சிறுகதைகள்
Trending

பலி கடா – சங்கர்

சிறுகதை | வாசகசாலை

“இவர்களுக்கு எவ்வாறு நாம் வாழ்க்கையில் இடம் அளித்திருக்கிறோம்” என்று எண்ணத்தைத் தரக்கூடியவர்களாக நமக்கு சிலர் இருப்பார்கள். எனக்கு வேலு என்கிற சக்திவேல் அப்படி ஒரு நண்பன். ஐந்தாம் வகுப்பிலிருந்து பழக்கம். பழக்கம் என்ற ஒரு வார்த்தையில் எங்களின் கடந்த இருபத்தி ஐந்து வருடங்களை அடைக்க முடியாது. ஊரில் பக்கத்து பக்கத்து வீடு. பள்ளியில் எட்டு வருடங்கள். கல்லூரியில் மூன்று வருடங்கள். இப்போது அலுவலகத்தில் ஒன்பது வருடங்கள். ஒரே கல்லூரியில் சேர்ந்ததோ, ஒரே அலுவலகத்தில் சேர்ந்ததோ நாங்கள் திட்டமிட்டு செய்ததில்லை. எதேச்சையாய் நடந்த விசயமாகவும் தோன்றவில்லை.

வேலுவிற்கும் எனக்கும் எந்த ஒரு விசயத்திலும் எப்போதும் ஒத்துப்போனதில்லை. எப்போதும் எதைப் பற்றியாவது விவாதித்துக்கொண்டே இருப்போம். சினிமா, இசை, விளையாட்டு இந்த தொடர்ச்சியில் தாமதமாய்ச் சேர்ந்துள்ளது அரசியல். அரசியல் என்றால் கட்சி அரசியல் பேசமாட்டோம். நான் முதலில் இந்தியன் பிறகு தமிழன் என்றால் முதலில் தமிழன் பிறகுதான் இந்தியன் என்பான். என் குடும்பம், என் தெரு, என் ஊர், என் மாநிலம் அதைப் போன்று உன் குடும்பம் உன் தெரு உன் ஊர், இவை சேர்ந்துதான் நம் நாடு உருவாயிற்று என்பான். சரிதான் ஆனால் சில நேரங்களில் இந்த வரிசையை நாட்டிலிருந்து தொடங்க வேண்டியிருக்கும் என்பேன் நான்.

கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் அந்தந்த மாநில மக்களுக்கு முன்னுரிமைக் கொடுக்க வேண்டும் என்பது சரி ஆனால் முழுவதும் கொடுக்கவேண்டும் என்பதில் நியாயமில்லை.

அப்படி யாரும் கேட்கவில்லையே. பெரும்பான்மை சொந்த மக்களுக்கு கொடுக்கலாம். ஊதாரணமாக 85%: 15%

அந்த 15% சதவிகிதம் மக்கள் வெளியே போகலாம் என்பதை யார் தீர்மானிப்பது என்று கேள்வி வரும். அதற்கு ஆயிரம் காரணங்கள் கற்பிக்கப்படும். அதன் முடிவாக 100% சதவிகதமும் மண்ணின் மைந்தர்களுக்கே என்று குரல்கள் கேட்க்க ஆரம்பிக்கும். (இப்போதும் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றன). உண்மை என்னவெனில் அப்படி  நூறு சதவிகிதம் கொடுத்தாலும் வெளியே போய்த் தேடவேண்டிய மக்களின் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கும். நம் மக்கள் தொகை அப்படி.

