
பூனைகளைப் பிடிப்பதில்லை அல்லது நாய்களைப் பிடிக்கும்
மென்மயிர்க் காலினுள் உகிர் புதைந்த
பூனைகளைப் பிடிப்பதில்லை. அல்லது
நகங்களால் கீறத் தெரியா நாய்களைப் பிடிக்கும்.
நினைவில் உத்தியுள்ள மிருகம் பூனை.
லாவகம் நிறைந்த அது அலட்சியத்தின் உருவகம்.
வாசலை விட சாளரங்களே
பூனையின் பிரியமான வலசை.
வாலிருந்தும் நன்றி காட்டுவதில்லை.
நெடுந்தூரம் துணைக்கு வராது.
கண்களில் தெரிவதோ சுயநல ஒளி.
கால்களிடையே உரசிச் செல்லும் அது
எசமானரை மதிப்பதுமில்லை.
அதிகாரத்தின் நாற்காலியில் ஏறி நின்று
ஏளனமாய் பார்க்கும்.
நாய்கள் அப்படியல்ல.
கருணை மிகுந்த நாய்கள்
பூனைகளைப் போல கைவிடுவதில்லை.
வாலாட்டலில் எப்போதோ போட்ட பிஸ்கட் தெரியும்.
கையசைவிற்குக் காத்திருக்கும்.
புலிகளின் வரிகள் அளித்த வறட்டு கர்வம்
நாய்களுக்கு இல்லை.
பாதையின் குறுக்கே அபசகுனம் காட்டாது.
அதிகாரம் அற்றவனின் அன்பில் குழையும்.
திருட்டுப் பூனை என்பது
காம ரகசியங்களில் நெளியும் சொல்.
திருட்டு நாயோ ஆறறிவு மனிதனுக்கான வசை.
ஃபூக்கோவோ ப்யூகோவ்ஸ்கியோ
பூனையை கவிதைகளில் படைப்பது
இல்லையென்றால் கையில் பிடிப்பது
ஜீவகாருண்ய ஒளிவட்டம் தரும் தான்.
ஆனாலும்
மதில்மேல் நின்று பார்ப்பதைவிட
வான் ஏகினும் உடன் வரும்
நாய்களையே பிடிக்கும். அல்லது
பூனைகளைப் பிடிப்பதில்லை.
***
ஒளியை விழுங்கிய நட்சத்திரம்
ஒரு நட்சத்திரம் ஆக
உருவாகிவிட்டவனுக்கு
நடை உடை பாவனை எல்லாம்
பால்வெளியின் வண்ணங்கள் குழைந்து
முகமெல்லாம் ஒளிரத் தொடங்குகிறது.
தானொரு ஒளிமீன் என
நம்பிக்கையின் அதீத கதிர்களால்
தலையில் கிரீடம் ஏற்றப்பட்ட அவன்
தன்னருகே நெருங்கி வரும்
எந்தவொரு விண்மீனையும்
அளவான ஒளிர்தலுக்கு
பணித்துவிடுகிறான்.
ஒளிவீச்சின் கதிர்களால்
பொய்யேற்றி வளர்க்கப்பட்ட அவன்
பூமியை நெருங்கி நின்று
பழைய ஒளிமீன்கள்
பற்றியிருக்கும் உயிர்களை
கவர்ந்துவிட தன்னுடல்
வீங்குமளவு ஒளியை உமிழ்கிறான்.
பற்றிய கரத்தின் வெம்மையால்
மயங்கிக் கிடக்கும் உயிர்களெல்லாம்
இன்னுமொரு நட்சத்திரவாசத்தை ஏற்க மறுத்து
அவன் ஒளியை சிதறடிக்கின்றன
இருள் வெளியில்.
சிம்பொனிகளால் கட்டமைந்த தன் வாழ்வினை
தெருவோர பக்கவாத்திய
ஆலாபனைகளால் ஒளியேற்றிவிட
இயலாத தருணமொன்றில்
ஒளியே இருள்
இருளே ஒளியெனக் கூறி
நட்சத்திர சாபமிட்ட விநோத நாவால்
தன் ஒளியைத் தானே
விழுங்கிச் செரித்து அணைகிறான்.
***