“மயிலப் புடிச்சு கால ஒடச்சு ஆடச் சொல்லுகிற உலகம்…” பாடலை எனக்கு நானே ஒலிபரப்பிக் கொண்டு இந்த எபிசோடைத் தொடங்குகிறேன். நேற்றைய எபிசோடிலும் சுவாரஸ்யமாக விவாதிக்க எதுவுமேயில்லை. சேர்த்து வைத்து அடுத்த வாரம் ரணகளமாக இருக்கலாம் என எதிர்பார்க்கிறேன்.
“கன்னம் அது பன்னு மாதிரி….” பாடலோடு தொடங்கியது பிக் பாஸ் வீட்டின் பதினேழாம் நாள். டான்ஸ் எல்லாம் ஆடி முடிந்தவுடன் சேரன் மீராவிடம், “தாங்கள் வேலையை முடிக்காமலேயே தூங்கி விட்டீர்கள்” என விளையாட்டாகத் தான் நினைவுப்படுத்தினார். சரி எனச் சொல்லி அப்படியே விட்டிருக்கலாம். ஆனால், வழக்கம் போல மீரா அதை அழுது பெரிதாக்கினார். “நான் வேலையே செய்றதில்லைங்குற மாதிரி போர்ட்ராய்ட் பண்றாங்க” என ஆரம்பித்தார். இதற்கு கேப்டன் அபி பஞ்சாயத்து பண்ண ஆரம்பித்தார். பின்னர், உணவு மேஜையில், “வேலையிருந்தா என்னை கூப்ட்ருக்கலாம்ல நீங்களே செஞ்சுட்டு இப்போ இப்டி நான் செய்யலைனு சொல்றீங்க”என்ற மீராவிடம், “என்னால தூங்குறவுங்களை எழுப்பி எல்லாம் வேலை செய்யச் சொல்ல முடியாது. நீயே அந்தப் பொறுப்பை உணரனும்.” என நியாயமாகப் பேசினார் சேரன். வழக்கம் போல பாதியில் எழுந்து சென்று விட்டார் மீரா. வீட்டின் கடைக்குட்டியாக அல்லது ஒரே பெண்ணாக இருப்பார் போல. மற்றவர்கள் பேச வருவதைக் கேட்கவே விரும்பாத பிடிவாதமும் அவசரமும் தான் மீராவின் முதல் எதிரி.
டாஸ்க் மணி ஒலிக்கப் பட்டது. “அய்யோ…வெயில்” என சாக்ஷி சிணுங்கியதைப் பொருட்படுத்தாமல் ஆவிகளை மயானத்தில் அடைக்கச் சொன்னார் பிக் பாஸ். அங்கே சாண்டி கலாய்ப்பது பிடிக்காமல் பிக் பாஸிடம் புலம்பிக் கொண்டிருந்தார் மோகன் வைத்யா. ” என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு பிக் பாஸ். நானும் கோவப்படுவேன். அவனை பேசாம இருக்கச் சொல்லுங்க” எனக் காமெடி செய்து கொண்டிருந்தார். இளைஞர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வயதான மோகனுக்கு மரணம், ஆவி, மயானம் போன்றவை மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். ஆவிகளுக்கு உணவு எப்படிக் கொடுப்பது எனப் பேச்சு வந்த போது, “காக்காக்கு வைக்குற மாதிரி போய் வைங்கடா. அதுக எப்போ வேணா சாப்ட்டுக்கட்டும்” என சாண்டி சொல்ல உச்சகட்ட டென்சன் ஆனார் மோகன் வைத்யா.
பிறகு, ஷெரினை தர்ஷனுக்கு முத்தம் கொடுக்க வைத்து கொல்லும்படி வனிதாவுக்கு உத்தரவு வந்தது. எப்படி முடிக்கப் போகிறாரோ என நாம் நினைக்க வெகு கேசுவலாக அதைச் செய்து முடித்தார் வனிதா. சரியாக அபிராமி ஷெரினைத் தாஜா செய்ய முயன்று கொண்டிருக்கும் போது அவர் கொல்லப்பட்டதாக அறிவித்தார் பிக் பாஸ். ஷெரின் அபிராமியை ஒரு பார்வை பார்க்க, “அய்யோ நான் இல்ல நான் இல்ல” எனப் பதறிப் போனார் அபிராமி.
