இணைய இதழ்இணைய இதழ் 84சிறுகதைகள்

ஆள் மாற்றம் – குமரகுரு.அ

சிறுகதை | வாசகசாலை

“என்னங்க?” கம்மிய குரலில் அழைத்தாள் அமுதா.

முருகேசன் எப்போதும் போல ஃபோனில் எதோவொரு வீடியோ பார்த்துக் கொண்டிருந்தான்.

இன்று, அமுதாவை ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலைக்கு அழைத்திருந்தார்கள். வேலை என்றால், பெரிய வேலையெல்லாம் இல்லை. ஷு கம்பெனியில் பேக்கிங் வேலை. 

ஷு கம்பெனிகளில் பெரிய வேலைகள் இருக்காது. இப்போதெல்லாம் கட்டிங் பேக்கிங்குக்கு கூட மெசின்கள் வந்து விட்டன. லேஸ் கட்டவும், வெள்ளை பேப்பருக்குள் சுருட்டி ஷூவை வைப்பதும்தான் ஆட்கள் செய்யும் வேலை.

அதிலும், வேலைக்குச் சேரும் கூட்டத்தில் பெரும்பங்கு பெண்கள். ESI, பி.எஃப் உடன் வேலை என்பதுதான் அவர்களை ஈர்க்கும் தூண்டில். சில நேரங்களில் அந்த பெண்கள் வேலையை விட்டு நின்றதும் பி.எஃப் பணம் பெற படும் பாடு தனிக் கதை.

அமுதா பக்கத்து வீட்டு பர்வதத்திடம் சொல்லி வைத்திருந்தாள். சொல்லியே ஒரு முழு மாதம் இருக்கும். அவள் சூப்பர்வைஸருக்கு நினைவு படுத்தி நினைவு படுத்தி,இன்றுதான் நேர்காணலுக்கு அழைத்திருந்தார்கள். நேர் காணல் என்றால் ஒன்றும் பெரிய விஷயமில்லை, ஷிஃப்ட் டைம் பற்றியும் வேலை பற்றியும் விளக்கிவிட்டு, ‘நாளையிலிருந்து வேலைக்கு வந்துரும்மா’ என்று சொல்லி அனுப்புவார்கள்.

திருமணம் ஆன நாளில் இருந்து, எதுவானாலும் முருகேசனேதான் வாங்கி வருவான். அவன் டூ வீலர் மெக்கானிக். அதில் வரும் வருமானமும் கம்மிதான். மாதச் செலவு போக குழந்தைகளின் பள்ளிச் செலவுக்கு காசு தேவைப்படும்போதெல்லாம் கடன் வாங்கிதான் சமாளிப்பார்கள்.

திடீரென்று முருகேசனின் அம்மாவுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் போன போது வாங்கிய முப்பைத்தைந்தாயிரம் ரூபாய் கடனை அடைக்க முடியாமல் அவன் பாடுபடுவதைப் பார்த்து அமுதா கொஞ்சம் கலங்கிதான் போயிருந்தாள். அதனால்தான் பர்வதத்திடம் வேலைக்குச் சொல்லியிருந்தாள். குடும்பம் எனும் தேரானது கணவன், மனைவி, பிள்ளைகள் என்று யாராவது ஒருவர் களைப்படையும் போது இன்னொருவர் உதவியால் இழுத்துச் செல்லப்படும் அமைப்புதானே! பிள்ளைகள் இருவரும் நான்கு மற்றும் ஆறாம் வகுப்புகளில் படிக்கிறார்கள். அவர்கள் நன்றாகப் படித்து வந்து விட்டால் எல்லா கவலையும் தீரும்தான். அதுவரை முருகேசனுக்குத் தோள் கொடுக்க வேண்டியது அவளின் கடமை என்றே எண்ணினாள்.

நேற்று இரவு முருகேசனிடம், ‘பர்வதம் அக்கா இன்று வேலைக்கு வர சொல்லியிருக்கிறாள்’ என்று சொன்ன போது, முருகேசன் எதுவுமே சொல்லவில்லை.

அவன் தூங்கும் முன்னர் இரண்டு முறை சொல்லியும் பார்த்தாள். அவன் மௌனமாகவே இருந்தான். 

ஒரு வேளை முருகேசனுக்கு அவள் வேலைக்கு செல்வதில் விருப்பமில்லையோ? என்று கொஞ்சம் பதற்றமடைந்தவள், பிள்ளைகள் உறங்கிய பின், ஒரு முறை அவனைத் தட்டி கேட்கப் போனாள்.

முருகேசனின் கண் கலங்கியிருந்தது. எதற்காக அழுகிறான் என்று புரியாமல் அமுதா, அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். ‘சரி! காலையில் பேசிக் கொள்ளலாம்’ என்று எண்ணி உறங்க முயன்றாள். புரண்டு புரண்டு படுத்தாலும் உறக்கம் கண்களின் வழியாகத் தப்பியோடிக் கொண்டேயிருந்தது.

