சிறுகதைகள்
Trending

ஓங்காரமாய் நின்ற மெய்யே – மகேஷ்குமார் செல்வராஜ்

சிறுகதை | வாசகசாலை

இரவு மழை பெய்திருக்க வேண்டும்.கங்கையின் படித்துறை கழுவி சுத்தம் செய்ததைப் போல் பளிச்சென்று இருந்தது. கங்கை இன்னும் சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. அவன் மூன்றாவது முறை முங்கி எழுந்து அப்படியே சில நிமிடங்கள் ஆற்றில் நின்று கொண்டிருந்தான். கரையேறி வந்தவன் அப்படியே படியில் அமர்ந்து கொண்டு கங்கையின் நீரோட்டத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த அதிகாலையில் அப்பொழுது தான் கங்கையில் நீராட ஒவ்வொருவராய் வந்து கொண்டிருந்தார்கள். அவன் வந்த போது சிலரே நீராட வந்திருந்தனர்.

அலுவல் நிமித்தமாய் வாரணாசி வந்தவன் கங்கையில் நீராடி தன்னை புனிதப்படுத்திக் கொள்ள ஒருநாள் தங்க வேண்டியதாகி விட்டது. கொஞ்சம் குளிர் காற்று சில்லென அவனைத் தழுவிச் சென்று உடல் சிலிர்க்க வைத்தது. கங்கை,எத்தனை புதினங்களில்,அட்டைப் படங்களில்,புகைப்படங்களில்,திரைப்படங்களில் பார்த்தவைகளை இன்று நேரில் பார்ப்பதே அவனுக்கு பிரமிப்பாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. கங்கையின் மைந்தன் பீஷ்மன் அந்த கணத்தில் நினைவிற்கு வந்து போனார். கங்காதேவி என மனதுக்குள் ஒருகணம் உச்சரித்து அடங்கியது உதடுகள்.

அவன் வேடிக்கை பார்த்து அமர்ந்திருந்தபோது ஒருவர் வேகமாக வந்து நதிக்கரை முன் நின்றார். கைகளைk குவித்து வணங்கி கங்கையிடம் பேசுவது போல் பாவனை செய்தார்.கைகளை விரித்து விசும்பினார். சடசடவென நீருக்குள் முங்கி முங்கி எழுந்தார். மீண்டும் சிலமுறை அதைப் போலவே செய்து கரைக்குத் திரும்பினார். ஒடிசலான தேகம்…நெடுநெடு உயரம்..கொஞ்சம் கூன் விழுந்தாற்போல முதுகு. அந்த உயரத்திற்கு அப்படி ஒன்றும் அது பெரிதாகத் தெரியவில்லை. கொஞ்சமாக விடிந்திருந்தது. அந்த முகத்தையே வேடிக்கைப் பார்த்து அவர் செய்யும் செயல்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த முகம் ஏதோ பரிச்சயமான முகம் போல் மனதுக்கு பட்டது. ஆனால், சட்டென நினைவுதான் வரவில்லை.

அவர் கரையேறும் போது ஒரு குடும்பம் கரையொட்டி நடக்க இவரிடம் ஏதோ கேட்டனர். அவர் நிறுத்தி நிதானமாக பதிலளித்தார். அவர்கள் அவர்களோடு வந்த சிறுவனைக் காட்டி ஏதோ சொல்ல அவர் வேகமாக கையை நீட்டி மீண்டும் வழிகாட்டி அந்த சிறுவனின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார். சில அடிகள் கடந்த பின் உடன் வந்த பெண்மணி ஏதோ சொல்ல திரும்ப வந்து அந்த சிறுவன் அவர் காலில் விழுந்து ஆசி வாங்கினான். அவர் தன் கரங்களைக் கூப்பி கண்கள் மூடி மீண்டும் அவனைத் தொட்டுத் தூக்கி அதே போல் ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார். அவன் கரையில் அமர்ந்து அத்தனையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த முகம் பால்யத்தில் கண்ட பஞ்சாட்சரம் மாமாவை நினைவு படுத்தியது. அவர் ஏன் இங்கே வரப்போகிறார் என்கிற எண்ணத்தோடு அவர் அவன் சிறுவனாக இருக்கும் போதே காணாமல் போய் இதுவரையிலும் வீடு திரும்பவில்லை. இருக்கிறாரா இல்லையா என்பது கூடத் தெரியாது. அவரை அழைத்து விசாரிக்கலாமா என்கிற எண்ணம் ஓடிக் கொண்டிருக்கும் போதே வந்த இடத்தில் நமக்கெதுக்கு வம்பு என மனம் சொல்ல அப்படியே அமைதியானான்.

