இந்திய அணி பேட்டிங் பிடிக்க வந்த பொழுது வின் ப்ரடிக்சன் இந்தியாவிற்கு 98 சதவீதமும் நியூசிலாந்திற்கு 2 சதவீதமுமே இருந்தது. அதை அப்படியே 100சதவீதமாக மாற்றியதில் இருக்கிறது நியூசிலாந்து வீரர்களின் திறமை. நியூசிலாந்து அணி பந்துவீச்சு,பீல்டிங் இரண்டிலும் ஒரு சிறு தவறுகூட செய்யவில்லை. ரோஹித் ,ராகுல் ,கோலி மூவரும் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க இந்திய அணி 5 ரன்களுக்கு மூன்று விக்கெட்டென தடுமாறியது.
தற்போது நாம் கால்பந்து போட்டியைத்தான் பார்க்கிறோமா என்கிற ஒரு உணர்வு. இப்பொழுது அணிக்கு தேவை ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்.பொறுமையாக ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து சிங்கிள்ஸ் எடுத்தாலே போதும் என்கிற நிலைதான்.ஆனால் கடந்த இரண்டு மூன்று வருடமாக இந்திய அணியிடம் இருக்கக்கூடிய மிகப்பெரிய சிக்கலே இந்த மிடில் ஆர்டர் தான். இதை சரி செய்யாமல் டாப் ஆர்டரேயே நம்பி வந்த அலட்சியம்தான் இதற்கான காரணம்.அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 4 ரன்களில் நடையைக் கட்ட அணி 25-4 ஆனது. பின்பு களமிறங்கிய பண்ட் மற்றும் பாண்ட்யா ஓரளவு ரன் சேர்த்தனர். இப்படியே ஆடினாலே போதும் வெற்றி பெற்றுவிடலாம் என்கிற நம்பிக்கை முளைவிடும் நேரத்தில் பண்ட் அவசரப்பட்டு அடித்து அவுட்டானார். தொடர்ந்து நான்கு பந்துகள் டாட் ஆனதும் பண்ட் அவசரப்பட்டு மிட் விக்கெட்டில் தூக்கி அடித்து அவுட்டானார். பண்ட் மிகச்சிறந்த ப்ளேயர் என்பதில் துளியும் சந்தேகமில்லை.ஆனால் இதுபோன்ற இக்கட்டான நேரங்களில் பண்ட்க்கு பொறுப்பாக ஆடத்தெரியவில்லை. ஐபிஎல் லிலும் இதேபோல முக்கியமான நேரங்களில் அவசரப்பட்டு தூக்கியடித்து அவுட்டானார். அதை சரிசெய்து கொள்வதற்கான வயதும் காலமும் பண்ட்டிற்கு இருக்கிறது. அது இருந்தால் பண்ட் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக வருவார் என்பதில் சந்தேகமில்லை. பண்ட் அவுட்டாதுமே கோலி,பாண்ட்யா முகத்தில் ஒரு சின்ன ஏமாற்றம்.
இருந்தாலும் ஒட்டுமொத்த இந்தியாவும் அப்பொழுதும் நம்பிக்கையிழக்கவில்லை. சொல்லப்போனால் மைதானமே அப்போதுதான் உற்சாகமாக ஒரு பெயரை உச்சரிக்கிறது. கிட்டத்தட்ட 15 வருடங்களாக இந்தியா நம்பியிருக்கும் ஒரு பெயர். அந்த பெயர் மைதானமெங்கும் ஒலிக்கிறது. தோனி 2011ல் ஆடியதைப் போல ஒரு பெரிய இன்னிங்ஸை ஆட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும் வேண்டுதலும். இந்த போட்டி அவரின் இறுதிப்போட்டியாக இருந்துவிடக்கூடாது என்கிற ஏக்கம் அப்பொழுதே சூழ்ந்துவிட்டது. பாண்ட்யாவும் அடுத்த 5 ஓவரில் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி உற்சாகமானது. 6 விக்கெட்டுகள் விழுந்துவிட்டன.
