ஆதிச்சுயம்பு
திரண்ட சங்கினைப் போல்
எந்நேரமும் உன் பிரிவையே
இசைக்கிறது வாழ்வு
விளிம்பிலிருந்து பொங்க மறுக்கும்
பாலென கடைசிக் காதல் சுண்ட மறுக்கிறது
விசிறியெறிந்த பயணச்சீட்டு
ஆழ்நதியில் மூழ்கிப்போக
தின்று செரித்த மீனின் மீள்பயணம்
வழித்துணையோடு நீளட்டுமாக.
வாழ்வில் எல்லாமே கேட்டேனே கடவுளே
என் துன்பத்தை மட்டும் நீயே எடுத்துக்கொள்ளேன்
விரல் இடுக்கில் ஒழுகும் தீர்த்தமாய்
அவளைச் சிந்திவிட்ட துயரே போதாதா எனக்கு
என்னதான் புலம்பினாலும்
சில பருக்கைகளோடே
கழுவப்படுகிறது உணவுதட்டு
கொஞ்சமேனும் தங்கிவிடுகிறது
தேநீர் – குவளையுள்
எப்படிப் பொருந்தும்
ஆதிச்சுயம்பும்
கல்லான மரத்தின் வயதும்.
***
மறுப்பு
மூவண்ண அடுக்குகளால் ஆன
நீலத் தொடுவானம் ஒற்றை நிலவை
அவிந்த எரிநட்சத்திர ஆணி கொண்டு
சிறும ஓவியமாய் அவன்
பார்வையில் மாட்டப்பட்டிருந்தது
பெரிய கரியமேகம் மிதந்து
நிலவை மறைத்ததால் அது
கடந்து போகும் வரை
இத்யாதி அழகைப் பார்க்கலானது
சிறு பறவைக் கூட்டத்திலிருந்து
ஒரு பறவை மட்டும்
அதன் குழுமத்தை
அவ்வப்போது பிரிந்து
வானத்தின் தனித்த மௌனத்திற்கு
ஒரு சிறகைத் துணைக்கு உதிர்த்தது
வானெங்கும் அது மிதந்திடும்படி
மேலும் ஒரு ஜெட்
நீளக் கோடு கிழித்து
அந்தி வானிலிருந்து
இரவை பிரசவிக்கச் செய்வதற்கும்
நிலவு மீண்டும் கண்களில்
ஒளியேற்றுவதற்கும்
சரியாக இருந்தது
பக்கத்துக்குப் பக்கத்து வீட்டில்
பெண்ணொருத்தி நைட்டியை
முழங்காலுக்கு மேல்
மடித்துக் கட்டுகையில்
மொட்டை மாடிக் காற்றோடு
அசைந்து அரை நொடி தெரிந்த
பின் தொடையின் சுருண்ட நரம்பு மட்டும்
ஏனோ மனதிலிருந்து விலக மறுக்கிறது.
***
இன்மை
நெடுவெண்ணிலா நடுவானுக்கு
மெல்ல நடையிடும் நள்ளிரவில்
உருள் வடிவ நிலைக்கண்ணாடியை
மார்புக்குக் கீழே ஏந்தி
வானை நோக்கி மலைக்கு மேலே
ஏன் நின்றாளாம் பல்லாண்டு?
மறந்து போன கனவில்
அவளேந்திய கண்ணாடி வழி வந்த
செவ்வான முக வாலிபன் சொன்னானாம் ஒன்று
மறக்கவியலா இனிய சொல்லான அதை
மறந்தாளாம் நனிநன்று
இதுபோலத்தான் என்னாச்சி
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆச்சி
துணைக்குக் காத்திருந்து
யௌவனம் தொலைச்சு சாமியாச்சு.
கேட்டு மனமுவந்து
கண்ணாடியைத் தூக்கி எறிந்தாளாம்
அந்நேரம் பார்த்து மரம் தாவிய குரங்கு
அதைப் பற்றிக்கொள்ள
தூக்கியெறிந்த தலைவிக்காக
காதலுற்று நின்றதாம் மர உச்சியிலே
அனும பிரம்மச்சாரிய நீதிக்கதையைச்
சொல்லலாமென்றால்
குரங்கு பாஷை அறிஞ்ச
யோக்கிய ராமன் ஒருத்தன் இல்லே
இலக்குவன்தான் சரி குறி அறுத்தெறிய.
******