இணைய இதழ்இணைய இதழ் 47சிறுகதைகள்

அது ஒரு கலை – நித்வி

சிறுகதை | வாசகசாலை

சென்னையில் இருந்து மகன் வந்து இரண்டு நாட்கள் ஆகிறது ஆன போதும் மகனுக்கும் மருமகளுக்கும் கறி எடுத்து வாய்க்கு ருசியாக செஞ்சு போட முடியலயே என்ற ஒரு சின்ன வருத்தம் சுந்தரத்திற்கு. மகன் வந்திறங்கிய மறுநாளோ ஆயுத பூஜை அதற்கு அடுத்த நாளோ விஜயதசமி, ராசத்தியம்மாள் ஒரு வாரத்திற்கு முன்பே வீட்டை நன்கு கூட்டிப் பெருக்கி சாணிக் கரைசல் கொண்டு வீடு மொத்தத்தையும் மொழுகி விட்டிருந்ததால்.. 

நல்ல நாள் முடியும் வரை கவுச்சி எடுக்கக் கூடாது என கறாராகச் சொல்லி விட்டாள். சுந்தரமும் ராசாத்தி பேச்சை தட்டுவதில்லை நாக்கை அடக்கிக் கொண்டு உஸ்மான் பாய் கறிக் கடை இருக்கும் தெருப்பக்கமே போகாமல் வரப்பு வெட்டி விட்ட வாய்க்காலைப் போல வேறு வழி சென்று வந்தார் கறியைப் பார்த்தால் நாக்கு சொட்டாயம் போட ஆரம்பித்து விடுமோ என்ற பயம் சுந்தரத்திற்கு. வாரத்திற்கு நான்கு நாட்களேனும் கறி சாப்பிடாமல் இருக்க மாட்டாருயா மனுஷன் என்று ஊருக்கே தெரியும் அவர் பவுசி. இருந்த போதிலும் அவர் ராசத்தியின் பேச்சுக்கு இசைந்து கொடுத்துதான் போவார் மனைவியின் மீது ஏகபோக பிடித்தம் அவருக்கு.   

மேற்குத் தெருப்பக்கமாக நடந்து வீடு சென்று கொண்டிருந்தார் எதிரே உஸ்மான் பாய் கடையில் ஆடு வெட்டும் பையன் வந்து கொண்டிருந்தான். சுந்தரம் அவனைப் பார்த்ததும் தண்ணி தெளித்த ஆட்டைப் போலவே தலையை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக சிலிர்த்துக் கொண்டார். அவன் அதை சட்டை செய்தவனாய் தெரியவில்லை. கடந்து சென்றனர். கறியை நினைக்க நாக்கு தன்னால் சுழன்றது.

“என்ன மாப்ள இந்தப் பக்கமா வார? எங்க தெருப்பக்கமே நீயி வரவே மாட்டியே..என்ன சமாச்சாரம்?” 

“ஆமா, ஒன் தெருப்பக்கமே வர மாட்டேன் என்ன சிங்கத்தயா அவுத்து விட்ருக்க”

“யோவ், விஷயத்த சொல்லுய்யா என்னான்னு?”

“அத ஏய்யா கேக்குற. எல்லா ஒன் தங்கச்சி பண்ற அட்டூழியந்தே, அவனே ஆடிக்கு ஒரு விசையும் அம்மாசைக்கு ஒரு விசையுந்தே ஊருக்கே வரான். வந்தவனுக்கு கறி கிறி எடுத்துப் போடலாம்னு பாத்தா விட மாட்ராளே ஒன் தொங்கச்சி. வீடு கழுவிட்டேங்றா.. பூச போடனும்ங்றா.. ஒரே வார்த்தயா ரெண்டு நாள் செண்டுதான் கறி எடுத்துக்கணுட்டாயா”

“சரி, என் மருமகன் எப்டி இருக்கயான்?”