இந்தியா தற்போது 92க்கு 6. 117 பந்துகளில் 147 ரன்கள் தேவை.ஓவருக்கு 6.5 ரன்களுக்கு மேல் எடுக்கவேண்டிய சூழல் .தோனியால் தனியாக இதை செய்ய முடியாது.இவ்வளவு ரன்கள் அடிப்பதற்கு ஒரு பார்ட்னர் தேவை. ஜடேஜா உள்ளே வருகிறார். நின்று ஆடி தோனிக்கு ஒத்துழைப்புக் கொடுத்தால் போதும் என்றுதான் பல ரசிகர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் ஜடேஜாவோ “நீ நில்லு தல ! நான் பாத்துக்கறேன்”னு பொறுப்பை எடுத்துக்கொண்டார். சிங்கிள ரொட்டேட் செய்யவே சிரமப்பட்ட வீரர்களின் மத்தியில் ஆறு நான்குகளில் டீல் செய்தார் ஜட்டு பாய். ரன்ரேட்டை 10 க்கு மிகாமல் அதேசமயம் விக்கெட்டையும் கொடுக்காமல் இந்த ஜோடி அற்புதமாக ஆடியது. சிலர் நான்கு, ஆறு அடித்தாலும் அவர்கள் முகங்களில் பதட்டம் காணப்படும். ஆனால் ஜடேஜா அடித்த ஷாட்ஸ் அத்தனையும் நேர்த்தியானவை. மிடில் பேட்டில் பந்து பட்டு சிங்கிள் சென்றாலும் அது பேட்ஸ்மேனின் கான்பிடென்ஸை அதிரிக்கும். தவறாக பட்டு எட்ஜாகி நான்கு ரன்கள் அடிக்கும் போதும் பேட்ஸ்மேனுக்கு வரும் நம்பிக்கையை விட சரியான திசையில் சரியாக அடித்து சிங்கிள் போகும்போது வரும் நம்பிக்கை அதிகம்.சரியாக பந்துகளை கணித்துவிட்டாலே எளிதாக அடித்துவிடலாம். ஜடேஜா அதை சிறப்பாக செய்தார்.
தேவையான போது சிக்ஸ் போர்களை அடித்து வெற்றியை பிடித்துவிடும் அளவிலியேயே வைத்திருந்தார். வெற்றி அடைந்துவிடும் அளவுக்கு கைக்கு அருகில் இல்லாவிட்டாலும்,கையை விட்டு போகாமால் வைத்திருந்தது தோனி ஜட்டு ஜோடி. தோனியும் ரிஸ்க் எடுக்கவில்லை. விக்கெட் இழப்பின்றி இப்படி ஆடினாலே வெற்றி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் சிங்கிள்ஸ் மட்டுமே அடித்து ஆடினார் தோனி. ஜடேஜா 50 ரன்களை அடித்து விட்டு தன்னுடைய பேமஸ் வாள்சுற்றலை சுற்றினார். மைதானத்தை நோக்கி தன் இருகைகளையும் நீட்டியபோது, சஞ்சய் மஞ்சரக்கேரை
“என்ன இந்த ஆட்டம் போதுமா குழந்த!” என கேட்பது போலவே இருந்தது. அப்போது ரோகித் அங்கிருந்து “சூப்பரா ஆடுற ,அப்படியே விளையாடு”என சைகை மூலம் உற்சாகப்படுத்தினார். 8வது வீரராக உலகக்கோப்பையில் களமிறங்கி அரைசதமடிக்கும் முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் ஜடேஜா.
வெற்றிக்கு 42பந்துகளில் 69 தான் தேவை என இருந்தது .இந்த ஜோடி நின்றாலே எட்டிவிடும் இலக்குதான் .அடுத்த ஓவரில் ஜடேஜா அடித்த சிக்ஸருடன் பத்து ரன்களை தொட்டது. 44வது ஓவரின் கடைசி பந்தை பெர்குசன் ஷார்ட் பாலாக அவுட்சைட் த ஆப்ஸ்டெம்ப் வீசினார்.தோனி அதை அடிக்காமல் பேட்டை தூக்கி கூலாக பந்து கீப்பர் கைக்கு போவதைப் பார்த்தார்.அப்போது பெர்குசனும் தன் இருகைகளையும் இல்லை என்பது போல் வைத்து என்ன அடிக்கவில்லை என தனக்குத்தானே சாெல்லிக்கொண்டு சென்றார்.ஆம் தோனி அடிக்க முயற்சிப்பார் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர்.45.3 வது ஓவரில் 100 ரன் பார்ட்னர்ஷிப்பை தொட்டது இந்த ஜோடி. போல்ட் ஓவரில் 10 ரன்களை அடித்துவிட்டது. 24 பந்துகளில் 42 ரன்கள் தேவை களத்தில் தோனி ஜடேஜா.வில்லியம்சன் தன் பவுலர்களுடன் ஆலோசித்து மாட் ஹென்றிக்கு ஓவர் தருகிறார்.மாட் ஹென்றி அந்த ஓவரை சிறப்பாக வீசி வெறும் 4 ரன்களே தந்தார்.