சிறுகதைகள்
Trending

ஆங்கிலேயர்களின் நன்கொடை – நவநீதன் சுந்தர்ராஜன்

சிறுகதை | வாசகசாலை

விரைவாக ஓடிச் சென்று பேருந்தில் ஏறி விட்டேன், வலது புறம் மட்டுமே ஆண்கள் அமர வேண்டும், என்ற சென்னை மாநகரப் பேருந்துகளில் கடை பிடிக்கும் விதியினை அறிந்திருந்தாலும், கண்கள் இடது புற இருக்கைகள் பக்கமே செல்கின்றன. இந்த அனிச்சை செயல், பெண் இச்சையால் என்னுள் நிகழ்வது குறித்து எனக்கு மகள் பிறக்கும் வரை பெரிதாக நான் வருந்தியதாகத் தெரியவில்லை. இன்றளவும் வருந்த மட்டுமே செய்கிறேன். வலது புற இருக்கைகள் நிரம்பி விட்டன, அதில் பெண்களும் அமர்ந்திருக்கிறார்கள், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இந்த விதிகள் தளர்த்தப்படுகின்றன.

அடுத்தடுத்த இடது புற இரு இருக்கைகளில், இரு பெண்கள் தனித்தனியாக அமர்ந்திருக்கிறார்கள், முதலில் உள்ள பெண் அழகாக இருந்தாள், இளம் வயதுக்காரி. அடுத்துள்ள பெண் நடு வயது, தயங்கியபடியே சென்று அவளது இருக்கையின் அருகே நின்றபோது, தள்ளி அமர்ந்தாள். நான் அருகில் அமர்ந்து கொண்டேன். அவளது முகத்தை சரியாகப் பார்க்கவில்லை, கண்டிப்பாக அழகாக இருக்க மாட்டாள் என்று தோன்றியது .

பேருந்து புறப்பட்டு விட்டது. அதிகாலை ஐந்து மணிக்குப் புறப்படும் இரயிலைப் பிடித்தே ஆக வேண்டும். என் பாட்டியின் இறுதிச் சடங்கிற்காகச் சொந்த ஊர் சென்று கொண்டிருக்கிறேன். தற்போது நான் சோகமான மனநிலையில் இல்லை. ஊர் சென்று இறங்கும் வரை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இறங்கியவுடன் கட்டாயம் சோகமாகி விட வேண்டும். பாட்டியின் உடலைப் பார்த்தவுடன் கதறி அழ வேண்டும். அவ்வளவு அழுகை வரும் என்று தோன்றவில்லை. ஒரு இரண்டு சொட்டுக் கண்ணீராவது விட்டாக வேண்டும். இல்லாவிடில் நேற்று இரவிலிருந்து எனக்காகக் காத்துக் கொண்டிருக்கும் ஊர்க்காரார்கள் என்ன நினைப்பார்கள்?. நினைக்கும்போது சிரிப்பு வருகிறது. அழுகிறோமோ இல்லையோ சிரித்துத் தொலைத்து விடக் கூடாது.

ஏன் இப்படி? எனக்காக எவ்வளவு செய்திருப்பாள்?.ஒரு வேளை படுக்கையில் நீண்ட நாட்கள் இல்லாமல் திடீரென்று இறந்திருந்தால் அழுகை பீறிக்கொண்டு வருமோ?. எனது தந்தை இறந்தால் நான் அழுவேனா? நான் இறந்தால் என் மகள் அழுவாளா?. ஐயோ! இதென்ன மனநிலை?. சிந்தனையில் எழும் எண்ணங்கள் எப்பொழுதும் நாம் என்ன மனநிலையில் இருக்க வேண்டும் என்பதை மறக்க வைத்து விடுகின்றனவே. ஒரே கோர்வையாக யாராலும் சிந்திக்கவோ, கனவு காணவோ முடியாது போல. சரி! அழுகை, சிரிப்பு இரண்டும் வேண்டாம். அமைதியாக முகத்தைத் தட்டையாக வைத்துக் கொள்வோம். அந்த முகபாவதிற்கான பயிற்சியை ஊர் செல்லும் வரை செய்வது என முடிவு செய்தேன்.

