மெல்லினாவின் வீட்டுக்குள் நுழைந்தபோது அவள் அம்மாவின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது. கனிந்திருந்த அவரின் முகத்தசைகள் அதிர்ந்துகொண்டிருந்தன. நான் வருவதைப் பார்த்ததும் வெடித்துக்கொண்டிருந்த வார்த்தைகளை நிறுத்தி அப்படியே விழுங்கிக்கொண்டார். சூழலை நான் புரிந்துகொண்டாலும் எப்போதும் போல அவரைப் பார்த்து சிறியதாய் புன்னகைத்தேன். குறையாத கோபத்துடன் பார்வையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டார். நான் வந்திருப்பதை உணர்ந்துகொண்ட மெல்லினா அறைக்குள்ளிருந்து வெளிப்பட்டு “வா போகலாம்..” என்று, சற்று அமரக் கூட விடாமல் குடையை எடுத்துக்கொண்டு கிளம்பினாள். அவள் அம்மா விழுங்கிய வார்த்தைகளை அடக்க மாட்டாமல் “இன்னும் எத்தனைக் காலந்தான் உன் இஷ்டம் போலவே நடந்துக்குவ மெல்லினா.. நீ சின்னக் குழந்தை இல்லன்னு உனக்கு ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கனுமா..? இது உன் தனிப்பட்ட விசயம் கிடையாது. உனக்குப் பிடிச்ச மாதிரி நடந்துக்குறதுக்கு..”
இந்த வார்த்தைகள் எதுவும் மெல்லினாவிடம் சிறுவித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. அதற்காக மெல்லினா அம்மாவின் வார்த்தைகளை அலட்சியப்படுத்துகிறாள் என்றும் எடுத்துக்கொள்ள முடியாது. அவள் இயல்பாக தன்னை வைத்துக்கொண்டு “என்னை புரிஞ்சுக்கோம்மா..” என்பது போன்ற பாவனையுடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தாள்.
வாசலுக்கு வந்ததும் கையிலிருந்த குடையை விரித்தாள். நான், “மழைதான் இல்லையே.. எதுக்கு விரிக்கிற..?” என்றேன். “சும்மா சுருட்டி வச்சிக்கிறதுக்கு, ‘இப்டி’ பிடிச்சிட்டு போனா நல்லா இருக்குல்ல..” என்று சொல்லி, என்னையும் குடைக்குள் அழைத்தாள். நான் குடைக்குள் நுழைந்ததும், “அம்மாவுக்கு இந்த ரிஜிஸ்டர் மேரேஜ்ல கொஞ்சமும் இஷ்டமில்ல முகில்.. நைட்லருந்து ஒரே சத்தம்..” என்றாள். நான் “அப்பா என்ன சொல்றார்..?” என்று கேட்டேன். “அவருக்கும் பிடிக்கலதான்.. நீ சொல்லு முகில்.. இந்த ரெஜிஸ்டர் மேரேஜ்ல அப்டி என்ன தப்பு..?”
மெல்லினா என்ன சொன்னாலும், செய்தாலும் அதுதான் சரி என்று சொல்வதற்கு, நீண்ட நாட்களுக்கு முன்பே நான் பழகிவிட்டேன். இருந்தாலும், சிறிது அமைதியாக இருந்துவிட்டு, பேச்சை மாற்றும் விதமாக, “சரி அதை விடு.. இன்னிக்கு என்ன பிளான்..?” என்றேன்.
“நாம சரியா பனிரெண்டு மணிக்கு ரெஜிஸ்டர் ஆபீஸ்ல இருக்கனும் முகில். அங்க எல்லா ஏற்பாட்டையும் பிறை செய்திருப்பா.. நாம சைன் பண்ணிட்டு, அப்டியே நேரா ரிசார்ட் போயிட வேண்டியதுதான்..”
“பனிரெண்டு மணிக்கு மேரேஜ் வச்சிட்டு, அலட்சியமா வாக்கிங் கூப்பிட்டுப் போற..?”
“முக்கியமான ஒருத்தரை பார்க்கணும் முகில்.. உடனே திரும்பிடலாம்..”
