அடைக்கலம் தருவதும் மனம் லயிப்பதுமான என் வீடு – எம்.எம். நௌஷாத்
சிறுகதை | வாசகசாலை

1
தன்னைக் கவிதாயினி என்றழைக்கும்படி அவள் கேட்டுக் கொண்டாள். நான் ‘திருமதி கவிதாயினி’ என்றழைத்ததும் அவள் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருந்தாள். ‘ஆனால், வாஸ்தவத்தில் நான் கவிதாயினி அல்லள். எனக்கு கவிதை எழுத வராது. வாழ்க்கையில் ஒரேயொரு கவிதையையே நான் எழுதியிருக்கிறேன்’ என்று சொன்ன அவள் அந்தக் கவிதையை என்னிடம் காட்டினாள். கவிதையின் தலைப்பு ‘அடைக்கலம் தருவதும் மனம் லயிப்பதுமான என் வீடு’. ‘இந்தக் கவிதையை எழுதும் போது என்னுடைய வயது பதினெட்டு. அப்போது நான் அவனைக் காதலித்துக் கொண்டிருந்தேன். அவனிடம் இந்தக் கவிதையை நான் பல தடவைகள் வாசித்துக் காட்டிய போது அவன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு இந்தக் கவிதையின் படியே நாங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வோமென்று என்னிடம் வாக்குறுதியளித்தான். நான் நம்பினேன். ஏனெனில் என்னில் அவன் மூழ்கியிருந்தான்; அவனில் நான் மூழ்கியிருந்தேன்’.
சற்று நேர மௌனத்திற்குப் பின் ‘சில்வியா பிளாத்தை உங்களுக்குத் தெரியுமா?’என்று கேட்டாள் திருமதி கவிதாயினி.
‘என்னை மன்னிக்கவும். அண்டை வீட்டுக்காரர்களையே எனக்கு சரியாகத் தெரியாது. நானும் என்பாடுமென்றும் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.’
திருமதி கவிதாயினி க்ளுக்கென்று சிரித்து விட்டு ஓர் இளம் பெண்ணின் கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தை எனக்கு முன்னால் இருந்த தேநீர் மேசையில் வைத்தாள். ‘இந்தப் புகைப்படத்தில் உள்ளவள்தான் சில்வியா பிளாத் என்பவள். அவள் உங்கள் அண்டை வீட்டுக்காரியல்லள். சென்ற நூற்றாண்டில் அமெரிக்காவில் வாழ்ந்த மிகவும் பிரசித்த பெற்ற கவிதாயினி. நாவலாசிரியை, சிறுகதை எழுத்தாளர் என்றும் சொல்லலாம். என்றாலும் அவளுடைய வாழ்க்கை மோசமானதாக இருந்தது. கணவனின் குரூர நடத்தை காரணமாக மிகவும் மனவேதனையுடன் வாழ்ந்தாள். எந்தளவுக்கென்றால் அடிக்கடி ECT (Electro Convulsive Therapy) என்ற உள நோய்ச் சிகிச்சையும் எடுத்துக் கொண்டாள்’
‘அடக்கடவுளே அந்தளவு சித்திவதைகளை அனுபவித்தாளா?’
‘ஆமாம். சில்வியா பிளாத்தின் இந்தப் புகைப்படத்தை நன்றாக உற்றுப்பார்த்து விட்டு உங்கள் அபிப்பிராயத்தைச் சொல்லுங்கள். இந்தப் புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டதென்றால் அவளுடைய இருபத்தெட்டு வயதில் அவள் லண்டனிலுள்ள Chalcot என்ற இடத்தில் வசித்த போது’
‘மிகவும் வசீகரமான முகத்துடன் இருக்கிறாள். அவளுக்குத் தீட்சண்யமான ஞான ஒளி வீசும் கண்கள் இருக்கின்றன. எனினும் முகத்தில் மெல்லிய இழையாக சோகம் ஊடுபரவுகிறது’
‘துல்லியமாகச் சொன்னீர்கள்’ என்று என்னைப் பாராட்டிய திருமதி கவிதாயினி என் முகத்திற்கு மிகவும் நெருக்கமாக வந்து- அதாவது அவளுடைய மூச்சுக்காற்று என் கன்னத்தில் பட்டது. ‘இப்போது என் முகத்தையும் பாருங்கள். அவளைப் போல் நானும் சோகத்தில் மூழ்கியிருக்கிறேன் அல்லவா?’ என்றாள்.
அவள் மிகவும் நெருக்கத்தில் இருந்ததால் நான் ஒரு கணம் திக்குமுக்காடி விட்டேன். மனித உளவியலில் டிப்ளமோ செய்தவன் நான். திருமதி கவிதாயினி உண்மையையே உரைக்கிறாள். மனச் சஞ்சலத்தால் மூழ்கடிக்கப்பட்ட அவளது முகத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே, அவள் வாழ்க்கையில் திண்டாடிக் கொண்டிருக்கிறாள் என்று எவரும் கூறிவிடுவர்.
திருமதி கவிதாயினி மேலும் சொன்னாள். ‘அன்றைய தினம் 1963 பெப்ரவரி 11ந் திகதியாக இருந்தது. அப்போது அவளுடைய வயது முப்பது. அவள் தான் தெரிவு செய்த அறைக்குள் நுழைந்தாள். தூங்கிக் கொண்டிருக்கும் தன் பிள்ளைகளுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு துவாய்த் துணிகளாலும் நாடாக்களாலும் அறையை முற்றாகச் சீலிட்டாள். அதிகாலை சரியாக 4.30 மணிக்கு அவனுக்குள் (Oven) தன் தலையை நுழைத்து வாயுவை (Gas) முற்றாகத் திறந்து விட்டதும், கார்பன் ஓரொட்சைட்டு (CO) நச்சுப்பரவி அவள் இறந்து போனாள்.’
நான் திடுக்குற்றேன். ‘சில்வியா பிளாத் தற்கொலை செய்த சமாச்சாரத்தை எதற்காக என்னிடம் இப்போது கூறுகிறீர்கள்?’
‘எனக்கும் இப்போது வயது முப்பது. பெப்ரவரி பதினோராந் திகதிக்கு இன்னும் பத்து நாட்களே இருக்கின்றன. நானும் மனக்கிலேசத்தில் ஆழ்ந்திருக்கும் பெண். தற்கொலை செய்துவிடுவேனா என்று பயப்படுகிறேன்’
2
திருமதி கவிதாயினி தன்னுடைய கணவனைக் குறித்து ஒரு நீண்ட கதை சொன்னாள். அவள் சொன்னது அனைத்தும் நிஜமே. பில்லி, சூனியம், ஏவல் அல்லது வைப்பு.. இப்படி ஏதாவதொன்றின் மூலம் தன் கணவன் தன்னைக் கொன்றுவிடுவான் என்று அவள் அஞ்சினாள். ஏனெனில் அவனுடைய அலுமாரியில் நிறைய கறுப்பு மந்திரப் புத்தகங்களை அவன் ஒளித்து வைத்திருந்தான். காதலில் இருந்த போது கறுப்பு மந்திரத்தைப் பற்றி அவன் தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே என்பது அவளது ஆதங்கமாக இருந்தது.