“தெரியுதுல்ல. அப்படி இருக்கும்போது நாங்க முழுசா கேக்காம இருக்கிறத நீங்க பாரட்டனும்ல”

எப்போது ஆரம்பித்தாலும் நாங்கள் ஒரு முடிவுக்கே வந்ததில்லை. எதாவாது ஒரு புள்ளியில் ஆரம்பித்து தொடர்ந்துகொண்டே இருப்போம். நாங்கள் இப்படிப் பேசிப் பேசி எதை அடைகிறோம் என்று தெரியாது. சில சமயம் பேசவேண்டுமென்று எதையாவது பேசுவோம். சில சமயம் எங்கள் தரப்பிற்கு வலு சேர்க்கப் புள்ளி விபரங்களைத் தேடிக்கொண்டிருப்போம். பல சமயங்களில் நாங்கள் பேசும் விசயங்களைப் பற்றி எந்தவிதமான அறிவும் எங்களுக்கு இருக்காது. இருந்தாலும் பேசுவோம். “உங்களுக்கு என்னதான்டா பிரச்சன” எனக் கேட்க்காத நண்பர்களே இல்லை.

என்னைப் பார்த்தவுடன் அவனுக்கும், அவனைப் பார்த்தவுடன் எனக்கும் ‘ஆல்டர் ஈகோவை’ சந்திக்கும் உணர்வு உண்டாகிறதென்று நினைக்கிறேன்.

அப்படியும் சொல்லிவிட முடியுமா?,  நாங்கள் எப்போதும் மோதிக்கொள்வதற்கு வேறு காரணங்களே இல்லையா?.

வேலு என்னைவிடத் திறமைசாலி. அலுவலகத்தில் ஐநூறு பேர் முன்பு நின்று சரளமாக ஆங்கிலத்தில், தமிழில், இந்தியில் என மூன்று மொழியில் பேசுபவன். “பெஸ்ட் டீம் லீட்” என இரண்டு முறை விருது வாங்கியிருக்கிறான். அவனின் பேச்சாற்றலைக் கண்டு நானே பலமுறைப் பொறாமைப் பட்டிருக்கிறேன். யோசித்தால் ஆரம்பத்தில் விளையாட்டாய் ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல வேண்டாத பல விசயங்கள் சேர்ந்திருக்கும் என்று தோன்றுகிறது.

ஒரே நல்ல விசயம் இதுவரை விவாதம் எல்லை மீறியதில்லை. என்றேனும் ஒரு நாள் நடக்கக் கூடும் என்று பயமும் இருக்கத்தான் செய்தது

*

தூக்கம் கலைந்தாலும் கண்களைத் திறக்காமல் அப்படியே படுத்திருந்தேன். முந்தைய நாள் இரவு படுக்கும்போது இரண்டாகியிருக்கும். இன்னும் ஒரு மணி நேரத் தூக்கமாவது மிச்சமிருக்கும். மொபைலைத் தேடினேன். தலைக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு தூங்கினாலும் தினமும் எழுந்திருக்கும்போது எங்கோ ஒளிந்துகொண்டுவிடுகிறது. நீச்சல் அடித்துப் பார்த்தும் அகப்படவில்லை. வேறு வழியின்றி எழுந்திருக்க வேண்டியதாயிற்று. மணி பத்தரை ஆகியிருந்தது.

அறையை விட்டு வெளியே வந்தேன். அம்மா, அப்பா, எல்லோரும் வாசலில் நின்றுகொண்டிருந்தார்கள்.

“என்னம்மா ஆச்சு?” சோபாவில் கிடந்த டீசர்ட்டைப் போட்டுக்கொண்டு அவர்களுடன் போய்ச் சேர்ந்துகொண்டேன்.

எங்கள் தெருவே வெளியே நின்றுகொண்டிருந்தது. எல்லோர்க் கண்களும் வேலுவின் வீட்டின் மேல்.