மார்கழி பிறந்தும் மழைக்காலம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது வானம். இரவெல்லாம் இடைவெளிகளுடன் தூறிக்கொண்டே இருந்தது, விடிந்தும் இருட்டிக்கொண்டு நிற்கிறது. எனக்கு குடைக்குள் நடப்பது சிரமமாக இருந்தது. அதை புரிந்துகொண்ட மெல்லினா, “நீயும் குடைய பிடிச்சிக்கோ.. பேலன்ஸிங்கா இருக்கும்..” என்று குடைக்கம்பியை என்னிடம் நீட்டினாள். நான் அதை பற்றிக்கொண்டேன். நாளிதழ்கள் விநியோகம் செய்யும் சிறுவன் மணியடித்தபடி சைக்கிளில் எங்களை முந்திப் போனான். இத்தனை குளிர்ச்சியிலும் அவனுக்கு சலசலவென்று வியர்த்திருந்தது.
நாங்கள் நான்காம் நிழற்சாலையிலிருந்து பிரிந்து அழகிரிசாமி தெருவில் நடந்தோம். வெந்நிற ஆடை அணிந்திருந்த யுவதி தலைக்கு வட்டத்தொப்பி வைத்து எங்களைக் கடந்து ஜாக்கிங் போனாள். சிறிது தூரம் நடந்ததும், நடைபாதை ஓரமாக இருந்த கல்பெஞ்சில் மெல்லினா அமர்ந்துகொண்டாள்.
“ஏன் உட்காந்திட்ட..?”
அவள் புன்னகைத்தபடியே, “நாம வந்ததே இவனைப் பார்க்கத்தான்..” என்று சற்று தள்ளியிருந்த புங்கன் மரத்தை சுட்டிக்காட்டினாள். இந்த மரத்தை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லையே என்று நினைத்தபடி அவள் அருகில் அமர்ந்தேன். அது வயது முதிர்ந்திருந்த மரம். அடிக்கிளைகள் துண்டிக்கப்பட்டு அருகில் இருந்த கட்டிடத்திற்கு மேலாக கிளைகள் விரித்திரிந்தது. அப்போதுதான் குளித்து முடித்த இளம்பெண் ஈரத்தலைக்கு துணி சுத்தியிருப்பது போல இருந்தது. நெளிநெளியாய் இருந்த அடர்கருப்பு கிளைகளும், அடர்பச்சை இலைகளுமாய் இருந்தது. மெல்லினா மௌனமாகி அதனுடன் உரையாடத் தொடங்கியிருந்தாள்.
மெல்லினாவின் எல்லாவற்றுக்கும் வெறும் மரங்கள் மட்டும் போதும். அவை தவிர வேறொன்றும் அவளுக்குத் தேவையில்லை. அசோக் நகர், கேகே நகர் பகுதிகளில் இருக்கும் மரங்கள் ஒவ்வொன்றுடனும் அவளுக்கு அறிமுகம் இருக்கிறது. அதிலும் குறிப்பிட்ட பல மரங்கள் அவளின் மனதிற்கு மிக நெருக்கமானவை. அவைகளுக்கு என்று தனியாக பெயர்கள் வேறு சூடி வைத்திருக்கிறாள். மரங்கள் அவளுக்கு அவ்வளவு பிடித்திருந்தாலும் அதன் நிழலில் நிற்கமாட்டாள். சற்றுத் தொலைவில் நின்றுகொண்டு மரத்தைப் வேடிக்கை பார்த்தபடியே அவளாக உரையாடிக்கொண்டிருப்பதுதான் அவள் இயல்பு. மரங்களிடம் அவளுக்குப் பிடித்தது அதன் இலைகள்தான். பூக்களைவிட இலைகளைத்தான் வியந்து பேசுவாள். பூக்களின் நிறத்தை தாவரங்கள் இலைகளின் வழியே முதலில் தெரிவித்துவிடும் என்பாள். மரங்களை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டே இருப்பாள். ஆனால் மழை பெய்கையில் மட்டும் பார்ப்பதை தவிர்த்துவிடுவாள். அது அவளுக்கு பாரம் தரக்கூடியது. மழையில் தலை கவிழ்ந்து ஏதோ திட்டுவாங்குவதைப் போன்று மரங்கள் நிற்பதை அவளால் பார்க்க இயலாது என்பாள். மழைக்கு பிந்தைய மரங்களைப் பார்ப்பதுதான் அவளுக்குப் பிடித்தமானது.