மேலும் கிடைக்கின்ற ஓய்வு நேரங்களில் எல்லாம் வீட்டிற்கு பின்னால் இருக்கின்ற மயானத்திற்குப் போய் விடுவான். ‘இந்த மயானத்தைப் பற்றிக் கூட அவன் என்னிடம் ஒன்றுமே சொல்லவில்லை’ என்றாள் கவிதாயினி. ‘மூன்றாவது அவனுடைய தோற்றம் எனக்கு அச்சமூட்டுகிறது. உருண்ட நெற்றி, நீண்டு வளைந்த சப்பை மூக்கு, அகன்ற கூரிய கண்கள், நீண்டு வாரக்கூடிய தலைமயிர், அவலட்சணமான கன்னங்கள், பாரிய உதடுகள், துருத்தி நிற்கும் முன்பற்கள் அனைத்தையும் பார்க்கும்போது என் கணவன் சூனியக்காரன் போலவே இருக்கிறான்’
‘திருமதி கவிதாயினி, நீங்கள் அவனைக் காதலிக்கும் போது அவன் மிகவும் அழகாகவும், கம்பீரமாகவும் காட்சியளித்தான். உங்களுக்கிடையேயான நேசம் ஆழமாகவும் ஆத்மார்த்தமாகவும் இருந்தது. இப்போது கணவன் மனைவியாக வாழ்கிறீர்கள். ஆகவே, இந்த அற்ப விடயங்களைப் பொருட்படுத்த வேண்டாம்’ என்றேன் நான்.
அவள் கூறியபடிக்கு வீட்டிற்குப் பின்னால் விசாலமான ஓரிடத்தில் அமைந்திருந்த அவனுடைய குடும்ப மயானத்தில் மொத்தம் பதிமூன்று கல்லறைகள் இரண்டு வரிசைகளிலே காணப்பட்டன. ஒவ்வொரு கல்லறையிலும் பெயர், பிறந்த திகதி, இறக்கும் போது வயது போன்ற விபரங்களோடு அவர்களுடைய புகைப்படமும் பதிக்கப்பட்டிருந்தது. எல்லாக் கல்லறைகளிலும் இறுதியாக ஒரு வாசகத்தைக் கண்டேன். ‘என் ஆத்மாவை இழந்தேனே!’ என்ற வாக்கியம். அங்கேயுள்ள சீமெந்து வாங்கில் திருமதி கவிதாயினியின் கணவன் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு ஓரிரண்டு மணித்தியாலங்கள் ஆழந்த நிஷ்டையில் இருப்பான். திருமணம் முடிந்த முதல் நாளிலிருந்தே அவனுடைய எல்லா பிறழ்வு நடவடிக்கைகளையும் திருமதி கவிதாயினி அவதானித்து வந்தாள். ‘என் மனதில் அச்சமும் பதற்றமும் முளைவிட்டு வளர ஆரம்பித்தது’ என்றாள் திருமதி கவிதாயினி.
‘நிச்சயமாக என் கணவன் அங்கு அடக்கப்பட்டுள்ள அத்தனை பேரையும் கொன்றிருக்கிறான். அதுவும் கறுப்பு மந்திரத்தைப் பயன்படுத்தி. இப்போது அவனுடைய மனச்சாட்சி அவனை உறுத்துகிறது. என்னையும் கொல்வதற்காகத்தான் நான் சொல்லியும் கேட்காமல் என்னை இந்த வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறான்’
‘வீணாகப் பதற்றமடைய வேண்டாம் திருமதி கவிதாயினி. நீங்கள் அவனுடைய புது மனைவி. திருமணம் முடித்து ஒரு வருடம் கூட ஆகவில்லை. உங்களுக்கிடையில் பாரிய கருத்து வேறுபாடுகளும் இல்லை. உங்களைக் கொல்ல வேண்டி உந்தலும் இல்லை’ என்றேன் நான்.
‘என் ஆத்மாவை இழந்தேனே என்பதன் அர்த்தம் என்ன? மிகவும் நேசத்துக்குரியவர்களை இழந்து விட்டேனே என்பதுதானே.எல்லாக் கல்லறைகளிலும் அதே வாசகத்தையே எழுதி வைத்திருக்கிறான். கொல்ல வேண்டுமென்ற உந்துதல் அவனுக்கு எப்படியோ உண்டாகி விடுகிறது; கொன்று விடுகிறான். அப்பால் பிராயச்சித்தம் தேடுவதற்காக இந்த வாசகத்தைப் பொறித்து விடுகிறான்’
‘ஜாஸ்தியான உங்கள் கற்பனையை நான் மெச்சுகிறேன். உங்களால் சினிமாப் படங்களுக்கு கதை எழுத முடியும்’
அதற்குப் பதிலளித்த திருமதி கவிதாயினி சொன்னாள். ‘இது நிஜம். கண் முன்னாலேயே சாட்சியங்கள் இருக்கின்றன. சாட்சிகள் தான் இல்லை. சூனியக்காரர்களுக்கு சாட்சிகள் தேவைப்படுவதில்லை. கல்லறைகள் ஒவ்வொன்றையும் மீண்டும் ஒரு தடவை பாருங்கள். கொல்லப்பட்ட பதின்மூன்று பேரும் 20 இலிருந்து 25 வயது வரையான இளம் பெண்களாக இருக்கிறார்கள். இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?’
‘நீங்கள் கூறுவது உண்மையே’
‘பதினான்காவது கல்லறை பாதியளவில் கட்டப்பட்டு திறந்து விடப்பட்டிருக்கிறது. அந்தப் புதைகுழிக்குள் தான் என் கணவன் என்னைக் கொன்று புதைக்கப் போகிறான்’
‘ஆச்சரியமாக இருக்கிறதே, சுவாரஷியமாகக் கதை சொல்லுகிறீர்கள்’
‘அவன் ஒரு மன நோயாளி என்று நான் புரிந்து கொள்கிறேன். நான் அவனுடைய மூன்றாவது மனைவி. மற்ற இருவருக்கும் என்ன நடந்தது.. அவர்கள் எப்படி காணாமல் போனார்கள்? அவனைக் கண்ட மாத்திரத்திலேயே அண்டை வீட்டார்கள் குசுகுசுப்பதன் காரணம் என்ன? எல்லாக் கேள்விகளுக்கும் விடை இந்தக் கல்லறைகளுக்குள் இருக்கின்றன’ என்று பேசிக் கொண்டே போனாள் திருமதி கவிதாயினி. ‘நீங்கள் நம்பவில்லையல்லவா, காட்டுகிறேன் வாருங்கள் என் படுக்கையறைக்கு’ என்றாள் அவள். படுக்கையறையிலிருந்த அவனுடைய அலுமாரிக்குள் இருந்து அவள் பதின்மூன்று இளம் பெண்களின் புகைப்படங்களை எடுத்துக் காட்டினாள். கல்லறைக்குள் அடக்கப்பட்டிருப்பவர்களின் புகைப்படங்கள். பதின்மூன்று புகைப்படங்களுக்குப் பின்னாலும் தீப்பிழம்பொன்றின் சித்திரம் இருந்தது. ‘தீப்பிழம்பு என்பதன் பொருள் தீயைக் கக்கும் துப்பாக்கியாகும். ஆகவே, இவர்களைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று புதைத்திருக்கவும் சாத்தியம் இருக்கிறது. பதினான்காவது புகைப்படமாக என்னுடைய புகைப்படத்தை வைத்திருக்கிறான். அந்தப் புகைப்படத்தின் பின்னால் ரோஜா மலரின் சித்திரம் இருக்கிறது. அதாவது விரைவில் உன்னுடைய கல்லறையில் ரோஜாப்பூவை வைத்துவிடுவேன் என்று குறிப்பால் உணர்த்துகிறான்’ என்று விளக்கமளித்தாள் திருமதி கவிதாயினி.