அவர் அவனைக் கடந்து படியேறிப் போனார். அத்தனை நெருக்கத்தில் நடந்து போகிறவரிடம் ஒரு வார்த்தை கேட்டால்தான் என்ன என மனம் கட்டளையிட்டது. அவனைக் கடந்து சில படிகள்தான் ஏறியிருப்பார், இவன் மெதுவாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “பஞ்சாட்சரம் சார்” என்று பலமாக அழைத்தான். அவர் சட்டெனத் திரும்பி என்னவென்று பார்ப்பது போல் அவனைப் பார்த்துக் கொண்டே கீழிறங்கினார்.

சார், நீங்க பஞ்சாட்சரம்தானே அவன் கேட்கும்போது தொண்டைக் குழி ஏறி இறங்கியது. ஆச்சர்யம் விலகாதவராய் அவனருகில் வந்து நின்றார்.

“என்ன ஏற்கனவே தெரியுமா உங்களுக்கு. மடத்துக்கு வந்திருக்கீங்களா?நாம இதுக்கு முன்னாடி பேசியிருக்கோமா?” எனக் கேட்டார் அவர்.

“உங்க சொந்த ஊர் திருநெல்வேலி முக்கூடல்தானே?” என மீண்டும் கேட்டான் இவன்.

அந்த கணம் அவர் முகம் வெளிறி அடங்கியது. அதுவே ஆமாம் என்பது போல் இருந்தது. அவன் தைரியமாகச் சொன்னான், “நான் சீனுவாசன் பையன் மாமா” என்ற போது அவர் முகம் ஆச்சர்யத்தில் மூழ்கிப் போனது. “உங்கப் பையன் சதாசிவத்தோட கூடப் படிச்சினே, அது நான்தான் மாமா” என்று சொல்லும் போதே அவர் அவனின் கரங்களை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். அப்படியே அவனைத் தளர்ந்து போனவராய் அந்த ஈரமான படியில் அமர வைத்தார்.

இப்பொழுதும் வார்த்தைகள் வராமல் கண்களில் நீர் கோர்க்க அவர் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். நினைவுகள் நதிப் பிராவகமாய் எழத் தொடங்கியிருந்தது. முதல் முறையாக நா தழுதழுக்க “லோகு, எப்டியிருக்கா மாப்ள?” கேட்டுக் கொண்டே ஈரத்துண்டால் கண்களைத் துடைத்துக் கொண்டார்.துடைக்கும்போதுதான் அதுவரை இறுகப் பற்றியிருந்த கரங்களுக்கு விடுதலை கொடுத்தார்.

“ம்ம்ம்…நல்லாருக்காங்க,நீ ங்க எப்படி இங்க?” என்று கேட்டான். அவர் அவரின் மனைவி லோகநாயகியைத்தான் அப்படிக் கேட்டார்.

