இணைய இதழ்இணைய இதழ் 76சிறுகதைகள்

அஞ்ஞாத வாசம் – பத்மகுமாரி 

சிறுகதை | வாசகசாலை

வெயிலின் தாக்கம் தாளாமல் வியர்த்ததில் கழுத்து நசநசவென இருந்தது. கால்சட்டை பாக்கெட்டிலிருந்த கர்ச்சீப்பை எடுத்து நெற்றி வியர்வையைத் துடைக்கும் முன்பு, உறுமிக் கொண்டிருந்த பைக்கை நிறுத்தி வைத்தேன். மெட்ரோ வேலைகள் ஆரம்பம் ஆனபின்பு அலுவலகத்திற்கு பயணப்பட்டு போகும் நேரம் அதிகமாகிவிட்டது. நெருக்கடியும் சிக்னல் காத்திருப்பும் முன்னைவிட ரொம்பவும் மோசம்

நேற்று இரவு பயமுறுத்திய கனவு ஞாபகத்தில் வந்தது. வழி தெரியாமல் ஏதோ ஒரு இருட்டு மூழ்கடித்திருந்த பாதையில் தன்னந்தனியாக தடுமாறியபடி நடந்து கொண்டிருந்த என்னை தூரத்தில் கேட்டுக் கொண்டிருந்த பயங்கரமான சப்தம் மிரட்சி கொள்ளச் செய்தது. ஏதோவொரு விலங்கின் உறுமல். நடப்பதை நிறுத்திவிட்டு சுற்றிலும் கூர்மையாக நோட்டமிட்டும் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. கொஞ்சம் நேரத்தில் சப்தம் அடங்கியது. நடந்ததில் ஓய்ந்த கால்கள் இனி ஒரு அடியும் எடுத்து வைக்க முடியாதென்று அடம்பிடிக்க இடதுபுறமாக இருந்த ஒரு மரத்தின் அடிவாரத்தில் சாய்ந்து அமர்ந்தேன். எப்பொழுது உறங்கிப் போனேனென்று தெரியவில்லை. விழித்தபொழுது இரண்டு கண்கள் எதிரே மினுங்கிக் கொண்டிருந்தது. தலையை உலுப்பி உறக்க கலக்கத்திலிருந்து என்னை மீட்டுக் கொண்டு பார்த்தபொழுது எதிரே நின்றுக் கொண்டிருந்தது பெருத்த புலி. தப்பிக்க முடியாத தூரத்தில் நெருங்கி நின்று என்னை மேலும் கீழுமாக பார்த்துக் கொண்டிருந்தது. என் இதயம் துடிக்கும் சப்தம் என் காதுவரையிலும் கேட்க, என்னால் முடியாதென்றான பின்பு அவனே கதியென்று பயத்தில், ‘முருகா முருகாஎன்று உச்சரிக்க ஆரம்பித்தேன்

டேய், முருகர கூப்பிட்டது போதும். எந்திரிச்சு கிளம்புற வழிய பாரு. ‘அறை நண்பன் எழுப்பி விட்டடான்

கண் விழித்த அடுத்த நொடி உச்சரிப்பை நிறுத்தியிருந்தேன். மனமும் உடலும் இன்றைக்கான அன்றாட துரத்தலுக்கு ஆயுத்தமாகத் துவங்கியது. பள்ளிக் காலங்களில் பயமுறுத்துகிற கனவுகள் வந்து அலறினால் அம்மா எழுப்பி தண்ணீர் குடிக்கத் தருவாள். திருநீறு இட்டு விடுவாள். கனவைப் பற்றி இன்னும் கூடுதல் பயங்கரங்களை கற்பனையாகச் சேர்த்து, நண்பர்களுக்கு சுவாரசியம் கூட்டும் வகையில் விவரித்துக் கொண்டிருப்பேன். இப்பொழுது? வாழ்க்கையே புலி துரத்தும் கொடுங்கனவைப் போல மாறிப் போன பின்பு புலி துரத்துகிற கனவைப் பற்றி திரும்பப் பேசுவதற்கு என்ன இருந்துவிட முடியும்?

கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த பொழுது, கணினி துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தூரத்து வழி பெரியம்மா மகன் வீட்டிற்கு வந்திருந்தான். நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த பொழுது, ‘உனக்கென்ன வொர்க் போயிட்டா. லைஃப் செட்டில்ட், ஜாலிதான்என்று நான் சொன்னதற்கு அவன் பதிலே பேசாமல் மெளனமாகப் புன்னகைத்தான். அந்த புன்னகையின் பின்னால் என்னென்னவோ அர்த்தங்கள் இருந்திருக்கக்கூடும். அப்பொழுது புரியவில்லை

நல்லாப் படிக்கணும். படிச்சு முடிச்சு வேலைக்கு போயிட்டா அப்புறம் ஜாலியா இருக்கலாம். ‘என்று சுற்றி இருந்தவர்கள் உசுப்பேத்தியதை வேத வாக்கை நம்பிய அப்பாவிகளுள் நானும் ஒருவன். இருபத்தியொரு வயதில் படித்து முடித்த கையோடு வேலை, வாழ்க்கையில் துணையாக கைகோர்த்துக் கொள்ள அவள் என்று எல்லாம் கிடைத்திருந்த பொழுது நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று மனதிற்குள் பூரித்துப் போயிருந்தேன், ‘வெல்கம் டூ ரியாலிட்டிஎன்று வாழ்க்கை கைநீட்டி அழைத்துக் கொண்டிருப்பதைப் பற்றிய எந்த உத்தேசமும் இல்லாமல்

அவள் எனது கல்லூரித் தோழியாக இருந்து, காதலியாக மாறியிருந்தவள். நல்ல அழகி. அப்படித்தான் நான் அவளை அழைத்துக் கொண்டிருந்தேன். சந்தோஷமாக இருக்கும் பொழுதுஅழகி’; சண்டைகளின் பொழுதுராட்சசி‘; சமாதானங்களின் பொழுதுஅழகான ராட்சசி‘. ‘அப்படி என்ன அழகதான் கண்டுடிட்டியோ. ‘என்று அவள் சில நேரங்களில் வெட்கப்பட்டபடியே சலித்துக் கொள்ளுவாள். நாளுக்கு நாள் அவள் மீதான மையல் அதிகரித்துக் கொண்டேயிருந்த நாட்கள் அவை . இரண்டு பேரும் ஒரே அலுவலகத்தில் இருந்ததால் முடிந்த வரை ஒருவரை ஒருவர் பிரியாமல் இருந்தோம். அவளைத் தவிர மற்ற முகங்கள் எனக்கு கசந்தது. தோல் சுருக்கம் கண்டபின்பும் கைகோர்த்து திரிய போகும் வருங்காலத்தை பற்றிய பெருங்கனவொன்று எங்களுக்குள் இருந்தது

அக்காவின் திருமணப் பேச்சை வீட்டில் ஆரம்பித்தபொழுது, ‘அடுத்தது நமக்குதான்என்று சொன்னபொழுது கன்னம் சிவக்க வெட்கப்பட்டபடியே உள்ளங்கையைப் பிடித்துக் கொண்டாள். அக்காவிற்கு வரனாக வந்து கொண்டிருந்த ஜாதகங்கள் பொருந்தாமல் தடைபட்டுக் கொண்டே இருந்த அதே நேரத்தில் அவளுக்கு அவள் வீட்டில் வரன் பார்க்க ஆரம்பித்திருந்தார்கள். அவளது வீட்டில் அவளுக்கு அத்தனை சீக்கிரத்தில் கல்யாணம் முடிக்கும் யோசனை இல்லாமல் இருந்தபோதிலும், ‘ஒரே பொண்ணு. வேலைக்கும் போயாச்சுல்ல. அடுத்து மாப்பிள்ளை பார்க்க வேண்டியதானஎன்று உறவினர்கள் அவளது பெற்றோரைத் தூண்டி விட்டிருந்தார்கள்

சுற்றி இருப்பவர்களின் வாயை அடைக்கவும், அவளது பெற்றோரின் வரன் பார்க்கும் முயற்சியைத் தடுக்கவும் வேறு வழி தெரியாமல் மேற்படிப்பை ஆயுதமாக எடுத்துக் கொண்டாள் . ‘நீ நிம்மதியா இருடா. நான் உன்ன விட்டு எங்கேயும் போகமாட்டேன். ‘என்று எனக்கும் சேர்த்து தைரியம் சொல்லித் தேற்றினாள்.

பொருந்தி வரும் ஒன்றிரண்டு ஜாதங்களையும் அக்கா அவளின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியடையவில்லை என்று தட்டிக் கழித்துக் கொண்டிருந்ததாள் . அக்காவிற்கு வரன் பார்க்கும் படலம் இரண்டு வருடங்கள் கடந்தும் இழுத்தடித்துக் கொண்டிருந்தது

அவளது மேற்படிப்பு முடிவை நெருங்கிக் கொண்டிருக்க, அவளது வீட்டில் அவளுக்காக மீண்டும் வரன் பார்க்க ஆரம்பித்திருந்தார்கள்.