அடுத்ததாக திருமதி கவிதாயினி கறுப்பு மந்திரப் புத்தகங்களின் தொகுதியொன்றை என்னிடம் காட்டினாள். Joseph Peterson என்பவர் எழுதிய The Sixth and Seventh Books of Moses என்றொரு புத்தகம். Gerald Gardener என்பவர் எழுதிய Book of Shadows என்றொரு புத்தகம். Natasha Helvin என்பவர் எழுதிய Russian Black Magic என்ற புத்தகம். மேலும் கறுப்பு அட்டைப் படங்களுடனான எண்ணிலடங்காப் புத்தகங்கள் அலமாரியின் மூன்றாம் தட்டில் அடுக்கப்பட்டிருந்தன.
நான் ஒரு புத்தகத்தை திறந்து வாசிக்க முயற்சித்த உடனேயே என் கையிலிருந்த புத்தகத்தைப் பறித்தெடுத்து திருமதி கவிதாயினி என்னை எச்சரித்தாள். ‘இவைகளை வாசிக்காதீர்கள். சூனியக்காரிகள் அரூபமான உலகத்திற்கு உங்களை இழுத்துச் சென்று விடுவார்கள்’
நான் வியப்புடன், ‘சூனியம் போன்றவைகள் கட்டுக்கதைகள் அல்லவா? நீயுமா நம்புகிறாய்?’ என்று கேட்டேன்.
‘நம்புபவர்களுக்கு சூனியம் உண்டு. நம்பாதவர்களுக்கு இல்லை’ என்றாள் திருமதி கவிதாயினி.
‘திருமதி கவிதாயினி உங்களைக் குறித்து நான் ஆச்சரியமடைகிறேன். சர்வதேச புலனாய்வு நிறுவனமொன்றில் பணியாற்றக் கூடிய அத்தனை தகுதிகளும் உங்களுக்கு இருக்கின்றன’ அவள் மீண்டும் க்ளுக்கென்று சிரித்தாள்.
‘நீங்கள் காதலித்த மனிதனுடன் இவ்வளவு காலமும் வாழ்ந்து வருகிறீர்கள். இந்தச் சமாச்சாரங்கள் குறித்து அவனுடன் நீங்கள் ஏன் உரையாடாமல் இருக்கிறீர்கள்? புது மனைவி என்பதால் அவன் எல்லா விஷயங்களையும் ஒளிவு மறைவு இன்றி கக்கி விடுவான் அல்லவா?’ என்று கேட்டேன் நான். திருமதி கவிதாயினி தேம்பினாள்.
‘நான் வாழ்க்கையில் செய்த மிகப் பெரிய தவறு அவனைத் திருமணம் முடித்தது என்று நினைக்கிறேன். இந்தக் கல்லறை விஷயங்களைப் பேச ஆரம்பித்தாலே அவன் பைத்தியம் பீடித்தவன் மாதிரி ஆகி விடுகிறான்; அங்குமிங்கும் ஓடுகிறான். பற்களை நறநறவென்று கடிக்கிறான். ஒரு தடவை நிலைமை முற்றி என் கழுத்தை நெரிப்பதற்காக மிகவும் அருகில் வந்துவிட்டான். கடவுள்தான் என்னைக் காப்பாற்றினார்’
3
நாலைந்து மாதங்கள் கழித்து திருமதி கவிதாயினி திடீரெனக் காணாமல் போனாள். எங்கு போவதனாலும் குறைந்தபட்சம் எனக்கு ஓர் அழைப்பு எடுத்துவிட்டுச் செல்வாள். ஒருவாரமாக எந்தத் தகவலும் இல்லை. அலைபேசி இணைப்பும் துண்டிக்கப்பட்டிருந்தது. நான் மறக்க நினைத்தாலும் கண் முன்னால் உடனடியாகவே மயானத்திலிருந்த பதினான்காவது கல்லறை தோன்றிற்று. திருமதி கவிதாயினி காலகாலமாக எதிர்பார்த்திருந்த பெருந்துயரம் நிகழ்ந்து அவளுடைய கணவன் அவளைக் கொன்று புதைந்து விட்டானோ?
தலைமை மேலாளர் என்னை அழைத்தார். ‘நீலத்திமிங்கிலம்’ என்ற தொலைக்காட்சி நிறுவனத்தில் நாங்களிருவரும் பணியாற்றி வந்தோம். அவள் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமான செய்தி வாசிப்பவளாக இருந்தாள். அதற்குக் காரணம் அவளின் குரலில் இருந்த அற்புதமான வசீகரம். என்னைத் தவிர வேறு யாருடனும் அவள் பேசுவதோ பழகுவதோ இல்லை. காலை வந்தனம் சொன்னால் மாத்திரம் பதில் கூறுவாள். சிற்றுண்டிச்சாலையிலும் நாங்களிருவரும் மாத்திரமே தொடர்ந்து ஒரே மேசையிலிருந்து தேநீர் அருந்துவோம். சிற்றுண்டிகளும் நானும் அவளும் விரும்புவது ஒன்றே. ஒரே பேருந்து தரிப்பிடத்திலிருந்து ஒரே பேருந்தில் ஏறுவோம். நான் அவளின் இடத்திலிருந்து ஐந்து கிலோமீற்றர் தள்ளி இறங்குவேன்.
ஒரேயொரு தடவை அவளைச் சந்திப்பதற்காக அவளுடைய கிராமத்திற்குச் சென்றிருந்தேன். அது அவளுடைய தந்தை மரணித்த போது. என்னை மாத்திரமே அவள் இறுதிச் சடங்கிற்கு அழைத்திருந்தாள். இத்தனை நெருக்கமாகப் பழகியும் அவள் தன்னுடைய திருமணத்திற்கு என்னை அழைக்கவில்லை. தனக்கு திருமணம் நடக்கப் போகிறது என்று கூடச் சொல்லவில்லை. இரண்டு வாரங்கள் வரமாட்டேன் என்று மாத்திரமே கூறியிருந்தாள். தேனிலவை முடித்து விட்டு இரண்டு வாரங்கள் கழித்து வந்த அவள் மிகவும் சகஜமாக, ‘தெரியுமா உங்களுக்கு.. நான் இப்போது திருமணம் முடித்த மணப்பெண்’ என்று தன்னுடைய திருமண மோதிரத்தைக் காட்டினாள். என் முகம் உடனே வாடிவிட்டது. நான் மனத்தாங்கலுக்குள்ளானேன். இதைப்பற்றி அவளிடம் கேட்க முடியாது அப்படியான கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்பாத மனமூடி வகையறா அவள். திருமண வாழ்வு சிக்கலாகியதும் என்னோடு மனந்திறந்து பேச ஆரம்பித்து விட்டாள். அதுவும் சடுதியாக நின்றதும் கவலை என்னைச் சூழ்ந்து கொண்டது. உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் கேபிள் கார் திடீரென்று அறுந்து விழுந்தது போல் திருமதி கவிதாயினி அவளுடைய கணவனின் வீட்டிலிருந்தும் அவளுடைய கிராம வீட்டிலிருந்தும் காணாமல் போயிருக்கிறாள்.
மேலாளர் என்னை அழைத்து திருமதி கவிதாயினி காணாமல் போய் விட்டாள் என்று சொன்னதும் நான் முதலில் அவளுடைய கணவனின் வீட்டுக்குச் சென்றேன். நுழைவாயில் மூடப்பட்டு வீட்டுக்கு வெளியே பூட்டு போடப்பட்டிருந்தது. பல தடவைகள் அழைப்பு மணியை அழுத்தியும் பதிலேதும் இல்லை. அயலவர்களும் கையை விரித்தார்கள். உள்ளூர் பொலீஸ் நிலையத்திலோ அண்மையில் எந்தக் குற்றச்செயல்களும் இந்தப் பிரதேசத்திலே அறிக்கையிடப்படவில்லை என்று சொல்லி என்னுடைய முறைப்பாட்டை ஏற்க மறுத்தார்கள்.