பஸ் முதல் நிறுத்தத்தில் நின்றது. கீழே பஞ்சம் பிழைக்க சென்னை வந்த பத்து வட இந்தியர்கள் நிற்கிறார்கள், படித்ததனால் பிழைக்க சென்னை வந்த நான் மேலே இருக்கிறேன், இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. “சென்ட்ரல் ஸ்டேஷன்” ,”சென்ட்ரல் ஸ்டேஷன்”, என்று கூவுகிறார்கள். “போகுண்டா…ஏறித் தொலைங்க, என்னமோ டிரைன்ல டிக்கெட் எடுத்து டிராவல் பண்ணப் போற மாதிரி”,மனசுக்குள்ளேயே பேசிக் கொண்டேன். கண்டெக்டர் ஏறுமாறு சைகை செய்த பிறகே ஏறினார்கள்.

மீண்டும் அடுத்த நிறுத்தம், இம்முறை இரண்டு பெண்கள் ஏறினர், வேறு வழியில்லை தூங்குவது போல் நடிக்க ஆரம்பித்து விட்டேன். வெளியூர்ப் பெண்கள் போலும், என்னை எழுப்பவில்லை. வலது புறம் அமர்ந்திருக்கும் பெண்களை ஒரு நாளும் நான் எழுப்பி விட்டு அமராததின் பலன் இன்று எனக்குக் கிட்டியதாகவே நினைத்துக் கொண்டேன். பிறகு எங்கும் பெரிதாக நிற்கவில்லை.

ஒரு வழியாகச் சரியான நேரத்திற்கு இரயில் நிலையம் வந்தடைந்து விட்டேன்.

இரயில் பத்தாவது பிளாட்பாரத்தில் வந்து சேரும் என்று திரையில் ஓடிக் கொண்டிருந்தது. அந்த பிளாட்பாரத்தில் நான் நடந்து கொண்டிருக்கிறேன். இதோ, நான் பயணம் செய்ய வேண்டிய இரயில் நிற்கிறது, அனைத்துக் கதவுகளும் உள்ளே தாழிடப் பட்டிருக்கின்றன,ஏழாம் நம்பர் பெட்டியில், 88 எனது இருக்கை எண், அதுவும் பூட்டி இருக்கிறது. ஒரு ஹிந்திக்காரன் அவசர வழி சன்னலில் உள்ள சிவப்பு நிறக் கம்பியினை உள்ளே கையை விட்டுக் கழட்ட முயற்சி செய்கிறான்.

“ஏய் கியா கர்தேகே உதர் மே!. இயா ஜென்ரல் கம்பார்ட்மன்ட் நகி! பீச்சே ஜாவோ!”, என்றவுடன் எதுவும் சொல்லாமல் என்னைப் பார்த்துப் பயந்து சென்றது பெருமையாக இருந்தது. பெருமை அவன் பயந்ததிற்காக அல்ல, நான் பேசிய ஹிந்தி அவனுக்குப் புரிந்தது என்பதை நினைத்து. இது மாதிரியான பயத்தினை நானும் வட இந்தியாவில் பயணித்தபோது உணர்ந்திருக்கிறேன், அதனால் கற்றுக் கொண்டது தான் இந்தச் சில ஹிந்தி வார்த்தைகள்.

நாம் பயணிக்கும் இடங்களில் இருக்கும் மக்களின் மொழி தெரியாமல் விழி பிதுங்கும்போது அனைவருமே ஒரு விதமான அச்சத்தை உணர வேண்டியிருக்கிறது. நீங்கள் கல்வி அறிவு இல்லாதவர்கள் போலத் தான் அவர்கள் கண்ணுக்குத் தெரிவீர்கள். உண்மைதான், அவர்களது எழுத்துகள் எனக்குச் சித்திரங்களாகவே தெரிந்தன. எழுதப் படிக்கத் தெரியாத என் பாட்டிக்குத் தமிழ் எழுத்துகள் கூடக் கடைசி வரை பொம்மைகளாகவே தெரிந்திருக்கும். அதனால் தான் என்னவோ படித்துப் பெரிய நிறுவனத்தில் கணிப்பொறியிலாலனாய்க் கை நிறைய சம்பாதிக்கும் நான் அவளுக்குப் பெரிய அறிவாளியாகத் தெரியவில்லை.

பாட்டியைப் பொறுத்த வரை எழுத்துகள், பேருந்து பலகையில் உள்ள ஊர்களைப் படித்து அறிந்து கொள்ள உதவும் ஒரு சாதாரணக் கருவி. எண்கள், ரூபாய் நோட்டுகளை எண்ண உதவும் ஒரு இன்றியமையாத் தேவை. அந்த இரண்டையும் வாய் வழியாகவே பயன்படுத்தி வாழ்க்கையை முடித்து விட்டாள்.