மெல்லினா ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறாள். அவள் வடிவமைக்கும் உடைகளுக்கு தாவரங்கள்தான் முன்மாதிரி. ஆடைகளில் பயன்படுத்த வேண்டிய நிறங்களை, ஏதோ ஒரு தாவரத்திடம் இருந்துதான் தேர்வு செய்வாள். மனிதர்களுக்கான முதல் ஆடையே தாவரங்களின் இலைகள்தானே என்பாள். எத்தனையோ விதமான உடைகளை வடிவமைத்திருக்கிறாள். புடவைகளைத் தவிர. காரணம் கேட்டால், புடவைகள் பெண்களை சிறைப்படுத்துகிறது என்பாள். இருசக்கர வண்டியில் வந்த இருவர் அருகில் இருந்த நாகலிங்க மரத்தில் பூக்களைப் பறிக்கத் தொடங்கினர்.
மெல்லினா எழுந்துகொண்டாள். “அடுத்து எங்க போறோம்..?” என்றேன். “மூங்கில் கூரையில போய் இஞ்சி டீ சாப்பிட்டு, அப்டியே வீட்டுக்கு போவோம்..” என்று குடையை விரித்தாள். நான் குடைக்குள் புகுந்து கம்பியைப் பிடித்துக்கொண்டேன்.
‘மூங்கில் கூரை’ நாங்கள் தினமும் கூடும் இடம். ஒருநாள் சர்ப்ரைஸாக என்னையும், பிறையையும் அழைத்துச் சென்று “மூங்கில் கூரை” என்று அந்தக் கடையை அறிமுகப்படுத்தினாள். அந்த கடையின் உண்மையான பெயர் பார்க்கிங் கார்டன். ஆனால், நாங்கள்தான் அதை மூங்கில் கூரை என்று அழைத்துக்கொண்டோம். பிரதான சாலையிலிருந்து சற்று விலகி உள்ளொடுங்கி சற்று மறைவாக இருக்கும். அதன் சுற்றுச் சுவர் ஓரங்களில் இருக்கும் மஞ்சள் மூங்கில் வளைந்து நிழல் விரித்திருக்கும். அதன் அடியில் போடப்பட்டிருக்கும் இருக்கைகள்தான் எங்கள் இருப்பிடம். தினமும் அவரவர் பணி முடிந்த மாலைப் பொழுதுகளில் இஞ்சி டீயுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்புவோம்.
அப்படி ஒரு பனி இறங்கிக்கொண்டிருந்த மாலையில்தான் மெல்லினா தான் காதலில் விழுந்துவிட்டதாக ஆங்கிலத்தில் எங்களிடம் பகிர்ந்துகொண்டாள். எங்களுக்கோ ஆச்சர்யம்கொள்ளா ஆச்சர்யம். “என்ன, மெல்லினா காதலிக்கிறாளா..?” என்று. மெல்லினா காதலன், கணவன் என்றெல்லாம் தனிச்சலுகை தரக்கூடியவள் அல்ல. எல்லோரிடமும் ஒரே விதமான, ஒரே அளவான அன்பை வெளிப்படுத்தக் கூடியவள். அது அவளுடைய அம்மாவாக இருந்தாலும், அப்போதுதான் அறிமுகமான புதிய நபராக இருந்தாலும். அப்படிப்பட்ட சுபாவம் கொண்ட மெல்லினா காதலிப்பதாக சொன்னதுதான் எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. நாங்கள் மூவரும் ஒரே குரலாக “ஆள் யாருடி..?” என்று ஆர்வமானோம்.
“நவீன்..!” என்றாள்.
அது மேலும் எங்களுக்கு வியப்பாக இருந்தது. நவீன் உட்பட நாங்கள் எல்லோரும் சிறு பிராயத்திலிருந்து இப்போது வரை நண்பர்கள். ஆனால், அவர்களுக்குள் காதல் இருக்கிறது என்பதை நாங்கள் உணர்ந்ததே இல்லை.
“இவ்ளோ நாளா, எங்ககிட்ட இருந்து மறைச்சிட்டீங்கள்ல.. திருட்டுப் பசங்களா..?” என்று பொய்க்கோபமாய் கேட்டோம்.
“ச்ச, அப்டிலாம் இல்ல.. இன்னிக்கு மார்னிங்ல இருந்துதான்..”
“என்ன விளையாடுறிங்களா..?”
“சீரியஸ்ஸா.. இப்போகூட நான்தான் ப்ரபோஸ் பண்ணிருக்கேன்.. அவன் இன்னும் பதில் சொல்லல..”