பச்சைக் கலர் வேன் ஒன்று நின்றுகொண்டிருந்தது. வண்டியின் பின்னால் “தொடர்ந்து வா தொட்டு விடாதே” என்று எழுதியிருந்தது. அதற்கு முன்னால் ஆண்களும், பெண்களுமாக பதினைந்து இருபது பேர். முக்கால்வாசிப் பேர் நாற்பதுகளில் இருப்பார்கள். ஒன்றிரண்டு கரை வேட்டிக் கட்டியப் பெருசுகளும் இருந்தார்கள். சக்திவேல் குடும்பம் மொத்தமும் வெளியே நின்றுகொண்டு வந்திருந்தவர்கள் ஒவ்வொருவரிடமும் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். அவனின் அம்மா, பெண்கள் கூட்டத்திடமும், அப்பாவும், தம்பியும் ஆண்கள் கூட்டத்திடமும். எங்கள் வீடும் அவர்கள் வீடும் ஒட்டி ஒட்டிதான் இருந்ததால் அங்கு பேசுவது எல்லாம் தெளிவாகக் கேட்டது. எங்கள் ஊரில் கூட்டம் கூடுகிறதென்றால் பெரும்பாலும் ஏதாவது பிரச்சனையாக இருக்கும் அல்லது பிரச்சனையில் முடியும்.

“ம்மோவ்… என்ன நடக்குது?”

“சக்திவேலு அப்பா இருக்கார்ல… அவரோட பெரியப்பா பையன் பேரும் இவரு பேரும் ஒன்னு போல” அம்மா எனக்கு மட்டும் கேட்க்கும்படி கதையைச் சொன்னாள்.

வேலுவின் அப்பா பெயர் சண்முகம். அவருடைய பெரியப்பா மகனின் பெயரும் சண்முகம். வந்திருந்தவர்கள் எல்லாரும் வேலுவின் அப்பா வகை நெருங்கிய, தூரத்துச் சொந்தங்கள். அதிலொருவருக்கு சண்முகத்தின் அம்மா இறந்துவிட்டாரென்று போன் வந்திருக்கிறது. பதட்டத்தில் எந்த சண்முகம் என்பதைக் கேட்க்காமல் வேலுவின் வீட்டிற்கு வண்டி கட்டிக்கொண்டு வந்துவிட்டிருக்கின்றனர்.

சிரிப்பை அடக்க முடியாமல் நின்றுகொண்டிருந்தேன். “டேய். சும்மா இரு. எங்கோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறாத்தான்னு நம்மளப் புடிச்சுக்கப் போறாங்க” நான் வேலுவைத் தேடினேன். அடுத்தமுறைச் சந்திக்கும்போது கேட்பதற்கு கேள்விகள் கிடைத்த மகிழ்ச்சி எனக்கு. வேலு கூட்டத்திலிருந்து விலகி மூலையில் நின்றுகொண்டிருந்தான். வழக்கத்திற்கு மாறாகப் பதட்டமாக இருந்தான். அவன் முகத்தில் கவலைத் தெரிந்தது.

“ஆஸ்பத்திரிக்கும் எதுக்கா கூட்டிப் போய் காட்டிருவமா?” ஒரு அம்மா அப்பாவியாய்க் கேட்க்க வாய்விட்டே சிரித்துவிட்டேன். வேலு பார்க்கிறானா என்று பார்த்தேன். அவன் இந்தப் பக்கமே திரும்பவில்லை.

“டேய். வாய மூடிட்டு இருன்னு சொல்றேன்ல பேசாம நிக்கிறதுன்னு நில்லு இல்லன்னா உள்ளப் போ” அம்மாவின் பயத்தில் நியாயம் இல்லாமல் இல்லை.

“நல்லா இருக்கப் பொம்பளைய எதுக்குயா கூட்டிட்டுப் போகனும். செத்த அமைதியா இருக்கப்போறீங்களா இல்லையா?” வந்திருந்தவர்களில் வயதானவர் எல்லாரையும் அமைதியாக இருக்கும்படி கைக்காட்டினார். “கோவிச்சுக்காத சண்முகம் இந்த காது கேக்காத முண்ட பேச்சக்கேட்டு வந்தது தப்புதான். நாங்க கெளம்புறோம்”

வேலுவின் பாட்டிக்கும் காது கேட்காது.

“அவங்க வீட்டுக்குன்னா நாங்க வரல” ஒரு மூன்று பேர், பெரியவரின் முன்னால் வந்தனர். நவக்கிரகங்கள் மாதிரி ஆளுக்கு ஒரு புறம் முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்றனர்.

