய நிறைய உள்ளன. சுதந்திர தேவி சிலை, எம்பையர் ஸ்டேட் பில்டிங், புரூக்ளின் பாலம், டைம்ஸ் ஸ்கொயர், சென்ட்ரல் பார்க் எனப்படும் பெரிய பூங்கா, பல்வேறு அருங்காட்சியகங்கள் என்று சொல்லிக்கொண்டே  போகலாம். இவை எல்லாம் பிரமிப்பைக் கொடுப்பவை. ‘எவ்ளோ பெருசு, எவ்வளவு பிரமாண்டம், இங்கதான் இது நடந்தது, அங்குதான் அது நடந்தது’ என்று கூறி கண்டு, களித்து, கடந்துவிட முடியும்.

ஆனால், இவை போன்ற ‘சுற்றுலாத்தலங்களை’ மீறி நாம் உணர்ந்து கொள்ளவும், நம் விருப்பங்களுக்கும், தேடல்களுக்கும் உணர்வு கொடுக்கவும் இங்கு பல இடங்கள் உள்ளன.  நம் தனித்துவத்துவத்திற்கு தீனி போடும் விதமாகவும் இந்த நகரத்தை வலம் வர முடியும். புத்தகங்கள் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா, ஏதாவது கலைப் படைப்பைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டுமா,   பங்குச் சந்தையில் கொடி நாட்ட வேண்டுமா, அரசியல் கொள்கைக்காகக் குரல் எழுப்ப வேண்டுமா? எதுவாகட்டும், இங்கு வழியும் வாழ்வும் உண்டு! நம் தேடல் மற்றும் விருப்பத்தின் படி இந்த நகரம் நம்மை ஆட்கொள்ளத் தயாராக உள்ளது. இந்த நகரத்தின் தனிச் சிறப்பு என்று நான் கருதுவது இதைத் தான்.

பெரு நகரத்தின் அத்தனை அம்சங்களோடும், ஒரு தனி மனிதன் தனித்து தன் இயல்போடு இயங்கும் அம்சத்தையும் இந்த நகரம் கொடுக்கின்றது. இதை எவ்வளவு வார்த்தைகளால் விவரித்தாலும் உணர்த்தி விட முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. இங்கே சில வாரங்களோ, மாதங்களோ வசித்து வாழ்ந்தால் மட்டுமே முழுவதும் இதைப் புரிந்து கொள்ள முடியும். பெரு நகரங்களான டெல்லி, லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ, நம் சென்னை போன்றவற்றில் இல்லாத ஏதோ ஒரு மாய ஊக்கம் இங்கு உள்ளது என்று நான் சொன்னால் அது மிகையில்லை.

தனித்துவத்தோடு இயங்க வழிவிடும் இதே நகரம் கொஞ்சம் நம் மனத்திண்மை தவறினால் தனிமையில் தவிக்க விட்டுவிடும். திசையில்லாமல் போதையின் பிடியிலும், மனப் புழுக்கத்தின் இருண்மைக்குள்ளும் மிக வேகமாக தள்ளவும் இந்த நகரம் காத்துக் கொண்டிருக்கிறது.  பல மாதங்கள் உழைத்து முன்னேற்றப் பாதையின் திசையைக் காண முடியும். ஆனால் நிமிடங்களில், இருண்ட தன்மையை மாய உலகத்திற்குள் மறைத்து வரமளிக்கிறது.

இங்கு நான்கு விதமான மக்கள் வசிக்கின்றனர். நகரம் எவ்வளவு வீக்கம் பெற்றாலும் வாழ வழி தேடிக்கொள்ளத் தெரிந்தவர்கள் முதல் வகை. இவர்கள் இந்த நகரத்தின் ஆன்மாவோடு இரண்டறக் கலந்தவர்கள். மண்ணின் மைந்தர்கள் ஆகி விடுபவர்கள். இந்த உயர்ந்த தீப்பெட்டி கட்டிடங்களுக்கு அந்நியப்பட்டு ‘வந்தேன், கண்டேன், விடை பெற்றுக்கொள்கிறேன்’ என்பவர்கள் இரண்டாவது வகை. இங்கு வாய்ப்புகளுக்காக மட்டுமே வந்து, ஏணி போல் இந்த நகரத்தை உபயோகித்து வெளியேறி விடுபவர்கள் மூன்றாவது வகை. இந்த மூன்றாவது வகை, புத்திசாலிகள். வாழ்வின் நுணுக்கம் தெரிந்தவர்கள். நான்காவது வகைதான் கடினமானது- வாழ்வில் விடை தேட வந்து வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி  நிற்பவர்கள். இந்த நகரத்தின் தன்மையைக் கண்டு பிரமித்து வாழ்வில் தொலையாமல் இருப்பது மிகப் பெரிய அதிர்ஷ்டம். கடவுளை நம்புகிறவர்களுக்கு, அது கிருபை, முன் ஜன்ம புண்ணியம். இங்கு  கடந்து போகும் பெருவாரியான கண்கள் இந்த நான்கில் எந்த வகை என்பதை மிக எளிதாகக் காட்டிக்கொடுத்துவிடும்.