அதோ நான்காம் எண் பெட்டியின் கதவு திறக்கப்பட்டு விட்டது, அதன் வழியாக ஏறி ஏழாம் எண் பெட்டியில் எனது இருக்கையில் வந்து சரியாக அமர்ந்து கொண்டேன். முன்னும் பின்னும் முன் சொன்ன இச்சை தேடச் சொல்கிறது, இருளில் ஒன்றும் தெரியவில்லை. பாட்டியை நினைத்துக் கொண்டேன்.

இரயில்வே ஊழியர் ஒருவர் வந்து விளக்குகளை எரிய வைத்து, கதவுகளைத் திறந்து விட்டார். அனிச்சை செயலால் வெளிச்சத்தில் தேடினேன், இரண்டு மூன்று தேரும். முந்தைய இரயில் பயணங்களின் வெற்றிகளும் தோல்விகளும் மனதில் வந்து வந்து சென்றன.

சரியான நேரத்தில் இரயில் புறப்பட்டது. அதிகாலை ஐந்து மணிக்கே “பூரி, வட இட்லி…பொங்கல்” என்ற சத்தம் கேட்க ஆரம்பித்து விட்டது. அதிகாலை ஐந்து மணிக்குச் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? என்பதை எட்டு மணிக்கு எழும் நான் விவாதிப்பது அவ்வளவு சரியாக இருக்காது. வண்டி கிளம்பி சிறு தொலைவு கடந்து விட்டது

எனது இடது புறத்தில் மகள் வந்து வழியனுப்பிய தாய் அவளிடம் வண்டி எங்குச் சென்று கொண்டிருக்கிறது என்பதைப் செல் பேசியில் விளக்கிக் கொண்டிருக்கும்போது, வண்டி சரியாக ஐம்பது புள்ளி ஆறு கிலோமீட்டர் கடந்திருந்தது. இவ்வளவு சரியாகச் சொல்ல முடியுமா? என்றால், முடியும். தண்டவாளங்களை ஒட்டி நின்று கொண்டிருக்கும் கம்பங்களில் ஒவ்வொரு நூறு மீட்டர் தூரமும் எழுதப் பட்டிருக்கும். பொய் சொல்லவில்லை, அடுத்த முறை நீங்கள் பயணம் செய்யும்போது பார்த்துக் கொள்ளுங்கள்.

மெட்ராஸ் சென்ரல், சென்னை சென்ட்ரல் எனவும் எம் ஜி ஆர் சென்ட்ரல் எனவும்  பெயர் மாற்றம் அடைந்தபோதும் இந்த மெட்ராஸ் ஹை கோர்ட் என்பதில் உள்ள மெட்ராஸ் ஏன் சென்னையாக மாற்றப்படவில்லை, என்ற கேள்வி ஒவ்வொரு முறையும் எம் எஸ் எல் எனப்படும் மீன் சீ லெவல் என்று எழுதப்பட்டிருக்கும் ஸ்டேஷன் பெயர் பலகைகளைப் பார்க்கும் பொழுது எனக்கு எழுகிறது. அது ஏன் என்று தெரியவில்லை, ஆனால் கோர்ட்டும், இரயிலும் பிரிடிஷ்காரர்களின் நன்கொடை. இவை இரண்டிலும் நீங்கள் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டும், சரியான நேரத்திற்குச் செல்ல முடியாது என்பதனை வண்டி இருபது நிமிடம் தாமதமாகச் சென்று கொண்டிருப்பதில் இருந்து தெரிந்து கொண்டேன்.