“அவனுக்கென்ன, நல்ல வேல. அமஞ்சிருக்க பிள்ளையும் நல்ல கொணத்துக்காரி. முத்து கணக்கா எம் பேரே. நல்லா இருக்காங்கய்யா. சரி, நான் விசுக்குன்னு வீடு போயிச் சேர்றேன். இல்லேனா அவகிட்ட வாங்கி கட்டிக்க வேண்டியதுதே. நான் வாரேன்யா” 

“சரி பாருங்க மாப்ள. நானும் கிளம்புறேன்” – விறு விறு வென நாலு எட்டு வைத்து வீட்டைச் சென்றடைந்தார். வெளியே நிறுத்தப்பட்டிருந்த மகனின் காரைக் கடந்து செல்ல மேலேயிருந்து “சொத் சொத்” என இரு சத்தங்கள் அவர் கால்களை நிறுத்தியது. மேலே ஏறிட்டுப் பார்க்க வேப்ப மரத்தின் கிளைகளில் இரு காகங்கள் வேப்பம் பழத்தை கொத்திக் கிழித்துக் கொண்டிருந்தது தன் கை விரல்களை கவட்டையான் கல் அடிப்பது போலச் செய்யவும் கரைந்து கொண்டே இரண்டும் எதிர் மரத்தின் உச்சியில் சென்று தஞ்சம் புகுந்தது.. திண்ணையில் இருந்த துணியை எடுத்து எச்சங்களை துடைத்தெறிந்துவிட்டு நகர, காரின் பின்னே சில குரல்கள். விளையாடிக்கொண்டிருந்த சின்னதுகளை அதட்டினார். மறுபக்கமிருந்து சுந்தரத்தின் பேரன் “தாத்தா, நாங்க எல்லாரும் ஒன்னாதான் விளையாடுரோம்”

“அதில்ல கண்ணா. வெளாடும் போது கார்ல ஏதும் இடுச்சுக்கிட்டீங்கண்ணா அதான் அந்த பக்கமா போயி வெளாடுங்க போங்க”

“நான் காருல என்னலாம் இருக்கும்னு இவங்களுக்கு சொல்லிக்குடுக்குறேன் தாத்தா”

“அப்படியா கண்ணா” என்று சிரித்துக்கொண்டே அவன் தலையை தடவிக் கொடுத்தவாறு உள்ளே சென்றார்.. அடுப்பறைப் பக்கம் தலையை நீட்ட மருமகள் சமைத்துக்கொண்டிருந்தாள்.விருட்டென தலையை பின் பக்கமாக இழுத்தார்.. குளித்து முடித்து உள்ளே வர வழக்கமாக அமரும் நாற்காலிக்கு அருகில் மேஜையின் மீது ஆவி பறக்க காபி என்னை அருந்துங்கள் என்று அவரை அழைத்தது, அழைப்பை ஏற்றுக்கொண்டு அவரும் அருந்தினார்.. இது ராசாத்தி போட்ட காபி இல்லை என்பதை வாயில் வைத்த மாத்திரத்தில் தெரிந்து கொண்டார்.. மருமகளின் குணத்தை மனதிறக்குள்ளே மெச்சிக்கொண்டார்.. 

பம்பரத்தை போல் ராசத்தியம்மாள் சுழன்று கொண்டிருந்தாள் ஆயுத பூஜையிலேயே அவள் முழு கவனமும் இருந்தது. சுந்தரத்தை பார்த்ததும் முகத்தை கோணித்துக் கொண்டு, “வீட்டுல எவ்வளோ வேல கெடக்கு நீங்க என்னன்னா வெளிய போயிப்போட்டு இவ்ளோ நேரங்கழிச்சு வர்றீங்க, நாஞ் சொல்றதையெல்லாம் சட்டுப் புட்டுன்னு வாங்கிட்டு வாங்க” – சந்தனம், குங்குமம், பொறி, சுண்டல், பத்தி, சூடம் என அடுக்கடுக்கான பட்டியல் தயாரானது. 

“மறக்காம எல்லாத்தையும் இப்பயே சொல்லிரு அப்பறம் அத மறந்துட்டே இத மறந்துட்டேனு மறுக்கா கடைக்கு போயிட்டு வாங்கண்ணு சொல்ற சோலியே வேணா சொல்லிட்டே” 

“அம்புட்டுதுத்தே.. அம்புட்டுதுத்தே” – என்று கோணித்த முகத்துடன் கூறிக்கொண்டே மாட்டுக் கொட்டகைக்குப் போனாள். சுந்தரம் சீட்டையும் பையையும் எடுத்துக்கொண்டு உஸ்மான் பாய் கடைத் தெருப்பக்கம் போவதைத் தவிர்த்தார்.. 