“நா பெரிய பாவி, இப்படி நட்டமா அவளயும் பிள்ளங்களையும் பெத்த அம்மாவையும் விட்டுட்டு வந்திருக்கக்கூடாது. எங்கம்மா இந்நேரம் செத்துப்போயிருப்பா. அவள நெனச்சி அழாத நாள் இல்லை. இங்க எல்லாரும் பாவத்த கழுவிட்டுப் போறாங்க. ஆனா,என்னாலதான் இந்தப் பாவத்தக் கழுவ முடியல. ஊருக்கு வரணும்னுதான் மாப்ள ஆச. ஆனா,என்னமோ ஒன்னு தடுக்குது. இந்த ஊர விட்டுட்டு என்னால வர முடியல. பாரு,ஒரு முறை ஊருக்கு வந்துடலாம்னு டிக்கெட்லாம் எடுத்து ரயிலுக்காக காத்துக்கிட்டிருக்கேன். ரயில் அன்னைக்குன்னு பாத்து லேட்டா எடுக்கறாங்க. நா,அப்படியே வெறிச்சி பாத்துக்குட்டு உக்காந்திருக்கேன். ரயிலும் கண்ணுக்கு முன்னாடி கெளம்பிப் போகுது. ஆனா,என்னமோ தெரியில,நா ஏறவே இல்ல. எவ்ளோ நேரம் அப்படியே உக்காந்திருப்பேன்னு தெரியல. ஒரு கை என்னத் தொட்டுத் திருப்பி சாப்பாடு கொடுத்தப்பதான் சுய நினைவுக்கே வந்தேன்னா பாத்துக்கோயேன்.” அவர் அந்த நினைவை நினைத்துப் பெருமூச்சு விட்டார்.

“இங்க என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க?” அவன் கேள்வியை வீசும் முன்னமே அவர் தன் வாழ்வைக் கொட்டிவிடும் எண்ணத்தில் இருப்பது தெரிந்தது.அவன் அவர் பேசட்டும் என அமைதியானான்.

“ஏம் மாப்ள, சதாவுக்கும், மீனாம்பாளுக்கும் கல்யாணமாகி எத்தன புள்ளைங்க இருக்காங்க?” அவர் ஆர்வமாகக் கேட்டார்.

“ரெண்டு பேருக்குமே ஆணொன்னு, பொண்ணொன்னு…” அவன் சொல்லி முடித்தபோது அவராகக் கேட்டுப் பிதற்றினார்.

“லோகு ரொம்ப தெறமசாலி, நாந்தான் அவளுக்கு தூரோகம் பண்ணிட்டு ஓடியாந்திட்டேன். தப்பு பண்ணிட்டேன் மாப்ள. பயம்தான். அதுவும் ஊருக்குள்ள நம்மள என்ன நெனைப்பாங்களோங்கற பயம் இருக்கே, அது நம்மள வாழவிடாது. ஒன்னு நம்மள கொன்னுடும், இல்லேன்னா, இப்டி ஊர‌விட்டு ஓட வச்சிடும். பொண்ணு அஞ்சி வயசா இருக்கும் போது ஓடியாந்தேன்னு நெனைக்குறேன். மீனாம்பாள்னு பாத்து பாத்து பேர் வச்சேன். சதாசிவத்துக்கு அப்போ வயசு ஏறக்குறைய ஒம்போது முடிஞ்சி பத்து ஆரம்பிச்சிருக்கணும். சதா,அவங்க அம்மா லோகு மாதிரி. மீனா,என்ன மாதிரி. ப்ச்,எனக்குதான் அவங்களோட வாழக் குடுத்து வைக்கல. எனக்கே தெரியல மாப்ள, என்ன பிரச்னைன்னு கூட மறந்து போச்சு. கையில காலணா கெடையாது நான் ஊர விட்டு வர்றப்ப. எங்க போறது என்ன பண்றதுன்னு கூடத் தெரியாது. சரி, கங்கையில நம்ம பண்ண பாவத்தல்லாம் கழுவிட்டு செத்துப் போலாம்னு வந்தேன். சாவறதுக்கும் பயம். இந்த மனுசப் பொறப்பே அப்டிதான். அது வாழவும் வாழாது, சாவவும் சாவாது…” அவர் மெல்ல தன்னியல்பில் இருந்து மாறி பேசிக் கொண்டிருந்தார். நடந்து போன ஒருவர் இவரைப் பார்த்து வணக்கம் வைத்து கும்பிட்டுப் போனார்.