சரியான நேரத்திற்குச் சென்று விட முடியுமா? ஐயம் தான். சந்தேகங்கள் இல்லாத வாழ்க்கை யாருக்காவது வாய்க்குமா என்பதும், சந்தேகமே!, மேலே எழுதிய கம்ப்யூட்டர் இன்ஜினீர் என்பதன் தமிழ்ச் சொல்லிற்கு வருவது மூன்று சுழி ‘ண’ வா அல்லது இரண்டு சுழி ‘ன’ வா?, சந்தேகம் தான். எழுதுவது என்று முடிவு செய்த பிறகு எழுத்துப் பிழை பற்றியெல்லாம் கவலைப் பட்டுக் கொண்டிருக்கக் கூடாது. சந்தித்த மனிதர்களையும், வாழ்க்கையையும் சந்திப் பிழையுடன் எழுதுவதில் பெரிய தவறொன்று இருப்பதாக நினைக்கவில்லை.தொன்று தொட்ட தமிழ் கூகுள் வரை பிழைத்ததே எங்களைப் போன்ற ஆர்வக் கோளாறுகளால் தான், அதனால் இந்தப் பிழைகளை நீங்கள் மன்னித்துத் தமிழ் வளர உதவிட வேண்டும்.

எதுவுமே செய்யாமல் இருப்பதற்கு “சம்திங் ஈஸ் பெட்டெர் தேன் நதிங்க்”….என்று என்னுள் நினைத்துக் கொண்டே எதிரில் அடுத்த இரு கம்பார்ட்மென்ட் தாண்டி அமர்ந்திருக்கும் சிவப்பு சுடிதார் அணிந்த பெண்ணைப் பார்த்தேன், அவளும் பார்ப்பது போல் தோன்றியது, “ஆகா! சம் ஆப் தெ திங்ஸ் ஆர் பெட்டெர் தென் எனிதிங்”…

அவள் கண்களைத் துடைத்துக் கொண்டாள், இது தான் முதல் சமிக்கை. ஒரு பெண் ஒரு ஆண் தன்னைப் பார்ப்பதைத் தெரிந்து கொண்டால், முதலில் கண்களில் உள்ள பூலையைத் துடைப்பாள், பின்பு உதடுகளை நாக்கினால் ஈரம் ஆக்குவாள், இரண்டும் சரியாக நடந்தன. அடுத்து ஆடைகளை ஒழுங்கு படுத்தினாள். என்னைத் தவறாக நினைத்துக் கொண்டாள் போலும், உண்மையில் எனது பார்வை வேறு எங்கும் செல்லவில்லை. என்னுடைய மகளும் நாளை என் போன்ற இச்சைமிகு ஆடவர் முன் இதையே தான் செய்வாள் என்ற எண்ணம் உதிக்க சிறிது குற்ற உணர்வு ஏற்பட்டது.

அடுத்த ஐந்து நிமிடங்கள் அவள் என்னைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. கிழிந்த ரூபாய் நோட்டினை வேறு வேறு கடைகளில் கொடுத்துச் செலுத்த முயற்சிப்பது போல் வேறு ஒரு அழகான பெண்ணைத் தேடி, எனது  பார்வையை இரயில் முழுதும் செலுத்திக் கொண்டே இருக்கிறேன். சிக்மென்ட் பிராய்டை அறிந்தவர்கள் என்னை ப்ராடு என்று சொல்ல வாய்ப்பில்லை.

காலையிலிருந்து மூன்று முறை தேநீர் அருந்தியிருக்கிறேன், கழிவறைக் கதவிலோ, சன்னலிலோ சந்து இல்லாத  ஆறாம் எண் பெட்டியின் கழிவறையில், மூன்று சிகெரட் பிடித்து முடித்திருக்கிறேன். இரயில் பயணம் எனக்கு மிகவும் சவுகரியமாக இருக்க இது தான் மூல காரணம்.

டிக்கெட் பரிசோதகர் வந்து கொண்டிருக்கிறார், டிக்கெட் எடுத்துதான் பயணிக்கிறேன், இருந்தாலும் மனம் பட படக்கிறது, அதிகார வர்க்க மனிதர்களைக் கண்டாலே மனதில் ஒருவிதக் கலக்கம் ஏற்பட என்ன காரணமாக இருக்கும்?, அவர்கள் எங்கே நம் மீது அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவார்களோ என்ற அச்சமாகத் தான் இருக்கும்.