நீ ஒருதடவ மட்டும் அப்பாட்ட வந்து பேசுடா. அதுக்கப்புறம் நான் பாத்துக்கிறேன்.’

லூசா நீ? அக்காவ கட்டிக் கொடுக்காம வச்சிட்டு நான் வந்து எப்படி பேச முடியும். ?‘

உன்ன நாளைக்கேவா கல்யாணம் பண்ணிக்கோன்னா சொல்லுறேன்? ஜஸ்ட் வந்து பேசத்தான சொல்றேன்.‘

நீ வந்து பேசுறேன்னு ஒத்துகிட்டாத்தான் நான் அப்பாகிட்ட நம்ம விசயத்த ஓப்பன் பண்ண முடியும். ‘

இங்க பாரு. அவசரப்படாத. அக்காக்கு ஒரு வரன் முடிஞ்சு உறுதி மட்டும் ஆகிக்கட்டும். நான் உடனே உன் அப்பாகிட்ட வந்து பேசுறேன். எனக்கு மட்டும் ஆசையில்லியா என்ன. புரிஞ்சிக்கோ கொஞ்சம். ‘

நீ என் சூழ்நிலைய புரிஞ்சிக்கோடா. இட்ஸ் கோயிங் பியாண்ட் மை ஹேண்ட்ஸ.’

உனக்கு நான் வேணும்னா நீதான் சமாளிக்கணும். முடியாதுண்ணா உன் அப்பன் கை நீட்டுறவனையே கட்டிக்கோ. ‘

அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. தொலைபேசியின் எதிர்முனையில் அடர்ந்த மெளனம் படர்ந்திருந்தது. அதன்பிறகான நாட்களில் அவளுக்கும் எனக்கும் இடையேயான பேச்சுவார்த்தை குறைய ஆரம்பித்திருந்தது. அந்த சிறுகீறல் பெரும் விரிசலாக மாறி அவள் இன்னொருவனுக்கு துணைவியாக மாறிப்போவாள் என்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை. அப்பொழுதும் கூட அக்காவிற்கான வரன் அமையாமல்தான் இருந்தது. வெறுமை மட்டுமே வாழ்வில் எஞ்சி நின்றது. மன அழுத்தத்தில் மற்றவர்களிடம் இருந்து நானே என்னை வலுக்கட்டாயமாக விலக்கிக் கொண்டிருந்தேன். அம்மாவின் தொலைபேசி அழைப்புகளைக் கூட சில நேரங்களில் வேண்டுமென்றே தவிர்த்தேன். அப்படியே அழைப்பை ஏற்று பேசினாலும் வேலை இருப்பதாகச் சொல்லி சுருக்கமாக முடித்துக் கொள்வேன்

சிறு காரணங்களைக் காட்டி வந்த வரன்களையெல்லாம் தட்டிக் கழித்துக் கொண்டிருந்த அக்கா, திடீரென்று உருவத்தில் அவளுக்குச் சற்றும் பொருத்தம் இல்லாத அத்தானை பார்த்து சம்மதமென்று தலையாட்டினாள். அவளுக்கு நிச்சயமாக பைத்தியந்தான் பிடித்திருக்கிறதென்று நான் நினைத்துக் கொண்டேன். அம்மாவும் அப்பாவும் பெரும் ஆசுவாசமாக உணர்ந்தார்கள்

எனது மனநிலை நாளுக்கு தாள் சிதிலமடைந்துக் கொண்டிருந்தது. நாங்கள் கைகோர்த்து சுற்றித் திரிந்த இடங்களை கடந்து செல்கையில் மனம் பெரும் அளவில் தொந்தரவை உணர்ந்தது. என்மீதே எனக்கு உண்டான வெறுப்பு ஒரு முதலையைப் போல எனது நிம்மதியை விழுங்கிக் கொண்டிருந்தது. வாழ்வதே மூச்சடைப்பதை போல மாறிப்போயிருந்த நேரத்தில் அலுவலகத்தில் இருந்து வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு தேடி வர அவளை மறப்பதற்குத் தானே அமைந்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட வேண்டாமென்று அக்காவின் கல்யாணம் முடிந்த கையோடு கிளம்பிச் சென்று விட்டேன்