4
‘தான் கவிதாயினி இல்லை என்று அவள் சொன்னாள் அல்லவா? அது முற்றிலும் பொய்யான கூற்றாகும். அவள் பத்து வயதிலேயே கவிதை எழுதியவள்’ என்று சொன்னாள் திருமதி கவிதாயினியின் தாய். அவளுடைய தாய் சொன்னதைப் போலவே மூச்சுத் திணறும் அளவிற்கு கவிதாயினியின் அறையில் கவிதைகள் நிறைந்து கிடந்தன. துண்டுக் கடுதாசிகளையும், புத்தக அட்டைகளையும், சுவர்களையும், கண்ணாடித் தட்டுக்களையும், கதவுகளையும், தேநீர்க் குவளைகளையும் காட்டினாள் தாய். அனைத்திலும் கவிதைகள். கறுப்பு எழுத்துக்களாகவும், வர்ண எழுத்துக்களாகவும், அலங்கார எழுத்துக்களாகவும்.
‘ஆச்சரியமாக இருக்கிறதே. அவள் என்னிடம் ஒரேயொரு கவிதையைத் தான் காட்டினாள். அடைக்கலம் தருவதும் மனம் லயிப்பதும் என் வீடு என்ற கவிதை மாத்திரமே’ என்றேன் நான்.
‘அது அவளுக்கு மிக முக்கிய கவிதையாக இருந்தது. அந்தக் கவிதையைத் தன்வசம் வைத்துக் கொண்டு அவள் பைத்தியக்காரி போல் அலைந்தாள். வாழ்க்கை முழுவதும் மோசமான சித்திரவதைகளை அனுபவித்த பெண்ணாக இருந்த அவள், இந்தக் கவிதை மூலமாக தனக்கு விடிவு காலம் வருமென்று நம்பினாள்’
‘நீங்கள் சொல்லுவதை என்னால் நம்ப முடியவில்லையே’
‘நான் சொல்லுவதை யாருமே நம்பமாட்டார்கள். அவளுடைய பள்ளிப் பருவத்திலே அவளைக் காட்டுமிராண்டித்தனமாக நடத்திய ஒரு மனிதன் இருந்தான். அதுதான் அவளுடைய தந்தை. அதாவது என்னுடைய கணவன். தினசரி குடித்து விட்டு வந்து என்னை அடிப்பது அவனுடைய நாளாந்த கடமைகளில் ஒன்றாக இருந்தது. இரத்த விளாறாகும் வரை அடிப்பான். கவிதாயினி படிப்புச் செலவுக்குப் பணம் கேட்டால் அவளுக்கும் அவ்வாறே அடிப்பான். எங்களுக்கென்று அவள் மட்டுமே இருந்தாள். தான் ஒரு சட்டத்தரணியாக வரவேண்டுமென்றும் குற்றவியல் சட்டத்தில் முதுமானிக் கற்கை நெறியைத் தொடர வேண்டுமென்றும் அவள் கனவு கண்டு கொண்டிருந்தாள். அவளுடைய எல்லாக் கனவுகளையும் என் கணவன் சிதைத்தான். அவளைப் பாடசாலை செல்ல விடாமல் தடுத்தான். பல தடவைகள் அவளுடைய பாடக்குறிப்புகளை எரித்திருக்கிறான். அவள் தன்னுடைய பிள்ளையில்லை யாருக்கோ பிறந்தது என்பதே இறக்கும் வரை அவனுடைய நிலைப்பாடாக இருந்தது.
ஒரு நாள் என்னுடைய கணவன் ஓர் இளம்பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்து, ‘நான் அவளைத் திருமணம் செய்யப் போகிறேன்’ என்று நாக்கூசாமல் சொன்னான். அவர் மணமகனுக்குரிய ஆடைகளையும் அவள் மணமகளுக்குரிய அலங்கார ஜோடனைகளோடும் காணப்பட்டாள். கவிதாயினி அவ்விளம்பெண்ணைத் தள்ளி விழுத்த முயன்றாள். என் கணவர் பளாரென்று அவளுடைய கன்னத்தில் அறைந்தான். அவளின் பல் ஈறுகளிலிருந்து இரத்தம் கசிந்தது. இரண்டு மூன்று நாட்கள் அவளால் சாப்பிடவும் முடியவில்லை. நீர் அருந்தவும் முடியவில்லை. அன்றைய தினத்திலிருந்து கவிதாயினி தந்தையை முற்றாக வெறுத்தாள். மேலும் கவிதாயினி கடுமையான மன உளைச்சலால் அவதிப்பட்டாள். அவள் ஒன்றையுமே வெளிக்காட்டுவதில்லை. மிகவும் அரிதாகவே அழுவாள்; ஆனால், அடிக்கடி தேம்புவாள். உங்களுக்குத் தெரியும். அவள் ஒரு மூடிவகையறா. மனதில் இருக்கும் அலைச்சல்களையெல்லாம் கவிதையாக எழுதிக் கொண்டிருப்பாள். கணவன்மார்கள் குறித்து மிகவும் கறாரான நிலைப்பாட்டை அவள் கொண்டிருந்தாள். அதன் அடியொற்றி எழுந்ததே அவளின் அந்த முக்கியமான கவிதை.
அந்தக் கவிதையை நீங்கள் ஆழமாக வாசித்து அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டீர்களென்றால் அதுதான் அவளுடைய வாழ்க்கை. தனக்கு வர வேண்டிய வாழ்க்கையின் எல்லா அர்த்தங்களையும் அவள் மிகவும் அழகாக எழுதியிருக்கிறாள்.
Possessive type என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கணவன் தனக்கு மட்டுமே உரித்தானவன் என்ற வெறித்தனமான கொள்கையை அவள் வரித்திருந்தாள். என்னுடைய வாழ்க்கை தோல்வியடைந்ததிற்கு காரணம் கணவனை கட்டாக்காலியாக சுதந்திரமாக அலைய விட்டதால்தான் என்று கவிதாயினி என்னைக் குற்றஞ்சாட்டினாள். என்னுடைய கணவன் மரணித்த போது மரணச் சடங்கிற்கு உங்களை அழைத்திருந்தாள் அல்லவா? அதற்கும் காரணம் இருந்தது. அவள் தன் தந்தையின் மரணத்தைக் கொண்டாட விரும்பினாள். உங்களைத் தவிர அவளுக்கு வேறு நண்பர்கள் இருக்கவில்லை. அன்றைய தினத்தில் உங்களுக்களிக்கப்பட்ட விருந்துபசாரத்தை நீங்கள் நன்றாக ஞாபகம் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒரு முழு ஆட்டுக் கிடாயை அறுத்து மசாலா சேர்த்து அரேபிய சமையல் பாக முறையில் அவள் சமைத்திருந்தாள். துக்கம் கொண்டாடும் இடத்தில் இப்படியொரு திருமண விருந்தை நீங்கள் எதிர்பார்க்கவில்லை என்பதை உங்கள் ஆச்சரியமான முகக்குறிப்பிலிருந்து நான் புரிந்துகொண்டேன்’
‘நீங்கள் சொல்வதை நான் ஒப்புக் கொள்கிறேன்’ என்றேன் நான்.