எங்களுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
அவள் சிறுபெண்ணைப் போல, “மார்னிங் தூங்கி எழும்போது, மழை பேய்ஞ்சுகிட்டு இருந்ததா.. அதை பார்த்துக்கிட்டே அப்டியே உக்காந்துருந்தேன்.. ஏதோ ஒரு வெறுமை..! அப்பதான் நவீன் மழையில நனைஞ்சிட்டே ஓடி வந்தான்.. மின்னல் மாதிரி ஏதோ ஒண்ணு.. டக்குன்னு நாம லவ் பண்ணுவோமான்னு கேட்டுட்டேன்..”
நாங்கள் சிரித்தபடி, “அவன் என்ன சொன்னான்..?” என்றோம்.
“டைம் கேட்ருக்கான்.. யோசிச்சு சொல்றதா சொல்லிருக்கான்..” என்று சாதாரணமாக சொன்னாள்.
“இதில் யோசிக்க என்ன இருக்கிறது..?” என்று எனக்குத் தோன்றியது. நவீன் மெல்லினாவுக்கு முறைப்பையன்தான். அத்தை மகன். எதிரெதிர் வீடு. சிறு வயதில் இருந்து ஒன்றாக விளையாடி, ஒன்றாக பள்ளிக்கு போய், ஒரே கல்லூரியில் படித்து.. மெல்லினா பற்றி தெரிந்துகொள்ள, யோசிக்க இன்னும் என்ன இருக்கிறது..? என்றே தோன்றியது. ஆனால், மெல்லினாவைப் பற்றி முழுமையாகத் தெரிந்திருப்பதால்தான் அவன் யோசிக்கிறான் என்று நினைக்கிறேன். மெல்லினாவை அவளுடைய காதலன், கணவன், பெற்றோர், நண்பன் என்று உறவு கொண்டாடினால், சில சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டும். அவளின் இயல்பான போக்கு, “இந்தப் பொண்ணு என்ன லூசா..? மெச்சூர்டே இல்லாம இப்படி நடந்துக்குது..!” என்று நமக்கே தோன்றும். சிறு குழந்தையாக இருந்தால் அவளின் நடவடிக்கைகளை ரசிக்க முடியும். வளர்ந்த பெண்னொக இருப்பதுதான் பிரச்சனையே. அவளுடைய அம்மாவும், அப்பாவும் அவளைக் கடிந்துகொள்வதை நான் பல சமயங்களில் பார்த்திருக்கிறேன். சில நேரங்களில் நண்பன் என்கிற முறையில் “நீங்க அவகிட்ட சொல்லக்கூடாதா..?” என்று எங்களிடம் குறைபட்டுக்கொள்வார்கள். ஆனால், அவற்றை நான் ஒதுக்கித்தள்ளி விடுவேன். அவர்களுக்கு மெல்லினாவைப் பற்றி எதுவும் தெரியாது. நவீனும் மற்றவர்கள் போல நினைக்கிறானோ என்று நினைத்துக்கொண்டேன்.
நாங்கள் அன்று பேசிக்கொண்டிருக்கும்போதே அங்கு நவீன் வந்தான். ‘என்ன சொல்லப் போகிறான்..’ என்று எனக்குப் பதற்றமாக இருந்தது. மெல்லினா எப்போதும் போல எதிர்பார்ப்பில்லாமல் இருந்தாள். நவீன் ஒரு சிவப்பு நிற ரோஜாவை அவளிடம் நீட்டி காதலை ஏற்றுக்கொண்டதாக சொன்னான்.
ஒரு வருடம் ஆயிற்று. இரு வீட்டாரின் முழுமையான, மனப்பூர்வமான சம்மதத்துடன் இன்னும் ஒரு மாதத்தில் ஒரு சுபயோக சுபதினத்தில் இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கிறது.
நாங்கள் மூங்கில் கூரைக்கு வந்து சேர்ந்தோம். வழக்கம்போல நாங்கள் அமரும் இடத்தில் இருக்கைகள் எதுவும் இல்லை. மூங்கிலின் கத்தி போன்ற நீள இலைகளில் இருந்து மழைத்துளிகள் சொட்டிக் கொண்டிருந்தன. குடையை சுருட்டாமல் டீயை எடுத்துக்கொண்டு, மூங்கில் குருத்தின் அடியில் நின்றுகொண்டோம். தேநீருக்கு ஏற்ற தட்பவெப்பம்.
மெல்லினாவுக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கூட இந்த இடத்தில்தான் தோன்றியது.
