
மேய்ந்துகொண்டிருந்த வனத்தின்
ஒற்றை மரத்தில் கட்டியிருந்த
நீள்கயிற்றின் சுற்று வட்டம்
என் பார்வை விட்டு
நீ விழாத தூரமாக
நீண்டகாலம் நீடித்திருக்கிறது
இளைப்பாறும் வேளையில்
சட்டென மனதின் கண்
உந்தன் இருப்பிடத்தை
வட்டமிட மறந்ததில்லை
நாட்கள் செல்லச் செல்ல
உந்தன் பிரமாண்டம்
சுருங்கிக்கொண்டே போகிறது
அன்றிருந்த ஆர்வம்
இன்று ஏனோ
என்னிலும் மங்கிவிட்டது
புழக்கத்தில் இல்லாத
உறவின் சங்கிலி
இத்து விட்டுப் போய்விடும்.
***
கண் இமைக்காது பார்க்கின்றேன்
இனி என்றுமே இப்படியுனை
பார்க்க முடியாத ஆதங்கத்தில்
இந்த நிமிடம் முழுவதும்
உனைக் காணவே இமைகொட்டாது
விழித்திருக்கிறேன்
எழுதாத வெள்ளைக் காகித மனதில்
வண்ணங்களை வாரியிறைத்து
அழகான நந்தவனத்தை
ஓவியமாக்கிய
காதல் கடவுளின்
கடைசிப் பயணச்சீட்டு நீ
வீசும் காற்றில் தவறி
பறக்கவிட்ட பயணச்சீட்டாய்
சொல்லாத என் காதல்.
***
வஞ்சகமாய் சமிக்ஞை காட்டி
ஆழியில் குதித்த
வெற்றியின் வெளிச்சப்புள்ளியை
தொட்டுவிட ஆசைமேவ
தொடர்ந்து மூழ்கிக்கொண்டே
போகிறேன்
நெருங்கியதாய் பிரம்மை பிடித்து
எட்டிப்பிடிக்கப் பார்க்கிறேன்
எள்ளலாய் நகைத்து அகாதமதில்
அமிழ்ந்து போகிறது
சித்தப்பிரம்மை தெளிந்த நாளில்
காலத்தில் மூழ்கிக் கரைந்து
தொலைத்த இளமைக்கு
மனம் ஏங்குகிறது.
***
கைவிடப்பட்ட சோலையில்
பூக்கள் பறிக்கப்படுவதில்லை,
வெயிலில் வாடி வதங்கி
வீழ்ந்த விதை
தானாகப் பெய்யும் மழையில்
வனமாகத் தழைத்து ஓங்குகிறது
கைவிடப்பட்டதால் ஒன்றும்
வாழவகையில்லாது
போவதில்லை
சுயம்புவாய் நிமிர்ந்து நிற்க
சந்தர்ப்பம் கிட்டுகிறது.
***
எனக்கான வானத்தில்
நான் வரைந்த
வெள்ளிகள்
மாத்து குறையாது காக்க
எந்தன் இருப்பை
இருட்டடிக்கப் பார்க்கிறேன்
உதிரும் இருட்டு
ஆயிரம் புள்ளிகளாய்
அடையாளம் காட்டுகிறது.
*******