திட மாத்திரை
வில்லைகளோடு
மஞ்சப்பையை
அலசியெடுத்து
தொலைவு நீண்ட
பொழுதைக் கழிக்கும்
கிடா மீசை அப்பாவுக்கு
அரும்புகின்றன
மரணத்தின் வலிகள்
தொலைத்த நினைவுகளின்
மௌனப்பார்வையில்
நகர்கின்றன
மெல்ல அசையும்
பூங்கண்கள்.
***
கண்டங்களாக்கப்பட்ட
இளம் மேனியில்
நரம்பினூடே
சொடுக்கி வழிந்தோடுகின்றன
வெதுவெதுப்பான
குருதிச் சொட்டுகள்
கொடூரத்தின்
உச்ச வெளியில்
நகர்கின்றன
நீள் படுகொலைகள்.
***
மீசை வைத்த
மெல்லிய வெளிர்நிற
பூங்குஞ்சு மீன்கள்
முண்டியெழும்புகிற
வெங்காயத் தாமரைகளுக்கிடையில்
வெளுத்துக் காய்கின்றன
ஒருநாள் திருவிழாவில்
கழற்றி வீசப்பட்ட
செந்நிற ஆடைகளும்
மழித்து வீசப்பட்ட
மயிர்க்காம்புகளும்.
***
கனத்துப் பெய்யும்
பெருமழையின் போதெல்லாம்
மனதை அலைக்கழிக்கும்
தகரக்கொட்டறை வீட்டில்
மரக்கட்டிலுக்கடியில்
பதுங்கும் பூனையென
கோணிச் சாக்குகளை
இழுத்துப் போர்த்திய
கதகதப்பின் நினைவுகள்
இப்போது
உச்சித் தூற்றல்
கொடிப்பிச்சியருகே
பின்னிக்கொண்டு வருகிறது
தலவாசலை நுகரும் போதும்…
********
– ayyanaredadimduttm97@gmail.com –