‘திருமதி கவிதாயினி அங்கும் இல்லை இங்கும் இல்லை. நீங்கள் அவளைத் தேட முயற்சிக்கவில்லையா?’
‘இப்படித்தான் அலைபேசி இணைப்பையும் துண்டித்து விட்டு திடீர் திடீரென்று மாயமாக மறைந்து விடுவாள். எங்கே போகிறாள் என்ன செய்கிறாள் என்று யாருக்கும் தெரியாது. கேள்வி கேட்டால் எரிந்து விழுவாள். இரண்டு மூன்று வாரங்கள் கழித்து தானாக திரும்பி வருவாள்’ என்றாள் கவிதாயினியின் தாய்.
5
பல வருடங்களுக்குப் பிறகு முத்துச் சிம்மாசனம் (Pearl Throne) என்ற பிரசித்தி பெற்ற திருமண மண்டபமொன்றில் ஆஜானுபாகுவான ஒரு மனிதனை நான் சந்தித்தேன். அவனது உதடுகள் பருத்துத் தொங்கின. முகத்தில் தழும்புகள் இருந்தன. நாசி நீண்டிருந்தது. அவலட்சணமாகத் தோற்றமளிக்கும் அவனில் கத்தரித்து செம்மைப்படுத்தப்படாத கண்ணிமைகளும் இருந்ததால் அவன் இன்னமும் அசிங்கமாக இருந்தான். என் கைகளை நட்புறவு முறையில் பற்றிக் கொண்ட அந்த மனிதன், ‘என் பெயர் கவிஞன். உங்கள் தோழி கவிதாயினியின் கணவன் நான்தான்’ என்றான்.
‘கடவுளே உங்களைச் சந்திப்பது எத்துணை பேரதிர்ச்சியான மகிழ்ச்சி’ என்றேன் நானும் கைலாகு கொடுத்து கைகளைப் பற்றியவாறே.
எனினும் மனிதிற்குள் ஒரு நெருடல். திருமதி கவிதாயினி ஒருமுறை அவனை வர்ணித்ததை விடவும் அவன் அசிங்கமாக இருக்கிறான். இவனைத்தானா அவள் காதலித்து திருமணம் செய்து கொண்டாள்?
‘நானும் என் நிஜமான கதையை உங்களிடம் சொல்வதற்காக நெடுங்காலம் எதிர்பார்த்திருந்தேன். ஆனால், நாம் சந்திக்கக்கூடிய இந்த இடம் மிகவும் மோசமாக இருக்கிறது’ என்றான் அந்த மனிதன்.
மிகவும் பாழடைந்து போய் இப்போது நாற்ற நெடியோடு காட்சியளிக்கும் இந்தத் திருமண மண்டபத்தில் தான் என் திருமணம் நடந்தது. சுமார் 1500 விருந்தாளிகள் ஒரே நேரத்தில் இங்கே அமர்ந்து போஜனம் எடுக்கலாம். சுற்றி வர நீர்வீழ்ச்சி, பறவைகளின் வருகை, இயற்கையின் சுகந்தம், ஓர்க்கிட் பூந்தோட்டம் உட்பட புகைப்படங்களுக்குப் பொருத்தமான நிறையக் காட்சியமைப்புகள் இருந்தன. இப்போது முத்துச் சிம்மாசனம் என்ற மண்டபத்தின் பெயர்ப்பலகை கூட இல்லை. நாங்கள் அதனை மிதித்துக் கொண்டு போகிறோம். சுவர்களிலே பிரமாண்டமான அழகுடன் காட்சியளித்த சுவரோவியங்கள் மங்கிப் போய்விட்டன. வர்ணப்பூச்சுகள் உரிந்தோ மறைந்தோ ஆகிவிட்டன. தளபாடங்கள் உடைந்தும் நொறுங்கியும் அங்குமிங்குமாக இருந்தன.
‘ஒரு காலத்தில் வசீகரமாகவும் கொண்டாட்டங்களுடனும் கூத்து கும்மாளங்களுடனும் பிரமாண்டமாகவும் தடல் புடலான திருமணங்களுடனும் ஆச்சரியத்துடன் நாம் ரசித்துக் கொண்டிருந்த முத்துச் சிம்மாசன திருமண மண்டபம் இப்படிப் பாழடைந்து போயிருப்பதன் காரணம் உங்களுக்குத் தெரியுமா?’
‘நீங்கள் இப்படிக் கேட்டது நல்லதாகப் போயிற்று. அந்தக் காரணத்தை நான் துல்லியமாக அறிவேன். என்னுடைய கதையை இந்த இடத்திலிருந்தே ஆரம்பிக்கவும் இலகுவாக இருக்கும்’ என்று சொன்ன கவிஞன் நிறம் மங்கி கிழிந்து போயிருந்த சோபாவொன்றில் அமர்ந்து கொண்டான். அவன் அமர்ந்த இருக்கை நான் பல வருடங்களுக்கு முன்பு மணமகனாக அமர்ந்த ஆசனமாகும். அருகிலிருந்த ஆசனத்தில் நான் அமர்ந்து கொண்டேன். அது மணமகள் அமர்ந்த ஆசனமாகும்.
‘என்னுடைய மிக நெருங்கிய நண்பனான ஒரு விமானிக்கு திருமணம் முடிந்து இரண்டாவது மாடியிலுள்ள விருந்தாளிகள் மண்டபத்திலிருந்து விருந்தாளிகள் வெளியேற இருந்த சமயத்திலே, களைக்கக் களைக்க ஓடிவந்த ஓர் இளைஞன் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க கூரையிலே தூக்கை மாட்டித் தற்கொலை செய்து கொணடான்’
‘இந்தத் திருமண மண்டபத்திலா அந்தத் தற்கொலை நிகழ்ச்சி நடந்தது?’
‘ஆமாம். இதே மண்டபத்தில் தான். இரண்டாம் மாடிக்கு ஏறிச் செல்லும் அலங்காரமான படிகளைப் பாருங்கள். இன்றும் அதன் வர்ணப்பூச்சுக்களும் லாவண்யமும் மாறாமல் இருக்கிறதல்லவா? அந்தப் படிகளால் தான் அந்த மனிதன் ஏறிச் சென்றான். ஏறிச் சென்றான் என்பதை விட தாவித்தாவி சென்றான் என்பதைக் கூறுவேன்’
‘கதை எனக்கு விளங்கி விட்டது. ஆகவே, தற்கொலை செய்தவனின் காதலிக்கு சற்று முன்தான் திருமணம் முடிந்தது என்று ஆரம்பித்து ஒரு கதை சொல்லப் போகிறீர்கள்’
‘நீங்கள் நினைப்பது போல் இல்லை. பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு போன்ற மிகச் சிறிய சம்பவம் பாரிய பிரளயம் ஒன்றை ஏற்படுத்தக் கூடும் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’
‘இல்லை’
‘இதனைப் பட்டாம் பூச்சி விளைவு என்று சொல்லுவார்கள். எல்லா மனிதர்களின் உடம்பிலும் யாராலும் கண்டுபிடிக்க முடியாத உணர்ச்சிப் பிழம்புகள் குமுறிக் கொண்டிருக்கும் ஒரு சிடுக்கு இருக்கிறது. அந்தச் சிடுக்கோடு யாரும் விளையாட நினைத்து சின்னி விரல் பட்டு விட்டாலே போதும். அவனுக்குப் பித்துப் பிடித்துவிடும். தற்கொலை செய்யும் அளவிற்கு சின்னாபின்னமாகப் போய் விடுவான். அதுதான் இங்கும் நடந்தது’
‘யாரும் அவனது தற்கொலையைத் தடுக்க முனையவில்லையா?’