இப்போது அமுதாவின் பிரச்சனை கூடுவாஞ்சேரியிலிருந்து தாம்பரம் சானடோரியம் செல்ல பேருந்து அல்லது ரயில் டிக்கெட்டுக்கான பணம்.

அதிகாலையில் எழுந்து காலைக்கும் மதியத்துக்கும் இட்லி & சட்னி மற்றும் சாம்பார், கோஸ், பொரியல், சாதம் எல்லாம் சமைத்து வைத்துவிட்டு ஏழு மணிக்கெல்லாம் குளித்து முடித்துக் கிளம்பிவிட்டாள். பிள்ளைகள் இருவருக்கும் டிபன் பாக்ஸ் எடுத்து வைத்தாயிற்று. அவர்களிருவரும் பள்ளிக்கு அவர்களே சென்று விடுவார்கள்.அதனால், அவர்களைப் பற்றிக் கவலையில்லை. அவள் வேலைக்குச் செல்லப் போவதைப் பற்றி முன்னரே பிள்ளைகளிடம் கூறியிருந்தாள். அவர்களுக்கும் அம்மா வேலைக்குப் போவதில் சந்தோஷம்தான்!

வீடியோ பார்த்துக் கொண்டிருந்தவனிடம், நெருங்கி, மீண்டும், “ஏங்க! வேலைக்கு கூப்பிட்டுருக்காங்கன்னு சொன்னேன்ல, போயிட்டு வர காசிருந்தா கொஞ்சம் கொடுங்களேன்?” என்று கண்ணாடி டம்ளரைத் துடைப்பதைப் போல மென்மையாகக் கேட்டுவிட்டாள்.

ஃபோனை லாக் செய்துவிட்டு மீண்டும், அழத்துவங்கினான் முருகேசன்.

“ஏங்க! எதுக்காக இப்போ அழுவுறீங்க? நான் வேலைக்குப் போறது உங்களுக்குப் பிடிக்கலையா? அப்படின்னா சொல்லுங்க.. நான் அக்காக்கிட்ட சொல்லிடுறேன்” என்றாள்.

முருகேசன் இன்னும் கொஞ்சம் சத்தமாக அழுதான். அமுதாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவளுக்கு முருகேசனைப் பற்றி நன்றாகத் தெரியும். அவன் கடின உழைப்பாளி, நல்ல மனிதன். தன் கஷ்டத்தைக் கூட யார் மீதும் திணிக்க கூடாது என்று கடினமாக ஓடும் ஒற்றைக் குதிரை. சில நேரங்களில் குழந்தைகளுக்காக சரியாக காசு சேர்த்து வைக்கக் கூட முடியவில்லை என்று ஏங்குவான். குடிப் பழக்கமோ சிகரெட் புகைக்கும் பழக்கமோ கூட அவனுக்குக் கிடையாது. திருமணமான நாள் முதல் இன்று வரை அமுதாவை ஒரு சுடுசொல் சொல்லித் திட்டியதுமில்லை. 

பணமுடையால் பல நேரம் உடைந்து போகும் அவனை சமாதானப்படுத்தி, “நமக்கான நல்ல நேரம் வரும். அது வரை கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வோம்” என்று ஆறுதலாகப் பேசுவாள்.

இன்று அவள் என்ன ஆறுதல் சொல்வதென்று புரியாமல் சற்றேத் திக்குமுக்காடிதான் போனாள். அவளுக்கு நன்றாகத் தெரியும் கடன் சுமையை முருகேசனால் சமாளிக்க முடியாது. எதாவது ஒரு கட்டத்தில் கடன் இறுக்கம் அவர்களின் கழுத்தை நெரிக்கும், அதற்கு முன் சுதாரித்து மூழ்கும் கப்பலைக் கரை சேர்க்க ஒரு கை கூடுதலாகக் கொடுக்க வேண்டும் என்றுதான் வேலைக்குச் செல்லும் முடிவெடுத்தாள்.

“அம்மா! உன்னை வேலைக்குப் போற நிலைமைக்குத் தள்ளிட்டேனே!” என்று அழுதபடியே அவளின் இரண்டு கைகளையும் எடுத்து தன் நெற்றியில் ஒத்திக் கொண்டு அழுதான். அவர்கள் வாழும் ஹவுஸிங் போர்ட் வீட்டின் சுவர்களுக்குக் கூட அவர்கள் படும் பாடு தெரியும். அவற்றுக்குக் காலும் கையும் இருந்தால் அவைகளும் கூட வேலைக்குச் சென்று அவர்களைக் காப்பாற்றத்தான் முனையும், அப்படி இருக்கும் பட்சத்தில், ‘இவன் ஏன் அழுகிறான்?’ என்று அமுதா பயந்தாள்.