ஒருநாள். எப்போதும் போல, அவரவர் வேலைகளை முடித்துக்கொண்டு ஒரு மாலையில் நான், பிறை, கௌதம் மூவரும் இங்கு மெல்லினாவுக்காக காத்திருந்தோம். சற்று நேரத்தில் மெல்லினாவும், நவீனும் வந்தார்கள். மெல்லினாவின் கையில் கத்தையாக அழைப்பிதழ்கள் இருந்தன. எங்களிடம் காட்டி, “இதுல ஒண்ணு செலக்ட் பண்ணுங்க..?” என்றாள். நாங்கள் பர்பிள் நிறத்தில் இருந்த அழைப்பிதழை மூவருமாக தேர்வு செய்தோம். அவள் நவீனைப் பார்த்து அர்த்தமாக புன்னகைத்தாள். அவன், “இப்பவே ஆர்டர் கொடுத்துடலாம்..” என்று அவளை அழைத்தான். அவள், “நீ கொடுத்துடு நவீன்.. நான் கொஞ்சம் பேசிட்ருந்துட்டு வர்றேன்..” என்று அவனை அனுப்பி வைத்தாள்.
நாங்கள் தேநீர் அருந்தியபடியே, “லவ் ஓகே ஆனப்பவும் ட்ரீட் கொடுக்கல.. இதோ இப்ப இன்விடேஷனே அடிக்க கொடுத்துட்ட.. எப்பதான் ட்ரீட் கொடுப்ப..” என்றோம்.
“வர்ற சண்டே கொடுத்துடலாம்..”
“இங்க பாரு.. சும்மா சிம்பிளா பண்ணலாம்னு நெனைச்சிடாதே.. கிராண்டா பண்ணனும்..”
“நீங்க என்ன எதிர்பாக்குறீங்கனு சொல்லுங்க..”
“அதெல்லாம் தெரியாது.. நீதான் பிளான் பண்ணுவியே.. நீயே பண்ணிக்கோ..” என்று அவளிடமே பொறுப்பைத் தள்ளிவிட்டோம்.
அவள் யோசித்து, “சரி, ஈசிஆர் ரிசார்ட்ல ஃபுல் டே கொண்டாடிடலாம்.. வெறுமனே பார்ட்டி பண்ணாம ரிங் மாத்தி, கேக் கட் பண்ணிட்டு ஸ்டார்ட் பண்ணிடலாம்..” என்றாள்.
நாங்கள் “ஹோ..!” என்று கூச்சலிட்டு, “அதாவது ஒரு மினி திருமணம்.. ரிகர்ஷல்னு சொல்லு..” என்றோம்.
“ஆமா.. அப்டியும் வச்சிக்கலாம்..” என்றவள் ஏதோ தோன்றியவளாக “இப்டி பண்ணா என்ன..?” என்றாள்.
“என்ன..?”
“ரெஜிஸ்டர் மேரேஜ்..!”
பிறை “ஏ நீ ரொம்ப போற..” என்றாள்.
நான் “சூப்பர் ஐடியா..” என்றேன்.
பிறை என்னை முறைத்தாள்.
மெல்லினா, “ஏய் திருமணத்துக்கு அப்புறம் ரெஜிஸ்ட் பண்ணத்தானே போறோம்.. அதுக்கு முன்னமே பண்ணா என்ன..? சின்ன த்ரில்ல ஏன் மிஸ் பண்ணனும்..?” என்றாள்.
பிறை, “அப்போ அன்னைக்கே பர்ஸ்ட் நைட்டும் வச்சிடு..” என்று கடு்ப்பானாள்,
மெல்லினா, “அது மட்டும் கிடையாது.. வேணா, சைன் பண்ணதும் ஒரேயொரு முத்தம்.. அதும் உங்க முன்னால, அவன் உதட்டுல.. ஓகேவா..” என்று சொல்லிவிட்டு, செல்போனை எடுத்து, “நவீன், வர்ற புதன் கிழமை நாம ரெஜிஸ்ட் மேரேஜ் பண்ணிக்கப் போறோம்.. மத்ததை நேர்ல சொல்றேன்” என்று துண்டித்தாள்.
லேசாக மழை துவங்கியது. “இந்த மழை டீ குடிக்கும்போது பெய்திருக்கலாம்..” என்று குடையை என்னிடம் கொடுத்துவிட்டு, நனைந்தபடி நடந்தாள்.
மெல்லினா அம்மா பலகனியில் நின்று, மழைநீர் சொட்ட சொட்ட நனைந்து வரும் மெல்லினாவைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தார்.
