
குரலின் உடம்பு
இளவம் பஞ்சினை அதன் கூடு பிடித்திருந்ததைப் போல
என்னுடைய குரலை உடல் பிடித்திருந்தது
எது எங்கிருந்து கொண்டு பிடிக்கிறது என்றுதான்
எனக்கு நாள் முழுவதும் யோசனை
குரல்தான் இவ்வுடம்பில் உயிரோ என்று கூட
நம்பிய காலங்கள் உண்டு
மௌனத்தை என்னுடைய ஒட்டுமொத்த
உடம்பாகவே பார்க்கிறேன்
ஒன்று சொல்வதானால்
உலகத்தையே என்னுடைய குரல்தான் சுற்ற வைக்கிறது
உலகம் தன்னுடைய தலையாய பணியை ஒரு கணம் மறந்துவிட
உலகத்தை என்னுடைய குரல் பிடித்துச் சுற்றிவிட்டது
எங்கிருந்து எதனை வைத்து இதைச் செய்கிறதென
நான் கேட்டதுமில்லை அது சொன்னதுமில்லை
ஒரு க்ளிப்பிலிருந்து பறந்து போகின்ற ஒரு சட்டை மட்டும்
இப்பொழுது எனக்குத் தெரிகின்றது.
****
ஆடுகளங்கள்
பரதநாட்டியம் ஆடுபவள்
காற்றிலிருந்த படிகளைக் கண்டு துணுக்குற்றாள்
பாடல்தான் தனியாக ஆடுகிறதே நாமும் எதற்கென
அந்தப் படிகளில் ஒவ்வொன்றாகக் காலை வைத்தாள்
பார்வையாளர்களோ அதல பாதாளத்தில் கிடந்தனர்
நிகழ்ச்சி முடிவடைந்தது
இவ்வளவு சுவாரசியமான களமாக இருக்குமென்று
அந்தக் குழந்தைக்குத் தெரியாது
இல்லையென்றால் நீ போ என அவளது டெடி பி யை
முதலில் அங்கு அனுப்பி வைத்திருப்பாள்
இது மாதிரியான சுவாரசியமான களங்கள் வாசகர்களுக்கு
ஒன்றும் புதியதல்ல.
********