![](https://vasagasalai.com/wp-content/uploads/2022/05/ammu-ragav-780x405.jpg)
எங்கு மோதினாலும் கண்ணாடிதான்
கண்ணாடிக்குள் அடைபட்ட
தண்ணீரின் துயரத்தை
மீன்கள் நீந்திக் கடக்கின்றன
சமுத்திரத்தில் கலந்திருக்க வேண்டிய தண்ணீரும்
சமுத்திரத்தில் உலவ வேண்டிய
மீனும்
யாருக்காகவோ பேழைகளில்
அடைபட்டுக் கிடக்கின்றன.
அளவில் சின்னதும் பெரியதுமான
கண்ணாடித் தொட்டிகளில்
தண்ணீரும் மீனும்
தனக்கேயான தனித்த
ஒரு உலகத்தை வரைந்து கொள்கின்றன.
***
நிலவின் சாயல்
நீலத்தில் ஒன்றும்
இளம்பச்சையில் ஒன்றும்
மெல்லிய சிவப்பில் ஒன்றுமாக
மூன்று பலூன்களை
காற்றால் நிரப்பி வைத்திருக்கிறேன்
ஓயாது காற்றில் அசைந்தவாறு இருக்கும் பலூன்கள்
சட்டென உடைந்துவிடக் கூடியது
ஒரு பலூன் உடைதலை
குழந்தைகள் ஒருபோதும் விரும்புவதில்லை
காற்று நிரப்பப்பட்டபோது
நிலவின் சாயலிலிருந்த
பலூன் உடைந்த இரவில்
மனம் முழுவதும் இருள் சூழ்ந்து கிடந்தது.
***
ஒப்பனை
இப்போது சிறியதாக ஒரு பதற்றம்
உனக்குள் நுழைந்திருக்கிறது
சும்மா தூங்கும்
உனது உள்ளுணர்வை
நீயே களைப்படையும் வரை துரத்துகிறாய்.
பேசும் கதைகளில்
காதலின் ஈரப்பதம் குறைந்துவிட்டதாகக் கருதி
குரல்களைச் சேகரித்து
ஒப்பனை செய்கிறாய்
அலங்கரிக்கப்பட்ட குரல்கள்
காற்றிலேறி மிதக்கின்றன.
சீசாவில் வாழும் மீனுக்கான
அலைகளை ஊதிக் கொண்டிருக்கிறவனின்
அறையில்
முற்றுப்பெறாத காட்சிகள்
அந்தரத்தில் ஆடுகின்றன
ஒரு பகலும்
பகல் கழிந்த இரவும்
நெடும் பயணமும்
மிதக்கும் குரல்களினூடே
களைப்பின்றி பயணிக்கிறது
அங்கொரு ஆகாயம்
இங்கொரு ஆகாயம்.
*******
அருமை