“எங்கள கொண்டு போய் வீட்ல விட்டுட்டுப் போங்க.” அந்த சண்முகம் குடும்பத்திற்கும் இவர்களுக்கும் என்னப் பிரச்சனையோ.

“திரும்ப பத்து கிலோமீட்டர்லாம் போய்ட்டு வர முடியாதப்பா. இந்தா பத்து நிமிசத்துல இருக்கு அவங்க வீடு.. ஒரு எட்டு மிதிச்சா அங்க போயிருவோம்.. நீங்க எதுனா ஆட்டோ கீட்டோ புடிச்சுட்டுப் போயிருங்க”

“இது நாயமா?. சும்மா வீட்ல கெடந்தவங்கள கூட்டியாந்திட்டு இப்போ தொறத்திவிடுற மாதிரி பேசுறீங்க” நவக்கிரகத்தில் ஒன்று திசையை மாற்றிக்கொண்டு பேசியது.

“என்னயா புரியாம பேசுற. நாம என்ன நல்ல காரியத்துக்கா வந்திருக்கோம்.. அதுலயும் வீடு மாறி வந்து அசிங்கமா போச்சு. இதுல நீங்க வேற.”

“அதுலாம் தெரியாதுங்க. எங்கள வீட்ல விட்டுட்டு எங்கனா போங்க.. அவங்க தெசப் பாக்கமே நாங்க வர மாட்டோம். அவங்க செஞ்ச வேலைக்கு ஜென்மத்துக்கும் அவங்க மூஞ்சில முழிக்க மாட்டோம்”

கூட்டத்திற்குச் சம்பந்தமில்லாதவர்போல் ஒரு ஓரமாக நின்றுகொண்டிருந்த இளைஞர், வேன் ட்ரைவராக இருக்க வேண்டும், “டீசல்லாம் இல்லீங்க.. திரும்பலாம் சுத்த முடியாது” என்று குரல் கொடுத்தார்.

“நான் வேணா ஆட்டோ புடிச்சுட்டு வரவா” என்று வேலுவின் தம்பி, கேட்டான்.

“இப்போவே மணி ஆயிப்போச்சு காலைல சாப்பாட்டுக்கு யாராச்சும் வழி பாருங்க. இன்னும் அங்க போனா எவ்ளோ நேரம் ஆகுமோ?” வாயில் முந்தானையை வைத்துக்கொண்டு  நின்றுகொண்டிருந்த பெண் தன் பங்கிற்கு ஆரம்பித்தார்.

வேலு நின்ற இடத்திலிருந்து நகராமல் எல்லோரையும் அமைதியாகப் பார்த்துக்கொண்டு நின்றான்.

“டேய்…. போய் எல்லாத்துக்கும் கலரு வாங்கியா” என்று சண்முகம் வேலுவின் தம்பியைப் பார்த்துச் சொன்னார்.

“அதெல்லாம் ஒன்னும் வேணாங்க. நாங்க கெளம்புறோம் மணி ஆயிருச்சு..” அந்த கூட்டத்தின் தலைமைப் பெரியவர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார்.

அதுவரை என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று புரியாமல் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்த வேலுவின் பாட்டி திடீரென்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள்.

“நான் அப்பவே சொன்னனே. கேக்கலியே… ஊரே இப்போ ஒன்னா வந்திருக்கே.. ஐயா.. இந்த பாவிப் பய பண்ண வேலையப் பாருங்க ஐயா.. எங்கிருந்தோ எவளையோ இழுத்துட்டு வந்திருக்கான். எந்தச் சாதி சிருக்கின்னு தெரியல. கேட்டா சொல்ல மாட்றான்.. நீங்களாச்சும் கேட்டுச் சொல்லுங்களேன்… குடும்ப மானமே போச்சே” கிழவி ஒப்பாரியைத் தொடர்ந்தது.