முன் பதிவு செய்ததற்கான குறுஞ்செய்தியைக் காட்டினேன், “ஐ டி”என்றார். ஆதார் அட்டையைக் காட்டினேன்.முன் பதிவு செய்யும்போது இன்சூரன்ஸ் என்று இருபத்தைந்து பைசா பிடிக்கலாமா? என்ற கேள்வி வரும்போது அந்தப் பொத்தானை அமுக்கி, வேண்டாம் என்று சொல்லும் வசதி ஏன் இந்தியன் இரயில்வே வலைதளத்தில் வேலை செய்யவில்லை என்று கேட்கலாம் என்று தோன்றியது. ”வேலை செய்யவில்லை என்றால், நேரில் டிக்கெட் கவுன்ட்டர் சென்று வரிசையில் நின்று முன் பதிவு செய்து கொள்ள வேண்டியது தானே?” என்று பதில் கூறும் டிஜிட்டல் இந்தியாவின் ஒரு அதிகார அங்கம் என்பதால், அடுத்தத் தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என்று அமைதியாக அமர்ந்து கொண்டேன்.

எனது அருகில் அமர்ந்திருந்த பெண்ணும் டிக்கெட்டைக் காட்டினாள். இங்கு அமரக் கூடாது, அடுத்த ஸ்டேஷனில் எழுந்து முன்பு சென்று ஜெனெரல் கம்பார்ட்மென்டில் ஏறிக் கொள்ளுமாறு கூறினார். வாக்கு வாதம் ஆரம்பம் ஆனது, அவள் இருக்கை கேட்டாள், அவர் இரு கையையும் விரித்து இல்லை என்றார். யார் பக்கம் நியாயம் என்று யாருக்கும் புரியவில்லை. அபராதம் விதிப்பேன் என்று மிரட்ட அமைதியாக எழுந்து கழிவறை அருகே சென்று நின்றாள். அங்கே ஒருவன் செருப்பைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்திலேயே கால் வலியை உணர்ந்தாலும், கீழே அமர மனமில்லாமல் ஏக்கத்துடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

எனது இருக்கையின் எதிரில் ஒரு குட்டிப் பெண், அவளுக்கு டிக்கெட் கண்டிப்பாக எடுத்திருக்க வாய்ப்பில்லை. அப்பா, அம்மா மற்றும் பாட்டியுடன் பயணிக்கும் அந்த இலவச இணைப்பு, சன்னல் அருகே அமர வேண்டும் என்று அவளது பாட்டியிடம் கேட்டு நச்சரித்துக் கொண்டே இருந்தாள்..

முதலில் எனக்கு எரிச்சலாகவே தோன்றினாள். காலை நீட்டினாள், கைகளை நீட்டினாள், அவளது செருப்பு எனது உடையில் பட்டு அழுக்கு ஆனது. பாட்டி அதட்டினாள்.

எழுந்து சென்று கதவருகே நின்றேன், தனது மகளும் அரசாங்க உத்தியோகம்தான் பார்ப்பதாகவும், ஆகையால் அரசு மற்றும் சட்டம் எல்லாம் தனக்கும் தெரியும்,” இவனுக்கெல்லாம் நல்லசாவு வராது” என்று டிக்கெட் பரிசோதகரைத் திட்டிக் கொண்டிருந்தாள் எழுப்பி விடப்பட்ட பெண்.

அந்தச் சத்தத்திலும் செருப்பை நன்றாக தலைக்கு வைத்து தடங்கலின்றி உறங்கிக் கொண்டிருக்கும் அவனைப் பார்த்து, தண்டவாளத்தில் தலை வைத்துப் படுக்கச் சொன்னாலும் கவலையில்லாமல் படுத்துறங்குவான் போல, செருப்பாவது? கழிவறையாவது?. கொடுத்து வைத்தவன், என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

கடமையைச் செய்தால் நல்ல சாவு வராது என்று தெரிந்து கொண்டு மீண்டும் வந்து அமர்ந்தேன். மொபைல் ஒலித்தது,

”எத்தனை மணிக்கு ரீச்ஆவே, மூணு மணிக்குள்ளே வந்திட்டாப்பரவாயில்ல…எடுத்திரலாம்”, மாமாவிடம் என்ன சொல்வது?,

“நான் ஒண்ணும் ரயில ஓட்டல, வந்திர்றேன்”.

அது கிட்டதிட்ட பத்தாவது முறை வந்த அழைப்பு. எனது ஊரில் இறந்த பிறகு பிணத்தை எடுக்கும் வரை யாரும் எந்த வேலையும் செய்யக் கூடாது, அதனால் அனைவரும் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உனது வருகைக்காக இந்த ஊரே காத்திருக்க வேண்டும் ,அவ்வளவு பெரிய ஆளாக நீ வர வேண்டும்  என்ற பாட்டியின் ஆசையை அன்று நான் நிறைவேற்றி விட்டேன்.

