ஆத்மார்த்தியின் ‘சேராக் காதலில் சேர வந்தவன்’ நூல் வாசிப்பு அனுபவம் – ஜான்ஸி ராணி
தலைப்பு : சேராக் காதலில் சேர வந்தவன்
ஆசிரியர் : ஆத்மார்த்தி
வகைமை : சிறுகதைகள்
தற்போதைய வெளியீடு :எழுத்து பிரசுரம்
( முதல் பதிப்பு : ஆழி பதிப்பகம்)
12 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. “அதிபுனைவுக் கதைகளின் மீதான கிறக்கத்தில் இந்தக் கதைகளை எழுதினேன்…” என்று ஆசிரியர் தன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
கற்பனைகளின் சிறகுகளுக்கு யதார்த்தத்தின் கால்கள் தேவையில்லை என்பதே எத்தனை சுவாரஸ்யமானது..! கதைகளில் இடம்பெற்றுள்ள மிளிர்,தத்ரூபன்,சர்வசகி,யாமா போன்ற கதாபாத்திரங்களின் பெயர்கள் வசீகரிக்கின்றன.
பச்சை,மஞ்சள் என பல்வேறு நிறங்களில் பெய்யும் மழை,சாலைகளில் ஒருபுறம் வழியும் ஐஸ்க்ரீம் குழம்பு, சாக்லெட் நதி என படிக்கும் போது நம்முள் உறைந்திருந்திருக்கும் பால்யகால ஃபேன்டஸிகள் உயிர்ப்படைகின்றன. வேற்றுக் கிரகம், ரோபோக்கள், ஒளியாண்டுப் பயணம், அல்கோபேனல் போன்ற science fiction elements ம் உண்டு.
மினியேச்சர்களின் மீது அலாதி ப்ரியம் கொண்ட எனக்கு, கதாநாயகன் வரையும் ஓவியத்திலிருந்து உயிர் பெற்று சிறிய உருவங்களாய் உலவும் காட்டு மிருகங்களும் மனிதர்களும் இடம்பெற்ற “கற்பனா” என்ற கதை ஈர்த்தது.
சிலவற்றில் கதையின் இறுதி வரியை ஊகிக்கக்கூடிய சாத்தியங்கள் மெல்லிய சலிப்பை ஏற்படுத்தினாலும் புதிதாய் புத்தகங்களின் உலகிற்கு வருகைதரும் வாசகருக்கு வித்தியாசமான வாசிப்பானுபவத்தை நல்கும் கதைகள் என்பதில் ஐயமில்லை.
“..இந்த இருபத்தைந்தாம் நூற்றாண்டில் பழைய கடவுள்களைக் கூட தடை செய்துவிட்ட சர்வ பல அரசாங்கத்தால் தடுக்கவே முடியாத ஒன்றும் உண்டு தெரியுமா…?”
கனா கேட்டாள் “அப்படி என்ன அது?”
“யோ எனக்குச் செய்தது உதவி அல்ல.ப்ரதிபலன்…” என்று அட்டகாசமாய்ச் சிரித்தவர் சொன்னார்.
“லஞ்சம்..புராதானமானது..
ஒழிக்க ஒழிக்க முளைத்துக் கொண்டே இருப்பது.”
(நூலிருந்து)…