“காலம் ரொம்ப வேகமா ஓடிப்போச்சு. முப்பது வருசமாச்சு. லோகுவை இப்பவும் நெனச்சுப்பேன். புள்ளங்களை கரை சேர்க்க என்ன பாடுபட்டாளோ. எங்க அம்மா வயித்துக்கும் சேத்து ஒழச்சி கஞ்சி ஊத்தியிருப்பாள்ல… அவ செத்தப்ப எனக்காக நின்னு தூக்கிப் போட்டிருப்பாள்ல…அவளப் பாக்கறப்ப அவ கால்ல உழுந்து மன்னிப்பு கேக்கணும். இப்பக் கூட காலம்பற கரையில நின்னு கங்கைகிட்ட எல்லார் பாவத்தையும் கழுவுற, ஆனா, நா செஞ்ச பாவத்த மட்டும் கழுவ மாட்டேங்கற. ஆம்பளயாப் பொறந்தும் உபயோகமில்லாம போயிட்டனேன்னு அழுவேன். ஆனா,அந்தப் பாவத்துக்கெல்லாம் பிராயச்சித்தமா இன்னைக்கும் ஒருநாளைக்கு ரெண்டாயிரம் பேருக்கு சாப்பாடு போடறோம். அதுவே மனச பத்திரமா பாத்துக்குது. கங்காமா ஏதோ ஒரு காரணத்தாலதான் என்ன ஊருக்கு அனுப்பாம வச்சிருக்கா போல…” ஓடும் கங்கையைப் பார்த்து வணங்கினார்.

“அன்னைக்கு ரயில் ஏறாம உக்காந்திருந்தப்ப ஒரு கை எனக்கு சாப்பாடு குடுத்துச்சே, அந்தக் கைதான் இன்னைக்கு ரெண்டாயிரம் பேருக்கு சாப்பாடு போடற அளவுக்கு விட்டுட்டு போயிருக்கு. இப்பவும் நல்லா ஞாபகம் இருக்கு. ஒரு ரெண்டு நாள் நா அவரு கூடவே தெருத்தெருவா பிச்சையெடுத்தேன். திடீர்னு ஒருநாள் அவரு சாப்பாட்டுக்கு பிச்சை எடுக்குறதுக்கு பதிலா அரிசி,பருப்பு,காய்கறின்னு பிச்சை எடுக்க ஆரம்பிச்சார். அத வச்சி சமைச்சி பசியா இருக்குறவங்களுக்கு சாப்பாடு போட ஆரம்பிச்சார். சின்னதா தெருவோரமா பொங்கிப் போட ஆரம்பிச்சோம். அவரு சாப்பாட ரொம்ப நல்லா சமைப்பார். ஒரு பெரியவர் “இங்க என்னடா சமைக்கிறீங்க,வாங்கடா எங்கூட”ன்னு கூட்டிட்டுப் போனார். பெரிய சமையக்கட்ட காட்டினார். “இங்க பொங்குங்கடா,காசிக்குன்னு கஷ்டப்பட்டு வர்றவன் பசியோட போகக்கூடாது”ன்னு சொன்னாரு. அப்பவும் நாங்க கொஞ்ச நாளைக்கு தெருத்தெருவா சமைக்கறதுக்கு தேவையானத பிச்சை எடுத்துக்கிட்டுதான் இருந்தோம். கொஞ்ச நாள்ல, “நீங்க இங்க வரவேணாம், நாங்களே கொடுத்தனுப்பறோம்னு கொண்டாந்து குடுக்க ஆரம்பிச்சாங்க. அப்டி இப்டின்னு ஒரு நாளைக்கு முன்னூறு பேரு சாப்ட்டுக்கிட்டிருந்தாங்க. இன்னைக்கு ரெண்டாயிரம் பேருக்கும் மேல சாப்புடுறாங்க. ஆரம்பிச்சவரும் போயிட்டாரு, எடம் கொடுத்தவரும் போயிட்டாரு. நிர்வாகத்த பாத்துக்கிட்டு நாந்தான் இப்ப அத நடத்திக்கிட்டிருக்கேன். இப்பவும் அவ்ளோ பேர் சாப்புடுற கூட்டத்துல எங்குடும்பமும் பசியாறிடாதான்னு மனசு கெடந்து அடிச்சிக்கும். பகலுல நெனச்சிப் பாக்க நேரமிருக்காது. இந்த ராத்திரியானாதான் மனசப் புடுங்கி எடுக்கும்.” கண்களில் கண்ணீர் வழிந்தோடியதை துடைத்து தலையை சிலுப்பிக் கொண்டார்.