“ஏங்க! வேலைக்கு வர சொல்லியிருக்காங்கன்னு நேத்து நைட்டே சொன்னேனே இப்போ என்ன சின்ன புள்ளையாட்டமா அழுதுக்கிட்டு இருக்கீங்க? எனக்கு இப்போ என்ன பண்ணுறதுன்னே தெரியல, பர்வதம் அக்கா வந்தா இப்போ நான் போகவா, வேண்டாமா?” என்று சற்றே குரலை ஏற்றியும் இறக்கியும் அவள் பேசும் சொற்களிலில் இருந்து கோபத்தை வடிகட்டிய டிகாக்ஷனாய் பேசினாள்.

தேம்பிக் கொண்டிருந்த முருகேசன். வெடுக்கென கைகளை உதறிவிட்டு, “இந்தாம்மா 100 ரூபா இருக்கு! தாராளமா வேலைக்குப் போயிட்டு வா…” என்றான்.

“அதை ஏன் அழுதுக்கிட்டே சொல்லுறீங்க? நம்ம வீட்டுக்காகவும் புள்ளைங்களுக்காகவும்தான போறேன்?” 

“அதுஞ்சரிதான்! ஆனா, வேலைக்குப் போனதும் ஆளு மாறிட மாட்டியே?”

சற்று நேரம் அமைதியாக, முருகேசன் அவன் கன்னத்தில் ஒட்டியிருந்த கண்ணீரைத் துடைப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் கண்களில் இருந்த பயம், இப்போதுதான் அவளை அச்சுறுத்தியது. 

“அப்படின்னா? புரில.. என்ன கேட்குறீங்கன்னு புரில. நான் ஏன் மாறனும்?”

முருகேசன் யோசித்தான். அவளைக் காயப்படுத்திவிட்டோமோ என்று எண்ணிக் கொண்டே, “இல்லம்மா! வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பிச்சதும் நீ ஆளு மாறிட்டனா, நானும் புள்ளைங்களும் என்ன பண்ணுறது?”

இம்முறை அமுதாவுக்கு நல்ல கோபம். உடல் முழுவதும் ஏதோ ஊர்வதைப் போலிருந்தது. என்ன அர்த்தத்தில் முருகேசன் பேசுகிறான் என்பதைப் புரிந்து கொள்ள முயன்றால். அவளுக்குள் இது ‘அந்த மாதிரியான கேள்வியாக’ இருக்கக் கூடாதென்ற பயமும் இருந்தது.

“சத்தியமா புரில. வீட்டு கஷ்டம், கடனாயிருக்குதேன்னுதான வேலைக்குப் போறேன்னு சொல்லுறேன். இப்போ ஏன் நான் ‘ஆள் மாறுவனா’ன்னு கேட்குறீங்க?”

“இல்லம்மா, நேத்து ஷெட்டுக்கு வந்த கோபாலகிருஷ்ணன் சார் பேசும்போது எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்யுற பொம்பளைங்கள எல்லாம் சூப்பர்வைசரோட அட்ஜெஸ்ட் பண்ணிக்கச் சொல்லுவாங்களாம், அப்படி அட்ஜெஸ்ட் பண்ணலைன்னா வேலையில குத்தம் சொல்லி வேலையை விட்டு நிற்பாட்டுறதா சொல்லி மிரட்டி கூட்டிட்டு போய் மேட்டர் பண்ணிடுவாங்களாம். அவருக்குத் தெரிஞ்ச பத்து பதினைஞ்சு பொண்ணு பொம்பளைங்களைப் பற்றி அவரே அப்படி கேள்விப்பட்டிருக்கேன்னு சொன்னார். அதான் பயந்துக்கிட்டு இப்படி கேட்டேன்” என்றொரு பெரிய குண்டைத் தூக்கி அவளின் தலையில் போட்டான்.

இதைத் தாண்டி எப்படி செல்வதென்று படாதபாடு பட்டது அமுதாவின் மனம். ‘உலகத்தில் உள்ள அனைத்து ஆண்களும், அவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்று வீடு திரும்பியதும், வீட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனிடம், ‘இன்று யாரோடு அட்ஜஸ்ட் பண்ண?’ என்று கேட்டால் என்ன ஆகும்?’ என்று யோசித்தாள்.

அமுதாவிடம் அவன் கேட்ட கேள்விக்கு பதிலேயில்லை. அவளுக்கு இது முற்றிலும் புதிய உலகம். புதிய உலகத்தில் முதல் காலடி எடுத்து வைக்கும் குழந்தையின் காலை வேண்டுமென்றே யாரோ இடறி விடுவதைப் போல், அந்த கோபாலகிருஷ்ணன் முலமாக முருகேசன் இப்போது இடறி விடுகிறான். இதிலிருந்து எழுந்து மீள வழி தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள். 