‘அவன் மிகவும் தயார் நிலையில் வந்திருந்தான். யாரும் நிலைமையை உணர்ந்து சுதாகரித்து தடுக்க முனைவதற்குள் எல்லாம் முடிந்து விட்டது. ஒரு கணத்தில் அவனுடைய கழுத்து உடைந்து தொங்கியது’
‘சுவாரஷ்யமாக இருக்கிறது. கதையை மேலே சொல்லுங்கள்’
‘என் கதையைச் சொல்லி முடித்த பின் அவனின் கதையைச் சொல்லுகிறேன். அவன் தற்கொலை செய்த பிற்பாடு பிரசித்தி பெற்ற இந்த மண்டபம் பாழடைய ஆரம்பித்தது. தற்கொலை செய்தவன் கல்யாண மண்டபத்திற்குள்ளும் அதனைச் சுற்றியும் ஆவியாக சுற்றுவதாக வதந்தி பரவியது. திருமண விருந்தாளிகளின் சாப்பாட்டுப் பீங்கானிற்குள் அவன் மண்ணை எறிவதாகவும், அவர்களின் ஆடைகள் மீது சாக்கடை நீரை விசிறுவதாகவும் சுற்று வட்டாரமெங்கும் செய்தி பரவியது. சிலர் மணமகளின் ஆடைகளும் மணமகளின் ஆடைகளும் சடுதியாக தீப்பற்றி எரிவதாகவும் வதந்தி பரப்பினார்கள். இப்போது இந்த இடத்தை வாங்கக் கூட யாரும் தயாராக இல்லை’
6
‘என்னை நிஜமாக நேசிக்கும் கவிதாயினி எனக்கு மனைவியானாள். என்னுடைய மூன்றாவது மனைவியாக அவள் வந்தது குறித்து அவள் கொஞ்சமேனும் கவலைப்படவில்லை. உங்களிடமிருந்து நிபந்தனையற்ற அன்பை எதிர்பார்க்கிறேன் என்று மாத்திரமே அவன் சொன்னாள். நான் சரியென்று தலையாட்டினேன். என்னுடைய முந்திய மனைவிமார் குறித்து அவள் ஏதாவது பேசுவாள் என்று தான் எதிர்பார்த்தாலும் அவள் எதுவுமே கேட்கவில்லை. திருமணத்திற்கு முன்பு நடந்த சந்திப்புக்கள் வாஸ்தவத்தில் வினோதமானவை. அதிகமான நேரங்களில் கவிதாயினி மௌனமாக இருந்தாள். நான் கேட்கின்ற கேள்விகளுக்கு ஆமென்றோ இல்லையென்றோ மிகவும் மென்மையான குரலில் பதில் சொன்னாள். எப்போதும் சாதாரண ஆடைகளையே அணிவாள். நகப்பூச்சு, கண்ணிமைகளில் மஸ்கரா, கன்னங்களில் தட்டு தட்டாக அடுக்கப்பட்ட குழைமங்கள், உதட்டுச் சாயம், பல் வெண்மையாக்கிகள், மேக்கப், கொண்டை மோஸ்தர் எதனையும் அவள் விரும்பவில்லை. உங்களைக் கிறங்கடிக்கவோ மயக்கவோ நான் முயற்சிக்க மாட்டேன் என்பது போல் அவளது நடத்தையும் தோற்றமும் இருந்தது. திடீரென்று ஒருநாள் அவள், ‘உங்களுக்கு கவிதை பிடிக்குமா?’ என்று கேட்டாள். வெகுளிப் பெண்ணான அவளிடம் நேர்மையாக இருக்க விரும்பிய நான் எனக்குப் பிடிக்காது என்று உண்மையைச் சொன்னேன். அவள் உடனடியாகவே, ‘கவிதையைப் பிடிக்காதவர்களை எனக்குப் பிடிக்காது. நமக்கிடையே உள்ள காதலை முறித்துக் கொள்வோம்’ என்றாள்.
அவள் அப்படித்தான் உணர்ச்சிகளால் சூழப்பட்டிருந்தாள். என்றாலும் மனதில் நேசத்தை தேக்கிக் கொண்டு சஞ்சரிக்கும் அவளை நான் இழக்க மாட்டேன். உடனடியாகவே என்னைச் சுதாகரித்துக் கொண்டு, ‘விளையாட்டாகவே சொன்னேன். நான் கவிதைளின் மீது அடங்காப் பிரியம் கொண்டவன்’ என்றேன். கவிதாயினியிடம் நான் சொன்ன முதல் பொய் அது. என்னுடைய பதிலைக் கேட்டதும் உற்சாகத்துடன் கிளர்ச்சியடைந்த கவிதாயினி அவளுக்கு மிகவும் விருப்பமான அடைக்கலம் தருவதும் என்று ஆரம்பிக்கும் அந்தக் கவிதையை ராகத்துடன் வாசிக்க ஆரம்பித்தாள். என்னுடைய முதல் கவிதானுபவம் அது. அதுசரி இந்தக் கவிதையை நீங்கள் எப்போதாவது வாசித்திருக்கிறீர்களா?’
‘திருமதி கவிதாயினி அந்தக் கவிதையை ஒரு முறை என்னிடம் காட்டினாள். அவளைத் தேடி அவளுடைய கிராமத்திற்கு நான் போன போது அதே கவிதையை அவளுடைய அறையில் பார்த்தேன். அவள் ஒவ்வோர் எழுத்தையும் அலங்காரமாக்கி முத்து முத்தான எழுத்துக்களில் அந்தக் கவிதையை கன்வஸ் துணியில் எழுதி அலமாரிக்குள் பத்திரப்படுத்தி வைத்திருந்தாள்’ என்று பதிலளித்தேன் நான்.
சடுதியாக கவிஞன் ஆசனத்தை விட்டு எழுந்தான். ஓர் அற்புதக் கவிஞனாக மாறினான். திருமதி கவிதாயினி கேட்டுக் கொண்டாள் அல்லவா. கட்டற்ற அன்பை எனக்கு வழங்குங்கள் என்று. எனவே அவள் மீது கொண்ட அபரிமிதமான அன்பை மனதிற் கொண்டவனாக அவன் திருமதி கவிதாயினியைப் புகழ ஆரம்பிக்கிறான். இனிமையானதும் வசீகரமானதுமான குரலைக்கொண்ட Mocking Bird என்ற பறவையின் குரலுக்கு தன்னுடைய மனைவியின் குரலை ஒப்பிடுகிறான்.
‘என் மனைவியின் கிறங்கடிக்கும் குரலில் அந்தக் கவிதை பாடலாக உருமாறி ஒலிக்கிறது. Mocking Bird எனக்குள்ளேயே இருப்பது போன்ற பிரமையில் மூழ்குகிறேன். இதுபோன்றதொரு கவிதையை இதுவரை உலகில் எந்தக் கவிஞரும் எழுதவில்லை. கணவனின் மீது கொண்ட நேசம் அந்தக் கவிதையிலே பித்தாக மாறுகிறது அல்லது அன்பு வெறியாகி கதிர்க்கிறது. படுக்கையறையின் சாளரத்தினூடாக பார்க்கும் போது அதிகாலையில் என்ன பூ பூத்திருக்கும் என்பதையும் மாலையில் மரக்கிளைகளில் குருவிகள் கிசுகிசுப்பதையும் அவள் கவிதையிலே எழுதுகிறாள். இரவின் நட்சத்திரங்களை எழுதிப் பெயர் சூடுகிறாள். எண்ணுகிறாள். அந்த மலர்களுக்குள்ளும் நட்சத்திரங்களுக்குள்ளும் அவள் தன் கணவனைக் காண்கிறாள்.