ஏர்க்கலப்பை, கதிர் அரிவாள், என விவசாயக் கருவிகளும் பால் கறக்கும் பண்ட பாத்திரங்களும் இன்று தான் சவுகரியமாக குளியல் ஆடின. அவைகளெல்லாம் குளித்து முடித்தவுடன் சாமி படங்களுக்கு முன்பாக அனைத்திற்க்கும் சந்தனம் குங்குமம் வைத்து தீபாராதனை காட்டி வேண்டிக் கொண்டனர். பூஜை முடிந்ததும் பிரசாதமாக சுட சுட சுண்டல்பயறு, பொறி, வாழைப்பழம் மூன்றும் தட்டில் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. சுந்தரம் தன்னிடம் வேலை செய்பவர்களை வீட்டிற்க்குள் அழைத்து புதுத் துணியுடன் பணத்தையும் கொடுத்தார். இதற்கிடையில் பேரனும் வேகமாக அவனுடைய நோட்டு புத்தகத்திற்கு சந்தனமும் குங்குமமும் வைத்துக்கொண்டான்.  வேலையெல்லாம் முடிந்தது. டிவியின் முன் அனைவரும் இருக்கையை அமர்த்தினர். “நல்ல நாள் அதுவுமா ஏதாச்சு நல்ல படம் போடுறானா பாரு” என முனகிக்கொண்டாள் ராசாத்தி.. 

வயிற்றை பிடித்துக்கொண்டு உள்ளிருந்து ஓடி வந்தவனை மகனிடம் விடாமல் அவரிடம் இழுத்துக்கொண்டார்..

“என்னடா கண்ணா?”

“வயிறு வலிக்கிது தாத்தா “

“எப்ப இருந்து வலிக்கிது?”

“அப்பதைல இருந்து வலிக்கிது”

அவன் வயிற்றை தடவிப் பார்த்தார். “எந்தப் பக்கம் வலிக்கிது?”

முழு வயிற்றையும் தொட்டுக் காட்டினான்.. அதற்க்குள் ஓமத்திராயத்தை தம்ளரில் கொண்டு வந்து சுந்தரத்திடம் நீட்டினால், தம்ளரை வாயில் வைத்தவுடன் பொறை ஏறிவிட்டதைப்போல் துப்பினான். 

“எனக்கு இது வேணாம். நல்லாவே இல்ல “

“குடிடா. வயிறு வலியெல்லாம் சரியாப் போயிரும் “

மாட்டேன் மாட்டேன் என்று தலையசைத்தவனை இறுகப் பிடித்து வாயைத் திறந்து கப்பென ஊற்றி விட்டால், அது உள்ளே சென்றதும் முகத்தை சுழித்துக் கொண்டு பல விதமான பாவனைகளைக் காட்டினான். சுந்தரமும் ராசத்தியும் சிரித்துக் கொண்டே அவன் முதுகுப்புறம் தடவிக் கொடுத்து, “ஒன்னும்மில்ல, சரியாப் போயிரும்டா கண்ணா” என்று சொல்லி அவனை தன் மடியில் அமர்த்திக் கொண்டனர். 

காலையிலிருந்து வேலை செய்து அலுத்த உடம்பு பதிலுக்கு தூக்கத்தை கேட்டது. சீக்கிரமாகத் தூங்கும் எண்ணத்திலேதான் இருந்தனர். சாப்பிட அமர்ந்திருந்த ஒவ்வொருவருடைய தட்டும் நிறைந்தது பின்னே அவை மெது மெதுவாக குறையத்தொடங்கியது. ஒரு தட்டில் உள்ள சோறு மட்டும் காலியாகாமல் சாப்பிடுபவரை பார்த்து முறைத்துக் கொண்டது. “உன் தட்ட தேடி வந்துருக்கேன் சாப்புடமாட்டியா” என்று கேட்பது போல் இருந்தது அது முறைத்த முறைப்பு. பேரனோ வயிற்றை பிடித்துக் கொண்டு அலைக்கழித்தான். 

“என்னால சாப்புட முடியல. வயிறு இன்னும் வலிக்கிது”

“கொஞ்சமா சாப்புடுரா. ராவுல சாப்புடாம தூங்கக்கூடாது. அப்பத்தாவுக்காக கொஞ்சம் சாப்புடுரா. வா, ஒரு வாயி சாப்புடு” என்று சோற்றை பிசைந்து ஊட்டி விட்டாள். “நாளைக்கு விடியக்கருக்குல கூட்டிப் போயி தொக்க எடுத்துட்டு வந்துறலாம். தொக்க ஏதும் இருக்கோ என்னமோ.. அதேன் பயே இப்புடி கெடந்து துடியா துடிக்கிறியான்..”. மருமகளின் ஆர்வம் எட்டிப்பார்த்தது. கணவனிடம் கேட்டாள். 