மேளதாளத்தோடு சிறப்பாக ஷெரின் மைதானத்தில் விடப்பட்டார். பின்னர் அடுத்ததாக முகேன் கோல்ட் காபி போட்டு அனைவருக்கும் தர வேண்டும். அதைத் தெரியாமல் அவர் ரேஷ்மா மீது கொட்ட வேண்டும். இப்படிச் செய்து விட்டால் ரேஷ்மா இறந்து விட்டதாக அர்த்தம். மொக்கை டாஸ்க் தானே. ஆனால் அதைச் செய்ய இந்த முகேன் எத்தனை பாடு பட்டது தெரியுமா? மீண்டும் வனிதாவின் உதவியுடனேயே ரேஷ்மா கொல்லப் பட்டார். தான் கொல்லப்பட்டதாக பிக் பாஸ் அறிவித்ததும் ரேஷ்மா கொடுத்த ரியாக்சன் தான் உச்சகட்ட சிரிப்பு. “என்னைய அநியாயமா இப்டி கொன்னுட்டயே டி” என லாஸ்லிவைப் பார்த்து ரேஷ்மா கேட்க, லாஸ்லியாவும் என்னமோ அது தான் கொல்வது போலச் சிரித்து வைத்தது.
பிறகு, தனக்கு சாண்டி தான் கொலை செய்கிறான் எனச் சந்தேகமாக உள்ளதாக மதுமிதாவிடம் தெரிவித்துக் கொண்டிருந்தார் லாஸ்லியா. அதற்கு மதுமிதா மேடம், “அதெல்லாம் யாருமே கொல்லல. நீ கேமை புரிஞ்சுக்கோ. நம்ம எதாச்சும் பண்றோம்ல அதை வச்சு அவுங்களே யாரையாவது சொல்றாங்க” என முற்றிலும் புதிய கோணத்தில் விளக்கிக் கொண்டிருந்தார்.
உள்ளே சேரன் தலைமையில் மீட்டிங் நடந்தது. ” நம்மிள் நான்கு பேரை நாம் இழந்து விட்டோம். இனி மீதமிருப்பவர்களைக் காப்பாற்றியாக வேண்டும்” எனப் பேசிக் கொண்டிருந்தார் சேரன். வனிதா அங்கேயும் “எனக்கென்னமோ லாஸ்லியா மேல தான் சந்தேகமா இருக்கு” என ட்ராக் மாற்றி விட்டுக் கொண்டிருந்தார். இடையில் கவின், “சேரன் அண்ணாவே ஏன் கொலையாளியா இருக்கக் கூடாது?” என ஜாலியாகக் கிளப்பி விட ஒன்னுக்கும் ஆகாமல் முடிந்தது மீட்டிங்.
பின்னர் டெய்லி டாஸ்க்காக, ‘மன்னவனே அழலாமா?’ என ஒரு ஐட்டத்தை அனுப்பியிருந்தார் பிக் பாஸ். அதன் படி ஹவுஸ் மேட்ஸ், இறந்தவர்களின் நினைவை நகைச்சுவையாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும். சந்தேகமேயில்லாமல் சாண்டி தான் அந்த டாஸ்க்கின் டாப் ஸ்கோரர். ரேஷ்மா, ஷெரின் மற்றும் மோகனை சகட்டு மேனிக்கு கலாய்த்தார். அடுத்து தர்ஷன் வந்து என்னத்தையோ கிண்டினார். பாடி லாங்வேஜ் படுகேவலமாக இருந்தது. தர்ஷனை ஹீரோவாக்கும் எண்ணம் எதாவது இயக்குனர்களுக்கு இருந்தால், தயவுசெய்து காமெடி செய்தல், போதையில் ரகளை செய்தல் போன்ற காட்சிகளை அவருக்கு கொடுத்து விட வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன். சரவணன் எதுவும் சொல்லாமல் மௌன அஞ்சலி எனக் கூறி ஓடி விட்டார். நம் மதுமிதா மேடம் தான் வந்து காமெடி என்ற பெயரில் வஞ்சத்தை விதைத்தது. இதில், “நான் வஞ்சத்தில் பேசவில்லை. வீட்டில் ஆளில்லாத பஞ்சத்தில் பேசுகிறேன்” என பஞ்ச் வேறு. “சாக்ஷி வெளியவும் நடிக்கிறா. வீட்டுக்குள்ளேயும் நல்லா நடிக்கிறா. இப்போ கவினை லவ் பண்றா மாதிரி நடிச்சுட்ருக்கா” எனச் சொன்னதெல்லாம் ரொம்ப ஓவர். மதுமிதா பேசிய பேச்சுக்கு எப்போது வேண்டுமானாலும் சண்டை வெடிக்கலாம்.
நேற்றைய நிகழ்ச்சியின் Moment of the show… அப்டியெல்லாம் எதுவும் இல்லைங்க. பாப்போம் இன்னைக்காச்சும் எதாவது சிக்குதானு.