இன்னும் பூரி, வடை, பொங்கல் விற்றுக் கொண்டிருக்கிறார்கள், தேநீர் அதிகம் குடித்ததால் பசிக்கவில்லை. மொபைல் போனை நோண்டிக் கொண்டிருக்கிறேன். இரண்டு வேளை உணவுக்குப் பதில் இரண்டு ஜி பி டேட்டாவை நானும் தின்று பசியாறப் பழகியிருந்தேன்.

”கேம்இருக்கா”,என்றாள் இலவச இணைப்பு. திரும்பிப் பார்த்தேன், பதில் கூறவில்லை.

”டப்பாபோன்”,என்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

”எங்கப்பா போன்ல எல்லாம் நிறைய கேம்ஸ் இருக்குத் தெரியுமா?“, என்றாள்.

பின்பு எதற்கு என்னிடம் கேட்கிறாய்? என்று கேட்பதுக்கு முன்பே “ஆனா..தர மாட்டார், கேம் இருக்கிற டப்பா போன்”, என்று புன்னகைத்தாள்.

மொபைல் ,கம்ப்யூட்டர் எல்லாம் வாங்கிக் கொடுத்தால் குழந்தைகள் கெட்டுப் போய் விடும், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் மட்டும் படிக்க வையுங்கள், முடித்து விட்டு பக்கோடா விற்கட்டும்.

எப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுங்கள், என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்காதீர்கள். உங்களுக்குத் தெரியாததெல்லாம் தவறானதாகவே இருக்கும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். மதிப்பெண்களில் மூழ்கி இறந்து கொண்டிருக்கும் குழந்தைகளைத் தவறுகள் காப்பாற்றும்படி வேண்டிக் கொள்கிறேன். உனக்கு என்ன தகுதி இருக்கிறது?,இதனைக் கூற என்று கேட்காதீர்கள் ,நீங்களும் நானும் மனிதர்கள் செய்த தவறுகளின் பிம்பங்கள் தான். இது எனது தந்தை மொபைல் வாங்கித் தர முடியாது என்று கூறியபோது எனக்குள் நானே பேசிக் கொண்டது, எனது தந்தைக்கே கேட்கவில்லை. இந்த இரயில் சத்தத்தில் பாவம் அந்தப் பெண்ணின் தந்தைக்கு எப்படிக் கேட்கும்?.

மீண்டும் மொபைல் ஒலித்தது,இம்முறை நண்பன்,

“அவசரம்னா எடுத்து எரிஞ்சிட்டுப் போயி வேலையப் பாக்கச் சொல்லு, சும்மா சும்மா போன் அடிக்காதீங்கனு” கத்தினேன்.

”இப்ப எல்லாம் முன்ன மாதிரி எழவுக்குக் கூட்டம் வர்றது இல்ல, சீக்கிரம் எடுத்துட்டு நைட்டே கறிவிருந்து போட்ர மாதிரி இருந்தாதான் நாலுபேரு வர்றாங்க, அதனால தான்“,என்றான்.

அவனது அப்பா இறந்ததிற்கு சாவகாசமாக ஒரு மாதம் கழித்து நான் சென்று துக்கம் விசாரித்தது நினைவுக்கு வந்தது. இலவச இணைப்பு என்னைப் பார்த்துச் சிரித்தாள். எனக்கு அசிங்கமாக இருந்தது.

கல்வி, வேலை, குடும்ப சூழ்நிலை, வயது, விடுப்பு, வெளியூர் பயணம் என்று ஏதேதோ காரணங்கள் கூறி உள்ளூர் மற்றும் உறவினர்களது இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ளாத என்னை விட, அதோ! கறி சோற்றிற்காக எனது பாட்டியின் பிணத்தருகே நின்று அழுவது போல் நடித்துக் கொண்டிருப்பார்களே!, அவர்கள் எவ்வளவோ மேல்.

“எந்த ஸ்டாண்டர்ட் படிக்கிற”,

”பஸ்ட்ஸ்டான்டர்ட்”,

“எந்த ஸ்கூல்”,

எதோ ஒரு வித்யாலயா என்று கூறினாள்.

”தமிழ் சப்ஜெட் உண்டா”,

”ம் ..மாலதிமிஸ்”,

பரவாயில்லை பாரதி வடிவில் மாலதி, வேறு என்ன பாடங்கள் உண்டு என்று கேட்டேன்,

”இங்கிலீஷ், மேத்ஸ்,அப்புறம் ஈவிஎஸ்” என்றாள்.