“தொக்க எடுக்குறதுனா என்ன வினோத்? நான் கேள்விப்பட்டதே இல்ல!!!”

“நாம அவசர அவசரமா சாப்புடும் போது ஏதாச்சும் வயித்துக்குள்ள சிக்கிருக்கும் அத தான் தொக்கம்னு சொல்லுவாங்க. அப்படி சிக்கிருக்கத வெளிய எடுக்குறதுதான் தொக்க எடுக்குறது” 

“இஸ் இட் பாசிபிள்?”

“யா ராஜி. ஐ வில் டெல் யு எ ஸ்டோரி” – என்று மனைவிக்கு கதை சொல்ல ஆரம்பித்தான் .. 

“நா ஒரு நாள் இதே போலத்தான் வீட்டுல நடந்த விசேஷத்துல நல்ல வயிறு முட்ட சாப்டேன். விசேஷ சாப்பாடுன்னா எனக்கு ரொம்ப புடிக்கும். எங்கம்மா ஏதாச்சும் விசேஷத்துக்கு போன நானும் கூடவே ஒட்டிக்குவேன். அதுலயும் அங்க வைக்கிற உருளக்கிழங்கு பட்டாணி கூட்டு இருக்கே பத்து தடவ கூட வாங்கி வாங்கி சாப்புடுவேன் திட்டு வாங்கிக்கிட்டே. அவ்ளோ இஷ்டம் அது. அப்புடி அன்னைக்கு தின்னதுக்கு வந்த வென தான் சரியான வயித்து வலி. ஓமத்திராயம் குடுத்தாங்க. பெருங்காயத்த தண்ணீல கலக்கி குடுத்தாங்க. எல்லாமே குடுத்துப் பாத்தாச்சு. வலி மட்டும் கொறயல. அப்பதான் எங்க கிழவி சொல்லுச்சு, ‘லேய் சுந்தரம், வெள்ளனா கிளம்பி போயி தொக்க எடுத்துட்டு வாங்கடா’ . நானும் அது என்னான்னே தெரியாம அத பத்தி யோசிச்சுக்கிட்டே படுத்து தூங்கிட்டேன்.. காலைல அஞ்சு மணிக்கெல்லாம் வந்து எழுப்பி விட்டாங்க. நான் கண்ணுல இருக்க பூலைய கூட முழுசா தொடைக்கல. அதுக்குள்ள அப்பா என்ன தூக்கி சைக்கிள்ள ஓக்கார வச்சு கெளம்பிட்டாரு.. போற வழியெல்லாம் அந்த இடம் இந்த இடம் என்ன ஏதுணு இளவட்டத்துல அவரு செஞ்சத எல்லாம் சொல்லிக்கிட்டே வந்தாரு. எனக்கு வலி தெரியாம இருக்க. எனக்கும் அத கேக்க ஆர்வம்,கேட்டேன். ஊருக்கு கடைசியில இருக்க தோட்டம். தோட்டத்துக்கு குறுக்க இருந்த வீட்டுக்கு முன்னாடி சைக்கிள ஸ்டாண்ட போட்டு, என்னய கூட்டு போயி உள்ள உக்கார வச்சுட்டு “ஆத்தோவ்” ..ஒரு பத்து செகண்ட் கேப். மறுபடி “ஆத்தோவ், மகெனுக்கு தொக்க எடுக்க வந்துருக்கேன்”னு ஒரு சத்தம், உள்ள இருந்து ஒரு அம்மா வந்தாங்க. ரொம்ப வயசானவங்கண்ணு சொல்லீர முடியாது, நெத்தில ஒரு பெரிய வட்டப் பொட்டு. மஞ்சள் பூசுன மூஞ்சி. அவங்க என்னய பாத்து நடந்து வர வர எனக்கு இங்க பயம் கொள்ளல. என் பக்கத்துல வந்து ஒரு வார்த்த கூட கேக்கல. பக்கத்துல இருந்த சாமி படத்துக்கிட்ட ஒரு சின்ன பொட்டி. அத தொறந்தது உள்ளருந்து பைப் மாதிரி ஒன்ன எடுத்தாங்க. அத  தொக்க எடுக்க யூஸ் பண்ற டூல்னு கூட சொல்லலாம். அத கையில எடுத்து கண்ணுல வச்சு மேல பாத்து சாமிய கும்புட்டாங்க. அப்பா என்னய ‘ஆ’ காட்ட சொன்னாரு. காட்டுனதும் அந்த பைப்ப என் வாய்க்குள்ள விட்டு ஊதுர மாதிரி ஏதோ பண்ணாங்க. அஞ்சு செகண்ட் கூட இருக்காது. அவ்ளோதா முடிஞ்ச்சு. என் காலுல பட்டு பட்டாணி ஒண்ணு கீழ விழுந்துச்சு. அப்பா அத எடுத்து வச்சுக்கிட்டு, பையில இருந்து ஒரு பத்து எடுத்து குடுத்தாரு. அவங்க அத வாங்கி கண்ணுல ஒத்திக்கிட்டு மறுபடி உள்ள போயிட்டாங்க. நானும் வயித்து வலிய அவங்க வீட்டுலயே விட்டுட்டு வந்துட்டேன்..அவ்ளோதான் கதை முடிஞ்ச்சு…. “       