அப்பால் தூரத்திலுள்ள நதியும் மந்தமாருதமும் மேனியைச் சில்லிடச் செய்யும் குளிரும் என்ற அடிகள் வருகின்றன. அடுத்த அடியில் கணவனை Platies எனப்படும் அலங்கார மீனுக்கு ஒப்பிடுகிறாள். அலங்கார மீன்களை நான் தலையிலே சூடிக்கொண்டு நதியிலே நீந்துவேன் என்கிறாள். என் மேனியில் கூதற்பனி ஊடறுக்கும். கணவன் மெத்தென்ற இளஞ்சூட்டைத் தருவான் என்று எழுதுகிறாள். அவ்வாறே கவிதாயினியின் கவிதைப் பேசுபொருள்கள், விழிகள், கழுகு, Mandarin Fish, கண்ணாடிச்சிறகு, பட்டாம் பூச்சி, என்று 350 அடிகள் வரை காட்டாறாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொன்றிலும் அவள் தன் வாழ்க்கையைப் பேசுகிறாள். இறுதி அடியிலே Blue and Gold Macaw என்ற கிளி வந்து இனிய குரலில் சொல்கிறது. ‘இருவரும் இணையராய், குதூகலமாய், நாங்கள் நீடூழிகாலம் வாழ்ந்தோம்’
7
‘இந்தக் கவிதை என்னுடைய வாழ்க்கைக்கும் சத்துராதியாக மாறிற்று. Gamophobia என்ற அபூர்வமான நோய் அவளைப் பீடித்திருந்தது. அதாவது திருமண வைபவங்களுக்கு அவள் அஞ்சினாள். திருமண வைபவங்களில் பங்குபற்றுவதையும் அவள் வெறுத்தாள். எங்காவது திருமண ஜோடிகளைக் கண்டாலே அவள் பதற்றமடைவாள். ஆதலால் நாங்கள் எந்தத் திருமண வைபவங்களிலும் கலந்து கொண்டதில்லை.
எங்கள் திருமண வைபவம் மிகவும் எளிமையாக நடந்தது. யாரையும் நாங்கள் விருந்தாளிகளாக அழைக்கவில்லை. இரண்டு சாட்சிகள் மாத்திரமே கலந்து கொண்டு கையெழுத்திட்டார்கள். திருமண விருந்தென்பது நாங்களிருவர் மாத்திரமே. ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட இரவு விருந்தாக அது இருந்தது. திருமணம் முடிந்த கொஞ்ச நாட்களிலேயே அவள் என் தொழிலை வெறுக்க ஆரம்பித்தாள். நான் உள்ளூர் விமான சேவையொன்றில் விமானியாகப் பணியாற்றி வந்தேன். என்னோடு ஒன்றாகக் கடமையாற்றிய விமானப் பெண்மணியொருத்தியின் திருமண வைபவத்திலே ஒருமுறை நான் கலந்துகொண்டேன். கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். கவிதாயினியை அழைத்தும் வழமை போல் அவள் கலந்து கொள்ள மறுத்தாள். காத்திராப் பிரகாரம் அவள் திருமண காணொளியைப் பார்வையிட்டாள். அன்றிலிருந்து ஆரம்பித்தது கசப்புணர்வுகளும் பிரச்சினைகளும்.
‘நீங்கள் இளம் பணிப்பெண்களோடு இப்படியெல்லாம் பழகுவீர்களா?’ என்று அவள் கேட்டாள். நான் ஆமென்றேன். அந்தத் திருமணத்திற்கு நிறைய இளம் பெண்கள் வந்திருந்ததும் அவர்கள் நடனமாடியதும் கலகலப்பாகப் பேசிக் கும்மாளமடித்ததும் கவிதாயினிக்குப் பிடிக்கவில்லை. நான் காணொளியில் தோன்றுமிடங்களை அவள் உற்றுப்பார்ப்பாள். பின்னர் என்பக்கம் திரும்பி இந்தத் திருமணக் காட்சிகளை நான் வெறுக்கிறேன் என்றாள். அன்றைய தினத்திலிருந்து கவிதாயினி என் ஆடைகளைத் தெரிவு செய்தாள். பளிச்சென்று தோன்றும் வண்ணங்களை நீக்கி சாம்பல் நிறங்களிலும் கபில நிறங்களிலும் எனக்கு ஆடைகள் தைத்துத் தந்தாள். அதாவது நான் வெறுக்கக்கூடிய நிறங்கள். சப்பாத்துக்களை அடிக்கடி மினுக்குவதும் கழுத்துப்பட்டி அணிவதும் வேண்டாமென்று தடுத்தாள்.
‘நீங்கள் தேவையற்ற விதத்தில் மனசைக் குழப்பிக் கொள்கிறீர்கள். அது நமது திருமண வாழ்க்கையைச் சின்னாபின்னப்படுத்திவிடும்’ என்று நான் சூசகமாக உணர்த்தியும் அவள் பைத்தியகாரி மாதிரி நடந்து கொணடாள். நான் எப்போதும் ஜாலியாக இருக்கும் வகையறா என்பதை அவள் புரிந்து கொள்ளாமல் பெண்களுடன் கலகலப்பாகப் பேச வேண்டாமென்றும், அயலவர்களைக் கண்டால் புன்னகைக்க வேண்டாமென்றும், எப்போதும் முகத்தைச் சிடுமூஞ்சியாக வைத்திருக்குமாறும் என்னை வற்புறுத்தினாள். என்னால் அப்படி நடிக்க முடியவில்லை. என்னையறியமலேயே சிரித்து விடுவேன். அவளோ என்னோடு சிடுசிடுவென்று இருப்பாள். நான் அவளைக் காதலித்தேன். நூறு வீதம் காதலித்தேன். ஆகவே, அவளைத் தொடர்ந்து மன்னித்துக் கொண்டேயிருந்தேன். என் ஆழ்மனது வேதனையால் குமுறிக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாமல், ‘இந்தக் கவிதைதான் என் வாழ்க்கை’ என்று ஒவ்வொரு நாளும் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
‘நீங்கள் இளம் பெண்களைக் கொன்று உங்கள் குடும்ப மயானத்தில் புதைத்தீர்கள் என்று ஒருமுறை திருமதி கவிதாயினி என்னிடம் சொன்னாள்’ என்றேன் நான். கவிஞன் சிரித்தான்.
‘இப்போது கவிதாயினியைச் சந்திக்கப் போகிறீர்கள். அப்போது உண்மையை உணர்ந்து கொள்வீர்கள்’
‘கவிதாயினி உயிரோடு இருக்கிறாளா? எங்கே இருக்கிறாள்?’ என்று நான் ஆச்சரியத்தோடு கேட்டேன்.