யாரோ ஒருவர் இவரைத் தேடி வந்து ஏதோ கேட்க இவரும் பதில் சொல்லிய போது கேட்டுக் கொண்டே விரைவாக நடக்கத் தொடங்கினார். “கரைக்கு குளிக்கப் போன ஆளு இன்னும் காணமேன்னு தேடி வந்திருக்கார். தெரிஞ்சவங்க வந்திருக்காங்க நீ போய் ஆக வேண்டிய காரியத்த பாரு, இதோ வந்துடறேன்னு சொன்னேன்” என்று அவன் கேட்காமலே பதிலளித்தார். “வரணும் மாப்ள,வந்து லோகுவோட கொஞ்ச நாளாவது நிம்மதியா வாழணும். எங்கம்மா சமாதியில முகம் பொதைச்சி அழணும். சதாசிவத்துக்கிட்ட மன்னிப்பு கேக்கணும். மீனாம்பாள அப்பா மேல கோவப்படாதடா, வேணுக்குன்னு பண்ணலடான்னு அழனும் அவங்க புள்ளைங்கள தூக்கி கொஞ்சனும். ஆசயாத்தான் இருக்கு. இதெல்லாம் நடக்குமான்னு தான் தெரியல. ம்,இந்த கங்கையோட மனசுல என்ன இருக்குன்னு தெரியலயே. நேரமாச்சு,வேல தலைக்கு மேல கெடக்கு. பசிச்ச வவுறு காத்துக்கிட்டிருக்கும். நாம காக்கலாம். அதுகள காக்கவைக்கூடாது. எல்லாரையும் கேட்டேன்னு சொல்லு.” என்று சொல்லிக் கொண்டே நடக்க முற்பட்டார்.

அப்போதைக்கு வேறு எதுவும் பேசும் மனநிலையில் அவர் இல்லை. அவசரம், அதுவே முக்கியமானதாக இருந்தது. அவனுக்கும் இன்னும் கேட்க கேள்விகள் மிச்சம் இருந்தன. ஆனால், அவரோடு போகும் மனநிலையில் அவனில்லை. அவர் படியேறிப் போவதையே அவன் பார்த்துக் கொண்டிருந்தான். சமீபத்தில்தான் லோகு என்னும் லோகநாயகி அத்தை இறந்து போயிருந்தாள். ஏனோ, அவரிடம் அவள் இறந்து போனதைச் சொல்ல அவனுக்கு மனமில்லை. அவர் நடந்து போவதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

திரும்ப கங்கையை பார்த்தான்…அது விலகாத மர்மத்தோடு

ஓடுவதாக இருந்தது. மின்னல் வெட்டி மறைந்தது. ஒரு சிறு இடியினூடாக மழை பெய்யத் துவங்கியிருந்தது. அவன் மழையில் நனைந்த வண்ணம் அமர்ந்திருந்தான். கங்கை கரையில் ஆட்கள் யாரும் இல்லை. இவன் மட்டும் தனித்து அமர்ந்திருந்தான். அவன் முன்பாக கங்கை நீர் வானை நோக்கி எழுந்து செல்வதைப் போல் இருந்தது.

*** ***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button