“அந்த கெளவியெல்லாம் இப்ப இல்லடா. தொக்க எடுக்க டவுனுக்குதான் போகணும்.. இருந்த ஒருத்தரும் மக வீட்டுக்கு போயிருக்காரு. அதனால நம்ம டவுனுக்கு தான் போயாகனும்..” 

“கறி ஏதும் இடைல குடுத்தீங்களா?” 

“இல்லப்பா, இவளும் ஏதோ வேண்டுதல்னு சொன்னா அதனால ஒரு மாசம் ஆச்சு” 

“சரி, காலைல நானும் வாரேன் உங்க கூட” – என்று சொல்லி விட்டு படுக்கைக்கு சென்றார். 

காலையிலேயே சீக்கிரம் டவுனுக்கு வந்து தொக்கம் எடுக்கும் இடத்தை விசாரித்துவிட்டு சென்றனர். அங்கு “இங்கே தொக்கம் எடுக்கப்படும் ரூபாய் ஐம்பது” என்று எழுதி தொங்கவிடப் பட்டிருந்தது.. தொக்கம் எடுக்க நீண்ட நெடிய வரிசையே காத்திருந்தது அதனருகிலேயே ஒரு லெமன் சோடா கடை. 

“என்னப்பா இவ்ளோ கூட்டமா இருக்கு?”

“நானே இப்போதான் இங்க வாரேன். கேள்விப்பட்டேன் இப்புடித்தான்னு..மொத தரம் இப்பதே பாக்குறே. அதுக்குன்னு இவ்ளோ டிமாண்டா” என்று அதிர்ச்சியானார். 

“என்ன பண்றது..மனுச ஒடம்பு கெட்டுப் போச்சு. தொட்ட தொண்ணூறும் கேடு.. அதனாலதான் இதெல்லாம் யாவரமாகிப்போச்சு” – என்று புலம்பிக் கொண்டே வரிசையில் சென்று இடம் பிடித்தனர். ஒவ்வொருவரும் தொக்கம் எடுத்து விட்டு வெளியே வர, அருகில் இருந்த லெமன் சோடா கடைக்காரன் ஒவ்வொருவரிடமும் தம்ளரை நீட்டினான். 

“இதெல்லாம் குடிக்கணுமா தொக்கம் எடுத்த பின்னாடி?”

சுந்தரம் சிரித்துவிட்டு, “உனக்கு எடுத்தத நெனச்சு பாரு இதயும் பாரு. எப்டி யாவரம்? இவிங்க இப்புடி மாத்திட்டாய்ங்க..வேற ஒன்னுமில்ல.. பாப்போம் வா” என்றவாறு உள்ளே நுழைந்தனர். 

அவனை மட்டும் அங்கிருந்த சேரில் அமர்த்திவிட்டு இருவரும் நின்றனர். நெற்றியில் பட்டை..அதற்கிடையில் பெரிய சந்தனப் பொட்டு, காவி வேஷ்டி, மேல் சட்டை இல்லை அவர் கையில் இருந்த அந்த பைப்பை அவர் கண்ணில் வைத்து மேலே பார்த்து சாமியை கும்பிட்டு விட்டு அவன் வாய்க்குள் திணித்தார், அஞ்சு செகண்ட் கூட ஆகவில்லை அவன் கால்களை உரசிக்கொண்டு கீழே விழுந்தது ஒரு சிறிய ‘எலும்புத் துண்டு’.

*****

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button