கேட் அருகே வந்ததும் “முகில், நீ கௌதம்மை கூட்டிக்கிட்டு ரிஜிஸ்டர் ஆபீஸ் வந்துடு.. வரும்போது மாலை ஆர்டர் கொடுத்ததை மறந்திடாதே..” என்று கேட்டைத் திறந்துகொண்டு ஈரமாய் வீட்டிற்கு ஓடினாள்.
நான் அவள் அம்மாவைப் பார்த்தேன். அவர் அவருடைய குமுறலை என்னிடம் கொட்டமுடியாமல் வேறு பக்கம் பார்த்தார். நான், “அவளாவது, அவ நினைக்கிற மாதிரி இருக்கட்டுமே ஆன்ட்டி..” என்றேன். அவர் பதிலெதுவும் சொல்லாமல் மழை பெய்வதை பார்க்கத் தொடங்கினார்.
நானும் கௌதமும் மாலையை வாங்கிக்கொண்டு ரெஜிஸ்டர் ஆபீஸ் போனோம். பிறை எங்களை எதிர்கொண்டு அவளுடைய வக்கீலிடம் அறிமுகப்படுத்தினாள். சரியாக பனிரெண்டு மணிக்கு கார் வந்து நின்றது. மெல்லினா இறங்கினாள். காலையில் புங்கன்மரத்தில் பார்த்த அடர்பச்சை நிறத்தில் புடவை உடுத்தியிருந்தாள். அருகில் வேட்டி சட்டையில் நவீன். புடவையில் மெல்லினாவின் இயல்பான நடை பிசகியிருந்தது.
பிறை எல்லா ஏற்பாடுகளையும் முன்கூட்டியே செய்து வைத்துவிட்டதால், கையெழுத்து இடுவது மட்டுமே பாக்கி. பிறை மெல்லினாவையும் நவீனையும் அழைத்துச் சென்று தனது வக்கீலிடம் அறிமுகப்படுத்தினாள். அவர் இருவருக்கும் வாழ்த்துச் சொல்ல, நவீனின் அலைபேசி ஒலித்தது. “அப்பாதான் பண்றாரு..” என்று சற்று விலகிப்போய் பேசினான். உள்ளே இருந்து வந்த அலுவலக உதவியாளர் பதிவாளர் அழைப்பதாக சொன்னார். நாங்கள் உள்ளே சென்றோம். பதிவாளர் மணமக்களை முன்னால் வரும்படி அழைத்தார். மெல்லினா முன்னே செல்ல, நவீனை காணவில்லை. எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். நவீன் அங்கு இல்லை. கூட்டமாக எல்லோரும் உள்ளே நுழையும்போது நவீன் அங்கிருந்து நழுவியிருக்கிறான் என்று எனக்குத் தோன்றியது. மெல்லினா செல்போனை எடுத்து டயல் செய்தாள். நாங்கள் அவளைப் பார்த்தபடி இருந்தோம். அந்த நிசப்தத்தில் “ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது” என்ற பெண் குரல், அனைவருக்கும் கேட்கும்படி ஒலித்தது. சோர்வாக செல்போனை இறக்கிய மெல்லினா, “இந்த சின்ன விசயத்தைக் கூட அவனால செய்ய முடியலல்ல..” என்று உடைந்தாள். பிறை அவள் அருகில் சென்று ஆறுதலாக தோள் மீது கை வைக்க, மெல்லினா என்னைப் பார்த்து “முகில்.. நாம கல்யாணம் பண்ணிக்கலாமா..?!” என்று கேட்டாள்.
நான் கையிலிருந்த மாலையை அவளிடம் கொடுத்தேன். கையெழுத்து முடித்ததும், பிறை அருகில் வந்து என்னைக் கட்டிக்கொண்டாள். மெல்லினா சற்று விலகி நின்று எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பிறை அவளைப் பார்த்து, “என்னடி பாக்குற.. சொன்னது மறந்துடுச்சா.. வா, வந்து இவனை கிஸ் பண்ணு..” என்றாள். அங்கிருந்த எல்லோரும் சிரித்தார்கள்.
மெல்லினா சிறு வெட்கத்துடன் என் அருகில் வந்தாள். பின் மெல்ல என்னை அணைத்து, என் காதோரமாய் வந்து “இன்னைக்கு நமக்கு முதலிரவு முகில்..!” என்று ரகசியமாய் கிசுகிசுத்தாள்.
***