சட்டென்று அந்த இடமே அமைதியாகியது. அதுவரை வேடிக்கையாகப் போய்க்கொண்டிருந்தக் காட்சியில் எதிர்பாராதத் திருப்பம்..

“வெளிய வாடி, இன்னும் உள்ள என்ன பண்ற, அதான் ஊருக்கே தெரிஞ்சிருச்சே, வந்து உன் மொகரையக் காட்டு” வேலுவின் பாட்டி உட்கார்ந்திருந்த திண்ணையிலிருந்து எழுந்து வாசற் படியில் போய் நின்று வீட்டினுள்ளே பார்த்துக் கத்தினாள்.

இருபத்தி ஐந்திலிருந்து இருபத்தி எட்டு வயது மதிக்கத்தக்க மாநிறமான ஒரு பெண் வெளியே வந்தாள். ஒல்லியான தேகம். அந்த இடத்திற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத முகம். எதுவும் பேசாமல் வேலுவின் பக்கத்தில் போய் நின்றுகொண்டாள்.

அதுவரை அவரவர் வீட்டிலிருந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த தெருக்காரர்களும் வேலுவின் வீட்டை நோக்கி வரத் தொடங்கினர்.

எங்கள் தெருவில் எதிர் எதிராக மொத்தம் எட்டு வீடுகள். கிராமம் என்றும் சொல்ல முடியாது நகரமென்றும் சொல்ல முடியாது. பேருந்து நிலையத்தைச் சுற்றி இரண்டு கிலோமீட்டருக்கு டவுன் என்று சொல்லிக்கொள்வோம். நாங்கள் கிராமத்திற்கும் டவுனிற்கும் நடுவில் இருக்கிறோம். இந்த எல்லையெல்லாம் எந்தப் பிரச்சனையும் இல்லாதவரை அர்த்தமற்றதாகத் தோன்றும். ஒரு சிறு பொறிக் கிளம்பினால் கூட இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பிரச்சனைப் போன்று ஊரே பற்றி எரிய ஆரம்பித்துவிடும்.

கோவிட் பிரச்சனை பெரிதாகத் தொடங்கிய பின் யாரும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. எங்கள் தெருவிற்கு அடுத்த தெருவில் ஒருவருக்கு தொற்று உறுதியானதால் வழியை அடைத்திருந்தார்கள். ஆமாம் இந்தக் கூட்டம் எப்படி வந்தது. எங்கள் தெருவிற்குள் வரவேண்டுமென்றால் அது ஒன்றுதான் வழி. நான் வேலுவைப் பார்த்து இரண்டு மூன்று வாரங்களுக்கு மேல் ஆகியிருக்கும். எப்போது எங்கே நடந்ததென்று புரியவில்லை. அவன் இதைப் பற்றி வாயே திறந்ததில்லை என்பதை நினைக்கும்போது ஆச்சர்யமாக இருந்தது.

எனக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. ஒரு நிமிடம் போலிஸைக் கூப்பிடலாமா என்று யோசித்தேன்.

வேலுவும், குடும்பம் மொத்தமும் தலையைக் குனிந்து நின்றிருந்தார்கள். எப்போது அழைத்து வந்தானோ?, அவள் வந்ததிலிருந்து வீட்டிற்குள்ளயே வைத்திருந்திருக்கிறார்கள்.

“என்ன சண்முகம் இது?” சொந்தக்காரப் பெரியவர் வேலுவின் அப்பாவிடம் கேட்க அவர் எதுவும் பேசாமல் தலை நிமிராமல் நின்றார்.

வேலு முதன் முதலாக என்னைப் பார்த்தான். கண்கள் கலங்கி நிற்பவனைப் பார்க்க  நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது. இதுநாள் வரை அவன் கண் கலங்கி நான் பார்த்ததில்லை.

“தலைவருக்குப் போனப் போடுங்கப்பா” யாரோ கத்தினார்கள்.