அடுத்த ஓவர் முதல் பந்தில் மிட்விக்கெட்டில் தோனி அடிக்க நான்கு போக வேண்டிய பந்து சாண்ட்னரின் அட்டகாசமான பீல்டிங்கால் இரண்டு ரன்கள் மட்டுமே சென்றது.அது நான்காக மாறியிருந்தால் கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கும். ஆனால் அதற்கு கொஞ்சம் கூட நியூசிலாந்து அணி இடம் தரவில்லை. வெறும் சிங்கிள்ஸ் மட்டுமே போய்க்கொண்டிருக்க டென்சனில் ஜடேஜா சிக்ஸ் அடிக்க முயற்சி செய்து 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜடேஜா தன்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான இன்னிங்ஸை ஆடியதாக ஹர்சாபோக்ளே புகழ்ந்தார். கடந்த இரண்டு போட்டிகளில் தான் ஜடேஜா களமிறக்கப்படுகிறார். குல்தீப்பிற்கு பதிலாக ஆடுகிறார். இன்று ஜடேஜா இல்லையென்றால் அதோடு ஆட்டம் முடிந்திருக்கும். வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே ஆடிய ஜடேஜா கிட்டத்தட்ட 41 ரன்களை தடுத்துள்ளார். ஒரு ரன்அவுட் ஒரு அட்டகாசமான கேட்ச் என ஒரு அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
13 பந்துகளில் 31 ரன்கள் தேவை.தோனி இரண்டு ஓடி இருக்கலாம்.ஆனால் அடுத்த ஓவர் ஸ்ட்ரைக்கிற்காக தோனி ஒரு ரன்மட்டும் எடுத்தார்.ஜடேஜா தன் பங்கை செவ்வேன செய்துவிட்டார்.இது தோனியின் நேரம். இதைப் போன்ற எத்தனையோ போட்டிகளை சர்வ சாதரணமாக முடித்திருக்கிறார். அரங்கமே தோனியின் பெயரை உச்சரிக்கிறது.
உச்சகட்ட டென்ஷன் நிலவுகிறது.ஆனால் தோனி கூலாக நிற்கிறார். பெர்குசன் வீசிய முதல் பந்து சிக்ஸர் அடித்து விட்டு கூலாக பந்து போன திசையைப் பார்த்துக்கொண்டே புவனேஷ்வரை நோக்கி சென்றார். நியூசிலாந்து ரசிகர்கள் தங்கள் இஷ்டக்கடவுளின் பெயரை உச்சரித்துக்கொண்டிருந்தனர். இந்திய ரசிகர்களோ தோனியின் பெயரை உச்சரித்துக்கொண்டிருந்தனர். நியூசிலாந்தின் கடவுள் வெற்றிபெறவைப்பாரா என தெரியாது. ஆனால் தோனி பலமுறை வெற்றிப் பெற வைத்திருக்கிறார். தோனி நாட்அவுட்டாக நின்ற போட்டிகளில் 49 போட்டிகளில் 46 ல் வெற்றி பெற்றிருக்கிறோம்.
11 க்கு 25 ரன்.அடுத்த பந்து டாட். மீண்டும் இரண்டு பக்கமும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. பெர்குசன் வீசிய மூன்றாவது பந்தில் தோனி அடித்துவிட்டு இரண்டு ரன்கள் ஓடிவர கப்தில் மிக துல்லியமாக பந்தை ஸ்டெம்ப்பை நோக்கி எறிந்து ரன்அவுட்டாக்கினார்.கப்தில் இந்த உலகக்கோப்பைல 5 முறை ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்திருக்கிறார். அந்த விமர்சனங்களை எல்லாம் சரிகட்டும் விதமாக இந்த ரன்அவுட் அமையும் என்பதில் சந்தேகமில்லை.கப்தில் அந்த 5 போட்டிகளில் 100 அடித்து வெல்ல வைத்திருந்தாலும் இந்த ரன்அவுட் நியூசிலாந்திற்கு கொடுத்திருக்கும் பலனை கொடுத்திருக்காது. டெசிசன் பென்டிங் என ஸ்க்ரினில் வந்த பொழுது தோனியின் ஹேட்டர்ஸ் கூட தோனி அவுட்டாகக்கூடாது என வேண்டியிருப்பார்கள்.அந்த பந்தை கீப்பர் கைக்கு கப்தில் எறிந்திருந்தால் கீப்பர் கைப்பற்றி அடிப்பதற்குள் தோனி உள்ளே நுழைந்திருப்பார்.ஆனால் கப்தில் அதைப் பற்றி யோசிக்காமல் தைரியமாக ஸ்டெம்ப்சை நோக்கி எறிந்ததால் தோனி சிறு இடைவெளியில் ஆட்டமிழந்தார்.இந்திய அணியின் வெற்றி பறிபோன இடைவெளி அதுதான்.
