
ஆதவன், மித்ரன், அமுதா, மருதாணி நால்வரும் சென்னை கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் குட்டீஸ். நால்வருக்கும் வேறு வேறு கனவுகள்.
ஆதவனுக்கு விஞ்ஞானியாக ஆசை. மித்ரன் கணித எக்ஸ்பர்ட். அமுதாவுக்கு இன்ஜினியர் கனவு.
மருதாணி இருப்பதிலேயே சின்னப் பெண். எல்லோரையும் எல்லாவற்றையும் கண் விரியப் பார்ப்பாள். சின்னக் குட்டியாய் இருந்தாலும் யாரும் எண்ணிப் பார்க்க முடியாத அளவு எல்லாவற்றையும் அழகாக்கி விடுவாள். கலைத் திறமைகள் நிறைந்த குழந்தை.
நால்வரும் பெரும்பாலான நேரங்களில் ஒன்றாகத்தான் இருப்பார்கள். ஒவ்வொருவரின் கனவுகளும், திறமைகளும் வேறு வேறுதான். ஆனால், எந்த ஒரு பிரச்சனை என்றாலும் நால்வரும் ஒன்று கூடி அவரவர் பார்வையைக் கூறி விவாதித்து முடிவுகளை எடுப்பார்கள். விதவிதமான அணுகுமுறைகள் இருப்பதால் அவர்கள் சீக்கிரமே சரியான விடையைக் கண்டுபிடித்துவிடுவார்கள் .
அவர்களுக்கு இன்னொரு சீனியர் நண்பரும் உண்டு. அவர் பெயர் ஜகா. மிகுந்த அறிவியல் ஆர்வம் கொண்டவர்.
சாயங்காலமானால் விளையாடுவதும், அவ்வப்போது ஜகா அங்கிளின் ஆய்வகம் சென்று ஆராய்ச்சி என்கிற பெயரில் எதையாவது நோண்டுவதும்தான் இவர்களது பொழுதுபோக்கு. ஜகா அவரது சொந்த ஆர்வத்தின் காரணமாக ஒரு பெரிய ஆய்வகத்தை உருவாக்கியிருந்தார். சிறுவர்களின் அறிவியல் ஆர்வத்தை எப்போதும் ஊக்குவிப்பார். இந்த நால்வர் எப்போது வந்தாலும் அவர்களுக்காக நேரம் ஒதுக்குவார். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் கூறுவார்.
பெரும்பாலும் அவர்களையே ஆராய்ந்து முடிவுகள் எடுக்க விட்டுவிடுவார். முயன்றால்தானே கற்க முடியும்!
இனி இவர்களுடன் சேர்ந்து நாமும் பயணிப்போம்.
தொடரும்…