“நான் போலிஸக் கூப்பிடப்போறேன். வேலுவையும், அந்தப் பொண்ணயும் எதுனா செஞ்சிருவாங்க….” போனை எடுத்தவனைப் பார்த்து முறைத்தார் அப்பா. “ஊர் வம்பு நமக்கு எதுக்குடா? பேசாம உள்ளப் போ” ஏறக்குறை உள்ளே தள்ளினாள் அம்மா.

“அம்மா என்னம்மா இப்படி இருக்கீங்க? பாவம்மா அவன். எதுனா பண்ணிருவாங்க.”

“அவனையே பண்ணிருவாங்கன்னா. நம்மள சும்மா விடுவாங்களா..?” வீட்டிற்குள் வந்தவுடன் கதவைச் சாத்தினார் அப்பா.

“அப்பா. அட்லீஸ்ட் என்ன நடக்குதுன்னாவது பாக்குறேன், கதவத் திறங்க?”

“நீ பயப்படுற மாதிரி ஒன்னும் நடக்காது, ஊர்த்தலைவர், வந்தவுடன் பஞ்சாயத்து நடக்கும். அதுல பேசி ஒரு முடிவுக்கு வருவாங்க”

“கட்டப் பஞ்சாயத்தா?”

“அதெல்லாம் அப்படித்தான், நீ உன் வேலையப் பாரு”

“அந்தப் பொண்ணுக்கு ஒன்னும் ஆகிடாதுல்ல” இதுவரை செய்திகளில் படித்து வந்த ஆணவக்கொலை கண் முன்னே நடந்திருமோ? நினைத்தே பார்க்க முடியவில்லை. வேலு என்ன சாதி என்று தெரியும். அந்தப் பெண் பற்றித் தெரியவில்லை. பார்க்கப் படித்தப் பெண் மாதிரிதான் இருந்தாள். என்னிடம் கூட ஒருவார்த்தைச் சொல்லவில்லை. எனக்கு வேலுவின் மீது ஆத்திரமாய் வந்தது. சென்னையிலிருக்கும்போது இதையெல்லாம் செய்திருக்கக் கூடாதா?

இருப்புக் கொள்ளாமல் தவித்தேன். அதேசமயம் நாம் எதாவது செய்யப் போய் அது இன்னமும் பிரச்சனையைப் பெரிதாக்கிவிட்டால் என்ற எண்ணமும் எதையும் செய்யவிடாமல் தடுத்தது.

“ஆடு வெட்டிப் போடுவாங்கன்னு நினைக்கிறேன்” அப்பா சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்றார்.

இந்த ஆடு வெட்டுதலைப் பற்றி முன்னரே கேள்விப் பட்டிருக்கிறேன். வேலுவின் சாதித் தலைவர் வருவார். பெண்ணின் வீட்டிற்குச் சொல்லிவிடுவார்கள். கோவிலிலோ தலைவர் தேர்ந்தெடுக்கும் இடத்திலோ வைத்துப் பஞ்சாயத்து நடக்கும். இரண்டு குடும்பமும் ஒத்து வந்தால் வேலு அவன் மனைவியோடு வாழலாம். ஆனால் ஊர்ப் பெரியவர்களிடம் மன்னிப்பு கேட்க்கவேண்டும். ஏதாவது ஒரு குடும்பம் முரண்டு பிடித்தாலும் பெண்ணை அவர்கள் வீட்டோடு அனுப்பி வைத்துவிடுவார்கள். எது நடந்தாலும் வேலு வீட்டில் ஆடு வெட்டி எல்லாருக்கும் சாப்பாடு போட்டு மன்னிப்பும் கேட்கவேண்டும். அப்பொழுதுதான் ஊரில் நடக்கும் எந்த விசேசங்களிலும் சேர்த்துக்கொள்வார்கள்”

“என்னப்பா சுத்தப் பைத்தியக்காரத்தனமா இருக்கு?”