“டிக் டிக் டிக்” என்ற சத்தத்துடன் காலம் எப்போதும் போல வேகமாக நகர்வதை அவள் விரும்பவில்லை. அவளால் இப்போது காலத்தை நிறுத்தி வைக்க முடியுமென்றால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு அவள் அதை நிறுத்தி வைக்க வேண்டும். யாரால்தான் இந்த மாதிரியான வதந்திகளை நம்பி கேள்வி கேட்கும் மனிதர்களிடம், இது வெறும் வதந்தி; உண்மையில்லை என்று உடனடியாக நிருபிக்க முடியும்? அமுதா ஒரு படிக்காத சாதாரணமான பெண் இல்லையா? அவள் மீது அந்த கேள்வி ஆசிட் மழையாக இன்னும் பொழிந்தபடியிருக்கிறது. ஆனால், அவள் மவுனமாக யோசித்துக் கொண்டேயிருக்கிறாள்.

“என்னம்மா ஆச்சு? அமைதியாவே இருக்க. நான் சொன்னது புரிஞ்சுதா? நான் கேட்டதுக்கு பதில் சொல்லேன்” என்று அவளின் தோள் பிடித்து உலுக்கினான் முருகேசன்.

சட்டென உலுக்கியதில், எங்கேயோ ஒரு ஆளரவமற்ற திக்குத் தெரியாத இருண்ட காட்டில் தனியாக சிக்கிக் கொண்டிருந்தவளைப் போல, தன் நினைவுக்குத் திரும்பினாள் அமுதா.

“அமுதா! அமுதா!!” வாசலிலிருந்து பர்வதம் அக்காவின் குரல். 

சடாரென எழுந்தாள். வாசல் கதவில் தன் வலது கையை வைத்துப் பிடித்தபடியே செருப்பை அணிந்தாள், புடவையையும் ரவிக்கையையும் சரி செய்தாள். வேகமாக நடக்கத் துவங்கினாள். 

“அமுதா! அமுதா!! நில்லு!! நான் கேட்டதுக்குப் பதில் சொல்லாமயே போறியே…” என்று வாசலுக்கு எழுந்து வந்து கத்தியவாறு கேட்டான் முருகேசன்.

கையிலிருந்த நூறு ரூபாயை இறுக்கிப் பிடித்திருந்தவள், “அக்கா பஸ்ஸுக்கு ஒரு அம்பது ரூவா காசு வச்சிருக்கியா?” என்று பர்வதத்திடம் கேட்டாள்.

பர்வதம் வாசலில் நின்றவாறு கத்திய முருகேசனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். “அக்கா, காசு வச்சிருக்கியாக்கா? முத மாச சம்பளம் வந்ததும் திருப்பிக் கொடுத்துடுறேன்?”

“இருக்கும்மா… தரேன், உனக்கு இல்லாமயா. அவன் ஏன் கத்திட்டிருக்கான்?” என்று முருகேசனைப் பற்றிக் கேட்டாள் பர்வதம்.

“ந்தா! இருக்கா வந்து சொல்லுறேன்…” என்று வேகமாக நடந்து சென்றவள், “இந்தாங்க உங்க காசு. அப்படி ஒன்னு நடக்கும் போது பார்த்துக்கலாம். உங்க கேள்விக்கு அப்போ பதில் சொல்லிட்டு காசு வாங்கிக்குறேன். அதுவரைக்கும் உங்க கோபாலகிருஷ்ணன் சார் சொன்னதையே நம்பிட்டு இருங்க” என்று சொல்லிவிட்டு வியர்வையின் ஈரத்தில் நனைந்திருந்த நூறு ரூபாய் தாளை முருகேசனின் கையை இழுத்துத் திணித்துவிட்டு, வேகமாக பர்வதம் அக்காவிடம் வந்தாள்.

“வேலைக்குப் போறேன்னு சொன்னதும் ஆளே மாறிட்டாருக்கா. என்னென்னமோ கேட்டாரு. அதான் இப்போ நானும் ஆள் மாறிட்டேன். இன்னையிலிருந்து நான் நேத்து வரை இருந்த அமுதா இல்ல, அவரு நேத்து வரை இருந்த மனுசனில்ல! அவ்வளவுதான்..வாக்கா போலாம்!” என்று பர்வதம் அக்காவுடன் வேகமாக நடந்து சென்ற அமுதாவைப் பார்க்காமல், இன்னும் தன் கையிலிருந்த நூறு ரூபாய் நோட்டையே பார்த்துக் கொண்டிருந்தான் முருகேசன்.

******

yorkerguru@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button