தெரியாத நிலமும், முன் பின் தெரியாத முகங்களும் கொடுத்த சுதந்திரம் என்னை நான் மீட்டெடுத்துக் கொள்ள பெரிதும் உதவியது. அக்காவின் திருமணம் முடிந்துவிட்டால் சற்று நிம்மதியாக இருக்கலாமென்று அம்மாவும் அப்பாவும் போட்டு வைத்திருந்த மனக்கணக்கிற்கு மாறாக, அக்காவின் வாழ்வில் பேரிடி வந்திறங்கியிருந்தது.. மனிதன் போடும் அறிவாளித்தனமான பெரும் கணக்குகளை தகர்த்தெறிந்து விட்டு கைகொட்டிச் சிரிப்பதில் தனக்கு இருக்கும் கெட்டிக்காரதனத்தை வாழ்க்கை நிரூப்பித்து கொண்டேயிருக்கிறது

அத்தான் என்கிற அவன் கல்யாணம் நடந்திருந்த அன்றிலிருந்து அக்காளிடமிருந்து விலகியே இருந்திருக்கிறான். அவனுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதையும், வீட்டில் உண்மையைச் சொல்ல தைரியமில்லாமல் இவளையும் கைப்பிடித்துக் கொண்டிருக்கிறான் என்பதையும் திருமணம் முடிந்து ஆறு மாதங்களுக்கு பிறகே அக்காவால் கண்டுபிடிக்க முடிந்தது. அதுவும் பல முறை அவள் நடத்திய சண்டையின் விளைவாய் அவனே அவன் வாயால் உண்மையை ஒப்புக் கொண்ட பொழுது. அதோடு அவனோடான எல்லா ஒட்டுறவையும் அறுத்து விட்டுவிட்டு உதைப்பட்ட பந்தைப் போல அக்கா திரும்ப வந்திருந்தாள்

வெளிநாட்டு வாழ்க்கை, அக்காவின் பிரச்சனை என்று அவளை நான் மொத்தமாக மறந்திருந்தேன். அப்படித்தான் நம்பிக் கொண்டிருந்தேன்

நான் பெத்த பிள்ளைக்கு இப்படி கோவம் வரும்னே இப்பதான்டா எனக்குத் தெரியுது. வாழ்க்கைய தொலச்ச வலி. இப்படி ஆகிடாங்களே என் புள்ள வாழ்க்கைய. ‘- ‘அந்த பொண்ணுகிட்ட பேசி அவன விட்டு மொத்தமா விலக்கி அனுப்புறோம். நீ வந்து அவன் கூட நல்ல படியா வாழுமா. ‘என்று சமாதானம் பேச வந்திருந்த அவளது மாமியாரிடம் அக்கா கோபத்தில் வெடித்ததைப் பற்றி அம்மா என்னிடம் சொல்லும் பொழுது உடைந்து அழுதுவிட்டாள்.

காதலிச்சவன்தான் இன்னைக்கு வந்து வீட்டில பேசுறேன் நாளைக்கு வீட்டில பேசுறேன்னு நம்ப வச்சிட்டு கடைசியில கால வாரிவிட்டு இன்னொருத்திய கல்யாணம் பண்ணிட்டு போயிட்டாம்னா, நம்பி கைப்பிடிச்சிட்டு போனவனும் இப்படி என் தலையில கல்ல தூக்கி போட்டுடான். ‘நானும் அக்காவும் தனியாக பேசிக்கொண்டிருந்த காணொளி அழைப்பில் அக்கா இப்படிச் சொல்லி கதறி அழுத நிமிடங்கள் இன்னும் எனக்குள் உறைந்து கிடக்கிறது

அக்கா அப்படி அழுத பொழுது ரொம்ப மாதங்களுக்கு பிறகு அவளது நியாபகம் எட்டிப் பார்த்தது. அவளை மறந்துவிட்டதாக நம்பிக் கொண்டிருந்த முட்டாள்தனத்தை நினைக்கையில் எரிச்சலாக இருந்தது. முதல் முறை மனதில் பதிந்த முகம் சிற்பத்தில் விழுந்த உளி வடு போல என்றுமே மறையாதென்பதை அன்று உணர்ந்து கொண்டேன்

வீட்டில் இப்பொழுது அக்காவிற்கு இரண்டாவது வரன் தேடிக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டில் எனது வேலை முடிந்து நானும் திரும்பி விட்டதால், எனக்கும் சேர்த்து பெண் தேடுகிறார்கள். நேற்று இரவு அவள் என்னைப்பற்றி விசாரித்ததாக, அவளிடம் தொலைபேசியில் பேசி முடித்த கையோடு, அடுத்ததாக எனக்கு அழைத்துப் பேசிய நண்பன் ராஜா சொன்னான். ராஜாவிடம் பேசி முடித்துவிட்டு ஏதேதோ யோசனையோடு மல்லாந்து படுத்திருந்தபொழுது அடுத்ததாக அக்கா அழைத்தாள்