அறையிலிருந்து வெளியே வந்தவர், “தலைவரோட தம்பிதான் நம்மூர் எம்.பி” சொல்லிவிட்டு புரிந்திருக்கும் என்பதுபோல் தலையாட்டிவிட்டு செய்தித்தாளை எடுத்துக்கொண்டு மீண்டும் அறைக்குள் போனார்.

எனக்குப் புரிந்ததுதான். எதுவும் செய்ய முடியாது என்பது தெளிவாக புரிந்தது. இந்த மன்னிப்பு கேட்பது எப்படி நடக்கும் என்று கேட்க நினைத்தேன். அதைக் கேட்டு என்னாகப்போகிறது. எதுவும் பேசாமல் அறைக்குத் திரும்பி கதவைச் சாத்தினேன்.

மிகவும் சோர்வாய் உணர்ந்தேன். திருமணம் என்பது இருவர் மட்டும் சம்பந்தப்பட்டது என்பதை எந்தக் காலத்தில்தான் புரிந்துகொள்ளப்போகிறார்கள். வெட்டுக்குத்தென்று போகாதென்று அப்பா சொன்னது மட்டும் ஒரே ஆறுதலான விசயம். ஆனால் அதையும் எப்படி உறுதியாகச் சொல்ல முடியும். பெண் வீட்டில் எப்படியோ? பக்கத்து ஊராய் மட்டும் இருந்துவிடக் கூடாது. குடும்பப் பிரச்சனையை ஊர்ப் பிரச்சனையாய் மாற்றிவிடுவார்கள்.

நான் முதன் முதலாக வேலுவைப் புரிந்துகொள்ள முயற்சித்தேன். இன்று நான் பார்த்த வேலு இதுநாள் வரை நான் பார்த்தவன் இல்லை. பழகியவன் இல்லை. சரியோ தவறோ எல்லாவற்றைப் பற்றியும் உறுதியாகக் கருத்து கூறுபவன் இன்று தலை குனிந்து அமைதியாக நின்றது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. நானே அவமானப்பட்டதாய் உணர்ந்தேன்.

பகல் முழுவதும் நான் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. வண்டிகள் போவதும் வருவதுமாய் இருந்தது கேட்டது. வேலுவின் அப்பா எல்லாருடைய காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்பதை நினைத்துப் பார்க்கவே கஷ்டமாய் இருந்தது. தனியார்ப் பள்ளி ஒன்றில் ஹெட் மாஸ்டராய் இருக்கிறார். எப்படி ஊருக்குள் இனி தலைக் காட்டுவார்.  ஒரு வேளை அவன் அம்மா கேட்பாரா.. இருக்காது.. வேலுவையும் அந்தப் பொண்ணையும் கேட்கச் சொன்னால்? அவனுடைய மன நிலை என்ன ஆகும். வாழ்க்கை முழுவதும் கொடுங்கனவாய் அவனைத் துறத்துமே? வேலையில் இது பிரதிபலிக்கலாம், அந்தப் பெண்ணைப் பற்றி யோசிக்காமல் இருக்கிறோமே, இவ்ளோ பிரச்சனைக்குக் காரணமான அந்தக் கிழவி செத்தே தொலைந்திருக்கலாம். என்னென்னவோ யோசனைகள்.

*

சாயந்திரமாய் வெளியே வந்தேன்.

என்ன நடந்தது என்று யாரிடமும் கேட்கவில்லை. வீட்டிற்கு வெளியே போனேன். மொத்த தைரியத்தையும் வரவழைத்துகொண்டு வேலுவின் வீட்டின் பக்கம் தலையைத் திருப்பினேன்.

வேலுவின் மனைவி குடத்தோடு வீட்டிற்குள் நுழைந்துகொண்டிருந்தாள். வாசற் படியருகே நின்றுகொண்டிருந்த வேலு என்னை ஒரு முறைப் பார்த்துவிட்டு அவனும் உள்ளே போனான். அவன் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.

அடுத்த முறை பார்க்கும்போது இதைப் பற்றிக் கேட்கக் கூடாது என்று  நினைத்துக்கொண்டேன்.

*

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button