பிரமாண்ட கட்டிடங்கள், நகரக் கட்டமைப்பு, வாய்ப்புகளின் கூடாரம், பூலோகத்தில் தற்காலிகமாக சொர்க்கத்தை நினைத்த வழியில் அடைய வழிவிடும் கேளிக்கை உல்லாசங்களின் சங்கமம், எந்தத் துறையாயினும் உச்சம் தொட வழியுள்ள பாதைகள் என்று எந்தப் பெருநகரமும் தன்னகத்தே ஒரு மந்திரக்கோலை மறைத்து வைத்து இருக்கும். தன் மண்ணில் கால் வைக்கும் மக்களை அந்த கண்ணுக்குத் தெரியாத மந்திரக்கோலை வைத்து கைப்பாவைகள் போல் ஆட்டுவித்துக் கொண்டிருக்கும். ஆனால் இந்த நியூயார்க் நகரத்தில், இந்த மந்திரக்கோலின் செயல்திறன் சக்தி நாம் நினைக்க முடியாத அளவிற்கு விஸ்தாரமானது. மிக வீரியமிக்கதும் கூட.

இன்றைய உலகில், எந்த மெகா நகரத்தையும் தனித்த நகரம் என்று கூறிவிட முடியாது. இவை யாவும், ‘URBAN AGGLOMERATIONS’ அதாவது ஒருங்கிணைக்கப்பட்ட நகரங்கள். இந்தப் பெருநகர வாழ்க்கை முறை செலவுக் கணக்கு பெருகிக் கொண்டே வருகிறது. பலர், பட்ஜெட்டில் துண்டும் கடன் அட்டையில் நிலுவை கணக்கும் அதிகரித்துக் கொண்டே வருவதாலும், இடப் பற்றாக்குறையினாலும் இந்த நகரத்தை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக்கொண்டே இருக்கின்றனர்.

கொரோனாவின் உச்ச கோரத் தாண்டவத்தில் இந்த நகரம் உருக்குலைந்துள்ளது. இந்த துயர் காலத்தில், நகரத்தை விட்டு வெளியேறும் மக்களின் கணக்கு இன்னும் அதிகரித்து விட்டது. இங்கிருந்து வெளியேறி பக்கத்தில் இருக்கும், நியூ ஜெர்சி, கனெக்ட்டிகட், நகரத்தின் வடக்குப் பகுதி என்று இடம் பெயர்ந்து வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் 2035 – ல் நியூயார்க் நகரம் உலகின் முதல் முக்கிய பத்து நகரங்களில் ஒன்றாக இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

நெல்லை மனதிற்கு மிக அணுக்கமானது என்றால் நியூயார்க் நகரம், மூளைக்கு மிக அணுக்கமானது. வாய்ப்பிருப்பின், தவற விடக்கூடாத  ஒரு இடம், நியூயார்க் நகரம். வாய்ப்பு இல்லாவிடினும், இங்கு வருவதை இலக்காகக் கொண்டு வந்து, வாழ்ந்து  பார்த்து, உணர்ந்து கொள்ள வேண்டிய இடமும் கூட.

புதுமையும் தொழில்நுட்பமும் கலந்து கட்டி காட்சி தரும் இங்கும் ‘ஸ்மார்ட் போன், இணைய வசதி’ இல்லாத மக்களும், கூகிள் என்றால் என்ன என்று கேட்கும் பதினெட்டு, இருபது வயது இளைஞர்களும் இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?  நிஜமாகவே இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடரும்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button