அவளுக்கு இன்னொரு திருமணத்தில் துளியும் விருப்பமில்லை என்றாள். ‘எனக்கு எதுவும வேணாம் இப்படியே விட்டிருங்கன்னு சொன்னா, அம்மா உடனே மூக்க சிந்த ஆரம்பிச்சிடுறா. இங்க யாரும் தன் இயல்புல இருந்திட முடியாதுல. வேசம் கட்டிக்கிட்டே இருக்கணும். ‘

அவள் என்னிடமாவது வெளிப்படையாகப் பேசிவிட்டாள். என்னால் அதைக்கூடச் செய்ய முடியவில்லை

நல்ல பையன். கைநிறைய சம்பளம். சொந்த வீடு உண்டு. ‘தரகர் இப்படித்தான் என்னைப்பற்றி பெருமிதமாக பெண் வீட்டாரிடம் சொல்லிக் கொள்கிறார். என்னளவில் நான் என்னை வெற்றுக் காகிதமாகவே உணர்கிறேன். வேலையில் கூட பெரும் நாட்டமெல்லாமில்லை. நாட்டத்தோடு பார்ப்பதற்கு இது நான் கனவு கண்ட வேலை ஒன்றும் கிடையாது. வீட்டில் கைகாட்டிய படிப்பை படித்து, அதில் கிடைத்த வேலை அவ்வளவுதான். ‘எனக்கு சமைக்கத் தெரியாதுஎன்று தைரியமாக சொல்லிக் கொள்கிற பெண்கள் அளவிற்கு தைரியம் எனக்கு இன்னும் வரவில்லை. அவ்வளவு தைரியம் இருந்திருந்தால்எனக்கு சம்பாதிக்கத் தெரியாதுஎன்று சொல்லிவிட்டு வீட்டில் முடங்கியிருப்பேன்

பிழைப்பிற்காக வந்த ஊர். தள்ளு வண்டிக் கடை உணவுகள். இயந்திரத்தனமான வேலை, கூடவே முன்பின் தெரியாத யாரோ ஒருத்தியையும் எனக்கானவளாக மாற்ற முயற்சிக்கும் தேடல் படலம். பாவம், வருகிறவள் எதை எல்லாம் தொலைத்து விட்டு என்னிடம் வந்து சேரப் போகிறாளோ. அவள் மனதிற்கே வெளிச்சம். ‘எனக்கும் எதுவும் வேண்டாமென்பதை என்னால் வெளிப்படையாக அக்காவிடம் சொல்ல முடியவில்லை

ஹரே ராம். ஹரே ராம்சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தபொழுது, வளைந்து நின்ற வாலோடு அகண்ட தோள்பட்டையை லேசாக பணிந்து, பக்கத்து வண்டிக்காரரிடம் கைநீட்டி நின்று கொண்டிருந்தார் பச்சை நிற அனுமன். சின்ன வயதில் மகாபாரதக் கதையை சொல்லும் பொழுது, ‘பண்ணிரெண்டு வருட வனவாசத்தை விட ஒரு வருட அஞ்ஞாத வாசந்தான் கொடுமையானதுஎன்பாள் ஆச்சி

காட்டுலதான பயமா இருக்கும். புலி சிங்கம்லாம் இருக்கும். அஞ்ஞான வாசம் நாட்டுலதான இருந்தாங்க. அப்புறம் எப்படி அஞ்ஞாத வாசம் வனவாசத்தவிட கஷ்டமாயிக்கும்? என்று ஆச்சியிடம் கேட்டிருக்கிறேன். ‘அது சரிஎன்று கன்னத்தைக் கிள்ளி விட்டு ஆச்சி சிரிப்பாள்.

ஹரே ராம். ஹரே ராம். ‘இப்பொழுது அனுமன் என் முன்னால் பணிந்து நின்று கொண்டிருந்தான். நான், அக்கா, அவள், பக்கத்து வண்டிக்காரர் எல்லோருமே பச்சை நிற உடையில், உப்பிய சிவப்பு தாடையோடு, பெருத்த பின் வாலோடு கைகோர்த்து நடந்து கொண்டிருந்தோம்

*******

npadmakumari1993@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. மனிதர்களிடம் இருந்து நம்மை நம் உணர்வுகளை மறைத்துக் கொண்டு வாழ்வது தான் கடினம்!எவ்வளவு அழகாக அனாயாசமாக அதை சந்ததி சந்ததியாக நம்மால் செய்ய முடிகிறது!சிறுகதை மனதில் நின்றது❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button