‘என் வீட்டில் தான் இருக்கிறாள். ஆனால், வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறாள். வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. நுழைவாயிலுக்கு பூட்டுப் போட்டிருக்கிறாள். யாருடனும் பேசுவதுமில்லை. அலைபேசியையும் முற்றாகத் துண்டித்து விட்டாள்’
‘அடக் கடவுளே’
‘உண்மையில் மயானத்தில் அடக்கப்பட்டிருக்கும் அத்தனை இளம் பெண்களும் என்னுடைய நெருங்கிய உறவினர்கள். திருமணமொன்றிற்காக வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது மின்ஒழுக்கு ஏற்பட்டு வாகனம் முற்றாக எரிந்து சாம்பலாயிற்று. வாகனத்தில் பயணித்த அத்தனை பேரும் இறந்தார்கள். எனக்கு மனசு உறுத்த ஆரம்பித்தது. வாகனத்தைச் சரியாகப் பரீட்சிக்காமல் விட்டேனோ என்று. ஏனென்றால் அந்த வாகனத்தைச் செலுத்திச் சென்ற நான் மட்டுமே உயிர்தப்பினேன். மனச்சாட்சியின் உறுத்தலைத் தாங்க முடியாமல் தான் எல்லாக் கல்லறைகளிலும் ‘என் ஆத்மாவை இழந்தேனே’ என்ற வாசகத்தைப் பொறித்தேன். நீங்கள் பார்த்த மூடப்படாமல் இருந்த கல்லறையை நான் எனக்காகத் தயார் செய்தேன்’
‘என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்றேன் நான்.
‘வாழ்க்கையென்பதை அவள் ஒரு வழிப் பாதையாக எடுத்துக் கொண்டாள். நான் புரிய வைக்க முயன்றேன். அவள் ஒப்புக் கொள்ள மறுத்தாள். அவளுடைய நச்சரிப்பு தாங்க முடியாமல் இறுதியிலே விமான சேவை நிறுவனத்திலிருந்து நான் ராஜினாமாச் செய்தேன்.
8
திருமதி கவிதாயினி உருக்குலைந்து போயிருந்தாள்.
‘அவளோடு பேசுங்கள்’ என்றான் கவிஞன். ‘ஏனெனில் உங்களோடு மட்டுமே அவள் பேசுவாள்’
தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு Photogenic என்று புகழப்பட்டவள், வருடா வருடம் பல விருதுகளைப் பெற்றுக் கொண்டவள் நசுங்கிப்போன பட்டாம்பூச்சி போல் அலங்கோலமாக இருப்பதைக் கண்டவுடன் என் மனம் துயருற்றது.
நான் தளர்ந்த குரலில் ‘திருமதி கவிதாயினி’ என்றேன். சோபாவில் ஒருக்களித்துச் சாய்ந்திருந்த அவள் தலையை உயர்த்தி மெலிதாகப் புன்னகைத்தாள்.
‘நீங்கள் சுகமாக இருக்கிறீர்களா?’
நான் ‘ஆமென்று’ தலையாட்டினேன்.
கவிஞன் சொன்னானே Mocking Bird என்ற பறவையின் வசீகரக்குரல் அந்தக் குரல் கவிதாயினியிடம் இன்னமும் ஒட்டி இருந்தது. அவள் தயாரித்த தேநீரிலும் முன்னைய கைப்பக்குவமான அவளின் சுவை இருந்தது. ‘வாருங்கள் வெளியே சென்று பேசுவோம்’ என்றாள். அதே பழைய சீமேந்து வாங்கில் இருவரும் அமர்ந்து கொண்டோம்.
‘கணவனின் மீதான அதீதப்பிரியம் என் கண்களை மறைத்து விட்டது’ என்று தேம்பினாள் திருமதி கவிதாயினி.
‘என் மீதிக் கதையை எங்கேயிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. என்றாலும் முத்துச் சிம்மாசன திருமண மண்டபத்திலிருந்து ஆரம்பிக்க விரும்புகிறேன். அந்த மண்டபத்தில் தான் என் கணவரின் நண்பரின் திருமணம் நிகழ்ந்தது. என் கணவரைப் போல் அவரும் ஒரு விமானி. இருவரும் ஒரே விமானப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்றவர்கள். ஒரு அறையிலேயே இருவரும் தங்கினார்கள். அவன் திருமண அழைப்பிதழோடு என் வீட்டிற்கு வந்தான். மாப்பிள்ளைத் தோழன் என் கணவர் தான். மாப்பிள்ளைத் தோழனுக்குரிய ஆடைகளையும் அவனே தயார் செய்து தந்தான்.
முத்துச் சிம்மாசன திருமண மண்டபத்திற்கு நான் ஒரு போதும் போனது கிடையாது. ஆனாலும் என் கண்முன்னே முத்துச் சிம்மாசன கல்யாண மண்டபம் ஒரு கணம் தோன்றிற்று. அங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் திருமணக் காட்சிகளும் தோன்றிற்று. அங்கே இளம் ஜோடிகள் வருகிறார்கள். ஒருத்தரையொருத்தர் தழுவிய படி நடனமாடுகிறார்கள். என் கணவரும் நடனமாடுகிறார். கணவருக்கு எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு கைலாகு கொடுக்கிறார்கள். சிலர் என் கணவரைத் தொட முயற்சிக்கிறார்கள் என்றதுமே விபரீத எண்ணங்களால் நான் சூழப்பட்டேன்.
‘நீங்கள் உங்கள் நண்பரின் திருமணத்திற்கு மாப்பிள்ளைத் தோழராகப் போக வேண்டாம்’ என்று என் கணவரைப் பார்த்து நான் சொன்னேன். என்ன பேசுவதென்றே தெரியாமல் கணவர் என்னைப் பார்த்துக் கொண்டு நின்றார். நான் பிடிவாதமாக அவரைத் தடுத்தேன். அன்றைய தினத்தில் என் கணவர் நூறு தடவைகளாவது என்னிடம் கெஞ்சினார். எனினும் எப்படியோ என்னை மீறி அவர் போய் விடுவாரோ என்ற அச்சம் என்னைப் பீடித்தது. உடனே அவருடைய கல்யாண ஆடைகளை தீயிட்டுக் கொளுத்தினேன். அந்தக் கணத்தில் தான் எதிர்பாராதது நடந்தது. நான் அப்போது நூறு வீதம் பைத்தியக்காரியாய் இருந்தேன்.
என் கணவர் மிரண்டு போனார். அவரது முகம் இருண்டு பிசாசைப் போல் மாறியது. காரை எடுத்துக் கொண்டு வேகமாக ஓட்டிப் போனார். நான் பயந்து போனேன். ஒரு போதும் அவர் இப்படி நடந்து கொண்டதில்லை. நானும் வேகமாக அவரைத் தொடர்ந்து போனேன். ஆனால், முத்துச் சிம்மாசன திருமண மண்டபத்தை நான் அடைவதற்குள் எல்லாம் முடிந்து விட்டன. இரண்டாம் மாடிக் கூரையில் அவரது சடலம் தொங்கிக் கொண்டிருந்தது.
நான் அதிர்ச்சியடைந்தவாறு ‘முத்துச் சிம்மாசன மண்டபத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது உங்கள் கணவர்தானா?’ என்று கேட்டேன். அவள் ‘ஆம்’ என்றாள்.
‘இப்போது வரை உங்கள் கணவருடன் உரையாடிக் கொண்டு வந்தேனே’ அவர்தான் என்னை இங்கே கொண்டு வந்து சேர்ந்தவர்’ என்றேன் நான்.
திருமதி கவிதாயினி முன்பொரு தடவை சிரித்ததைப் போல் க்ளுக்கென்று சிரித்தாள். ‘நீங்களும் என் கணவரைப் போல் கறுப்பு மந்திரம் போன்ற சமாச்சாரங்களில் இறங்கிவிட்டீர்களா?’ என்று என்னிடம் கேட்ட அவள் கல்லறையைக் கண்ஜாடை காட்டினாள்.
கவிஞன் என்ற பெயர் பதிக்கப்பட்ட கல்லறை அங்கே இருந்தது. பெயருக்குக் கீழே ‘என் ஆத்மாவை இழந்தேனே’ என்ற வாசகமும் இருந்தது.
******