”ஹிந்தி இருக்கா?”

“இருக்கு”.

நல்லது நீ பயப்படாமல் இருக்கலாம். பின் அனைத்துப் பாடங்களையும் எனக்குப் பயிற்றுவிக்க ஆரம்பித்தாள். அவளது குடும்பம் அதைக் கவனிப்பதை அறிந்து, நானும் சிலவற்றைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.

அவள் நிறுத்துவதாகத் தெரியவில்லை, லட்டு போன்ற இனிப்பு ஒன்றை அவளது அம்மா வழங்கினாள், எனக்கல்ல, அவளுக்கு. தப்பித்தோம் என்று எழுந்து மீண்டும் கதவருகே சென்று நின்றேன். அவளும் எழுந்து அங்கே வர முயற்சி செய்தாள், குடும்பம் தடுத்ததால் அமர்ந்து என்னை மீண்டும் இருக்கைக்கு வருமாறு சைகை செய்தாள்.

அப்போது பரிசோதகரால் எழுப்பி விடப்பட்ட பெண் அமர்ந்திருந்தாள், வண்டி அதன் பிறகு நான்கைந்து ஸ்டேஷன்களில் நின்றிருந்தும் அவள் இறங்கி ஜெனெரல் கம்பார்ட்மென்ட் செல்லவில்லை.செருப்பில் தலை வைத்திருந்தவன் எங்கே இறங்கினான் என்று தெரியவில்லை.

மீண்டும் வந்து அமர்ந்து தண்ணீர் குடிக்க பாட்டிலைத் தேடினேன். அவள் வைத்திருந்தாள், இனி எழுந்து போகக் கூடாது என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் தண்ணீர் தந்தாள்.

”எங்கே போகிறாய்?” என்று கேட்டேன், நான் இறங்கும் இடத்திற்கு முந்தைய ஸ்டேஷன் பெயரைச் சொன்னாள்.

அரை மணி நேரத்திற்கு ஒரு தின்பொருள் விற்பனைக்கு வந்து கொண்டே இருந்தது, அதில் ரோஸ் மில்க்கைக் கண்டதும் குதூகலம் ஆனாள். அவளது பாட்டி சளி பிடித்து விடும், வேண்டாம் என்பது போல் கண்களிலே ஜாடை செய்தாள்.

ஏமாற்றத்துடன் நான் அவளைப் பார்த்தேன், எனக்கும் ரோஸ் மில்க் பிடிக்கும். அவள் முன்பு இனி வாங்கிக் குடிக்க முடியாது, சளி பிடிக்கலாம் அல்லது அவளது குடும்பத்திற்கு என்னைப் பிடிக்காமல் போகலாம்.

காதில் மெல்லமாக “வாங்கித்தர்றீங்களா” என்றாள், தரலாம்தான்.

வெளியில் வேற்று ஆட்கள் யார் எது கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிடக் கூடாது என்பது எனது மகளுக்கு நான் வழங்கிய அறிவுரை. நான் வேற்று ஆளாக அவளுக்குத் தெரியவே இல்லை, மீண்டும்,மீண்டும் என்னிடம் ரோஸ் மில்க் கேட்டுக் கொண்டே இருந்தாள். நான் நெளிவதைப் பார்த்துப் பாட்டியே வாங்கிக் கொடுத்து விட்டாள். எனக்கு வேண்டுமா? என்று விற்பவன் கூடக் கேட்கவில்லை.

ஒரு கை இல்லாது இன்னொரு கையில் வணக்கம் வைத்துப் பிச்சை கேட்டு ஒருவன் வந்தான், முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.

குழந்தையைக் கழுத்தில் தொட்டில் கட்டிச் சுமந்து கொண்டு ஒருத்தி வந்தாள், பிச்சை எடுக்க எந்த ஒரு தகுதியும் அவளிடம் இருப்பதாக எனக்குப் படவில்லை.