2003 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் சேவாக்கின் ரன்அவுட்டே திருப்புமுனையாக அமைந்தது. 2017 டி20 இறுதிப் போட்டியில் பாண்ட்யா ரன்அவுட்டானது அந்த போட்டியின் தோல்விக்கான காரணமாக அமைந்தது.அதேபோலத்தான் இந்த போட்டியிலும் தோனியின் இந்த ரன்அவுட்டே தோல்விக்கு காரணமாக அமைந்தது . தோனி 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.50 ரன்களை கொண்டாட முடியாத சோகத்தில் தோனி விட்டுச்சென்றார்.இந்திய அணி 221க்கு ஆல்அவுட்டானது.நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு முதல் ஆளாக நுழைந்துவிட்டது.
2015 உலகக்கோப்பையிலும் இதேபோல அரையிறுதியில் தோற்று வெளியேறினோம்.அப்போது கண்கலங்கியிருந்த தோனியைப் பார்த்தபொழுது மனது “அடுத்த உலகக்கோப்பையில் பார்த்துக்கொள்ளலாம் தல,அழாதிங்க!” என ஆறுதல் கூறியது.ஆனால் இந்தமுறை அப்படியான ஆறுதலும் கூறமுடியாது.
தோனியின் கடைசி உலகக்கோப்பை போட்டி இதுதான்.கோப்பையோடு அனுப்பி வைக்கவேண்டும் என்கிற கனவு கனவாகவே போனது.
டாப் ஆர்டரின் சொதப்பல்தான் இந்தப் போட்டியின் தோல்விக்கு காரணம்.ஆனால் எல்லாப்போட்டிகளிலும் அவர்கள் மட்டுமே சிறப்பாக ஆடுகின்றனர் .மிக குறிப்பாக ரோகித் மற்றும் கோலி.
கோலி உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் துளியும் சந்தேகமில்லை.எத்தனையோ போட்டிகளில் சதமடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றதையும் மறக்கமுடியாது. மீண்டும் சொல்கிறேன் கோலி சேஸிங் கிங்தான். ஆனால் மிக முக்கியமான போட்டிகளில் கோலியின் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே வருகிறார். உலகக்கோப்பை நாக்கவுட் போட்டிகளில் கோலியின் ரன்கள் 24(33),9(21),35(49),3(8),1(13),1(6). இது டி20 மற்றும் 50-50 இரண்டு உலகக்கோப்பைகளிலும் சேர்த்து. மொத்தம் 73 ரன்கள் வெறும் 12.16 ஆவரேஜ்தான். கோலி தன்னைத்தானே மீண்டும் பரிசோதித்துக் கொள்ளவேண்டிய நேரமிது. மிகமுக்கியமான போட்டிகளில் தன்னுடைய ஆட்டம் எப்படி இருக்கிறது என்பதை கண்டறிந்து சரிசெய்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதை சரிசெய்யாததன் விளைவே இந்த உலககோப்பை தோல்வி. எப்போதோ தோற்றிருக்க வேண்டிய போட்டி. தோனி, ஜடேஜாவால் தான் இவ்வளவு தூரம் வந்தது. “ஜெயிக்கறமோ தோக்கறமோ முதல்ல சண்ட செய்யணும்” அதை இருவரும் சிறப்பாக செய்தனர். இது ஒரு மிகமுக்கியமான விறுவிறுப்பான உலகக்கோப்பை போட்டி என்பதில் மாற்றுக்கருத்தில்லை. தோற்றாலும் இது வெற்றிகரமான தோல்விதான்.
இந்தப் போட்டியில் ஜடேஜா என்கிற பொக்கிஷத்தை நாம் கண்டடைந்தாலும் தோனி என்கிற புதையலை இழக்கிறோம்.அடுத்த உலகக்கோப்பையில் தோனி இருக்கமாட்டார்.அதனை உணர்ந்து அதற்கான பொறுப்போடு கோலி செயல்படவேண்டும்.இந்திய அணியின் மிடில் ஆர்டரை வலுவாக்க வேண்டும்.
இதுக்கு முன்னாடி மிடில் ஆர்டர் ah சிறப்பாக பங்களிப்பு செய்தவர்களை பற்றி ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம் நேற்று ஜடேஜா தோனி இல்லை என்றால் 25 ஒவேரியில் நியூசிலாந்து வெற்றி பேற்றுக்கும்…. கோர்வையான வார்த்தைகள் நல்லா narration tambi கீப் it up