உடல் முழுதும் அழுக்குடன் அசுத்தமாகக் கையில் ஒரு துணியை வைத்து எல்லாப் பெட்டிகளையும் துடைத்துக் கொண்டு எனது இருக்கைக்கு ஒருவன் வந்தான், எங்கு அந்தத் துணி என் மீது பட்டு விடுமோ என்று கால்களை அணிந்திருந்த செருப்புடன் தூக்கிக் கொண்டேன், துடைத்து விட்டு கையேந்தினான். அரசு இருக்கிறது, இரயில்வேக்கு என்று ஒரு துறை, அதற்குப் பட்ஜெட், அமைச்சர், நாட்டின் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் இவர்கள் யாருக்கும் இல்லாத அக்கறை உனக்கு எதற்கு?, போடா..என்று கையைக் கட்டிக் கொண்டேன்.

இறுதியாக ஒரு மூதாட்டி வந்தாள், தானம் வழங்கும் பழக்கம் என்னிடம் எப்போதும் இருந்ததாகத் தெரியவில்லை, மிகவும் அருகில் வந்து மிரட்டும் நடையில் என்னிடம் தானம் பெற்ற சிலர் உண்டு. அன்று பத்து ரூபாய் என்னிடம் தானம் பெற்றாள் அந்த மூதாட்டி. குட்டிப் பெண் ஏன்? என்பது போல் செய்கையில் கேட்டாள். நான் எனது பாத்திரம் அறிந்து அன்று பிச்சை இட்டதாக நினைத்துக் கொண்டு, ஒன்றுமில்லை என்பது போல் தலையாட்டினேன், மீண்டும் சிரித்தாள்.

தராசு போன்று கீ செயின்களைக் கைகளில் ஏந்தி வந்து பொருள்கள் வைக்கும் இடத்திலுள்ள கம்பியில் ஒருத்தி மாட்டித் தொங்க விட்டாள், அதில் சோட்டா பீம் படம் பொதித்த ஒரு கீ செயின் வேண்டுமென்று, இம்முறை அப்பாவிடம் அவள் தொங்க ஆரம்பித்தாள். நல்லது நம்மிடம் கேட்கவில்லை. ரோஸ் மில்குக்கே வக்கில்லாதவன், சோட்டா பீமுக்கு எல்லாம் தாங்க மாட்டான், என்று நினைத்திருக்கலாம்.     ,

அடுத்து நீண்ட அவளது அரட்டையின் குறுக்கே மக்காச்சோளம், புத்தகங்கள், தைலம், சுண்டல், காலி பிளவர், சில்லி என்று விற்றுக் கொண்டிருந்த அனைவரும் அவளுக்கு வேலையில்லாதவர்கள் போன்றே தோன்றினர். நான் உட்பட, ஆனால் என்னை மட்டும் பிடித்திருக்கிறது, என்னிடம் அனைத்தையும் ஒப்புவித்துக் கொண்டிருக்கிறாள்.

பேச்சு ஒரு கட்டத்தில் சுவாரஸ்யமில்லாமல் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று, “ஆர் யூ ஸ்லீப்பிங்” என்று அவள் என்னிடம் கேட்டாதாக நினைத்து,

“ஆமா நான் நைட்டெல்லாம் தூங்கல..கொஞ்ச நேரம் தூங்கறேன் ப்ளீஸ் “என்றேன்.

”இல்ல இல்ல, ஆர்யூ முஸ்லிமான்னு கேட்டேன்”,என்றாள்.

என்ன பதில் கூறுவது என்று அதிர்ந்து ஒரு கனம் மவுனமாக இருந்தேன்.

மீண்டும் அதே கேள்வி ,

உன்னிடம் யார் இப்படிக் கேட்கச் சொன்னார்கள்.

அவள் திரும்பி வலது கை ஆள்காட்டி விரலை நீட்டினாள், நீட்டிய திசையில் சில மனிதர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்குப் பின்னால், இரயிலின் சன்னல் வழியாக உலகம் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.

அதன் பின் நான் எதுவும் பேசவில்லை, அவளும் பேசவில்லை. அவள் இறங்கும் இடத்தில் வண்டி நின்றபோதும் நான் எதுவும் பேசக்கூடாது என்றே நினைத்திருந்தேன். ஆனால் முடியவில்லை..

அவள் இறங்கும் முன்பு அவளிடம் கேட்டேன், “உனது பெயர் என்ன?”, ஏதோ சொன்னாள், என்காதில் எங்கே சென்றாலும் யார், என்னவென்று பார்த்துப் பழகு என்று சொல்லிக் கொடுத்த எனது பாட்டியின் பெயர் ஒலித்தது.

***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button